என் மலர்
நீங்கள் தேடியது "ரிசர்வ் வங்கி"
- மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.
- அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
வங்கி ஏ.டி.எம்.களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் பெரும்பாலும் வைக்கப்படுகின்றன. இதனால் மக்கள் குறைவான மதிப்புடைய நோட்டுகளுக்கு திண்டாட வேண்டியுள்ளது.
எனவே இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அடிக்கடி பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட பணத்தாள்கள் மக்களுக்கு அதிகமாக கிடைக்கும் வகையில் ஏ.டி.எம்.களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை வழக்கமான அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும். இதை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
அந்தவகையில் 75 சதவீத ஏ.டி.எம்.களில் வருகிற செப்டம்பர் 30-ந்தேதிக்குள் குறைந்தபட்சம் ஒரு அறையிலாவது மேற்படி நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அனைத்து ஏ.டி.எம்.களிலும் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் இந்த முறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
- கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.
- வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்களுக்கான வைப்பு கணக்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், சேமிப்பு (savings) மற்றும் கால(term) வைப்பு கணக்குகளைத் சுயமாக திறந்து நிர்வகிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
ஆர்பிஐ சுற்றறிக்கையின்படி, வங்கிகள் தங்கள் இடர் மேலாண்மைக் கொள்கையின் அடிப்படையில் நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளையும் சிறார்களுக்கு வழங்க முடியும்.
இருப்பினும், சிறார்களின் கணக்குகள் அதிகமாகப் பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI மேலும் குறைய வாய்ப்புள்ளது.
- கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.
கடந்த பிப்ரவரி 5-ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதாவது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா இதை அறிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் 2025-26ம் நிதி யாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் மேலும் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026-க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது விதித்து உள்ள 104 சதவிகித வரி விதிப்பு ஆகியவை உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளோம்.
விவசாய உற்பத்தி மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் கச்சா எண்ணை விலைகளை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு 4.2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
வளர்ந்து வரும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி விழிப்புடன் உள்ளது. உலக ளாவிய நிச்சயமற்ற தன்மைகள் நாணயத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தகூடும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் மீதான வட்டி குறையும். ஏற்கனவே கடன் பெற்று இ.எம்.ஐ. செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். வீடு, வாகன வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டு மக்களி டம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது.
- மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும்.
மும்பை:
இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. நேற்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது.
அதேநேரத்தில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் கூறி உள்ளது.
வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் வெளியாகும். அவர் கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது.
- நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5000, கிராமப்புறங்களில் ரூ.7000 வழங்கப்படும்.
மதுரையை சேர்ந்த பிச்சைராஜன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2024 செப்டம்பர் 30-ந்தேதி சுற்ற றிக்கை ஒன்றை வெளி யிட்டார். அதில் பல வழி காட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. ஒரே பேன் கார்டு எண்ணை பயன்படுத்தி பல நகைக்க டன்களை பெறுவது, நகைக்கடன்களை குறிப்பிட்ட தொகை செலுத்தி திருப்பி வைப்பது, புதுப்பிப்பது ஆகியவை தொடர்பாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழிகாட்டுதல்கள் மிகவும் தெளிவற்றவையாக வெளியிடப்பட்டு உள்ளன. பொது நலனுக்கு எதிராக இந்த முரண்பட்ட வழிகாட்டுதல்கள் உள்ளன. தற்போதைய வழிகாட்டுதலின்படி முழு தொகையையும் நகை திருப்பும் போது செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை மக்கள் அவ்வாறு செலுத்த இயலாமல், நகைகளை இழக்கும் நிலை ஏற்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, ஒரு நபர் 5 முறை மட்டுமே நகைக் கடன்களை பெற இயலும். அதோடு நகர்புறங்களில் ஒரு கிராமுக்கு 5 ஆயிரம் ரூபாயும் கிராமப்புறங்களில் 7 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாகுபாட்டினை ஏற்க இயலாது. இது அரசியலமைப்பு விதிகளுக்கு எதிரானது.
ஆகவே தங்க நகைக் கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்ட விரோதமானது, செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
- ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.
- இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பொருளாதார நிபுணர் பூனம் குப்தாவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அந்த பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்துவந்தது.
இந்த நிலையில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) தலைமை இயக்குநராக பணியாற்றும் பூனம் குப்தாவை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. 4-வது ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக 3 ஆண்டு காலத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூனம் குப்தா பதவியேற்கும் தேதி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
இந்தியாவின் பொருளாதார கொள்கை வகுப்பில் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சிலின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. பொருளாதார நிபுணரான பூனம் குப்தா பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலிலும் உறுப்பினராவார்.
- மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
- இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.
வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.
ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்!
- மோடி அரசு ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மோடி அரசால் வங்கிகள் வசூல் ஏஜண்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.
ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

இந்த முடிவை விமரிசித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் நமது வங்கிகள் 'கலெக்ஷன் ஏஜெண்டுகளாக' மாற்றப்பட்டுள்ளன!
ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணம் அதிகமாக உள்ளது. 2018 மற்றும் 2024 க்கு இடையில் சேமிப்புக் கணக்குகள் மற்றும் ஜன் தன் கணக்குகளில் இருந்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததால், மோடி அரசு குறைந்தது ரூ.43,500 கோடியைப் பிடித்துள்ளது.
