என் மலர்
நீங்கள் தேடியது "மீட்பு பணி"
- விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
- சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும்.
ராயபுரம்:
வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்வுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
ஒரு இந்தியக் குடிமகனாகவும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் நிலையிலும் பல உயிர்களை இழந்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்று, துயரமுடன் இருக்கும் இந்த வேளையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் விபத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரத்திலும் பங்கேற்கின்றேன்.
இந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் செய்ய தயாராக உள்ளேன். வழக்கம் போல, இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, மாநில அரசும், விபத்து ஏற்பட்ட பகுதி வாழ் கிராமங்களும் ஓடோடி வந்து முதலில் உதவிகரங்கள் நீட்டி உள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு உள்ள சில ரயில் பயனாளிகள் ரயில்வே மீட்பு குழுவினர் தாமதமாக வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் போது, விரைந்து செயல்படுவது எப்படி என்று மீட்புக்குழு வினருக்கு, ரயில்வே துறையின் வழிகாட்டுதல் முறைப்படி, அவர்களுக்கு தக்க பயிற்சிகள் காலமுறைப்படி வழங்கப்பட்டுள்ளதா, என்பதை தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேளை இல்லையெனில், அவர்களுக்கு தக்க பயிற்சிகள் வழங்க ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை-கல்கத்தா ரயில் மார்க்கம் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் மார்க்கமாகும். அதிக மக்கள் பயணம் செய்வதால், இந்த மார்க்கத்தில் உள்கட்டமைப்பை உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன். மேலும் பயனாளிகள், கோரமண்டல் விரைவு ரயிலில் வருவதால், அதிகப்படியான பயனாளிகள் முன்பதிவு செய்வதாலும், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிகமான அளவில் பயனாளிகள் பயணிப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த மார்க்கத்தில் மேலும் சில புதிய ரயில்களை விட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
- மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.
கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.
- சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரகாண்ட் மாநிலம் உத்திரகாசியில் சுரக்கப்பாதையில் ஏற்பட்ட இடிபாட்டில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவர்களை மீட்கும் பணி 6-வது நாளாக நடந்து வருகிறது. சுரக்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க புதிய யுக்தியை மீட்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சுரக்கத்துக்குள் 60 மீட்டர் நீளமும், 900 மில்லி மீட்டர் விட்டமும் கொண்ட இரும்பு குழாய் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது.
தொழிலாளர்கள் குழாயின் உள் வழியாக ஏறி தப்பி வருவதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஒரு குழாயும் சுரங்கத்துக்குள் செலுத்தப்படுகிறது. அதன் வழியாக சுரங்கத்துக்குள் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு உணவு வழங்கவும், காற்றை சப்ளை செய்யவும், உடல் நலம் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழாய்கள், தொழிலாளர்கள் இருக்கும் பகுதி வரை செலுத்துவதற்காக குழி தோண்டப்பட்டு வருகிறது. அந்த பணி முடிந்து குழாய் செலுத்தப்பட்டதும் அதன் வழியாக தொழிலாளர்கள் தப்பி வரும் வகையில் பணி துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பணி வேகமாக நடப்பதால் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் விரைவிலேயே மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.
திருவனந்தபுரம்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதை அமைக்கும்பணியில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீட்பு பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில் ஈடுபட கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர், தாமாகவே முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விதுரா பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.
தேசிய பேரிடர் மீட்பு படையில் உறுப்பினராக உள்ள இவர், பல்வேறு இயற்கை பேரழிவு மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக 2013-ல் உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பு, 2018-ல் ஏற்பட்ட வெள்ள பேரழிவு, 2019-ல் காவலபாரா மற்றும் 2020-ல் பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு, உத்தரகாண்ட் தபோவன் சுரங்கப்பாதை பேரழிவு போன்ற இயற்கை பேரிடர்களில் ரஞ்சித் பங்கேற்றிருக்கிறார்.
இதனால் தற்போது உத்தரகாண்ட் உத்திர காசியில் சுரங்கத்துக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட தானாகவே முன்வந்திருக்கிறார். ரஞ்சித் இந்த துறையில் சம்பளம் வாங்காமல் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
- 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கத்தின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.
அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பேரிடா் மீட்புக் குழுவினா் சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனா். முன்னதாக இடிபாடுகளில் துளையிட்டு பெரிய இரும்புக் குழாக்களைச் செலுத்தி, அவற்றின் வழியே தொழிலாளா்களை வெளியே மீட்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் துளையிடும் எந்திரம் சரிவர வேலை செய்யவில்லை.
