search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்குரு"

    • சத்குருவிற்கு இந்த விருதினை கனடா-இந்தியா அறக்கட்டளை வழங்குகிறது.
    • விருது தொகையினை காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக சத்குரு அறிவித்துள்ளார்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு, 'CIF குளோபல் இந்தியன் விருது 2024' வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

    இந்த வவிருதினை இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையேயான இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் இயங்கிவரும் அமைப்பான 'கனடா இந்தியா அறக்கட்டளை' வழங்குகிறது.

    உலகளவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டாடும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் சுற்றுச்சூழல் சவால்களைச் சமாளிப்பதற்காக சத்குரு தலைமை ஏற்று செய்து வரும் பணிகளை பாராட்டியும், விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவதிலும், மனிதர்களின் விழிப்புணர்வை மேம்படுத்துதலிலும் அவரின் ஈடுஇணையற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

    இது குறித்து கனடா இந்தியா அறக்கட்டளையின் தலைவரான ரித்தேஷ் மாலிக் கூறுகையில், "சத்குரு CIF விருதினை பெற ஒப்புக்கொண்டது மட்டுமில்லாமல் அதனை டொராண்டோவில் நடைபெறும் விழாவில் நேரில் பெற்றுக் கொள்ள சம்மதித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறோம்.

    சத்குரு மனிதர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கான நடைமுறை தீர்வுகளையும், மண் சிதைவு, காலநிலை மாற்றம் மற்றும் உணவின் தரம் போன்ற உலகளாவிய சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளையும் வழங்குகிறார்.

    சத்குரு போன்ற நற்சிந்தனைத் தலைவர்களிடமிருந்து கனடா பெரிதும் பயனடையும். சத்குருவின் போதனைகள், கனடா முன்னிறுத்தும் தனிநபர்களின் நல்வாழ்வு, நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் அரவனைத்துக் கொள்ளுதல் ஆகியவைகளோடு ஒன்றிப் போகின்றன.

    சத்குரு யோகா, தியானம் மற்றும் தெளிவான மனநிலை போன்றவற்றிக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இது குறிப்பாக மனநோய் பிரச்சனைகளின் சவால்களை எதிர்கொள்ளும் கனடாவின் சுகாதார அமைப்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகிறது" என்றார்.

    இந்த விருது வழங்கப்பட்டதற்காக சத்குரு தனது நன்றியை CIF-க்கு தெரிவித்துக் கொண்டார். மேலும் விருதுடன் வழங்கப்படும் தொகையான கனடா நாட்டு மதிப்பில் CAD 50,000/- ஐ காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.

    • ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.
    • ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.

    ஈஷா பெண் துறவிகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பெண் துறவிகள் இருவரும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருக்கின்றனர். அதனால் இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.

    இந்த தீர்ப்பு குறித்து 'நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்' என சத்குரு கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைத்தள பதிவில் "நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்றத்தின் கவனம் உண்மையாகவே தேவைப்படும் எண்ணற்ற வழக்குகள் இருக்கும்போது, தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட அற்பமான மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தனது மதிப்புமிக்க நேரத்தை வீணாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜனநாயகத்தின் சிறப்புரிமைகளை இன்னும் பொறுப்புடன் பயன்படுத்த நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது" எனக் கூறியுள்ளார்.

    https://x.com/SadhguruTamil/status/1847312679628583005

    • ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும்
    • அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

    கோவையில் ஆன்மீக குரு ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் பெண்கள் சந்நியாசம் மேற்கொள்ள மூளைச்சலவை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வாறு ஈஷா மையத்தில் தங்கியிருக்கும் தனது இரு மகள்களை மீட்டுத் தரக் கோரி கோவை வேளாண் பல்கலை.யில் பேராசிரியராக பணியாற்றி வரும் காமராஜ் என்பவர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்குதல் செய்திருந்தனர்.

