search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறப்பு"

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
    • 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    திருவெண்ணெய்நல்லூரில் கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    சம்பவம் குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கையை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

    உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மதுப்பழக்கம் உள்ளவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் ஈபிஎஸ்.

    ஜெயராமன் உடல்நலம் சரியில்லாமல் 2 நாட்களாக சாப்பிடாமல் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53).
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சுதீர் போஸ் (வயது53). கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

    1971-ம் ஆண்டு பிறந்த இவர், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களான ஜெஸ்சி மற்றும் பிஜி விஸ்வம்பரன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியதன் மூலம் மலையாள திரையுலகில் கால்பதித்தார். அதன்பிறகு பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

    கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா நடித்த 'கபடி கபடி' திரைப்படத்தை இயக்கி சுதீர் போஸ் இயக்குனரானார். இந்த படத்தில் நாதிர்ஷா இசையமைப்பில் நடிகர் கலாபவன் மணி பாடிய 'மின்னாமினுங்கே' என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. இதன் மூலம் சுதீர் போஸ் இயக்கிய 'கபடி கபடி' படம் கொண்டாடப்பட்டது.

    இவருக்கு ப்ரீதா என்ற மனைவியும், மிதுன் என்ற மகனும், சவுபர்ணிகா என்ற மகளும் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருவனந்தபுரம் பதிஞ்சரேனடா பகுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் தான் உடல் நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

    அவரது மறைவுக்கு மலையாள திரையுலக நடிகர்-நடிகைகள், திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுதீர் போசின் இறுதிச்சடங்கு வருகிற 5-ந்தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

    • நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ்.
    • இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார்.

    நடிகர் ராஜ்கிரண் நடித்த 'மாணிக்கம்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சூர்யபிரகாஷ். இந்தப் படங்களை அடுத்து ஜீவன் நடித்த 'அதிபர்' என்ற படத்தை இயக்கினார். பின்பு, இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வருசநாடு' திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். இந்த செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அவரது மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எனது நடிப்பில் வெளியான 'மாயி', 'திவான்' ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

    நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

    • கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழப்பு.
    • கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்பு.

    டெல்லியில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்புகள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை-24, என்எச்-8, ரிங் ரோடு, ரோஹ்தக் சாலை, ஜிடி சாலை மற்றும் மதுரா சாலை போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நிகழ்ந்த டெல்லியின் முதல் பத்து சாலைகளில் ஒன்றாகும்.

    இந்த ஆய்வு தகவலின் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இலக்கு அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும், இறுதியில் இந்த சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து பல கல்வித் திட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு கற்பிக்க ராஹ்கிரி போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன," என்று அதிகாரி கூறினார்.

    • சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.

    இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.

    இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.

    • இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    ஊட்டி:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ. இவர் நீலகிரி மாவட்டம் லவ்டேல் அடுத்த காந்தி நகரில் கடந்த 6 மாதங்களாக புதிதாக வீடு கட்டி வருகிறார்.

    தற்போது அங்கு தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக அருகே உள்ள நகராட்சி கழிப்பறையையொட்டி 30 அடிக்கு மண்ணை வெட்டி எடுத்தனர். இதனால் கழிப்பறை அந்தரத்தில் தொங்கிய நிலையில் இருந்தது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவிலை.

    நேற்று இங்கு பெண்கள் உள்பட 17 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். காலையில் பணியாளர்கள் அனைவரும் பணி நடந்த இடத்தின் அருகிலேயே அமர்ந்து டீ குடித்தனர்.

    அப்போது அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த கழிப்பறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அத்துடன் மண்சரிவும் ஏற்பட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர்.

    இருந்த போதிலும் 12 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் மேல்காந்தி நகரை சேர்ந்த சகீலா (வயது30), பாக்கியலட்சுமி(42), சங்கீதா(35), ராதா(38), மேல் தலையாட்டு மந்துவை சேர்ந்த உமா(35), முத்து லட்சுமி ஆகிய 6 பேர் பிணமாகவே மீட்கப்பட்டனர்.வண்ணாரப்பேட் டையை சேர்ந்த நந்தகுமார்(25), கவுதம்(24), மகேஷ்(23), தாமஸ் (25), ஜெயந்தி (55), சாந்தி (45) ஆகிய 6 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இறந்தவர்கள் உடல் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் திரண்டனர். இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பவ இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு காரை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஊட்டி லவ்டேல் போலீசார் கட்டி உரிமையாளர் பிரிட்ஜோ ஜேக்கப் மேத்யூ, ஒப்பந்ததாரர் பிரகாஷ், மேற்பார்வையாளர்கள் ஜாகீர் அகமது, ஆனந்தராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவர்கள் 4 பேரையும் வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவி னர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டது.

