என் மலர்
நீங்கள் தேடியது "தஞ்சாவூர்"
- நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன.
- நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றனர். நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் சுவர், ஓடுகள் சேதமடைந்தன. யாருக்கும் காயமில்லை.
அ.தி.மு.க. பிரமுகர் வீடு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
- தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது.
- போலீசார் அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே பேரறிஞர் அண்ணா சிலை உள்ளது. அண்ணா பிறந்தநாள், நினைவுநாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் தி.மு.க மகளிர் அணி சார்பில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அந்த பகுதி முழுவதும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா சிலை மீது தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கொடிகளை இணைத்து மர்ம நபர்கள் போட்டனர்.
இன்று காலை இதனை பார்த்து கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து நிர்வாகிகள் திரளானோர் அங்கு திரண்டனர். உடனடியாக மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணா சிலை மீது போடப்பட்டு இருந்த 2 கட்சி கொடிகளையும் அகற்றினர். இதனை தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுயில் பொருத்தப்பட்டு இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபக ரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
- கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்நடைபெற்றது.
அப்போது கலெக்டர் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவ ட்டத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 175 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்த ரவிடப்பட்டுள்ளது.
இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளையும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சாமிநாதன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
பாபநாசம்:
தேசிய நெடுஞ்சாலை யான தஞ்சாவூர் முதல் கும்பகோணம் சாலை 2015-ம் ஆண்டு புதியதாக போடப்பட்டது.
கடந்த 8 ஆண்டுகளில், மராமத்து பணிகள் மட்டும் செய்து வருவதால், தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும், சாலைகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகவும், தற்போது பெய்து வரும் மழையினால் ஜல்லிகள் பெயர்ந்து, சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்தும், பகல் நேரத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பதை, அருகில் வந்து பார்த்து விட்டு, உடனே பக்கவாட்டில் திருப்பும் போது பின் புறம் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
மேலும், கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவக்கிரஹ மற்றும் பழமையான கோயில்கள் இருப்பதால், விஷேச நாட்கள் மட்டு்மின்றி தினந்தோறும் வெளி மாநில, மாவட்டத்திலிருந்து கார், பேருந்துகளில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, இந்த சாலை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ. வ. வேலு "மத்திய சாலை போக்கு வரத்து அமைச்சகத்திடம் தமிழக முதலமைச்சர் உத்தரவின் படி இந்த சாலையை சீரமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியு ள்ளோம்.
மிக விரைவில் இந்த சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்" என்று தெரிவித்தார்.
தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தஞ்சாவூர்- கும்பகோணம் - அணைக்கரை சாலைகளை மேம்படுத்த ரூ.79 கோடி அனுமதித்துள்ளது.
இந்நிலையில், புதிய சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப்பணிகள் கடந்த 10-ம் தேதி தாராசுரம் புறவழிச்சாலையிலிருந்து, தஞ்சாவூர் ஆதிமாரியம்ம ன்கோயில் புறவழிச்சாலை வரை சாலையின் பள்ளம் மேடுகள், அகலம், சாலையின் அளவீடுகள் உள்ளிட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
தற்போது பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, ரெகுநாதபுரம், வழுத்தூர் சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை, பசுபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாலைகளின் அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது.
வரும் ஜனவரி மாதம் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இருந்து மன்னார்குடி வரை மாநில நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை அடுத்த காட்டூர் உள்பட பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்தப் சாலை பணிகளை மாநில நெடுஞ்சா லைத்துறை தலைமைப் பொறியாளர் செல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நடந்து முடிந்த பணிகள் குறித்தும் இன்னும் நடக்க இருக்கின்ற பணிகள் குறித்தும் அதிகா ரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவி கோட்டப் பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் வடிவ ழகன் மற்றும் ஒப்பந்தக்காரர் உடன் இருந்தனர்.
- இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.
- இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.
தஞ்சாவூர்:
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கும், தஞ்சாவூரில் இருந்து ஹூப்ளிக்கும் சேலம், திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரெயில் சேவை ஏற்கனவே நீட்டிக்கப்பட்டது. தற்போது
மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஹுப்ளியில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும் ஹூப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் (07325) அடுத்த மாதம் 3, 10, 17, 24 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும் தஞ்சாவூர் - ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் ( 07326) அடுத்த மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
- மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.