    இந்த மனு நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் ஆஜரான காமராஜின் பெண்கள் இருவரும் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே ஈஷா மையத்தில் உள்ளதாகக் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவரை வாழ்க்கையில் நல்லபடியாக செட்டில்   ஆக்கிய ஜக்கி வாசுதேவ் மற்ற இளம் பெண்களின் தலையை மொட்டையடித்துக்கொள்ள ஊக்குவிப்பது ஏன்? அவர் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினர். மேலும் துறவியாகத் தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்று நாங்கள் முழுமையாக அறிந்தாக வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     

    இதற்கிடையே மனுதாரரின் வழக்கறிஞர் பேசுகையில், ஈஷா அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்தில் அங்கு பணியாற்றும் மருத்துவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே ஈஷா அறக்கட்டளை தொடர்பான அனைத்து வழக்குகளையும் பட்டியலிட்டு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் அரசு வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

    • ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
    • அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் சமீபத்தில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில் 'சத்குரு' அவர்களின் படமும் இடம்பெற்று உள்ளது. அந்தப் புகைப்படங்களுடன் வலிமையான காப்பாளர்கள் தன்னை என்றும் சூழ்ந்து இருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உள்ளார்.

    நடிகர் வில் ஸ்மித், உலகளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பேட் பாய்ஸ் (Bad Boys), மென் இன் பிளாக்(Men in Black), ஐ ரோபாட் (I Robot), தி பர்சுயூட் ஆப் ஹாப்பினஸ் (The Pursuit of Happiness) ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். அவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் 3 புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    அதில் அவர், 'நான் எப்பொழுதும் வலிமையான காப்பாளர்களால் சூழப்பட்டு உள்ளேன்' என்று குறிப்பிட்டு உள்ளார். முதல் புகைப்படத்தில் வில் ஸ்மித் அவரின் தந்தை மற்றும் கார்த்தே கிட் படத்தில் நடித்து புகழ்பெற்ற அவரின் முதல் மகன் இருக்கின்றனர். அடுத்த புகைப்படத்தில் அவருடன் இரு நடிகைகள் இருக்கின்றனர்.

    மேலும் மூன்றாவது புகைப்படத்தில் வில் ஸ்மித், பிரபல எழுத்தாளர் ஜெய் ஷெட்டி மற்றும் சத்குரு ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். ஸ்மித்தின் இந்த பதிவிற்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

    கடந்த 2020-ஆம் ஆண்டு சத்குரு அவர்கள் அமெரிக்காவில் உள்ள பூர்வகுடிமக்களின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக அந்நாட்டில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

    அப்போது சத்குருவை தனது வீட்டிற்கு வில் ஸ்மித் அவர்கள் அழைத்து இருந்தார். அதன்படி சத்குரு அவர்களும் ஸ்மித்தின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வெளியான புகைப்படங்களும், வீடியோக்களும் மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.



    • 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.
    • இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

    புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி வி. கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.

    கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நேற்று நடைபெற்ற விழாவில் பண்ணாரிஅம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தலைமை உரை ஆற்றினார்.

    அவரை தொடர்ந்து ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் பேசுகையில் "சத்குரு எத்தனை நாடுகள் சென்றாலும் அவர் கோவையில் இருப்பது கோவை மக்களுக்கான பெரும் ஆசி" என கூறினார்.

    புத்தகம் குறித்து மரபின் மைந்தன் பேசுகையில் " இருண்டிருக்கும் அறையில் நுழைகிற போது கைவிளக்கு வேண்டும். அதுப் போலத்தான் நமக்கு தெரியாத இடத்தில் பயன்தரும் விதமாய் சத்குரு இந்த புத்தகத்தில் மிக துல்லியமான விளக்கங்களை கொடுத்துள்ளார்.

    மேலும் நமக்கு நேரும் சூழலை விடவும், அதை நாம் எதிர்கொள்ளும் விதம் தான் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி எப்போது நமக்கும், நமக்கு மிகப் பிடித்த விஷயத்திற்கும் இடையே ஒரு சமநிலையை, விலகுதலை ஏற்படுத்துகிறோமோ அதுவே கர்ம வினையை கட்டுப்படுத்தும் என சத்குரு சொல்கிறார்" என புத்தகத்தின் பல முக்கிய கருத்துக்களை விளக்கி பேசினார்.

