என் மலர்
நீங்கள் தேடியது "கொழுக்கட்டை"
- கார்த்திகை தீபத்திற்கு நைவேத்தியமாக பால் கொழுக்கட்டை செய்யலாம்.
- இந்த ரெசிபி ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
வெல்லம் பொடித்தது - 1 கப்
பால் - 2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை :
ஒரு வெறும் வாணலியில் அரிசி மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.
4 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவில் ஊற்றி, ஒரு கரண்டி காம்பால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சிறிது சிறிதாக போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும். வேகும் வரை பொறுத்திருந்து கிளறி விடவும். பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.
சூப்பரான வெல்லம் பால் கொழுக்கட்டை ரெடி.
குறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். சாதாரணப் பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்தும் செய்யலாம்.
- மோமோஸ் சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
- இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
குடை மிளகாய் - 1
கேரட் - 2
பீன்ஸ் - 6
முட்டைகோஸ் (சின்னது) - 1/2
பூண்டு பல் - 3
இஞ்சி - 1 துண்டு
மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி
வினிகர் - 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்டு மூடி 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.
* அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
* இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.
* கடைசியாக கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
* உருண்டையை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.
* ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
* இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை வைத்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.
* 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.
* இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.
- முடக்கத்தான் கீரை உடலில் ஏற்படும் வாய்வு பிரச்சனைகளை விரட்டி அடிக்கும் அருமருந்தாகும்.
- முடக்கத்தான் கீரை மூட்டு வலி, முடக்கு வாதம், கைகால் குடைச்சலை தீர்க்கும்.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை இலை - 3 கைப்பிடி
பச்சரிசி - கால் கிலோ
சிவப்பு மிளகாய் - 6
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் - அரை மூடி
நெய் - தேவையான அளவு
பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
முடக்கத்தான் கீரை இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
பச்சரியை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த பச்சரியுடன் தேங்காய் துருவல், சிவப்பு மிளகாய் சேர்த்து கரகரப்பாய் அரைத்துகொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் கீரை இலையை போட்டு நன்றாக வதக்கவும்.
அரைத்த மாவில் வதக்கிய கீரை, மிளகு தூள், உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். கைவிடாமல் கிளறி விடவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆற வைக்கவும்.
மாவு நன்றாக ஆறியதும் மாவை நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து வைக்கவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் இட்லி தட்டில் செய்து வைத்த பிடி கொழுக்கட்டைகளை அடுக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான முடக்கத்தான் கீரை பிடி கொழுக்கட்டை ரெடி.
இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.
தேவையான பொருள்கள்:
கொழுக்கட்டை சொப்பு செய்ய:
பச்சரிசி – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – 1 சிட்டிகை
நல்லெண்ணெய்
பூரணம் செய்ய:
தேங்காய்த் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி
செய்முறை:
சொப்பு:
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்)
வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
மாவு சேர்த்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது.
பூரணம்:
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும். தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.
கொழுக்கட்டை:
ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம்.
எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம். செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும்.
* அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால் (இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும்.
* சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை.
* மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும்.
* சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.
* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன.
* பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள்.
* தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.
* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக்கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம்.
* அரிசி மாவினால் தான் கொழுக்கட்டைக்கு சொப்பு செய்யவேண்டும் என்பதில்லை. மைதா மாவையும் தண்ணீரில் கரைத்து வேகவைத்துச் செய்யலாம். இன்னும் நன்றாக வரும்.
- கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
- விநாயகருக்கு உரிய திசை கிழக்கு
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டைகள் படைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
கணபதிக்கு உகந்த நைவேத்தியம்
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத்துண்டு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேக வைத்தது. இட்லி, தோசை. பாயாசம், அவல்,பொரியில் நாட்டுச்சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
எப்படி வணங்க வேண்டும்?
முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் மூன்று முறை குட்டி, காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தூங்க வேண்டிய திசை
விநாயகருக்கு உரிய திசை கிழக்கு சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கிழக்கே தலை வைத்து படுக்க வேண்டும். இடது புறம் உடல் கீழே படும்படியோ, மல்லாந்தோ படுக்கலாம்.
மாமனார் வீட்டிற்குச் சென்றால் தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும். முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அப்போது வடக்குத் திசையில் உள்ள குபேரனின் பார்வை மருமகனுக்குக் கிடைக்கும். மாமனார் வீட்டிலும் செல்வம் பெருகும்.
வடக்கே தலை வைத்துப்படுத்தால் ஊரில் இருப்பவர்கள் நம்மை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படும். இதனால்தான் இறந்து போனவர்களின் தலையை வடபுறமும் காலைத் தென்புறமும் வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த தகவல்களை சொல்லியிருப்பவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்.
விக்னமில்லாத சுகவாழ்வுக்கு இரவில் படுக்கப்போகும் முன் விநாயகரை மனதால் வணங்கியபடி கிழக்கே தலை வைத்துப் படுப்பதே மிக நல்லது.
- ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பர்.
- ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல் படைத்து, அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்ய வேண்டும். சிறிய பெண் குழந்தைகளுக்கு தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, வளையல், உடை கொடுத்து அவர்களை அம்மனாக பாவித்து உணவளிக்க வேண்டும். இது கூடுதல் பலன்களை தரும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றினால் கன்னிப் பெண்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும்.
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து அம்மனை மனம் உருக வழிபட்டால் பெண்களின் மனக்குறை தீரும் என்பது ஐதீகம். இதை சுக்கிர வார விரதம் என்று அழைப்பார்கள்.
ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றிருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால், சுக்கிரன் பலமிழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிட்டும். இது முருகனையும், அம்பாளையும் நோக்கி இருக்கும் விரதம் ஆகும்.
சூரிய உதயத்திற்கு முன் குளித்து வெளிர் நீல ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்கு சென்று வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவர்கள் வைரக்கல் மோதிரம் அணிந்தால் நலன் பயக்கும்.
ஆடி செவ்வாய் விரதம்
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வந்தால் அவர்களது மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அவ்வையார் விரதம் என்றொரு விரதம் இருப்பார்கள். குறிப்பிட்ட நாளில் இரவு சுமார் 10.30 மணிக்கு மேலே அல்லது ஆண்களும் குழந்தைகளும் உறங்கிய பின்னரோ விரதம் இருக்கும் பெண்கள் யாராவது ஒருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள்.
மூத்த சுமங்கலி வழிகாட்ட, இளம் பெண்கள் விரதத்தை தொடங்குவர். பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர். அந்த கொழுக்கட்டையின் வடிவம் பல்வேறு உருவ அமைப்பு-களில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். அன்றைய நிவேதனங்கள் எதிலும் உப்பு போடமாட்டார்கள்.
அனைத்தும் தயாரானதும் அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். பிறகு அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர்.
இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் அந்த பெண்களே சாப்பிடுவார்கள். இந்த விரதத்தில் ஆண் குழந்தைகள் உள்பட ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு நடந்த இடத்தை தூய்மை படுத்திவிடுவார்கள்.
இந்த விரதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஒவ்வொருவர் வீட்டில் நடத்துவர். இப்படி விரதம் அனுசரித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும், திருமணம் கைக்கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தை, மாசி செவ்வாய்க் கிழமைகளிலும் அவ்வையார் விரதம் மேற்கொள்வ துண்டு, இதனை மறந்தா மாசி, தப்பினா தை, அசந்தா ஆடி, என்று சொல்வார்கள். இவ்விரதம் மேற்கொள்ளும் கன்னியருக்கு மனதிற்கு பிடித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்பது ஐதீகம்.
- வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
- விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
பிள்ளையார் உருவ பலன்கள்
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட, சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட, நல்ல பதவி, அரசு வேலை கிடைக்கும்.
குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.
புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும்
வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்.
வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்.
விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்.
கல் விநாயகர்- வெற்றி தருவார்.
யானைத்தலை விளக்கம்
தலை என்பது உள் அவயங்களான மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளைத் தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.
அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.
யானைத்தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜபோக வாழ்வுகிட்டும்.
- கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
- பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி,
விநாயகரின் வாகனங்கள்
விநாயகர் மூஷிக வாகனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனால் அவர் மூஞ்சுறுவைத் தவிர மயில், சிங்கம், ரிஷபம், யானை என்ற வாகனங்களிலும் பவனி வருவார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.
கிருத யுகத்தில் சிம்ம வாகனத்தில்தான் பிள்ளையார் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இன்றும் ஹேரம்ப கணபதி சிம்ம வாகனத்தில்தான் வீற்றிருப்பார்.
திரேதா யுகத்தில் முருகனுக்கு உதவுவதற்காக மயில் வாகனத்தில் வந்தார்.
ஆண் குழந்தை தரும் விநாயகர்
திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர்.
அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்ற சொல்லில் உள்ள "க" என்னும் எழுத்து ஞானத்தையும், "ண" என்னும் எழுத்து ஜீவன்களின் மோட்சத்தையும், "பதி" என்னும் சொல் தலைவன் என்பதையும் குறிக்கிறது.
பரப்பிரம்ம சொரூபமாக விளங்குபவர் கணபதி, ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் அவரே தலைவன் என்பதால்தான் அவர் கணபதி என்றழைக்கப்படுகிறார்.
மேலும் கணபதி என்னும் சொல் சிவபெருமானின் கணங்களுக்கு அதிபதி என்பதையும் குறிக்கும்.
விநாயகரின் அன்பு வேண்டுமா?
1. விநாயகர் அகவல்
2. விநாயகர் கவசம்
3. விநாயகர் சகஸ்ரநாமம்
4. காரிய சித்தி மாலை
5. விநாயகர் புராணம்
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகனை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும்.
- மாதுளை இலை - நல்ல புகழை அடையலாம்
- மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
கணபதி அர்ச்சனை
விநாயக புராணத்தில் கணபதிக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள்.
மருவு இலை- துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும்
எருக்க இலை- குழந்தைப் பேறு
அரச இலை- எதிரிகள் அழிவார்கள்
அகத்தி இலை- துயரங்கள் நீங்கும்
அரளி இலை- அனைவரும் அன்போடு இருப்பார்கள்.
வில்வ இலை- இன்பங்கள் பெருகும்
வெள்ளெருக்கு- சகலமும் கிடைக்கும்
மாதுளை இலை- நல்ல புகழை அடையலாம்
கண்டங்கத்திரி இலை- லட்சுமி கடாட்சம்
கொழுக்கட்டை நைவேத்தியம்
தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து செய்யப்படும் மோதகம் என்றழைக்கப்படும் கொழுக்கட்டை கணபதிக்கு மிகவும் பிடித்தமான நைவேத்தியம் ஆகும்.
கொழுக்கட்டையின் தத்துவம் என்ன வென்று அறிவீர்களா?
மேலே இருக்கும் மாவுப் பொருள் அண்டம், உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், நமக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.
மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை உணர்த்தவே கொழுக்கட்டை படைக்கப்படுகிறது.
முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டையைப் படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா?
வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.
பிள்ளையார் செய்வோம்
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.
விநாயகருக்கு உகந்தவை
தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மாவிலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.