இதையடுத்து வேறு எந்திரம் மூலம் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள பாறை சரிவை துளையிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லியில் இருந்து இந்திய விமானப் படையின் சி-130 ஹொ்குலிஸ் விமானத்தின் மூலமாக விபத்துப் பகுதிக்கு 25 டன் அளவிலான அமெரிக்காவில் தயாரான அதி நவீன கனரக எந்திரம் கடந்த 15-ந் தேதி கொண்டு செல்லப்பட்டது.
இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 6 மீட்டர் தூரத்துக்கு பாறைகளில் துளையிடும் ஆற்றல் கொண்டது. இந்த நவீன எந்திரம் மூலம் சுரங்கப்பாதையின் இடிபாடுகளில் துளையிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.
சுரங்கப் பாதையின் நடுப்பகுதியில் சரிந்து விழுந்துள்ள பாறை கலந்த மண் பகுதி சுமார் 70 மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அந்த 70 மீட்டர் தூரத்தையும் நவீன எந்திரம் மூலம் துளையிட்டு சென்றால்தான் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும்.
தொழிலாளர்கள் சிக்கி இருக்கும் பகுதிக்குள் தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கிடையே நவீன எந்திரம் மூலம் நேற்று காலை தொடங்கிய துளையிடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் 24 மீட்டர் தூரத்துக்கு அந்த எந்திரம் துளையிட்டு இருந்தது.
அதன் பிறகு பாறைகளில் மிகவும் வலுவான பகுதி இருந்ததால் துளையிடும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இன்னும் பாதிக்கு மேற்பட்ட தொலைவுக்கு துளையிட வேண்டியது உள்ளது.
இதற்கிடையே 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ள சுரங்கப்பாதையில் உலோகப்பகுதி ஒன்று உள்ளது. இந்த உலோகப் பகுதியை வெட்டி அகற்றினால் தான் சுரங்கப் பாதையில் துளையிடும் பணியை தொடர முடியும். எனவே அந்த உலோக பகுதியை கட்டர் மூலம் வெட்டி அகற்றுவதற்காக பணிகள் நடந்தன.
நேற்று அந்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது சுரங்க பாதை இடிந்து விழுவதை போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் மீட்பு குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மீட்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நேற்று மாலை 4 மணிக்கு நிறுத்தப்பட்ட மீட்பு பணிகள் இன்று மதியம் வரை தொடங்கவில்லை.
சுரங்கப்பாதையின் மேற்பகுதியில் அடுத்தடுத்து மண்ணில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரங்கப் பாதைக்குள் இடிபாடுகளை நவீன எந்திரங்கள் மூலம் அகற்றும்போது கடுமையாக அதிர்வு ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.
இந்த அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை ஓட்டுமொத்தமாக இடிந்து விழுந்துவிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து சுரங்கப்பாதையின் மேல் இருந்து துளைபோட்டு 41 தொழிலாளர்களை மீட்கலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சுரங்கப்பாதை மீட்பு பணிகளில் அடுத்தடுத்து இடையூறு ஏற்படுவதால் 41 பேரையும் திட்டமிட்டப் படி மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) 7-வது நாளாக 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணி நடக்குமா? என்று கேள்விக்குறி நீடிக்கிறது.
சுமார் 150 மணி நேரம் கடந்துவிட்டதால் சுரங்கப் பாதைக்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் நல்ல மனநிலை மற்றும் நல்ல உடல்நலத்துடன்இருப்பார்களா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- 41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது.
- இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.
உத்தரகாசி:
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி பகுதியில் பிரம்மகால்-யமுனோத்திரி நெடுஞ்சாலையில் சில்க் யாரா-தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே மலைக்கு கீழ் நீண்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதான போக்குவரத்து வசதிக்காக இந்த சுரங்கப்பாதையை கடந்த சில ஆண்டுகளாக அமைத்து வருகிறார்கள்.
கடந்த 12-ந்தேதி சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது அதன் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக் கொண்டனர். சுரங்கம் தோண்ட வேண்டிய மலை பகுதிக்கு கீழும் ஏற்கனவே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு இடையில் அவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் கடந்த 8 நாட்களாக போராடி வருகிறார்கள். முதலில் 3 அடி சுற்றளவு கொண்ட குழாய்களை உள்ளே செலுத்தி 41 தொழிலாளர்களையும் அதன் வழியாக மீட்கலாம் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.