மக்களை கொள்ளையடிப்பதற்கான பிற வங்கி கட்டணங்கள் :
(வங்கிக்கணக்கு) செயலற்ற கட்டணம், ஒவ்வொரு ஆண்டும் ரூ.100-200 ஆகும். வங்கிக்கணக்கு ஸ்டேட்மென்ட் கட்டணம் ரூ.50-100.
SMS எச்சரிக்கைகளுக்கு காலாண்டிற்கு ₹20-25 வசூலிக்கப்படுகிறது. வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணமாக 1-3% வசூலிக்கின்றன.
கடன் சரியான நேரத்தில் செலுத்தப்பட்டால், முன்கூட்டிய கடன் அடைப்புக் கட்டணங்கள் விதிக்கப்படும். NEFT, டிமாண்ட் டிராஃப்ட் கட்டணங்கள் கூடுதல் சுமையாகும். கையொப்ப மாற்றங்கள் போன்ற KYC அப்டேட்களுக்கும் கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
முன்னதாக, மத்திய அரசு இந்தக் கட்டணங்களால் வசூலிக்கப்படும் தொகையின் தரவை பாராளுமன்றத்தில் வழங்கியது. ஆனால் இப்போது "ரிசர்வ் வங்கி அத்தகைய தரவைப் பராமரிக்கவில்லை" என்று சாக்கு கூறி இந்த நடைமுறையும் அரசு நிறுத்தி உள்ளது.
வேதனையான விலை உயர்வு + கட்டுப்பாடற்ற கொள்ளை = மிரட்டி பணம் பறிப்பதற்கான பாஜகவின் மந்திரம்! என்று பதிவிட்டுள்ளார்.
- காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது.
- ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.
மும்பை :
நடப்பு நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இந்த ஆண்டு டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறி இருந்தார்.
தற்போது நாம் பயன்படுத்தும் பணம், காகித வடிவத்திலும், உலோக நாணய வடிவத்திலும் உள்ளன. அதேபோன்று, 'டிஜிட்டல் கோட்' பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி உருவாக்கப்படுகிறது. தனியார் துறையினரும் இதை வெளியிடுகிறார்கள்.
காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியும் மதிக்கப்படுகிறது. ஒருசில நாடுகள் மட்டுமே டிஜிட்டல் கரன்சியை அங்கீகரித்துள்ளன.
இந்தநிலையில், இந்தியாவில் ரிசர்வ் வங்கி முதல்முறையாக டிஜிட்டல் கரன்சியை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடுகிறது. சோதனை அடிப்படையில் இந்த கரன்சி வெளியிடப்படுகிறது.
இதற்கு டிஜிட்டல் ரூபாய் (மொத்த விலை பிரிவு) என்று பெயரிடப்பட்டுள்ளது. அரசு பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்வதற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் இந்த கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி வெளியிடப்படுகிறது.
இதுபோல், 'டிஜிட்டல் ரூபாய் (சில்லறை பிரிவு)' என்ற டிஜிட்டல் கரன்சி, இன்னும் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. அந்த கரன்சியை வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயன்படுத்தலாம்.
- நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும்.
- 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
புதுடெல்லி :
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை (ரெபோ ரேட்) ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக உயர்த்தி வருகிறது. இந்தநிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம், 3-ந்தேதி நடக்கிறது. அதில், மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ. ரிசர்ச் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ. ரிசர்ச் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் கூட்டம், வழக்கமான கூட்டமாக இருக்கும். அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது. ஆனால், டிசம்பர் மாத மத்தியில், ரெபோ ரேட்டை 0.5 சதவீதம் முதல் 0.75 சதவீதம்வரை உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக, 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ரெபோ ரேட் உயர்வால், வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- முதல் கட்டமாக அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றத்திற்கு மட்டும் அனுமதி.
- முதல் நாள் 275 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்
காகித வடிவிலும்ம், உலோக வடிவிலும் உள்ள பணம் தற்போது டிஜிட்டல் கரன்சியாக உருவெடுத்துள்ளது. காகித பணத்துக்கு நிகராக டிஜிட்டல் கரன்சியை சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. இந்தியாவிலும் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி இன்று சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மகிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி, எச்.எஸ்.பி.சி. ஆகிய 9 வங்கிகள் மூலமாக டிஜிட்டல் கரன்சி இன்று வெளியிடப்பட்டது
அரசு பங்கு பத்திரங்கள் பரிமாற்றத்திற்கு இந்த டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இதன் மூலம் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து, இதர பரிமாற்றங்களுக்கும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. முதல் நாள் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்தி 9 வங்கிகள் 48 பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகவும், மொத்தம் 275 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- வங்கிகளில் பணத்திற்கு பதிலாக இந்த கரன்சிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
- இந்தக் கரன்சியை அனைத்து தரப்பினரும் வணிகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட சில பயன்பாட்டிற்காக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் அல்லது இ-ரூபாய் நோட்டுக்களை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
டிஜிட்டல் ரூபாய் நோட்டுக்கள் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என தெரிவித்தது.
இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் முறையில் e₹-R என்ற குறியீடு டிஜிட்டல் ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், அகமதாபாத், கவுகாத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.
இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.