    அவரை தொடர்ந்து புத்தகம் குறித்து வழக்கறிஞர் சுமதி பேசுகையில், "மிகவும் தீவிரமான புத்தகம் இது. இதை ஒரு நாள் முழு அமர்வாக பேச வேண்டிய அளவு தீவிரம் வாய்ந்த புத்தகம். நம் வாழ்கையின் மூல வரைப்படத்தை நாமே உருவாக்கியிருக்கிறோம், என்பது தான் இந்த புத்தகத்தின் ஒன்லைனர்.

    இதை இன்னும் எளிமையாக சொன்னால் 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.

    மேலும் நாம் ஒரு செயலை செய்கிறோம் அது வெற்றியா, தோல்வியா, பிறருக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் முழு திறனை வெளிப்படுத்துவது ஒன்றே நோக்கமாய் செயல்பட வேண்டும். இது போன்ற நற்கருத்துக்களை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது" என சுவைப்படப் பேசினார்.

    சத்குரு இந்த புத்தகத்தின் மூலம் கர்மா என்றால் என்ன?, நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை, நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்து உள்ளார்.

    மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிக்காட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.

    "கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

    ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

    இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.

    உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கதேச தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா விரைந்து செயல்பட சத்குரு வலியுறுத்தல்.
    • நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது.

    வங்கதேசத்தில் இந்து மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சத்குரு தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில்," வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்களை பாதுகாப்பது நம் பொறுப்பு. இதில், நம் பாரத நாடு விரைந்து செயல்பட வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து சத்குருவின் எக்ஸ் பதிவில் கூறுகையில், "

    இந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. நம் அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்காக நாம் உறுதியாக நின்று விரைந்து செயல்படாவிட்டால், பாரதம் மஹா-பாரதமாக இருக்க முடியாது.

    இந்த நாட்டின் அங்கமாக இருந்தது துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகிவிட்டது. ஆனால் நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு" என்றார்.

    மேலும், இது தொடர்பாக அவர் பகிர்ந்த மற்றொரு எக்ஸ் பதிவில் "நம் அண்டை நாட்டின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம். மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை ஒருபோதும் ஆட்டிப்படைக்காதவாறு நாம் உறுதி செய்வோம்" எனப் பதிவிட்டு உள்ளார்.

    • சிறிதளவு நிலம் இருந்ததால் விவசாயம் செய்யலாம்.
    • நீரில் நெல் விவசாயம் செய்ய போகிறேன்.

    இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லை என்ற பொதுவான கருத்தை உடைக்கும் விதமாகவும், நெல் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும் என்பதை உணர்த்தும் விதமாகவும் ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் "பாரத பாரம்பரிய நெல் -உணவு திருவிழாவை வேலூரில் வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்துகிறது. இதில் ஏராளமான முன்னோடி நெல் விவசாயிகள், வேளாண் வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதையொட்டி 'மீன் குட்டையில் நெல் சாகுபடி' எனும் புதுமையான கருத்தை தனித்துவமான சாகுபடி முறையால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் விவசாயி அன்பரசன். திருச்சி, பெல் பகுதி அருகே அமைந்துள்ளது இவரின் 7 ஏக்கர் பண்னை. கடந்த 9 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் வகைகளை சாகுபடி செய்து வரும் இவருடைய நிலத்தில் மாப்பிளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கறுப்பு கவுனி உள்ளிட்ட பல பாரம்பரிய நெல் வகைகள் இருக்கின்றன. மனிதர்களின் நல்வாழ்விற்கு நஞ்சில்லா விவசாயம் அவசியம் என்கிற நேர்மறையான சிந்தையோடு அவர் பேசத் தொடங்கினார்.

    அமெரிக்காவில் பணியாற்றி பின்பு அந்த ஊரும் தொழிலும் வேண்டாம் என இந்தியா திரும்பியவர், ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்றுள்ளார். இவரிடம் சிறிதளவு நிலம் இருந்ததால் விவசாயம் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார். பின்னர் ஈஷா விவசாய இயக்கம் நடத்தும் சுபாஷ் பாலேக்கரின் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துள்ளார். அந்த வகுப்பு தான் தனக்குள் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது என்றும், அந்த வகுப்பின் மூலமே நஞ்சில்லா விவசாயம் செய்ய வேண்டும் என இயற்கை விவசாயம் செய்ய தொடங்கியதாகவும் கூறுகிறார்.

