search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேஸ்வரம்"

    • கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் விசாரணை.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னகரம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சுமார் 9 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கே அடையாளம் தெரியாத, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நாட்டுப்படகு ஒன்றில் மிதந்து கொண்டிருந்தது. அதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக அந்த படகு மற்றும் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்பு குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து விசாரித்ததில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியை சேர்ந்த பன்னீர்ச்செல்வம் என்பவரின் காணாமல்போன நாட்டுப்படகு என்பது தெரிய வந்துள்ளது.

    அதனை தொடர்ந்து பன்னீர் செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன நாட்டுப்படகில் ஆண் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மண்டபம்-பாம்பனை இணைக்கும் புதிய ரெயில் பாலம்.
    • பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை.

    ராமேஸ்வரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ரெயில்பாலம் அடிக்கடி பழுதடைந்து வந்தது. இதையடுத்து புதிய பாலம் கட்ட மத்திய அரசு முடிவெடுத்தது.

    அதன்படி ரூ.545 கோடி மதிப்பில் மண்டபம்-பாம்பனை இணைக்கும் வகையில் பிரமாண்டமாகன புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டன. அடுத்த மாதம் திறக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரெயில் பாலத்தில் உறுதி தன்மை குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பாம்பன் ரெயில் பாலத்தில் இன்று என்ஜின் மற்றும் 11 சரக்கு பெட்டிகளுடன் கூடிய ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. 20 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

    அப்போது பாலத்தின் நடுவே உள்ள தூக்குபாலத்தின் உறுதி தன்மை, அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதிய பாலத்தில் ரெயில் இயக்கியது அப்பகுதி மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர்.
    • நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை வேவ்ஸ் ரைடர்ஸ் குழு இணைந்து சென்னை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு, நீச்சல் பயிற்சியளித்து வருகின்றனர்., இப்பயிற்சி பெற்றவர்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மாநில ஆறுகள், மற்றும் கோவாவில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.


    தற்போது கின்னஸ் சாதனை பதிவிற்காக, 11வயது முதல் 30 வயது வரையிலான ஒரு பெண் உட்பட 15 பேர், கின்னஸ் சாதனை பதிவிற்காக, தற்போது கடலில் சாகச பயணம் மேற் கொண்டு வருகின்றனர்., இவர்கள் கடந்த 5ம் தேதி, ராமேஸ்வரம் மண்டபம் பகுதி கடலில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை 604கி.மீ தூரம் நீச்சல் சாகச பயணத்தை துவங்கினர்.


    இவர்கள் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்., அவர்களை தமிழ்நாடு மீனவ பேரவை தலைவர் அன்பழகனார் மற்றும் மாமல்லபுரம் மீனவ சபையினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று காலை மீண்டும் கடலில் நீந்தி மாலை ஈஞ்சம்பாக்கம் சென்றனர். நாளை சென்னை மெரினா கடற்கரையை அடைகின்றனர்.

    • 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.
    • சிறப்பு குழந்தைகள் கின்னஸ் சாதனை படைக்க ஆர்வம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரையில் இருந்து எஸ்.டி.ஏ.டி. அமைப்பின் சார்பில் 15 சிறப்பு குழந்தைகள் கின்னஸ் உலக சாதனைக்காக சென்னை மெரினா கடற்கரை வரை 604 கி.மீ நீந்தி செல்கின்றனர்.

    இன்று (5-ந்தேதி) தொடங்கி நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் (காலை 6 மணி முதல் மாலை 6 வரை) நீந்தி ஆகஸ்ட் 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளனர்.

    இன்று காலை இதற்கான தொடக்க விழா மண்டபத்தில் நடந்தது. மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா குடியரசைக்கு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 15 சிறப்பு குழந்தைகளும் கடலில் இறங்கி நீந்த தொடங்கினர்.

    இந்த நிகழ்வில் தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சிராஜுதீன், குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் சங்க தலைவர் அன்பழகனார் கூறுகையில், கின்னஸ் சாதனைக்காக 15 சிறப்பு குழந்தைகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் ஏற்கனவே இந்தியாவின் பல மாநிலங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

    கடலில் நீந்தும் குழந்தைகளுக்காக 5 படகுகள் பாதுகாப்பாக செல்லும். அவர்களுடன் 8 பயிற்சியாளர்கள் செல்வார்கள். 11 நாட்கள் கடலில் நீந்தும் குழந்தைகள் வருகிற 15-ந்தேதி சென்னையில் நிறைவு செய்வார்கள் என்று கூறினார்.

