search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா"

    • சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.
    • கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாது.

    திருப்பதி:

    திருப்பதி கோவிலில் ஆந்திரா முன்னாள் மந்திரி ரோஜா நடிகை ரவளியுடன் வந்து தரிசனம் செய்தார்.

    நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகப் போவதாக சிலர் சமூக வலைதளங்களில் தவறாக பதிவிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.

    நான் எந்த காரணத்தைக் கொண்டும் கட்சி மாற மாட்டேன். சிலர் கட்சியில் இருந்து வெளியேறுவதால் ஜெகனுக்கோ, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கோ எந்த இழப்பும் இல்லை.

    கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களது நிலைமையை தற்போது பார்த்து வருகிறோம். ஆந்திராவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    கல்லூரி கழிவறையில் ரகசிய கேமரா, பெண்கள் மீதான தாக்குதல், ராக்கிங் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சந்திரபாபு நாயுடு ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார்.
    • மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது

    விஜயவாடா:

    ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்று சந்திரபாபுநாயுடு முதல்-மந்திரி ஆனார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியை அடைந்தது.

    ஜெகன்மோகன் ரெட்டி மந்திரி சபையில், நடிகை ரோஜா விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதற்கிடையே இந்த போட்டி நடத்தியதில் நடிகை ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு ஒன்றின் தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11-ந்தேதி புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

    விளையாட்டு கருவிகள் வாங்கியது, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கியது இப்படி அனைத்து விஷயங்களையும் தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு இருப்பதாக விஜயவாடா போலீஸ் கமிஷனர் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ரோஜா அழைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.
    • கண்ணியத்துடன் எழுந்து நிற்போம். மக்களின் குரலை எதிரொலிப்போம்.

    திருப்பதி:

    ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மந்திரி ரோஜா உள்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் தோல்வியை தழுவினர்.

    தோல்வி குறித்து ரோஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கெட்ட காரியங்களை செய்து தோற்றால்தான் வெட்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் மக்களின் பிரச்சினைகளுக்காக எழுந்து நின்று குரல் கொடுப்போம்.

    கண்ணியத்துடன் எழுந்து நிற்போம்.

    மக்களின் குரலை எதிரொலிப்போம். வரும் நாட்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளுக்காக மக்கள் பக்கம் நின்று போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை.
    • மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் செய்தார்.

    நாடு முழுவதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை வெளியாக உள்ளது.எத்தனை சர்வே முடிவுகள் என்ன சொன்னாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வைத்தும், நலத்திட்டங்கள் தொடர வேண்டும் எனவும் பெண்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் இரவு 9 மணி வரை வரிசையில் காத்திருந்து வாக்களித்துள்ளனர்.

    இதுபோன்ற நலத்திட்டங்களை எந்த ஒரு முதல் மந்திரியும் அறிமுகம் செய்ததில்லை. சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு தில்லு முல்லுகளை செய்து வெற்றி பெற நினைக்கிறார்.

    ஆனால் மக்கள் ஜெகன்மோகன் முதல் மந்திரியாக வேண்டும் என்ற உறுதியுடன் வாக்களித்துள்ளனர். யார் என்ன செய்தாலும் மக்கள் மனதில் ஜெகன் மோகன் உள்ளார். எனவே அவரே மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரோஜாவுக்கு அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • நகரி தொகுதியில் 65 சதவீதம் பேர் தமிழர்கள் உள்ளனர்.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    வருகிற 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரோஜா 3-வது முறையாக வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி அடைவாரா என்ற பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது.

    ரோஜாவுக்கு அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரை எதிர்த்து 2 முறை தோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பானு பிரகாஷ் மீண்டும் போட்டியிடுகிறார். நகரி தொகுதியில் 65 சதவீதம் பேர் தமிழர்கள் உள்ளனர்.

    மேலும் அவருக்கு தொகுதியில் அதிருப்தி நிலவியதாகவும் கூறப்படுகிறது. இந்த காரணங்களால் ரோஜா வெற்றி பெறுவாரா அல்லது தோல்வி அடைவாரா என லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி வருகின்றனர்.

    • அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார்.
    • ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநில மந்திரியும் நடிகையுமான ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட்டார். அங்கு கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

    இதனை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் ரோஜா சாமி தரிசனம் செய்து வருகிறார். நேற்று இரவு ரோஜா திருவண்ணாமலை வந்தார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நின்று தரிசனம் செய்த அவர் அங்கிருந்து கிரிவலம் தொடங்கினார். 14 கிலோமீட்டர் கிரிவல பாதையில் நடந்து சென்றார். கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் அவர் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை ரோஜா அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.

    அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு வழிபட்டார். வைகுண்ட வாசல் வழியாக அண்ணாமலையை நோக்கி மனமுருக வழிபாடு செய்தார்.

    ஆண்டுதோறும் திருவண்ணாமலை கோவிலில் தரிசனம் செய்து வருகிறேன். அண்ணாமலையார் ஆசியோடு மக்களுக்கு சேவைப் பணிகளை செய்து வருகிறேன்.

    ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி 2-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பேற்க வேண்டும் என அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.