    "ஒரு தாவரம் என்றால் என்ன? அதன் தன்மை என்ன? உள்ளிட்டவை எனக்கு தெரியும் என்றாலும் மண்ணுக்கு கீழுள்ள பல்லுயிர்கள் எப்படி வேலை செய்கின்றன என்பது குறித்த ஆழமான விபரங்களை ஈஷா விவசாய இயக்கம் நடத்திய பயிற்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன். மேலும் ஒரு விவசாயி தோல்வி அடையாத வகையில் விவசாயம் செய்ய தேவையான தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறார்கள். அந்த தொழில்நுட்பங்களை கற்றுக் கொண்டு என் நிலத்தில் செயல்படுத்தினேன்." என்றார்.

    அவரோடு நாம் பேசிய போது மீன் குட்டை ஒன்றை வெட்டி கொண்டிருந்தார். நெல் சாகுபடி நடுவே மீன் குட்டை வெட்டுவது ஏன்? என்ற நம் கேள்விக்கு, "5 அடியில் கரை கட்டி, ஒன்றே முக்கால் ஏக்கர் அளவில் குளம் வெட்டி வருகிறேன். வயலில் இருந்து 1 முதல் 1 முக்கால் அடி வரை மட்டும் தான் மண் எடுத்திருக்கிறேன். இதில் மீன் வளர்ப்பு செய்ய போகிறேன். இந்த குளத்திலேயே மீன் அமிலம், ஜீவாமிர்தம் எல்லாம் கலந்து விடுவேன். இதில் தேவையானவற்றை மீன்கள் எடுத்து கொள்ளும், மீதமிருப்பவற்றை நெல்லுக்கு பயன்படுத்தும் ஒரு முறையை நான் முயற்சித்து வருகிறேன்.

    என் நிலம் ஒரு ஒருங்கிணைந்த பண்ணையாக இருக்க வேண்டும். "ஒருங்கிணைந்த" என்றால் ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு பயன் பட வேண்டும். உதாரணமாக, மீன்கள் வளர்ப்பதால் அமோனியா வாயு உருவாகும். இந்த வாயு நெல் பயிருக்கும், மற்ற தாவரங்களுக்கும் தேவைப்படும். எனவே, ஒரு போகம் மீன் அறுவடை செய்த பின்பாக அதே குளத்து நீரை வென்சூர் வழியாக வயலுக்கு தேவையான இடுபொருளை வழங்குவேன். அதன் பின்பு அதே நீரில் நெல் விவசாயம் செய்ய போகிறேன்.

    மீன் அறுவடை முடிந்த பிறகு, 2 வருடத்திற்கு ஒரு முறை கீழே படிந்துள்ள மண்ணை நாம் அகற்ற வேண்டும். ஏனென்றால் மீன் வெளியிட்ட அமோனியா வாயு அந்த மண்ணில் இருக்கும். அந்த அமோனியா மீனை வளர விடாது. எனவே அந்த மண்ணில் நாம் நெல் சாகுபடி செய்தால் அந்த அமோனியாவை தாவரங்கள் தங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளும். இதன் மூலம் அமோனியாவை எளிதில் நீக்க முடியும், அதே அமோனியாவை நெல்லின் அபார வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும். மேலும் அந்த மண்ணில் உழவு ஓட்ட வேண்டியதில்லை. அந்த குளத்தில் மீண்டும் நீர் நிரப்பும் போது அதிலுள்ள வைக்கோல் அழுகி மீண்டும் மீனுக்கே உரமாக மாறும். இப்படி என் நிலத்தில் எந்த பொருளும் வீணாகாமல் விவசாயம் செய்வதே என் நோக்கம்" என்றார்.