விநாயகரின் அஷ்ட அவதாரங்கள்
1.வக்ரதுண்டர்
2. மஹோத்ரதர்
3. கஜானனர்
4.லம்போதரர்
5. விகடர்
6. விக்னராஜர்
7. தூம்ரவர்ணர்
8. சூர்ப்பகர்ணர்
என்று எட்டு விதமான அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்ததாக விநாயக புராணம் கூறுகின்றது. அவர் எதற்காக எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார் என்றால், மனிதர்களிடையே காணப்படும் தீய குணங்கள் எட்டு (காமம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம், மமதை, மோகம், அகந்தை)
அந்த எட்டு குணங்களையும் நீக்கி நமக்கு ஞானமளிப்பதற்காகவே அவர் எட்டுவிதமான அவதாரங்களை எடுத்தார்.
அந்த எட்டுவிதமான அவதாரங்களையும் நினைவிற்குக் கொண்டு வந்து வணங்க விநாயக மந்திரம் துணைபுரிகிறது.
இந்த மந்திரத்தை தினசரி பாராயணம் செய்பவர்கள் அனைத்து விதமான சந்தோஷங்களையும் அடைவார்கள்.
- வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர்.
- உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.
நாமம் சொல்லி வழிபடுங்கள்!
ஆவணி மாதம் சுக்ல பட்சம் சதுர்த்தி திதி தினமே விநாயக சதுர்த்தி தினமாகும்.
அன்று உங்கள் வீட்டின் வடக்குப் பகுதியில் ஒரு மண்டபம் செய்து நெல் அல்லது பச்சரிசி பரப்பி அதில் அஷ்ட (எட்டு) தளத்துடன் கூடிய தாமரையை வரைந்து, அதன் மேல் பிள்ளையாரை வைத்து அருகம்புல், சந்தனம் ஆகியவற்றால் பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும்.
குறிப்பாக இருபத்தோரு அருகம்புல்லை நல்ல வாசனையுள்ள சந்தனத்தில் நனைத்துக் கொண்டு கீழ்க்கண்ட பத்து நாமங்களை சொல்ல வேண்டும்.
1. கணாதிபாய நம, 2. உமாபுத்ரா நம, 3. அக நாசநாய நம, 4.விநாயகாய நம, 5. ஈசபுத்ராய நம, 6. ஸர்வஸித்திதாய நம, 7. இபவக்த்ராய நம, 8. ஏகதந்தாய நம, 9. மூஷிக வாஹனாய நம, 10. குமார குரவே நம
என்று பத்து நாமங்கள் சொல்லி இரண்டு அருகம்புல்லாலும் கடைசியில் மேற்கூறிய பத்து நாமங்களையும் ஒரு முறை சொல்லி ஒரு அரும்கம்புல்லாலும் கணபதிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.
தூப தீபம் காண்பித்து நெய்யில் செய்த கொழக்கட்டை (21), மாவுப் பலகாரங்கள், தேங்காய் (21), வாழைப்பழம் (21), நாவல் பழம் (21), விளாம்பழம் (21), கொய்யா பழம் (21), கரும்புத்துண்டு (21), வெள்ளரிக்காய் (21), அப்பம் (21) இட்லி (21) முதலானவற்றை நிவேதனம் செய்தல் வேண்டும்.
பூஜையை முடித்த பிறகு திருமணம் ஆகாத 21 வயது பையனுக்கு தட்சணையுடன் மோதகம் தந்து பெரியோர்களிடம் ஆசி பெற செய்ய வேண்டும். உறவினர்களுடன் நிவேதனம் செய்த பிரசாதங்களை சாப்பிட வேண்டும்.
மறுநாள் காலை புனர்பூஜை செய்து விநாயகரை தண்ணீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு சித்தி விநாயக விரதத்தை செய்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் இடையூறு ஏற்படாது.
வளம் தரும் வன்னி இலை
வன்னியின் இலையைக் கொண்டு பக்தியுடன் ஈஸ்வரார்ப்பணம் செய்யும்போது எப்படி தீயில் சம்பந்தப்பட்ட பொருள் சுத்தம் அடைகிறதோ, அதுபோல மனிதனும் மனமும் புத்தியும் சுத்தம் அடைந்து தெய்வீக ஞானம் அடைந்தவனாகிறான்.