தஞ்சாவூர்:
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும், அம்மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் ஆலோசனை குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் வரவேற்றார் . இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநகர செயலாளரும் மேயருமான சண் .ராமநாதன் , மாவட்ட அவை தலைவர் இறைவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட தவறிய மத்திய அரசை கண்டித்து பேசினார். மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அனைவரும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தித்தனர்.
இதில் மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, இலக்கிய அணி அமைப்பாளர் வரகூர் காமராஜ், முன்னாள் மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கமலாரவி, தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, ஒன்றிய குழு உறுப்பினர் உஷாராணி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது.
- 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவிலில் அமைந்துள்ளது, திருநறையூர் நம்பி கோவில். இந்த ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 14-வது திருத்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தல வரலாறு
அனைத்தையும் துறந்து இறைவன்பால் நாட்டம் கொள்ள வேண்டியவர்கள், முனிவர்கள். ஆனால் மேதாவி மகரிஷி என்பவர், மகாவிஷ்ணுவே தனக்கு மருமகனாக வரவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் திருமணம் ஆகாமல், பெண் பிள்ளை இல்லாமல் எப்படி இந்த வேண்டுதல் நிறைவேறும். அதுபற்றி எல்லாம் கவலைப்படாது அனுதினமும், தான் வழிபடும் திருநறையூர் வைணவ ஆலயத்திற்கு சென்று அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சக்கரத்தாழ்வார் சன்னிதியில் அமர்ந்து தவம் செய்யலானார்.
முனிவரின் ஆசையை நிறைவேற்ற விருப்பம்கொண்ட பரந்தாமன், மகாலட்சுமியைப் பார்த்தார். அதன் அர்த்தம் புரிந்த மகாலட்சுமி, மேதாவி முனிவர் தவம்செய்த வகுள(மகிழ) மரத்தடியில், ஒரு பங்குனி உத்திர நட்சத்திரத்தில் குழந்தையாக அவதரித்தார். யாருமற்ற அந்தக் குழந்தையை தன் மகளாக நினைத்து வளர்த்தார் முனிவர். வஞ்சுளவல்லி என்னும் திருநாமம் சூட்டப்பட்ட அந்த பெண் பிள்ளை, முனிவரது குடிலில் அவரோடு இணைந்து திருமாலை வணங்கி வந்தது.
தேவியை பிரிந்து வாழ்ந்த விஷ்ணு சில ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தேவியை மணம்புரிய விரும்பி, தேவி இருக்கும் இடத்தை அறிந்து வருமாறு கருடனிடம் பணித்தார். அதன் படியே மகாலட்சுமி தேவியை தேடி புறப்பட்டார், கருடன். பல ஊர்களைச்சுற்றி காணக்கிடைக்காத நிலையில் மேதாவி முனிவர் வசித்த திருநறையூர் தலத்திற்கு வந்துசேர்ந்தார்.
திருநரையூரை சுற்றி வட்டமடித்த கருடாழ்வார் சோர்ந்து போய், முனிவர் வசித்த குடிலின் மீது அமர்ந்தார். அப்போது குடிலை விட்டு வெளியே வந்த மேதாவி முனிவரின் மகள்தான், தான் தேடி வந்த மகாலட்சுமி என்பதை கருடன் அறிந்து கொண்டார். பின்னர் நேராக மகாவிஷ்ணுவிடம் சென்று, லட்சுமி தேவி இருக்கும் இடத்தை கூறினார்.
முனிவரிடமும், தேவியிடமும் திருவிளையாடல் நடத்த விரும்பிய மகாவிஷ்ணு, மானுட வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தார். அங்கே தனியாக இருந்த வஞ்சுளவல்லியிடம் தாகம் தீர்க்க தண்ணீர் தருமாறு கேட்டார். தண்ணீருடன் வந்த தேவியின் கரம் பற்றினார்.
அந்த சமயம் அங்கே வந்த முனிவர் இந்த காட்சியைப் பார்த்து வெகுண்டெழுந்தார். அப்போது பெருமாள் தன்னுடைய இரு தோள்களிலும் சங்கு, சக்கர அடையாளத்தைக் காட்டி தான் யாரென்று முனிவருக்கு உணர்த்தினார்.
வந்திருப்பது தான் தினமும் வழிபடும் பரந்தாமன் என்பதையும், இதுவரை தன்னிடம் வளர்ந்தவர் மகாலட்சுமி என்பதையும், தனக்கு அருள் செய்யவே இறைவன் இவ்வளவு பெரிய நாடகத்தை நடத்தியிருக்கிறார் என்பதையும், மேதாவி முனிவர் புரிந்து கொண்டார்.
