என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம்"

    • மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் 2015-16-ம் நிதியாண்டு முதல் 2017-18-ம் ஆண்டு வரை மதுபான வர்த்தகத்தில் ரூ.50 கோடி முறைகேடு நடைபெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினார்கள். போபால், இந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    • வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர்.

    போபால்:

    மத்தியப் பிரதேச மாநிலம் மண்டலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த என்கவுண்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடிய மற்ற நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். சண்டை நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

    • இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மை காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
    • குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு வேலை இழப்பு அதிகமாகியுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, கிராமங்களில் உள்ள சாலைகள், ஒரு ஊரின் பெயர் அல்லது ஒரு தெருவின் பெயரை மாற்றி கேட்டிருப்போம்.

    ஏன்... ரெயில் நிலையம், பேருந்து நிலையத்தின் பெயரை கூட மாற்றப்பட்டது குறித்து கேள்வி பட்டிருப்போம். ஆனால் மத்திய பிரதேச அரசு ஒரு வினோதமான முடிவு எடுத்துள்ளது.

    தற்போது இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். தொழில்நுட்பம் போன்ற உயர் படிப்பை முடித்தவர்கள் கூட வேலைக்கிடைக்காமல் திண்டாடி வருவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

    பொதுவாக படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களை வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் என அழைப்பர். ஆனால் தற்போது இனிமேல் மத்திய பிரதேசத்தில் வேலையில்லா இளைஞர்களை வேலையில்லா இளைஞர்கள் (unemployed youth) என அழைக்கக்கூடாதாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் (Aspirational Youth) என அழைக்க வேண்டும் என மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

    இதனால் மத்திய பிரதேச அரசு கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.

    இது தொடர்பாக போபாலைச் சேர்ந்த பிரகாஷ் சென் கூறுகையில் "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். ஐ.டி. துறையில் நல்ல வேலை கிடைக்கும் என நினைத்தேன். ஆனால் கடுமையான போட்டியின் காரணமாக எனக்கு வேலை கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ஏராளமானவர்கள் வேலை இழந்து உள்ளனர். தற்போது டீ ஸ்டால் நடத்தி வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
    • இந்த கொலை குற்றத்திற்காக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை 2023 இல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்து சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

    2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவாகரத்து வழங்கிய நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார்.
    • திருமணத்திற்குப் பிறகு மனைவி தனது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் உரையாடலில் ஈடுபட கூடாது.

    திருமணத்திற்குப் பிறகு கணவனோ மனைவியோ தங்களது 'எதிர்பாலின' நண்பர்களுடன் 'ஆபாசமான' முறையில் உரையாட கூடாது என்றும், எந்தக் கணவரும் தனது மனைவியிடமிருந்து இதுபோன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    விவாகரத்து வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனைவி தனது ஆண் நண்பர்களுடன் அவளது பாலியல் வாழ்க்கை குறித்து ஆபாசமான முறையில் வாட்சப்பில் சாட் செய்ததை நீதிமன்றத்தில் கவனத்தில் கொண்டு பலவேறு கருத்துக்களை தெரிவித்தது.

    அதாவது, "திருமணத்திற்குப் பிறகு கணவரோ, மனைவியோ தங்களது நண்பர்களுடன் கண்ணியமற்ற முறையில் ஆபாசமான உரையாடலில் ஈடுபட கூடாது. தனது மனைவி மொபைல் மூலம் இத்தகைய மோசமாக பேசுவதை எந்த கணவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்.

    திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இருவரும் நண்பர்களுடன் மொபைல் மற்றும் பிற வழிகளில் உரையாடலாம். ஆனால் அந்த உரையாடல் கண்ணியமானதாக இருக்க வேண்டும்.

    கணவரின் எதிர்ப்பு தெரிவித்தும் மனைவி தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து மோசமாக உரையாடுவது நிச்சயமாக கணவருக்கு மனரீதியிலான கொடுமையை ஏற்படுத்தும்" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    இறுதியில், கணவருக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்டு மனைவியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    • சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

    சென்னை:

    கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

    அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

    • மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் கோதுமை வந்தது.
    • கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களில் வரும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மத்திய பிரதேசத்தில் இருந்து 2600 டன் கோதுமை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் கோதுமை மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு மத்திய சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. அங்கிருந்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்பட உள்ளது.

    • நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.
    • இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் கடிதங்களை அனுப்பிய 60 வயது நபர் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் நாட்டின் கன்னியாகுமாரியில் ராகுல் காந்தி துவங்கிய பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது கொலை மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. யாத்திரையின் அங்கமாக கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இந்தூரை அடைந்த ராகுல் காந்தி மறுநாளே உஜ்ஜைன் மாவட்டத்திற்கு சென்றார்.

