என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவரசர் ஹாரி"

    • இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
    • ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. தந்தை மற்றும் சகோதரர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹாரி தனது மனைவி, குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    இதற்கிடையே இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்த தனது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வழக்கில் இளவரசர் ஹாரி தோல்வி அடைந்தார். அவரது மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு உள்துறை அமைச்சகம், ஹாரி இங்கிலாந்தில் இருக்கும்போது தானாகவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை என முடிவு செய்தது. இதை எதிர்த்துதான் ஹாரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த நிலையில் அரச குடும்பத்துடன் இணைய விரும்புவதாக ஹாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனது குடும்பத்தினருடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன். இனிமேல் தொடர்ந்து போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்த போராட்டத்தை என் தந்தை இன்னும் எவ்வளவு காலம் வைத்திருப்பார் என்று எனக்குத் தெரியவில்லை.

    எனது போலீஸ் பாதுகாப்பை ரத்து செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தோல்வியடைந்தது என்னை பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது. இந்த பாதுகாப்பு விஷயங்களால் தந்தை சார்லஸ் என்னுடன் பேசமாட்டார். ஆனால் நான் இனி சண்டையிட விரும்பவில்லை.

    ஒரு புத்தகம் எழுதியதற்காக என் குடும்பத்தில் சிலர் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக, அவர்கள் பல விஷயங்களுக்கு என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். ஆனால் என் குடும்பத்துடன் சமரசம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

    • ஸ்பேர் என்ற தலைப்பில் இளவரசர் ஹாரி தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி உள்ளார்.
    • அதில் வில்லியம், ஹாரி இளவரசர் சகோதரர்கள் இடையேயான மோதல் அம்பலத்துக்கு வந்துள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மறைந்த டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (38), தன்னை விட 3 வயது மூத்த அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேயை காதலித்து 2018-ம் ஆண்டு மே 19-ம் தேதி விண்ட்சர் கோட்டையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் வைத்து மணந்தார். இவர்களது திருமணம் அரச குடும்பத்தில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தியது.

    இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பதவிகளைத் துறந்து தங்கள் குழந்தைகளான ஆர்ச்சீ மவுண்ட் பேட்டன், லில்லிபெட் மவுண்ட் பேட்டன் ஆகியோருடன் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.

    இந்நிலையில், இளவரசர் ஹாரி 'ஸ்பேர்' என்ற தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் 16 மொழிகளில் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்து உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தப் புத்தகத்தில் இளவரசர் ஹாரி, தனக்கு அரச குடும்பத்தில் நேர்ந்த கதி குறித்து இதயம் திறந்து பேசியுள்ளார். அதுவருமாறு:

    லண்டன் இல்லத்தில் வைத்து 2019-ம் ஆண்டு எங்கள் குடும்பத்தில் ஒரு மோதல் வந்தது. என் மனைவி மேகனை கடினமானவர், முரட்டுத்தனமானவர், கரடுமுரடானவர் என்றெல்லாம் வில்லியம் விமர்சித்தார்.

    ஒரு கட்டத்தில் வில்லியம் எனது சட்டை காலரைப் பிடித்து, என் கழுத்துச் சங்கிலியை இழுத்து, தாக்கி தரையில் தள்ளினார். நான் நாய்க்கு சாப்பாடு வைக்கிற தட்டில் போய் விழுந்தேன். இதனால் எனது முதுகில் கீறல் ஏற்பட்டது.

    எங்களுக்கு இடையேயான உறவு மற்றும் போராட்டங்களின் சீரழிவு பற்றி அவர் ஊடகங்களுடன் பேச விரும்பினார். மேகனைப் பற்றி புகார்கள் கூறியபின், ஊடகங்களிடம் பேசுவதைப் பற்றி திரும்பத் திரும்ப கூறினார். ஆனால் அவரிடம் விவேகம் இல்லை. இது இருவரும் ஒருவரையொருவர் கூச்சல் போட வழிநடத்தியது. வில்லியம் வாரிசு மாதிரி நடந்துகொண்டார். என்னை அவர் புரிந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

    புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியே கசிந்தது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    • மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.
    • இதில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடப்பு ஆண்டு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார்.

    மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும். அதன்பின் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.

    அரசர் மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ம் தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கலே ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. எனினும், இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இளவரசர் ஹாரி தம்பதி இங்கிலாந்து செல்வார்களா? என்பது பற்றிய தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

    • இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி
    • மேகன் மார்கெலை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    லண்டன்

    இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    அதன் பின்னர் அரச குடும்பத்துடன் அரண்மனையில் வசித்து வந்த இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

    அதை தொடர்ந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர்கள் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர். ஹாரி-மேகன் தம்பதிக்கு ஆர்ச்சி என்ற 3 வயது மகனும், லிலிபெட் என்ற 1 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகள் இருவரும் அரச குடும்பத்தின் அரச பட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இனி அவர்கள் முறையாக இளவரசர் ஆர்ச்சி, இளவரசி லிலிபெட் என அழைக்கப்படுவார்கள் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

    இதுப்பற்றி பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "இங்கிலாந்து அரச பட்டங்களுக்கான விதிகளின்படி, ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிறக்கும்போதே தானாக இளவரசர் மற்றும் இளவரசி ஆக்கப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அப்போது ராணியாக இருந்த 2-ம் எலிசபெத்தின் கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஆவர். தற்போது அவர்களின் தாத்தா 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியவுடன் அவர்கள் இருவரும் அரச பட்டங்களுக்கு உரிமையை பெற்றனர்" என கூறினார்.

    • இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

    மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது. அதனை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்தக் கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது. மன்னர் 3-ம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன்பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும்.

    மேலும், பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அன்றைய தினமே மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    இதற்கிடையே, மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்தது.

    இந்நிலையில், இளவரசர் ஹாரி, மே 6-ம் தேதி தனது தந்தை 3-ம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
    • இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார்.

    அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவ்விழாவில் அரசு குடும்பத்தினர் உலக தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த நிலையில் மன்னர் சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2-வது மகனும், இளவரசருமான ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவர் அரச குடும்பத்தினரில் 10-வது வரிசைக்கு பின்னால் அமர்ந்திருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தை சார்லஸ், சகோதரரான இளவரசர் வில்லியம் ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி, தனது மனைவி மேகன், குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முடிசூட்டு விழா 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் மட்டும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
    • சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றது.

    பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் தம்பதி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி நியூ யார்க் நகரில் நடைபெற்ற அறக்கட்டளை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றனர். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்த கிளம்ப ஆயத்தமான ஹாரி மற்றும் மேகன் தம்பதியை புகைப்பட கலைஞர்கள் துரத்தியதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி காரை நிறுத்தாமல் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவர்களுடன் மேகனின் தாயாரும் பயணம் செய்திருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் கார் சேசிங் நடைபெற்றதாக இளவரசர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட தகவல்களில் அரை டஜன் கார்கள் சேசிங்கில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இறுதியில் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உருவானது. எனினும், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    இதே போன்று 1997 ஆம் ஆண்டு புகைப்பட கலைஞர்கள் படம் எடுப்பதற்காக வாகனத்தை துரத்திய போது ஏற்பட்ட கோர விபத்தில் ஹாரியன் தாயார் இளவரசி டயானா பலியானது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் டிரம்ப் பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.
    • மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன.

    டியூக் ஆஃப் சசெக்ஸ் இளவரசர் ஹாரியின் குடியேற்ற நிலையை கேள்விக்கு உட்படுத்தும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இளவரசர் ஹாரியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்து இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹாரி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

    "நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். ஏற்கனவே அவரது மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவரது மனைவி மோசமானவர்," என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் பேசும்போது கூறினார்.

    ஹாரியின் விசா விவகாரம் தொடர்பான சட்ட சிக்கல்கள், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு குறித்து விசா நடைமுறைகளின் போதே ஹாரி தகவல் தெரிவிக்க மறுத்தது தொடர்பாக ஹெரிடேஜ் பவுன்டேஷன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    • ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • பிரார்த்தனையில் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் அவரது பேரனும், இளவரசருமான ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    அப்போது 'கடவுளே அரசரை காப்பாற்றுங்கள்' என்ற பாடல் பாடப்பட்டது. இதை அரச குடும்பத்தினர் பாடினர். இதில் இளவரசர் ஹாரி மட்டும் அந்த பாடலை பாடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாடல் இசைக்கப்பட்ட போது இளவரசர் ஹாரி அதை பாடாமல் மவுனத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    இதை சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ராணியின் இறுதி சடங்கில் இளவரசர் ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளனர்.

    இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை திருமணம் செய்து கொண்ட பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.

    அரச குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசர் ஹாரி, அரண்மனையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினார்.
    • ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.

    லண்டன் :

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.

    இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தங்கள் ஆர்க்வெல் இணையதளத்தில் அவர், ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை மற்றும் கண்ணியத்துடன் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், ராணுவ தளபதியாக ராணியை முதன்முதலில் சந்தித்தது, தனது அன்பான மனைவியை ராணி முதன்முதலில் சந்தித்து, அன்பான கொள்ளுப் பேரக்குழந்தைகளை (தனது குழந்தைகள்) கட்டிப்பிடித்த முதல் தருணம் போன்றவற்றை குறிப்பிட்டும் நெகிழ்ச்சியடைந்து உள்ளார்.

    இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழியை சிட்னியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். #PrinceHarry #MeghanMarkle
    சிட்னி:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் 2-வது மகன் ஹாரி. இவருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்கலுக்கும் திருமணம் நடந்தது. தற்போது மேகன் கர்ப்பமாக இருக்கிறார்.

    இந்த நிலையில் இளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழி டாப்னே துனே என்பவரை சிட்னியில் உள்ள ஓபரே இல்லத்தில் சந்தித்தார்.

    இவரை இளவரசர் ஹாரி கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்றபோது சந்தித்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர்களுக்கு இடையே நட்பாக மாறியது.


    இச்சந்திப்பின் போது தனது மனைவி மேகனை தோழி துனேவுக்கு ஹாரி அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மேகனை துனே கட்டி தழுவி வாழ்த்தி ஆசி வழங்கினார்.

    இளவரசி மேகன் கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக துனே கூறினார். அதற்கு மேகன் நன்றி கூறினார். அவரிடம் விடை பெற்றபோது ஹாரியும் மேகனும் அவருக்கு முத்தமிட்டனர்.   #PrinceHarry #MeghanMarkle
    இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே தம்பதியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி கதறி அழுகின்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. #princeharry #royalwedding
    லண்டன்:

    பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு 600 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    இந்நிலையில், ஹாரியின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என 5 வயது சிறுமி லோரா கதறி அழும் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி லோரா ஹாரி திருமணத்திற்கு செல்ல வேண்டும் என கூறுகிறார். அதற்கு அவர் தாய் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதனால் செல்ல முடியாது என பதிலளித்தார். இதனை கேட்ட லோரா கதறி அழுதார். இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. #princeharry #royalwedding

    ×