    • பக்தர்கள் அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.
    • அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளாய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் இந்து சமயத்தை பொறுத் தவரை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

    குறிப்பாக ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.

    குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத் துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இன்று ஆடி அமா வாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலை மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று முதலே பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர்.

    பின்னர் அவர்கள் மறைந்த தங்களுடைய தந்தை, தாயார், தாத்தா, பாட்டி, பாட்டனார், முப் பாட்டனார் உள்ளிட்டோ ரின் பெயர்களை கூறியும், நினைவில் இருந்த முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழி பட்டனர். முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது.

    4 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து வழக்கமான பூஜை நடைபெற்றது. வழக் கமாக பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். ஆடி அமாவாசையான இன்று நடை சாத்தப்படாது. இரவு 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என்றும், இன்று அதிகாலை முதல் இரவு வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யவும், தீர்த்த நீராடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே தற்போது ராமேசுவரம் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 7-வது நாளான இன்று (4-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்கப்பல்லக்கிலும், பகல் 11 மணிக்கு ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந் தருளும் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    • புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது.
    • தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபும் மாவட்டம் ராமேசுவரம் இந்திய அளவில் புனித ஸ்தலமாகவும், சுற்றுலாப் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2.50 கோடி வரை பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் அனைவரும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, முகுந்தராயர் சந்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பல கோடி மதிப்பிட்டில் 2017 ஆண்டு முகுந்தராயர் சந்தரம் பகுதியில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இந்த பணி தொடங்கும் நிலையில் மீனவர்கள் இந்த பகுதியில் மீன் இறங்கு தளம் அமைத்தால் சேதமடைந்து விடும் என மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் கட்டுமான தொடங்கி முடிக்கப்பட்டது.

    இந்த நிலையில், தொடந்து கடல் சீற்றத்தின் காரணமாக டி வடிவில் அமைக்கப்பட்ட பாலம் ஒரு பகுதி உடைந்து கடலுக்குள் விழுந்து விட்டது. மற்றொரு பகுதி உடைந்து கடலுக்குள் விழும் நிலையில் உள்ளது.

    பாலத்தின் சேதமடைந்த பகுதியில் அலைகள் சீற்றத்துடன் மோதி 15 அடி உயரம் வரை மேல் எழும்புகின்றனர். சூறாவளி காற்று வீசம் நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆட்களை இழுத்து செல்லும் அளவிற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்புகின்றன.

    இதன் ஆபத்தை உணராமல் முகுந்தராயர் சத்திரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பாலத்தில் நடந்து சென்று பார்ப்பதுடன் பெண்கள், குழந்தைகளுடன் சென்று செல்பி எடுத்துக்கொள்ளுகின்றனர்.

    பாலம் உறுதி தன்மை இல்லாத நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செல்லுவதால் பாலம் சேதமடைந்து கடலில் விழுந்தால் யாரையும் காப்பற்ற முடியாது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் எச்சரித்தாலும் அதனை சுற்றுலாப் பயணிகள் பொருட்படுத்துவதில்லை. எனவே சேதமடைந்து பாலத்திற்கு யாரும் செல்ல முடியாத நிலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • காற்றின் வேகம் குறைந்ததால் மீன்பிடி தடையை மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் வங்க கடலில் வீசிய சூறை காற்று காரணமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதிக்கப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன்பிடி தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கி உள்ளது.

    இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட துறை முகங்களில் இருந்து விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களுக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்றுள்ளனர்.

    • விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு அபாயம்.

    ராமேசுவரம்:

    ராமநாதாபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகத்தில் சுமார் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    இதில், பெரும்பாலும் இறால், நண்டு, கணவாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் மற்றும் கோழி தீவனத்திற்கு பயன்படும் சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்கள் ஆகியவற்றை பிடித்து வருகின்றனர்.

    சமீபத்திய மீன்பிடி தடை காலத்திற்கு முன்பு இறால் ரூ.650, கணவாய் ரூ.400, நண்டு ரூ.350, காரல் ரூ.70, சங்காயம் ரூ.25 என்ற அடிப்படையில் விலை இருந்து வந்தது.

    இந்தநிலையில், மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்கச் சென்ற பின்னர் இறால் ரூ.350-400, நன்டு ரூ.250, கணவாய் ரூ.180, காரல் ரூ.15, சங்காயம் ரூ.10 என 50 சதவீதம் வரை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒன்றிணைந்து சிண்டிகேட் அமைத்துக்கொண்டு விலையை வெகுவாக குறைத்துள்ளனர்.