     

    இந்தூரில் உள்ள இனிப்பு கடைக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. இதனை அனுப்பியவர் தயாசிங் என்கிற ஐஷிலால் ஜாம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் இவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ரயில் மூலம் தப்ப இருந்த ஜஷிலால் ஜாமை ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    இவர் எதற்காக அந்த மாதிரியான கடிதத்தை அனுப்பினார் என்ற விவரங்கள் மர்மமாகவே உள்ளது. கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து இவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்தூரில் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது ராகுல் காந்தி மற்றும் கமல் நாத் ஆகிய இருவரும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுவர் என்று ஜஷிலால் ஜாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

    • பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள் ஆவர்.
    • தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

    பள்ளிக்குள் மாணவர்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்திய பள்ளி நிர்வாகம் சிக்கலில் சிக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சம்பந்தப்பட்ட பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வரும் இரண்டு மாணவிகள், பள்ளி நிர்வாகம் தங்களை ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியது என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் கையில் கட்டியிருந்த கயிறு மற்றும் நெற்றியில் வைத்திருந்த பொட்டு ஆகியவற்றை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்தினர் வலியுறுத்தியதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் இஸ்லாமிய பாடல்களை பாட வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள தாமோ மாவட்டத்தை சேர்ந்த கங்கா ஜமுனா உயர்நிலை பள்ளியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களில் ஒன்பது பேர் இஸ்லாமியர்கள், இருவர் வேறு மதத்தை சேர்ந்தவர்கள ஆவர்.

    ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தியவர்கள் மீது ஐ.பி.சி. 295 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் தாமோ கோட்வாலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக பள்ளிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாக மத்திய பிரதேச மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

    முஸ்லீம் அல்லாத மதத்தை சேர்ந்தவர்களை ஹிஜாப் அணிய வலியுறுத்தும் விவகாரத்தில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் கங்கா ஜமுனா பள்ளி ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தான் இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

    • சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில்.
    • 78,000 எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் நடப்பு காலண்டர் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 78,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடால் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள என மாநில அரசு இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் கோவிந்த் சிங் கேட்ட கேள்விக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உணவுப் பற்றாக்குறை அல்லது அவர்களுக்கு ஏற்ற உணவுப் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலும் பலவீனமானவர்களாகவும், உடல்நலம் குன்றியவர்களாகவும் இருப்பார்கள். இது குழந்தைகளில் வளர்ச்சி குன்றியதையும், உடல் எடை குறைவதையும் உண்டாக்கும்.

    பிந்த் மாவட்டத்தில் உள்ள லஹார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிங், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுமார் 78,000 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதா என்பதை அறிய முயன்றார்.

    இதில், அடல் பிஹாரி வாஜ்பாய் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, "இந்த எண்ணிக்கையில் 21,631 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் உள்ளனர்" என தெரிவித்தார்.

    அரசாங்கத்தின் எழுத்துப்பூர்வ பதிலின்படி, இந்தூர் பிரிவு மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் 22,721 ஆக உள்ளது. இந்த பிரிவில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா மாவட்டங்கள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள்

    போபால்:

    மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளது. பின்னர் சகோதரிகளில் மூத்த பெண்ணை கும்பலாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரது தங்கையையும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வீட்டுக்கு வந்ததும், மூத்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு நபர்களை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 4 பேரில் ஒருவன் அப்பகுதி பாஜக பிரமுகரின் மகன் என்பது தெரியவந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் என அனைவருமே மாணவர்கள் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

    • மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு ஊரிலும் வினோத சடங்குகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
    • கழுதைக்கு கிராம மக்கள் குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ வைரல்.

    மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.

    கிராம மக்கள் மழைக்காக வினோத சடங்கு செய்த சம்பவம், பலருக்கும் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர்களை பொருத்தவரையில், கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட சடங்கு "மிஷன்" அமோக வெற்றி தான். குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட இரண்டே நாட்களில் அந்த மாவட்டத்தில் மழை பொழிந்து, கிராம மக்கள் வேண்டுதல் பலித்து விட்டது.

     

    மழை பெய்ததை அடுத்து ஊரில் உள்ள பூசாரி கழுதையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று விவாசய பணிகளை துவங்கி வைத்தார். வினோத சடங்கின் அங்கமாக, கழுதை ஒரு பிளேட் முழுக்க குலாப் ஜாமுன் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி, பலதரப்பட்ட கமென்ட்களை குவித்து வருகிறது.

    வினோத சடங்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பெய்யத் துவங்கிய மழை, 24 மணி நேரத்திற்கு நீடித்தது. மழை பெய்ததால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மீண்டும் கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்டனர். 

    ×