இதையடுத்து டெல்லியில் இருந்து அமெரிக்காவில் தயாரான அதிநவீன எந்திரம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. அந்த எந்திரம் சுரங்கப்பாதைக்குள் மண் சரிந்து விழுந்துள்ள 70 மீட்டர் தூரத்தில் 24 மீட்டர் தூரத்துக்கு தோண்டியது. அதற்கு பிறகு மலைப்பகுதியில் குறிப்பாக சுரங்கப்பாதை மேல் அதிர்வுகள் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த சுரங்கப்பாதையும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் அமெரிக்க எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து சிறிய குழாய் வழியே உலர் பழங்கள், உணவு வகைகள், ஆக்சிஜன் காற்று அனுப்பப்பட்டு வருகின்றன.
41 தொழிலாளர்களும் சிக்கியுள்ள சுரங்கத்துக்குள் அதிர்ஷ்டவசமாக மின் இணைப்பும், குடிநீர் இணைப்பும் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் சற்று தைரியமான மனநிலையுடன் வெளியில் இருப்பவர்களுடன் பேசி வருகிறார்கள். 41 தொழிலாளர்கள் எத்தகைய நிலையில் இருக்கிறார்கள் என்பதை சிறிய ரக டிரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் 41 தொழிலாளர்களையும் மீட்க சுரங்கப்பாதை மேல் பகுதியில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு மீட்பு பணிகளை செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது. இந்த பணிகள் செய்வதற்கு எந்திரங்களை எடுத்து செல்ல மலை மீது சுமார் ஆயிரம் மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்க வேண்டும். அந்த பணிகள் நேற்று நடந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு இதுபோல் நடந்த ஒரு விபத்தில் மலை உச்சியில் இருந்து துளையிட்டு பணியாளர்கள் மீட்கப்பட்டனர். அதே தொழில்நுட்பத்தை கையாள முடிவு செய்து மலையில் சாலை அமைக்கும் பணியை எல்லைப்படை வீரர்கள் தொடங்கி உள்ளனர். இன்றும் மலையில் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதற்கிடையே 41 தொழிலாளர்களை மீட்பதற்கு 5 முன்னணி நிறுவனங்கள் களத்தில் குதித்து உள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு நிறுவனம் (ஓ.எம்.சி.) சட்லஜ் நதி வாரியம் ரெயில் நிறுவனம், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம், தெக்ரி டெக்ரோ டெவலப் மெண்ட் கார்ப்பரேஷன் ஆகிய 5 நிறுவனங்களும் 5 விதமான திட்டங்களுடன் மீட்பு பணியில் தங்களது நிறுவனங்களை இறக்கி விட்டுள்ளன.
இவர்களுக்கு பேரிடர் மீட்பு குழு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரரக்ள் துணையாக இருந்து பணிகளை தொடங்கி உள்ளனர். சட்லஜ் நதி நீர் நிறுவனத்தினர் மலை உச்சியில் இருந்து சுரங்கப்பாதையை இணைக்கும் துளையை போடுவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மற்ற நிறுவனங்கள் மூலமாகவும் சுரங்கப்பாதைக்குள் இருக்கும் 41 தொழிலாளர்கள் இருக்கும் பகுதியை இணைக்க 3 இடங்களில் துளை போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இப்படி பல்வேறு வகைகளிலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
இன்று 9-வது நாளாக மீட்பு பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இன்று தொடங்கி இருக்கும் பணிகளில் திட்டமிட்ட வெற்றி கிடைத்தால் இன்னும் 2 தினங்களில் 41 தொழிலாளர்களையும் மீட்க முடியும் என்று மத்திய-மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை பிரதமர் மோடி மீட்பு குழு உயர் அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு பேசினார். மீட்பு பணிகள் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.
- மீட்பு பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஊழியர்கள் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள ஊழியர்கள் 41 பேரும் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் முயற்சியாக அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டுக் கட்டு உள்ளிட்டவைகளை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மனதளவில் உறுதியாக வைத்துக் கொள்ள இவை உதவியாக இருக்கும் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.
- தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு.
- ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில், சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று (நவம்பர் 25) துவங்கின.