    அண்ணாமலையார் அருளால் மீண்டும் அமைச்சராகி மக்கள் பணியாற்றுவேன் என்றார்.

    கோவில் நிர்வாகம் சார்பில் ரோஜாவுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.
    • ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோவில் உள்ளது.

    கெங்கையம்மன் கோவிலில் தற்போது கூழ்வார்க்கும் திருவிழா நடந்து வருகிறது.



    இந்த விழாவில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை மந்திரி ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அம்மனுக்கு பட்டு சேலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். பின்னர் அம்மனுக்கு தீபாரதனை செய்து வழிபட்டார்.

    நகரி தொகுதி மக்கள் என்னை 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க முடிவு செய்து தேர்தலில் வாக்களித்து உள்ளனர்.


     நான் 3-வது முறையாக வெற்றி பெறுவது உறுதி. அதேபோல் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியும் 2-வது முறையாக அதிக இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.
    • மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார்.

    இன்று காலை நகரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகளுடன் வந்து ரோஜா வாக்களித்தார்.

    எனது சொந்தத் தொகுதியில் ஓட்டு போடுவது மகிழ்ச்சி அளிக்கிறது சந்திரபாபு நாயுடு, லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா ஆகியோருக்கு ஆந்திராவில் ஓட்டு இல்லை. அவர்களுக்கு வீடுகள் இல்லை. ஐதராபாத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    இதன் மூலம் அவர்களுக்கு ஆந்திர மக்கள் மீது அன்பு இல்லை என்பது தெரிகிறது. யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். எனக்கு நகரி தொகுதி மக்களின் ஆசிர்வாதம் என்றும் உள்ளது.

    3-வது முறையாக என்னை தேர்ந்தெடுக்க தயாராகிவிட்டனர்.

    எனக்கும் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பெண்கள் ஆதரவு அதிகமாக உள்ளது. மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்-அமைச்சராகவும் என்னை எம்.எல்.ஏ. ஆகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டனர். எனது மகள் முதல் முறையாக வாக்களித்தார்.

    மந்திரியான பிறகு முதல் முறையாக வாக்களித்தது சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
    • வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

    கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.

    அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.

    மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.

    • ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார்.
    • நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

    தமிழக எல்லையில் உள்ள நகரி தொகுதியில் 3-வது முறையாக ரோஜா போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக ரோஜா நகரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். வேட்பு மனுவை கோவிலில் வைத்து மனமுருக சாமி தரிசனம் செய்தார்.

    அங்கிருந்து திறந்த வேனில் நின்றபடி ரோஜா நகரி தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றார். இதில் ஆயிரக்கணக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வழி நெடுகிலும் கிரேன் மூலம் சுமார் 20 அடி உயரம் கொண்ட ராட்சத மாலைகள் அணிவிக்கப்பட்டன. ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் மலர் மாலை என ரோஜாவுக்கு விதவிதமான மாலைகள் கிரேன் மூலம் அணிவித்து வரவேற்றனர். செண்டை மேளம், தாரை தப்பட்டை மேளங்களுடன் ரோஜா தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார்.


    அப்போது ஜெய் ரோஜாம்மா என தொண்டர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதனால் நகரி சாலை அதிர்ந்தது.

    இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று ரோஜா மனு தாக்கல் செய்தார்.

    நகரி தொகுதியில் நான் 3-வது முறையாக போட்டியிடக் கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் சதி செய்தன. எனக்கு சீட் கிடைக்காமல் செய்ய பலர் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தனர்.

    ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து போட்டியிட வாய்ப்பளித்தார். நான் இந்த தொகுதியில் 3-வது முறையாகவும் வெற்றி பெறுவேன். மனு தாக்கலின் போது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை.

    இங்கு வந்துள்ள நகரி தொகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது.
    • முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கம்பம்:

    ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நடிகையும், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா தனது கணவருடன் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தர்ஹாவில் சிறப்பு தொழுகை நடத்தினார்.

    கம்பம் கம்பமெட்டுச் சாலையில் கல்வத் நாயகம், அம்பாநாயகம் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது. இந்த தர்ஹா கடந்த 1950-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஆண், பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ரோஜா தனது கணவரும் சினிமா இயக்குநருமான ஆர்.கே. செல்வமணியுடன் கம்பம் தர்ஹாவிற்கு வந்து சுமார் 15 நிமிடம் வழிபாடு செய்தனர். செல்வமணி இஸ்லாமிய முறைப்படி தலையில் கைக்குட்டையை கட்டிக்கொண்டு தொழுகை நடத்தினார். பின்னர் அவர்கள் காரில் புறப்பட்டு சென்றனர்.

    இது குறித்து தர்ஹாவை சேர்ந்தவர்கள் கூறுகையில், ரோஜா ஆந்திர மாநில சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியாக உள்ளார். தற்போது ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் வருகிறது. இதில் ரோஜா மீண்டும் நகரி பகுதியில் சட்டசபை உறுப்பினருக்கு போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறவும், ஜெகன்மோகன்ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக ஆக வேண்டும் என்பதற்காக சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

    ரோஜா வருகை குறித்து போலீசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்க வில்லை. அவர் வந்து சென்ற பிறகே இது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் பரவியது. 

    ×