    இதனால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.

    இந்தநிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர் சங்க அவசர கூட்டம் மாவட்டத்தலைவர் வி.பி.ஜேசுராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மீனவ சங்கத்தலைவர் சகாயம், எமரிட், எடிசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ராமேசு வரம் மீன்பிடி துறைமுகத்தில் இறால் மீன் கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு விலையை 50 சதவீதம் வரை குறைத்து எடுப்பதை கண்டித்தும், மீனவர்கள் பிடித்தும் வரும் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்ளுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

    அதன்படி மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இந்த போராட்டம் காரணமாக மீன்பிடி மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் அடுத்தடுத்த சிறைபிடிப்பை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் தற்போது மீன்களுக்கு உரிய விலை நிர்யணம் செய்வது தொடர்பாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
    • படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் 25 பேருடன் நான்கு படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மற்றும் நான்கு நாட்டுப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் படகுடன் 25 மீனவர்களை மீட்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக படகுகளில் கருப்பு கொடி ஏற்றி உள்ளனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி பாம்பன் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மீனவ சங்கத்தலைவர்கள் எஸ்.பி.ராயப்பன் தலைமை தாங்கி பேசினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, கருணாமூர்த்தி, முருகானந்தம், மீனவ சங்க நிர்வாகிகள் அலெக்ஸ், எட்வின்.டேவிட், முடியப்பன், இன்னாசிமுத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் பாம்பன், தெற்குவாடி, சின்ன பாலம், நம்புதாளை, நாலுமனை, தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    • படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    நேற்று அதிகலையில் கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு 5 ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர்.

    இதனைதொடர்ந்து, அதே பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ரெஸ்மன், ஜஸ்டீன், கெரின் என்பவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளை சிறைபிடித்தனர். அதில் இருந்த 22 மீனவர்களை கைது செய்தனர். இதனைதொடர்ந்து, மூன்று படகுகளுடன் 22 மீனவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    மூன்று படகுகள் பறிமு தல் செய்யப்பட்ட நிலையில் 22 மீனவர்களை நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழங்கு பதிவு செய்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி விசாரனைக்கு பின் ஜூலை 5-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் இருந்து தடைகாலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற நிலையில் 22 மீனவர்கள் மூன்று விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் கைது நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

    மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுருத்தி திங்கட்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் தொடங்கினர். இதில், 560-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகம்.
    • பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வர தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுருளி, கும்பக் கரை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தற்காலி கமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இது போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆன்மீக தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் குவிந்து உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இன்று அதிகாலையில் வருகை தந்தனர்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடினர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, தனுஸ்கோடி, அரிச்சல் முனை, கோதரண்டராமர் கோவில், ராமர்பாதம் மற்றும் முன்னாள் குடியர வை தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அதிகளவில் வருகையை முன்னிட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகளவில் இருந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்குள் வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடை மழையும் சரிவர பெய்யாதததால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழை பெய்தது. சில இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நேற்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று மாலை ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்தன. சிறிது நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. இந்த கோடை மழை அவ்வப்போது நின்று நின்று பெய்தது.

    பின்னர் நள்ளிரவு முதல் விடிய விடிய ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணிமண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில மழைநீர் குளம்போல் தேங்கியது.

    மழை காரணமாக நேற்று இரவு ராமேசுவரம் பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பல மணி நேரம் ஆன பின்னும் மின்சாரம் வரவில்லை. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதியடைந்தனர். இன்று காலை 7 மணிக்கு ராமேசுவரத்திற்கு மின்விநியோகம் செய்யப்பட்டது.

    ராமேசுவரம் மன்னார்வளைகுடா, பாக்நீரினை கடலில் 55 கி.மீ வேகத்திற்கு சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல கூடாது என தடை விதித்து மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் ஜெய்லானி உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் ராமேசுவரம்,பாம்பன்,தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் படகுகள் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மேலூர், வாடிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டியில் மழை பெய்தது. மதுரை நகரில் நேற்று மாலை குளிர்ந்த காற்றும் வீசியது. அதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் மழை பெய்தது.

    பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், கைத்தறிநகர், வண்டியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த வாரம் முழுவதும் 105 டிகிரிக்கு வெயில் பதிவாகி வந்த நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக மதுரை நகரில் மழை பெய்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    ×