மகாவிஷ்ணுவை வணங்கினார். அப்போது மகாவிஷ்ணு, லட்சுமி தேவியை மணம் முடித்து தருமாறு கேட்க, அதற்கு ஒரு தந்தையாகவும், பக்தனாகவும் சில நிபந்தனைகளை இறைவன் முன் வைத்தார், மேதாவி முனிவர்.
`வஞ்சுளவல்லியை திருமணம் முடித்து வைகுண்டம் அழைத்துச் செல்லக்கூடாது. இங்கேயே இருந்து அருள்பாலிக்கவேண்டும். தனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியை முன்னிலைப் படுத்தியே அனைத்து உற்சவங்களும், பூஜைகளும் நடக்கவேண்டும்' என்று மேதாவி முனிவர் வைத்த வேண்டுகோள் அனைத்தையும் பெருமாள் ஏற்றுக்கொண்டார்.
அடுத்து தனிஒருவராய் வந்து பெண் கேட்பதை ஊரார் ஏற்கமாட்டார்கள், பந்துமித்திரர்களுடன் வரவேண்டும் என்ற நடைமுறையை லேசான தயக்கத்துடன் கூற, அதை புரிந்துக்கொண்ட பெருமாள் தன் முன்னோர்களான ப்ரித்யுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்) ஆகியோரின் திருவுருவங்களையும் தானே எடுத்து வந்து திருமணத்திற்கு சம்மதம் பெற்றார். பின்னர் பிரம்மனை அழைத்து திருமணம் செய்யப்பட்டது.
முனிவரின் கோரிக்கைக்கு பெருமாள் செவிசாய்த்ததின் காரணமாக, இத்தலத்தில் தேவிக்கே அனைத்திலும் முன்னுரிமை தரப்படுகின்றது. வீட்டுப் பெண்களை 'நாச்சியார்' என்று செல்லமாக அழைப்பது தஞ்சை மாவட்டத்தின் மரபுகளில் ஒன்றாகும். அதன் அடிப்படையில் இக்கோவில் 'நாச்சியார்கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
ஆலய வாசலிலும், கருவறைக்கு அருகிலும் நின்றுபார்த்தால் தேவியே அனைவருக்கும் காட்சிதருகிறார். அனைத்தையும் தானே நிர்வாகம் செய்வதை உணர்த்துவதுபோல இடுப்பில் சாவிக்கொத்துடன் நின்றகோலத்தில் இருக்கும் தாயாரை, தரிசிப்பது மிகவும் விசேஷமாகும். பெருமாள் சற்று வடக்காக தள்ளிநின்று மறைவாக காட்சியளிக்கிறார். திருமணக்கோலத்திலேயே இருவரும் காட்சியளிப்பதால் திருமணத்திற்கு வந்ததாகக் கூறப்படும்
ப்ரிதியுமனன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் (சங்கர்னன்), திருமணம் செய்துவைத்த பிரம்மன் ஆகியோரும் கருவறையில் இருந்தவாறே காட்சி அளிக்கின்றனர்.
மூலவர் சன்னிதியின் விமானம், ராஜகோபுரத்தை நினைவூட்டுகிறது. இதை `ஹேம விமானம்' என்கின்றனர். ஆழ்வார்களால் பெருமாளும், நாச்சியாரும் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி 'திருநரையூர் நம்பி-வஞ்சுளவல்லி' என்னும் திருநாமம் கொண்டும், உற்சவர் 'இடர்காத்தவரதன்' என்னும் திருநாமம் கொண்டும் அருள்பாலிக்கின்றனர். இத்தல இறைவன் ஸ்ரீனிவாசன் என்ற மற்றொரு பெயராலும் அழைக்கப்படுகிறார். கல் கருடன் இவர்களுக்கு முன்னால் தனிச் சன்னிதியில் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
இவரது சன்னிதிக்கு அருகில் 108 திருப்பதிகளின் உற்சவர் சிலைகள் இருக்கின்றன. இங்கு ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்திரத்தில் விஷேச திருமஞ்சனங்கள் நடக்கிறது.
பிரகார சுற்றில் பரிவார தேவதைகளாக இடச்சுற்றில் சக்கரத்தாழ்வாரும், ஆஞ்சநேயரும், அஷ்டபெருமாள்களும் (எட்டு பெருமாள்கள்), வலதுசுற்றில் லட்சுமிநரசிம்மரும், பன்னிரண்டு ஆழ்வார்களும் இடம்பெற்றுள்ளனர்.
பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், கீழே நவக்கிரகங்கள், மேலே தசாவதாரங்கள் பொறிக்கப்பட்டிருக்க, அதன் நடுவே மேதாவி முனிவர் பெருமாளை வணங்கியபடி உள்ளார். கருடனால் சிறப்பு பெற்ற இத்தலத்தில் சிலவருடங்களுக்கு முன்புவரை இரண்டு நிஜக் கருடன்கள், உச்சிக்கால பூஜைநேரத்தில் வந்து நைவேத்திய பொருட்களை உண்டு வந்துள்ளன. அவைகளின் மறைவிற்குப் பின் பிரகாரத்தில் அதற்கென தனி சன்னிதி அமைத்துள்ளனர்.
இங்கு மோட்சதீபம் ஏற்றி வழிபடுவது நடைமுறையாக உள்ளது. கோவிலின் வடபுறத்தில் தலதீர்த்தமான மணிமுத்தா தீர்த்தம் உள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சம், வகுளம் எனப்படும் மகிழ மரம் ஆகும்.
இவ்வாலயத்தின் முக்கிய திருவிழாவாக வைகாசி வசந்த உற்சவம், ஆவணி திருக்கல்யாணம், மார்கழி பிரம்மோற்சவம், பங்குனி தேரோட்டம் ஆகியவற்றை கூறலாம். இவைகளில் வருடத்தின் பின்பகுதியில் வரும் இரு உற்சவங்களும் மிகவும் பிரபலமானதாகும்.
இந்த சமயத்தில் நடைபெறும் வீதி உலாவின்போது தாயார் அம்ச வாகனத்தில் முன்னே செல்ல, பெருமாள் கருட வாகனத்தில் பின்னே செல்கிறார். திருமணத்தடை, புத்திர தோஷம் நீங்கும் என்பதால், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து சர்க்கரைப்பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
கவலை தீர்க்கும் கல் கருடன்
இவ்வாலயத்தில் பெருமாளுக்கும், தாயாருக்கும் இடதுபுறம் இருந்து அருள்பாலிக்கிறார், கல் கருடன். பெருமாளுக்கும், தாயாருக்கும் நடப்பதுபோலவே தினசரி ஆறுகால பூஜை இந்த கல் கருடனுக்கும் நடைபெறுகிறது. பெரும்பாலான வைணவ தலங்களில் கருட பகவானுக்கு வைக்கப்படும் சிலை சுதைச் சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும்.
கல் சிற்பமாக இருந்தால் சிறிய அளவில் இருக்கும். ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்தக் கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவிலான கல் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலையே உற்சவ காலத்தில் வீதிஉலா கொண்டு வரப்படுவதும் எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.
கர்ப்ப கிரகத்தில் இருந்து நான்கு பேர், பின்னர் எட்டு பேர், அடுத்து பதினாறு பேர், முப்பத்திரண்டு பேர், கடைசியாக அறுபத்து நான்கு பேர் என படிப்படியாக ஆட்கள் கூடி கல் கருடனை தேரடி வரை சுமந்துவந்து, அவர்மீது பெருமாளை ஏற்றிவைக்கின்றனர். பெருமாளை சுமந்து செல்லும் சந்தோஷத்திலும், புளகாங்கிதத்திலும், கசிந்துருகும் கல் கருடனின் மேனி வியர்ப்பது, புராணகாலத்தில் இருந்து இன்றளவும் தொடர்வது வியப்பளிக்கும் செய்தியாகும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோவில் உள்ளது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு.
- 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியது திருவோணம் தாலுகா.
தஞ்சாவூரில் புதிய தாலுகாவாக திருவோணம் உருவாக்கம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைக்கப்படுகிறது.
திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மக்கள் 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு செல்ல வேண்டி இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வஙெ்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் தாலுகா உருவாகிறது.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூா்:
திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.
இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
- இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.
தஞ்சாவூா்:
தஞ்சை அருகே உள்ளது பொன்னப்பூர் கிழக்கு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஏகமனதாக முடி வெடுத்துள்ளனர்.
இந்த முடிவின்படி பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்த கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம்.
பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என போஸ்டர் அடித்து பஸ் நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.
அத்துடன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறும்போது, 'இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்துக்குள் போதைப்பொருள் விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் மிகவும் பின் தங்கி உள்ளதுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் காரணம். ஆகவே எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நலனுக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நாங்கள் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதில் பெருமையாக உள்ளது என்றனர். இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.