இதன் காரணமாகவேதான் வன்னி பத்ரத்தை தனக்கு உகந்த பத்ரமாக வைத்துக் கொண்டு வன்னி மரத்தடியிலும் கணேசர் எழுந்தருள்கிறார்.
வன்னி இலைக்கு ஸ்ரீசுமிபத்ரம் என்றும் பெபயர். விநாயகர் பூசையில் இருப்தொரு (நாமாவளியால்) அருகம்புல்லால் அர்ச்சிக்கப்படுவதுபோல் இருப்பதொரு பத்ர(இலை)ங்களால் அர்ச்சிக்கப்பட வேண்டும். அதற்கு "ஏக விம்சதி பாத்திர பூசை" என பெயர்.
அதில் மாசிப்பச்சை, கண்டங்கத்திரி, வில்வதளம், அருகம்புல், ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, அரளி, விஷ்ணு கிராந்தி, நெல்லி, மரிக்கொழுந்து, நொச்சி, ஜாதி எவன்னெருக்கு, கரிசிலாங்கண்ணி, வெண்மருதை, கிளுவை, நாகை என்ற பத்ரங்கள் கூறப்படுகிறது.
வன்னி இலையைக் கொண்டு வழிபட்டு சாம்பன் என்ற மன்னனும் அவன் மந்திரியும் "பேறு" பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
நாமும் வன்னி இலைகளால் விநாயகப் பெருமானை பூஜித்து வணங்கி வளம் பெறுவோம்.
- இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவை செய்யப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தி பிறந்த கதை
முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பல பெற்றமையால் இறுமாப்புக் கொண்டு தேவர்களைப் பல வழிகளிலும் துன்புறுத்தி வந்தான்.
அவன் தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர்.
எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.
விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் கடும்போர் நடந்தது. முடிவில் விநாயகர் பெருமான் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை அழிக்க ஏவினார்.
அசுரனோ, மூஞ்சுறாய் வந்து எதிர்த்து நின்றான். விநாயகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்தார்.
பின்னர் அவர் மூஞ்சுறைத் தனது வாகனமாக்கிக் கொண்டு அருளினார். இதன்மூலம் அனைவரும் சுபிட்சம் பெற்றனர்.
எனவே அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராதவினைகள் தீரும். சகல பபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்
விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி, புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. ஆவணி மாதம் அமாவாசைக்கு அடுத்த நான்காவது நாள் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று விடியற்காலையில் எழுந்து வீட்டை நன்றாக பெருக்கி, மெழுகி சுத்தம் செய்துவிட்டு வீட்டு வாசலில் மாவிலை, தோரணங்களை கட்ட வேண்டும்.
வீட்டின் வாசலுக்கு இருபுறமும் வாழைமரக் கன்றையும் கட்டி வைக்கலாம்.
பூசை அறையைக் கழுவி, மொழுகி, கோலம்போட்டு, அதன் மையப்பகுதியில் ஒரு பலகை வைத்து மேலும் ஒரு கோலம் போட்டு தலைவாழை இலை விரித்து பச்சரிசையைப் பரப்பி வைக்க வேண்டும்.
அதில் வலது கை மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு "ஓம்" என்று எழுதி மண்பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அதற்கு அறுகம்புல், எருக்கம்பூ, விபூதி, சந்தனம் மலர்களால் அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, விளாம்பழம், அப்பம், சுண்டல், அவல், பொரி, கடலை, எள்ளுருண்டை போன்ற நிவேதனப் பொருள்களை வைத்து தூபமிட்டு சாம்பிராணி புகை காட்டி சூடம் ஏற்றி வழிபட வேண்டும்.
அப்பொழுது விநாயகருக்குரிய அகவல், கவசம், சகஸ்ரநாமம், காரிய சித்திமாலை, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஆகியவற்றை பாடுவது நற்பலன்களை தரும்.
ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.
விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய், பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அறுகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.
முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.
- ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.
இதேபோல் ஞான சித்தி விநயாகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி,
நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.