search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடுமலை"

    உடுமலையில் 14-வது நாளாக முகாமிட்டுள்ள சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் இன்று காலை தொடங்கியது. #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி 130 கி.மீட்டர் இடம் பெயர்ந்து செழிப்பு மிகுந்த திருப்பூர் மாவட்டம் உடுமலை மைவாடி மற்றும் கண்ணாடிப்புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 14 நாட்களாக முகாமிட்டுள்ளது. அங்கு கரும்பு, வாழை, தென்னை, மக்காச்சோளம், வெங்காய பயிர்கள் உள்ளிட்டவை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

    நாட்டு உணவு அதிகளவில் கிடைப்பதால் யானை அந்த பகுதியை விட்டு வெளியேறாமல் தங்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சின்னதம்பியை காப்பு காடுகளில் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கலீம், சுயம்பு ஆகிய 2 கும்கிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் உரிய பலன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் சின்னதம்பி கும்கியாக மாற்றப்படும் என்று பேசப்பட்டது. இதனையடுத்து சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ள சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சின்னதம்பியை கும்கியாக மாற்றத்தடை கேட்டு மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்குகளை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். வனவிலங்கு ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் ஆஜராகி யானையை முகாமில் அடைப்பதே சரியான முடிவு என்று விளக்கம் அளித்தார்.

    தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் கூறும்போது, சின்னதம்பி யானையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டது குறித்தும், முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிப்பதே சிறந்தது என்று வாதிட்டார்.

    இந்நிலையில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் யானை விவகாரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்காமல் பாதுகாப்பாக செயல்பட வேண்டும். வாகனத்தில் ஏற்றும்போது துன்புறுத்தக்கூடாது.

    முக்கியமாக உயிர்சேதம் ஏற்படாமல் கவனமாக செயல்பட வேண்டும். யானை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதியில் கொண்டு விடுவதா? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தீர்ப்பு அளித்தனர்.

    தீர்ப்பையடுத்து இன்று காலை சின்னதம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. இன்று காலை சின்னதம்பி யானை சர்கார் கண்ணாடிபுதூர் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் சுற்றியது.

    எனவே அங்கிருந்து வெளியேற்றி கிணறு, குளம், குட்டை இல்லாத சமவெளிப்பகுதிக்கு கும்கிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பலா உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அதனை ருசிக்க சின்னதம்பி யானை வரும்போது மயக்க ஊசி செலுத்தப்படும்.

    மயக்க ஊசி செலுத்தப்பட்ட பின்னர் லாரி நிறுத்தப்பட்டு அதன் அருகே சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. சாய்வு தளம் வழியாக கும்கிகள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றி டாப்சிலிப் யானை முகாமுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    முதற்கட்ட பணியில் 4 வனச்சரக அதிகாரிகள், 40 வன ஊழியர்கள், யானைக்கு மயக்க ஊசி செலுத்த கால்நடை மயக்கவியல் நிபுணர் அசோகன் தயார் நிலையில் உள்ளனர். இன்று மாலைக்குள் யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் காட்சியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். அவர்களை வனத்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வைக்கிறார்கள். இருந்தாலும் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.  #ChinnathambiElephant




    கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது. #ChinnathambiElephant
    உடுமலை:

    கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25-ந்தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

    ஒரு சில நாட்கள் அங்கு வசித்த யானை வனப்பகுதியை விட்டு 31-ந்தேதி வெளியேறியது. பொள்ளாச்சி வழியாக காடு, வயல்வெளிகளை கடந்து 130 கி.மீட்டர் தூரமுள்ள உடுமலை மைவாடி கண்ணாடி புதூர் பகுதிக்கு வந்தது.

    கடந்த 13 நாட்களாக அங்குள்ள அமராவதி சர்க்கரை ஆலை பின்புறம் சுற்றி திரிகிறது. இதனை வனப் பகுதிக்குள் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கும்கி யானைகள் மாரியப்பன், கலீம் கொண்டு வரப்பட்டது.

    இந்த கும்கிகளுடன் சின்னதம்பி யானை நண்பர்களாக பழகியது. இதனால் சின்ன தம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட முடியவில்லை.

    ஒரு கட்டத்தில் கும்கிகளை சின்னதம்பி எதிர்த்து விரட்ட தொடங்கியது. இதனை தொடர்ந்து கும்கியானை மாரியப்பனை டாப்சிலிப் முகாமிற்கு திருப்பி அனுப்பிய வனத்துறையினர் அங்கிருந்து மற்றொரு கும்கியான சுயம்புவை அழைத்து வந்தனர்.

