search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆந்திரா"

    • பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.
    • இது குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியுள்ளார்.

    பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகளின் தலைமுடியை வெட்டி தண்டனை கொடுத்த ஆசிரியரின் செயல் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் கேஜிபிவி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு காலையில் தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை ஆசிரியர் சாய் பிரசன்னா வெட்டியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேசக் கூடாது என்று ஆசிரியர் சாய் பிரசன்னா மாணவிகளை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

    மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மாணவிகளிடம் ஒழுக்கத்தை வளர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்ததாக ஆசிரியர் சாய் பிரசன்னா தனது செயலை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.
    • ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமணர் சமுதாயத்தினர் சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் அறிவித்தார்.

    நடிகை கஸ்தூரி மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை திருநகர் போலீசில், நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    மனுவை விசாரித்த நீதிபதி, தமிழ், தெலுங்கு மக்களிடையே வன்முறையை ஏற்படுத்த காத்திருக்கும் வெடிகுண்டு போல நடிகை கஸ்தூரி பேசியுள்ளார் என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவானார்.

    இந்நிலையில் ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    ஆந்திராவில் கஸ்தூரி தலைமறைவாக உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விசாகப்பட்டினத்தில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் அதிகரித்து வந்தன.
    • போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    அண்மை காலங்களில் இளைஞர்கள் பலர் தங்களின் பைக்குகளில் உள்ள சைலன்சர்களை கழற்றிவிட்டு அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி வருகின்றனர். இதனால் ஒலி மற்றும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் அதிக புகை மற்றும் ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் பொருத்திய பைக்குகள் தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன

    இதனையயடுத்து தீவிரமான வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரது போலீசார் அதிக ஒலி எழுப்பக்கூடிய பைக்குகளை பிடித்து அதன் சைலன்சர்களை கழற்றினர்.

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பிய 181 பைக் சைலன்சர்களை ரோடு ரோலர் ஏற்றி போலீசார் அழித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
    • சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக விஜயவாடா-ஸ்ரீசைலம் இடையே கடல் விமானம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வருகிற 9-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், மாநில விமான நிலைய மேம்பாட்டு கழகம் மற்றும் மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கடல் விமான போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

    கிருஷ்ணா நதியில் பாதாள கங்கா படகு முனையத்தில் இருந்து கடல் விமான போக்குவரத்து தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தக் கடல் விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சாமி கோவிலில் இருந்து ஸ்ரீசைலம் மல்லன்னா கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக கடல் விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வருகிற 9-ந் தேதி சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால் மேலும் சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளனர்.

    விசாகப்பட்டினம்-நாகார்ஜுன சாகர் , கோதாவரி உள்ளிட்ட இடங்களிலும் கடல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.
    • சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. துணை முதல் மந்திரி பவன் கல்யாணின் தீவிர ரசிகரான இவர் அவருடைய கட்சியிலும் உறுப்பினராக உள்ளார்.'

    இந்த நிலையில் பவன் கல்யாணை சந்திப்பதற்காக அவர் சைக்கிளில் செல்ல முடிவு செய்தார். கர்னூலில் இருந்து குண்டூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு 487 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

    அங்கு சென்று பவன் கல்யாணை சந்திக்க சைக்கிள் பயணத்தை ராஜேஸ்வரி நேற்று தொடங்கினார். அவருடைய சைக்கிள் முன்பு பவன் கல்யாண் போஸ்டர், படங்கள், கட்சி கொடிகள் உள்ளன.

    தனியாக சைக்கிள் பயணம் செல்லும் பெண்ணின் துணிச்சலை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். இது குறித்து ஜனசேனா கட்சி மகளிர் பிரிவு சார்பில் ராஜேஸ்வரி படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பவன் கல்யாண் சைக்கிள் பயணம் வரும் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்துக்கு அந்த பெண் வரும்போது அவருக்கு மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும்.

    சைக்கிளில் பயணம் வரும் இடங்களில் கட்சி தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்து உதவி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கம்பம் மாவட்டம் போனக்கல்லை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் போனக்கல்லில் உள்ள சாய்பாபா கோவில் முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள், மகன் உள்ளனர்.

    அசோக் பிச்சை எடுத்து சம்பாதிக்கும் பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக கொஞ்சம், கொஞ்சமாக ரூ.50 ஆயிரம் வரை சேமித்து வைத்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு போனக்கல்லில் நரசிம்ம ராவ் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் உணவு சாப்பிட சென்றார். அப்போது நரசிம்ம ராவ் அசோக்கிடம் தனக்கு அவசரமாக ரூ.50 ஆயிரம் தேவைப்படுகிறது. கடனாக கொடுத்தால் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறினார்.

    இதனை நம்பிய அசோக் பிச்சை எடுத்து சேமித்து வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை நரசிம்மராவிடம் கொடுத்தார். பணம் கொடுத்ததற்கான ஆதாரமாக பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் தொழிலதிபர் நரசிம்ம ராவிற்கு ரூ.2.75 கோடிக்கு கடன் இருப்பதாகவும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை திருப்பி தர முடியாது என தனது வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    பின்னர் கடன் வாங்கிய அனைவருக்கும் திவால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் பிச்சைக்காரர் அசோக்கிற்கும், நரசிம்ம ராவ் திவால் நோட்டீஸ் அனுப்பினார்.