எனினும், ஆகர் இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் சுரங்கத்திற்குள் இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
"சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரத்தின் 16 மீட்டர்கள் வரை வெட்டி அகற்றப்பட வேண்டும். பிளாஸ்மா கட்டர் இயந்திம் மூலம் வெட்டி எடுக்கப்படுவதால், ஆகர் இயந்திர பிளேடுகளை வேகமாக அகற்ற முடியும்," என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுரங்க நிபுணரான க்ரிஸ் கூப்பர் தெரிவித்து இருக்கிறார்.

"இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற நீண்ட காலம் ஆகிவிடும். மலை பகுதியில் பணியாற்றும் போது, எதையும் கணிக்கவே முடியாது. நாங்கள் இதுதொடர்பான பணிகள் நிறைவடைவது குறித்து எந்த கணிப்பையும் தெரிவிக்கவில்லை," என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டமைப்பின் உறுப்பினரான சையத் அடா ஹசைன் தெரிவித்து உள்ளார்.
சுரங்கம் உருவாக்குவதில் சர்வதேச நிபுணரான ஆர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்க முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதை அடுத்து, இவரின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக நடைபெறுகிறது.
- சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, மருந்துகள் அனுப்பப்படுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காஷி மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணிகளின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக சுரங்கத்திற்குள் சிக்கித்தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 15-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ஆறு திட்டங்கள் தீட்டப்பட்டு, ஒவ்வொரு திட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு வளர்ச்சி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது தெரிவித்துள்ளார். மேலும் சிக்கியுள்ளவர்களுக்கு போதுமான உணவு, மருந்துகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி சுரங்கத்திற்குள் இருப்பவர்களை மீட்க செங்குத்தாக துளையிடும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதுவரை 15 மீட்டர்கள் வரை துளையிடப்பட்டு உள்ளன. இன்னும் 71 மீட்டர்கள் துளையிட்டால், சிக்கியுள்ளவர்களை மீட்டுவிட முடியும்.

இதுதவிர கிடைமட்டமாக துளையிடும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் 170 மீட்டர்கள் வரை செங்குத்தாக துளையிடப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான பணிகள் இதுவரை துவங்கவில்லை. இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் சேப்பர்ஸ் என்ற பொறியாளர் குழுவும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.
- நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தான் வசிக்கும் இடத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.
பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கானை பாராட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். சிறந்த மனிதனாக திகழ்வதற்கு உங்கள் அருகே இருக்கும் நபருக்கும் நன்றி. மீட்பு உதவி பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன்னுடைய புகழை அவர் பயன்படுத்தாதது என்னை பிரமிக்க வைத்தது.
தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயத்தை சாதிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளார். புயலின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருக்கும் நடிகர் அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
- தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
சென்னை:
பாராளுமன்றத்தில் பொருளாதார நிலைகுறித்த விவாதத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிச்சாங் புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பேரழிவை உருவாக்கியுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் படகுகளும் வலைகளும் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளநீர் விளை நிலங்களில் தேங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர்களை இழந்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகரில் பெய்த வரலாறு காணாத கனமழையால், நகரமே தண்ணீரில் மூழ்கி உள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கி தமிழ்நாடு அரசு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும், மீட்புப் பணிகளை மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது.
எனவே, மத்திய அரசு நிதி மற்றும் நிவாரணப் பொருட்களை தமிழக அரசிற்கு வழங்கி, மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள உதவி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.
- புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மாநகரில் வெள்ளத்தில் சிக்கிய 1000 பேரை பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.
விருகம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராமம் தசரதபுரத்தில் வீட்டிலேயே குழந்தை பெற்ற தாயையும், குழந்தையையும் போலீசார் மீட்டனர். முத்தியால்பேட்டை பி.ஆர்.என். கார்டன் பகுதியில் 54 குடும்பத்தினர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டூர்புரம் பகுதியில் 25 பேரும், நீலாங்கரை பகுதியில் 6 பேரும் வீடுகளில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 30 பேர், கோட்டூர்புரம் பகுதியில் 15 பேர் என சென்னை மாநகர் முழுவதும் சுமார் 1000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். புயலால் விழுந்த 75 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
கணேசபுரம், செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி சுரங்கப்பாதைகள், ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை, சி.பி.சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப் பாதை, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை, லயோலா சுரங்கப் பாதை உள்ளிட்ட 10 சுரங் கப்பாதைகள் மூடப்பட்டன.
சென்னையில் போலீஸ் ஏட்டு ருக்மாங்கதன் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.