    இந்த கும்கியுடனும் சின்னதம்பி நட்பு பாராட்ட தொடங்கியது. இதனால் சின்னதம்பி யானையை வன பகுதிக்குள் விரட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தற்போது சின்னதம்பி யானை கண்ணாடி புதூர் பகுதியிலே கற்றி திரிகிறது. அங்கு பயிரிடப்பட்ட உள்ள வாழை, கரும்பு, வெங்காய பயிர்களை தின்று நாசம் செய்து வருகிறது.

    அதனை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மைவாடி பகுதிக்கு குவிந்து வருகிறார்கள். ஆனால் சின்னதம்பி யானை பொதுமக்களை எந்த தொந்தரவும் செய்வதில்லை.

    அதன் நடமாட்டத்தை 80-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் கண்காணித்து வருகிறார்கள். கடந்த 13 நாட்களாக ஒரே பகுதியில் சின்னதம்பி யானை சுற்றி திரிவதால் நேற்று மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது. அடிக்கடி கரும்பு தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது.

    இன்று அதிகாலை 3 மணியளவில் சற்று சோர்வு தெளிந்து சுமார் 1 கிலோ மீட்டர் வரை சென்றது. பின்னர் கரும்பு தோட்டத்திற்கு திரும்பி விட்டது.

    சின்னதம்பி யானை தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் தீர்ப்பை பொறுத்து தான் சின்னதம்பி யானை வனப்பகுதியில் விரட்டப்படுமா? அல்லது முகாமிற்கு கொண்டு செல்லப்படுமா? என்பது தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #ChinnathambiElephant
    உடுமலை அருகே தனியார் கம்பெனி பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 3 தொழிலாளர்கள் பலியானார்கள். #accident

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குறிச்சிகோட்டை, அமராவதி சக்தி நகர், ராமேகவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ரவிக்குமார் (30), எஸ். குமரேசன் (32), பெரியசாமி (32), ஏ. குமரேசன்(29), சின்னமாரன் (50) ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் உடுமலைக்கு வேலைக்கு வந்தனர்.3 மோட்டார் சைக்கிளில் அவர்கள் வந்தனர்.

    இன்று காலை 8.30 மணியளவில் அவர்கள் போடிப்பட்டி அண்ணா நகரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனியார் கம்பெனி பஸ் வந்தது.

    இந்த பஸ்சில் அமராவதி, குறிச்சிகோட்டை, பல்லப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தனர்.

    திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.

    இதில் ரவிக்குமார் சம்பவ இடத்திலே இறந்தார். எஸ். குமரேசன் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    சின்னமாரன் பலத்த காயம் அடைந்தார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.ஏ. குமரேசன், பெரியசாமி ஆகியோர் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    விபத்து குறித்து உடுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக உடுமலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் வழக்கு பதிவு செய்து தனியார் கம்பெனி பஸ் டிரைவர் அமராவதி சக்தி நகரை சேர்ந்த சின்னசாமியை கைது செய்தார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான 3 பேரின் உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். #accident

    உடுமலை அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளியை காட்டு யானை தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி வனச்சரகத்தில் உள்ள தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பரமன் (69) . கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த காட்டு யானை பரமனை தூக்கி வீசியது. அவர் உயிர் தப்பிக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை துரத்தி தாக்கியது. இதில் பரமன் படுகாயம் அடைந்தார் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

    பொதுமக்கள் கூட்டமாக வருவதை பார்த்த யானை காட்டுக்குள் சென்று விட்டது. படுகாயம் அடைந்த பரமனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உடுமலையில் மரத்தை வெட்டி அகற்றியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அம்மாபட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40). இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    உடுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரம், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. நேற்று முன்தினமும் இந்த பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

    இதில் திருப்பூர் ஐஸ்வர்யா நகர் பகுதியில் இருந்த மரக்கிளை முறிந்தது. இதனால் கட்டிடத்திற்குள் நுழைய முடியாத நிலை இருந்தது. மரத்தை வெட்டி அகற்றும் பணிக்காக ஆனந்தகுமார் உள்பட 4 பேர் சென்றனர். மரத்தை வெட்டி அகற்றியபோது அருகில் மின் கம்பி மீது மரம் சாய்ந்தது. இதனால் மின்சாரம் தாக்கி ஆனந்தகுமார் தூக்கி வீசப்பட்டார்.

    அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் அவரை மீட்டு சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் கிடைத்தும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மின் வழித்தடம் அருகே மரம் முறிந்து விழுந்தால் முறைப்படி மின்சார வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவார்கள்.

    இல்லையென்றால் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×