    மேலும் தொடர்ந்த அவர், நான் என் நிலத்தில் விளையும் நெல்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறேன். ஓராண்டுக்கு முன்பு "உழவன் அன்பு" என்ற இயற்கை அங்காடி தொடங்கியிருக்கிறேன். இங்கே நான் விளைவிக்கும் அரிசியை விற்பனை செய்கிறேன். என் வாழ்வாதாரத்திற்கு அது போதுமானதாக உள்ளது. மேலும் இயற்கையாக விளையும் பொருட்களை உண்ண வேண்டும் என பேசுவபவர்கள் 10% என்றால் அதை வாங்கி உண்பவர்கள் 2% தான். இந்த பயன்பாட்டாளர்கள் அதிகரித்தால் லாபமும் அதிகரிக்கும்.

    விவசாயம் என்பது எல்லையற்றது. ஆரம்பத்தில் முல் முருங்கை செடி வைத்தேன். பின்பு பனை மரம் வைத்தேன், அதன் பின்பு நெல் விவசாயம் செய்ய தொடங்கினேன். இப்போது மீன் குளம் வெட்டுகிறேன். அதனை தொடர்ந்து ஈஷா பரிந்துரைக்கும் மரம் சார்ந்த விவசாயத்தை பின் பற்றி என் மீன் குட்டையின் வரப்பில் மரமும் நட்டிருக்கிறேன். பிற்காலத்தில் அந்த மரத்தில் மிளகை ஏற்றும் சாத்தியமும் உள்ளது." எனவே தொடர்ந்து முயற்சித்து கொண்டேயிருப்பேன். என்றார் உற்சாகமாக.

    இவரைப் போலவே நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வருகிறார் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி பொன்னையா. இவர் ஒரு ஏக்கரில் மீன் வளர்ப்பினால் 2 லட்சம் மற்றும் நெல் விவசாயத்தில் 60 ஆயிரம் என்றளவில் வருவாய் பார்க்கிறார். நெல் வயலில் மீன் வளர்ப்பின் மூலம் சீனா, தாய்லாந்து விவசாயிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் இவர் வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் உள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் நடைபெற உள்ள "பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவு திருவிழாவில்' சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்நிகழ்வில் தன்னுடைய வெற்றி அனுபவங்களை மற்ற விவசாயிகளும் பயன் பெறும் வகையில் பகிர இருக்கிறார்.

    இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.
    • இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டே 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் உறுப்பினராக இணைந்தனர்.

    ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் வெற்றிகரமாக இயங்கி வரும் தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நபார்டு வங்கியின் 2023 - 34 ஆம் நிதியாண்டிற்கான சிறந்த FPO விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 43 வது ஆண்டு விழாவில் இந்த விருதை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார்.

    தமிழ்நாட்டின் நபார்டு வங்கியின் ஆதரவில் சிறப்பாக செயல்படும் FPO களில் ஒன்றாக தென்சேரிமலை FPO இந்த விருதினை பெற்றுள்ளது. நபார்டு வங்கி சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தென்சேரிமலை உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனரும் விவசாயியுமான ரங்கராஜ் மற்றும் ஈஷா அவுட்ரீச் சார்பில் சுவாமி நலதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டனர்.


    மண் காப்போம் இயக்கத்தின் ஓர் அங்கமான ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலில் இயங்கும் 25  FPO-க்களில் ஒன்றாக தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது. கோவை சுல்தான் பேட்டை பகுதியில் இந்நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டே  750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் உறுப்பினராக இணைந்தனர்.

    இதில் உறுப்பினர்களாக உள்ள  விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதலில் உறுதுணையாக இருந்து வழிகாட்டுதல்களை  இந்த FPO வழங்கி வருகிறது. தென்னையை முதன்மை பயிராக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் முதலாமாண்டு மொத்த விற்பனை ரூ.1.58 கோடி ஆகும். மேலும் ஈஷா அவுட்ரீச்சின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் FPO-க்களின் மூலம் மொத்தம் 9,377 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக இந்த விழாவில் நபார்ட் வங்கியின் தலைமை மேலாளர், மண்டல மேலாளர், ஆர்.பி.ஐ-இன் மண்டல மேலாளர் மற்றும் இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.
    • ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது.

    தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

    அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்றது.

    இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    அதில், "பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

    அந்த வீடியோவில் மேலும் கூறியிருப்பதாவது:-

    இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது.

    பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது.

    ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது.

    உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான்.

    இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.

    இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில் ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.
    • பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது.

    வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக ஜூலை 1 முதல் 7 வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடைப்பெற்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதிலும் 1,52,000 மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டுள்ளன.

    மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம் 'வன மகோத்சவம்' விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற மரக்கன்றுகள் நடும் விழாக்கள் மூலம் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 86 இடங்களில், 472 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் மொத்தம் 1,52,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் அது சார்ந்த வேளாண் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. இதன் மூலம் 1,72,600 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறி உள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் பெருமளவு மரக்கன்றுகளை நடுவதால் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுகிறது.

    இது சுற்றுச்சூழல் சார்ந்த பலன்களோடு விவசாயிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதாரப் பலன்களையும் தருகிறது.

    மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் பொருளாதார பலன்களை பெறுவதற்காக இவ்வியக்கம் சார்பில் மரப்பயிர் சாகுபடி, சமவெளியில் நறுமணப் பயிர்கள் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை மாநில அளவில் தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் உள்ளூர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகிறது.

    இவ்வியக்கம் பருவ மழைக் காலங்களில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபடுகிறது. அதனுடன் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டின் சில முக்கிய நாட்களில் மரம் நடும் விழாக்களை பெரிய அளவில் நடத்துகிறது. அந்த வகையில் வன மகோத்சவத்தின் போது மட்டுமின்றி உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்ற சூழலியல் முன்னோடிகளின் நினைவு நாட்களிலும் மாபெரும் மரம் நடு திருவிழாக்களை நடத்துகிறது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலமாக இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது. மேலும் இப்பண்ணைகளில் மரக்கன்றுகள் வாங்கவும், இவ்வியக்கம் குறித்த கூடுதல் தகவல்களுக்கும் 80009 80009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

    • சென்னையில் அறிமுகப் பிரதியை சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்.
    • 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது.

    ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' சென்னையில் இன்று (ஜூன் 28) அறிமுகம் செய்யப்பட்டது.

    புத்தக அறிமுகப் பிரதியை இயக்குனரும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட, அதனை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். முரளி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

    சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவனில் இன்று மாலை நடைபெற்ற இந்த விழாவில் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கர்மா தமிழ் புத்தகம் குறித்த சிறப்புரையை வழங்கினர். 

    சத்குரு இந்த புத்தகத்தின் மூலம், கர்மா என்றால் என்ன? நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்துள்ளார். மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிகாட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.

    'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.

    உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 5,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    அந்த வகையில் மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைப்பெற்ற இதன் தொடக்க விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மகாத்மா மான்டசரி பள்ளியின் நிர்வாகிகள் கார்த்திக், ஹம்ச பிரியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் பேசுகையில், "இன்றைய காலத்தில், எது பலன் தரக்கூடிய பணப்பயிர் என்பதை அறிந்து நட்டு வளர்த்தால் அது பயிர் விவசாயத்தை விட பல மடங்கு வருவாயை தரும். எனவே இப்போது தரப்படுகிற இந்த மரக்கன்றுகளை வளர்த்து உருவாக்கிவிட்டால் அதன் மூலமாக வரக்கூடிய வருவாய் மிகப்பெரிய அளவில் உயரும். வருவாயோடு சுற்றுச்சூழலும் முக்கியம் என்கிற வகையில் வழங்குப்படும் மரக்கன்றுகளை உங்கள் வீடுகளில், முடிந்த இடங்களில் எல்லாம் நட்டு வைக்க வேண்டும். இது பார்க்க எளிமையான நிகழ்வாக இருந்தாலும், மக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக இது இருக்கிறது. காலத்தின் சூழ்நிலை, நாட்டின் எதிர்காலம் இவை அனைத்தையும் மனதில் வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்" எனக்கூறினார்.

    இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் 4,78,543 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

    மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×