    ஆனால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டம் நீடித்தது.

    இதையடுத்து நள்ளிரவில் ஊட்டி தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ. மகராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், தாசில்தார் சரவணன் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் உறவினர்கள், இறந்த 6 பேரின் உடலை வாங்கி கொள்வதாக தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இன்று காலை இறந்த 6 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதற்கிடையே இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடம் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த அளவை மீறி கட்டப்பட்டுள்ளதும், அதிக சதுர அடியில் கட்டப்பட்டுள்ளதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

    • அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சின்ன ஜமக்கா, மகன்கள் ராமகிருஷ்ணா (வயது 11), விஜய் (6).

    நேற்று முன் தினம் இரவு தனது மகன்களுடன் ஊரில் உள்ள ஒரு பானி பூரி கடைக்கு சென்றனர். தந்தை வாங்கி கொடுத்த பானி பூரியை சாப்பிட்டுவிட்டு சிறுவர்கள் வீட்டுக்குச் சென்று தூங்கினர்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் இளைய மகன் விஜய்க்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

    அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து ராஜமகேந்திராவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு விஜய் இறந்தார்.

    இதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில், மூத்த மகன், ராமகிருஷ்ணனுக்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. ஏலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், வழியிலேயே அவர் இறந்தார். பானி பூரி சாப்பிட்டதால் மகன்கள் இறந்ததாக பெற்றோர்கள் கூறினர்.

    தூங்கும் போது ஏதேனும் விஷ பூச்சி கடித்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் இரவில் வீட்டில் சாப்பிட்ட உணவு, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
    • மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர வர்த்தக சங்கம் சார்பில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்க்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சீர்காழி பகுதிகளில் கடைகள் அடைத்து அனைத்து வணிகர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

    இதேபோல் சீர்காழி நகர அனைத்து வணிகர்கள் நல சங்கம், சீர்காழி வர்த்தகர்கள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியன சார்பில் காலை 11 மணி வரை கடைகளை அடைத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி அடுத்த மங்கை மடம் பகுதியில் பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை கடைகள் அடைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதைப்போல் குத்தாலம் பகுதியிலும் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    • கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
    • விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.

    இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.

    சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.

    அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.

    காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.

    • திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார்.
    • 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    புரட்சிக்கலைஞர் என்ற பட்டத்திற்கு பொருத்தமான விஜயராஜ் என்னும் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள ராமானுஜபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மகனாக பிறந்தார். அவர் சிறுவயதாக இருக்கும்போதே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.

    பிரேமலாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.


    சிறு வயது முதலே சினி மாமீதான ஈர்ப்பும், குறிப் பாக எம்.ஜி.ஆரை கலைக்கடவுளாக வழிபட்டு வந்ததன் காரணமாக பல பள்ளிகள் மாறியும் படிப்பு மீதான ஆர்வம் குறைந்தது. 10-ம் வகுப்புடன் பள்ளிப்படிப்புக்கு முடிவு கட்டினார். அதேநேரம், தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை ஒவ்வொரு காட்சிகளாக தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு மதுரை கீரைத்துரையில் செயல்பட்டு வந்த தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார்.

    தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சென்னைக்கு வந்தார். பல்வேறு அவமானங்கள், புறக்கணிப்புக ளுக்கு மத்தியில், 1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை' படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தை பல்வேறு சவால்களுடன் தொடங்கினார்.

    திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தவர் விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக் கொண்டார். `சட்டம் ஒரு இருட்டறை', `தூரத்து இடி முழக்கம்', `அம்மன்கோவில் கிழக்காலே', `உழவன் மகன்', `சிவப்பு மல்லி' என வெற் றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணி கதாநாய கனாக வலம்வந்தார். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். 1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

    • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

    இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

    அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
    • கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி நாராயணன் (வயது 68)-ராஜேஸ்வரி(67). இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவரை ராஜேஸ்வரி கவனித்து வந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இந்த துக்கம் தாளாமல் கதறி அழுத ராஜேஸ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.

    வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×