    நோட்டீசை கண்ட அசோக் கடனாக வழங்கிய பணம் இனி திரும்ப கிடைக்காது. தொழிலதிபரை நம்பி பணம் கொடுத்ததால் தனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை தெரிவித்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று மாலை பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    த.வெ.க. மாநாட்டில் உரையாற்றிய விஜய், பாஜக மற்றும் திமுகவை நேரடியாக தாக்கி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பவன் கல்யாண் அவரது பதிவில், "துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்காக நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
    • 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, "தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    முன்பு நான் ஆட்சியில் இருந்த போது அதிக குழந்தைகளை பெற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் அனைவரும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையைக் குறைத்தீர்கள்.

    முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது.

    தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. கருவுறுதல் விகிதத்தின் தேசிய சராசரி 2.1 ஆக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. 2047 ஆம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும்.

    தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த பிரச்சினை மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார். 

    • வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர்.
    • போலீசில் புகார் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிராடி பேட்டை சேர்ந்தவர் வினோத். இவர் 2 வயதுடைய ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வாங்கி வந்து அதற்கு மேக்ஸ் என பெயரிட்டனர். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் குழந்தை போல நாய் செல்லமாக பழகியது.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி குண்டூரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டின் கதவு திறந்ததால் நாய் வீட்டில் இருந்து வெளியே சென்றது.

    செல்லமாக வளர்த்து வந்த நாயை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டில் இருந்த அனைவரும் நகரம் முழுவதும் நாயை தேடி அலைந்தனர். அண்டர் பேட்டை போலீசில் புகார் செய்தனர். மேலும் நகரம் முழுவதும் நாய் காணாமல் போனது குறித்து விவரங்களுடன் பேனர் வைத்தனர்.

    நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என நாயின் விவரங்களுடன் துண்டு பிரசுரவும் அச்சடித்து பஸ் நிலையம், ரெயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடு வீடாக வழங்கினா்.

    இதற்கிடையே வீட்டிலிருந்து வெளியேறிய நாய் மழையில் நனைந்தபடி சாலை ஒரு ஓரத்தில் தவித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அதன் அருகில் சென்று பிஸ்கட் கொடுத்தார்.

    அவரை கண்டதும் நாய் ஆட்டோவில் ஏறி கொண்டது. இதனை அடுத்து நாயை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்தார்.

    நாய் காணாமல் போனது குறித்து விளம்பரங்களை பார்த்து ஆட்டோ டிரைவர் உடனடியாக வினோத்தை தொடர்பு கொண்டு வரவழைத்து நாயை ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவருக்கு வினோத் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். ஆட்டோ டிரைவரை பிரிந்து சென்ற போது நாய் கால்களை தூக்கி அவருக்கு செய்கை காட்டியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
    • இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சர் சபைக் குழு (சிசிஎஸ்) ஆந்திர மாநிலம் நாகயலங்காவில் புதிய ஏவுகணை சோதனை மையம் நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தந்திரோபாய ஏவுகணை அமைப்புகளை சோதிக்க முடியும்.

    கீழ் மற்றும் மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகள், எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பிற திட்டங்களின் சோதனைக்கு இந்த மையம் துணைபுரியும்.

    ஆந்திராவில் புதிதாக அமைய உள்ள ஏவுகணை மையத்தில் மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய தொட்டி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், டேங்க் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகள், விமான ஏவுகணை அமைப்புகள், செங்குத்தாக ஏவப்படும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணை சோதனையிடப்பட உள்ளன.

    கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஆயுதப்படைகளுக்கான பல முக்கிய முன்மொழிவுகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அமெரிக்காவிலிருந்து அதில் நவீன 31 பிரிடேட்டர் டிரோன்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் 2 அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்களை முழுமையாக தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இது இந்திய கடற்படைக்கான மூலோபாய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். விண்வெளி அடிப்படையிலான திறன்களுடன் இந்திய படைகளுக்கு சாலைகள் அமைப்பதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.

    • ஆந்திராவில் தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
    • போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது.

    ஆந்திராவின் கர்னூல் அருகே தேவரக்கட்டு பகுதியில் ஆண்டுதோறும் நடக்கும் பன்னி திருவிழாவின் முக்கிய அம்சமான சண்டையிடும் சடங்கில், இந்தாண்டு 70 பேர் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    தசரா பண்டிகையையொட்டி பல ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது. தேவரகட்டு மலையில் மலைமல்லேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. வழக்கம் போல் தசரா தினத்தன்று நள்ளிரவு 12 மணிக்கு மாளம்மா, மல்லேஸ்வர சுவாமிக்கு கல்யாணம் நடந்தது. அதன்பின், மலையின் சுற்றுவட்டாரப் பகுதியில் சிலைகள் ஊர்வலமாகச் சென்றன. இந்த உற்சவ சிலைகளை பெறுவதற்காக 5 கிராம மக்கள் ஒரு குழுவாகவும், மற்ற 3 கிராம மக்கள் மற்றொரு குழுவாகவும் சேர்ந்து சண்டையிடுவர்.

    பல கிராமத்தினர் குழுவாக பிரிந்து சண்டையிட்டு கொள்ளும் இந்த சடங்கை பாதுகாப்பாக நடத்துவதற்கு 800 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி அந்த திருவிழாவில் வன்முறை வெடித்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே நடந்த அதிகார மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
    • ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

    பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ×