என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவையாறு"

    • சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.
    • ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா.

    திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் (1767 – 1848) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராவர். இவர் `தியாக பிரம்மம்' என்று போற்றப்படுபவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர், ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர்.

    இவருடைய இசைத் திறமையைக் கேள்வியுற்ற தஞ்சாவூர் மராத்திய அரசு மன்னரான சரபோஜி, இவரைத் தமது அரசவைக்கு அழைத்து, தம்மைப் பற்றி புகழ் பாடச் செய்ய வேண்டுமென விரும்பினார். ஆனால் தியாகராஜர், அரசவைக்கு செல்ல மறுத்து ''நிதிசால சுகமா'' என்ற கல்யாணி ராகக் கிருதியைப் பாடினார். ராம பக்தியிலேயே அவர் தம் மனதைச் செலுத்தி வந்தமையால், மனிதர்களை துதி செய்து பொருள் சம்பாதிக்க ஆசைப்படவில்லை.

    "ஏல நீ தயராது" கிருதியே தியாகராஜர் முதன் முதலில் பாடிய உருப்படியாகும். ஆரம்ப காலத்திலேயே தியாகராஜர் செய்த உருப்படிகள் அனேகமாக திவ்ய நாமக்கீர்த்தனைகளாகவும், தனிச் சரணத்தை உடைய கிருதிகளாகவுமே அமைந்தன. இவை அனேகமாக தோத்திரங்களாகவே இருந்தன. இவர் இயற்றிய கீர்த்தனைகள் யாவும் இசைவாணர்களால் இன்றளவும் பொக்கிஷமாக போற்றப்படுகின்றன.

    ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் 177-வது ஆராதனை விழா திருவையாறில் எதிர்வரும் 2024 ஜனவரி 26 தொடங்கி, 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று நிறைவுநாள். ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த பகுள பஞ்சமி நாள். இதில் இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி, தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்துவர்.

    • மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.
    • நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு சமாதி உள்ளது.

    இங்கு ஆண்டுதோறும் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறும். அதன்படி கடந்த மாதம் 177-வது ஆராதனை விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.

    இதையடுத்து 5 நாட்கள் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவானது கடந்த 26-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விழாவின் இறுதிநாளான இன்று தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளையொட்டி காலை 6 மணியளவில் திருவையாறு திருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் இருந்து அவரது சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டது.

    மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கெளளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ரா கநகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

    பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார், கடலூர் ஜனனி, சீர்காழி சிவசிதம்பரம், அருண், அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்பட 1000-க்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அப்போது, தியாகராஜ சுவாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மாலை வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தியாக பிரம்ம மகோத்சப சபை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் இன்று இரவு 7.30 மணிக்கு சிக்கல் குருசரண் பாடுகிறார். 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் சுவாமி வீதி உலா காட்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீமகாதேவன் பாடுகிறார். பின்னர் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    • கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.
    • காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார்.

    `நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

    தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

    சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

    இம்மையே இராமவென்

    றிரண்டெழுத்தினால்'

    கம்பர் இவ்வாறு ராமனின் பெருமையை, ராம நாமத்தின் சிறப்பினைக் கூறுகிறார். கலியுகத்தில் ராம நாமத்தின் சிறப்பை, மும்முர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் எனப்படும் தியாகராஜ சுவாமிகள் வெளிப்படுத்தினார்.

    ஒரு சமயம் ஒரு தீட்சிதர், தியாகராஜ சுவாமிகளை பார்த்து `பஜனை, நாத, உபாசனை சாமானியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அந்தணர்கள் அனைவரும் யாகங்களும், பூஜைகளும் செய்துதான் மோட்சத்தை அடைய வேண்டும்' என்று கூறினார்.

    அதைக் கேட்ட தியாக பிரம்மமோ நாம சங்கீர்த்தனமே மோட்சத்தை தரும் என்ற வகையில், `யக்ஞாதுலு ஸுகமனு வாரிகி ஸமுலக்ஞானுலு கலரா-ஓ மனஸா' என்று கூறினார். அதாவது, `ராம பஜனையை தவிர்த்து விட்டு, யாகம் முதலியவைகளே சிறந்ததென்று சொல்கிறவர்களுக்கு சமமான அஞ்ஞானிகளும் உலகில் உண்டோ' என்பது இதன் பொருள்.

    தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த இல்லம்

    தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த இல்லம்

     தியாகராஜர் அவதாரம்

    ஒரு சமயம் ஆந்திர தேசத்தில் இருந்து பல குடும்பங்கள் தமிழ்நாட்டிற்கு குடிபெயர்ந்தன. அந்த குடும்பத்தில் காக்கர் லா வம்சத்தில் ராம பிரம்மம் என்ற மகான் பிறந்தார். அவர் சிறந்த ஞானியாகவும், வைராக்கியம் மற்றும் ராம பக்தி உள்ளவராகவும் திகழ்ந்தார். இவர் பாகவத சம்பிரதாயத்தில் விருப்பம் உள்ளவராக திகழ்ந்த ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சுவாமிகள் என்ற பெரிய மகானிடம், ராம நாம உபதேசம் பெற்று, தாரக நாமத்தை ஜெபம் செய்து வந்தார்.

    ராம பிரம்மத்திற்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. மூத்தவன் ஜப்பியேசன். மூன்றாவது குழந்தையான தியாகராஜர், 1767-ம் ஆண்டு மே மாதம் 4-ந் தேதி, சர்வஜித் வருடம் சித்திரை மாதம் பூச நட்சத்திரம் கடக ராசியில் அவதரித்தார். நடுவில் உள்ள பிள்ளையை பற்றிய தகவல் இல்லை. தியாகராஜருக்கு அவரது அன்னை, புரந்தரதாசரின் கீர்த்தனங்களை சொல்லிக் கொடுத்தார். மகான் தியாகராஜர் வேதாந்த சாஸ்திரத்திலும், வியாகரணத் திலும் பண்டிதராக திகழ்ந்தார்.

    மண வாழ்க்கை

    தியாக பிரம்மம் தன் தகப்பனார், தாயார் சொல்படி பார்வதி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். சில வருடத்தில் பார்வதி அம்மாள் கடும் நோய்க்கு ஆளானார். அந்த நேரத்தில் மனைவி இறந்து விடுவாள் என்பதை அறிந்துகொண்ட தியாக பிரம்மம், தன் மனைவியின் இறப்புக்குப் பின் சன்னியாசம் பெற்றுவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார்.

    ஆனால் அவரது எண்ணத்தை அறிந்த பார்வதி அம்மாள், "நான் விரைவில் இறந்துவிடுவேன். தங்களை ஒரு வால்மீகிபோல் பார்க்கிறேன். நான் உங்களுடன் வாழ்ந்தது ஐந்து வருட காலமே. தாங்கள் தனியாக இருக்க வேண்டாம். சன்னியாசியாக வேண்டாம். என் சகோதரி கமலாம்பாளை திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பார்வதி அம்மாள் இறந்த பிறகு அவரது சகோதரியான கமலாம்பாளை, தியாக பிரம்மம் திருமணம் செய்து கொண்டார்.

    ராமர் தரிசனம்

    தியாக பிரம்மம், ராமபிரான் மீது பல கீர்த்தனைகள் பாடி ஆனந்தமாக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணானந்தர் என்ற ஒரு மகா சன்னியாசி, தியாக பிரம்மத்தை தேடி வந்தார். அவரை தன் இல்லத்திலேயே உணவருந்தும்படி தியாக பிரம்மம் வேண்டிக் கொண்டார். சன்னியாசியும் அதற்கு ஒப்புக்கொண்டு `தங்களுக்கு இவ்வளவு ராம பக்தி இருக்கிறதே, ராமபிரானின் மந்திரம் உபதேசம் ஏதாவது தங்களுக்கு உள்ளதா?" எனக் கேட்டார்.

    அதற்கு தியாகராஜர், `என் தகப்பனாரிடம் நான் பெற்ற ராம நாம ஜபம் தவிர, வேறு மந்திர உபதேசம் என்று இதுவரை யாரும் எனக்கு செய்யவில்லை' என்றார். அதற்கு சன்னியாசி `ராம தரிசனம் செய்யக்கூடிய ஒரு அற்புதமான 'ராம ஷடாட்சரி' மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன்" என கூறி, தியாக பிரம்மத்திற்கு மந்திர உபதேசம் செய்து வைத்தார்.

    பின்னர், "இதை பக்தி சிரத்தையுடன் 96 கோடி முறை ஜெபம் செய். அப்போது உனக்கு ராம தரிசனம் கிட்டும்' எனக் கூறி சென்றுவிட்டார்.

    தியாகராஜர், ராம ஷடாட்சரி மந்திரத்தை தினமும் பல லட்சங்களுக்கு ஜெபித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் 'இவ்வளவு ராம நாமத்தை ஜெபித்தும் ராம தரிசனம் கிடைக்கவில்லையே' என வருந்தினார். அப்போதுதான் அவருக்கு, 96 கோடி ஜபம் முடிந்திருந்தது. ஆனால் தியாக பிரம்மம் இதை அறியவில்லை. அன்று இரவு அவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்க்கையில், ராம -லட்சுமணர் தரிசனம் கிடைத்தது.

    உள்ளம் சிலிர்க்க பக்தி பரவசமானார். ராமபிரான் அவரிடம் 'என்ன வரம் வேண்டும்' என கேட்க, 'இதுவரை நீ செய்த அனுக்கிரகமே பெரியது. அதற்கே நான் தகுதியானவனா எனத் தெரியவில்லை' எனக் கூறி 'வராலாந்து கொம்மனி நாயந்து வஞ்சனஸேய நியாயமா, ஸுராஸுரவினுத ராம நாமன ஸுஸுபக்தினி கோரி யுண்டகனனு' என்னும் கீர்த்தனையைப் பாடினார்.

    இப்படி தன் வாழ்நாளில் மூன்று முறை தியாகராஜர், ராமபிரானின் தரிசனத்தைப் பெற்றுள்ளார் என்று கூறுகிறார்கள். ஸ்ரீராமபிரான், தியாகராஜரின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இவர் எவ்வளவோ மந்திர சித்திகள் பெற்றும், கடைசிவரை உஞ்சவிருத்தி மூலமாகவே வாழ்க்கை நடத்தி வந்தார். ராம நாமத்தை பாடியபடி தெருக்களில் நடந்து செல்வார். அப்போது மற்றவர்கள் கொடுக்கும் அரிசியை வாங்கிக்கொள்வார். பணம், பொன், பொருள் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார்.

     ஜீவசமாதி

    தியாக பிரம்மம் ராம பக்தியில் திளைத்து வாழ்ந்த காலத்தில், அவரது இறுதி முடிவை அவர் அறிந்தார். அப்போது ராமன் அவர் கனவில் வந்து, சன்னியாசம் ஏற்றுக்கொள்ளச் சொன்னதாக சொல்கிறார்கள். தியாகராஜர் ஒரு ஏகாதசி அன்று அனைவரையும் கூப்பிட்டு "இன்னும் பத்து நாட்களில் நான் ஜீவசமாதி அடையப்போகிறேன்" என்றார்.

    இவருக்கு பரமஹம்சர் நந்தேந்திர சுவாமிகள் என்பவர், சன்னியாச தீட்சை அளித்தார். `நாத ப்ரம்மானந்தர்' என்ற பெயரையும் தியாகராஜருக்கு சூட்டினார். 6.1.1847 அன்று புஷ்ய பகுள பஞ்சமி நாளில், தியாக பிரம்மம் தன் சிரசில் கபாலம் வெடித்து ஜீவசமாதி அடைந்தார். கலியுகத்தில் கபால மோட்சம் அடைந்தவர்கள், மிக மிக அரிது. இவர், "நான் இறந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, என் பெருமையை உலகம் அறியும்" என்று கூறி மறைந்தார்.

    அதன்படி 1907-ம் ஆண்டு முதல், தியாகராஜ ஆராதனை விழா சிறப்பாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். இவர் ஜீவ சமாதி அடைந்த தினத்தை ஆராதனையாக வருடா வருடம் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். திருவையாறில் இன்றும் இவரது ஆராதனை விழா அன்று, ஏராளமான சங்கீத வித்வான்கள் கூடி, பாடல்கள் பாடி, பலவிதமான இசைக் கருவிகளுடன் கர்நாடக சங்கீதத்தை இசைத்து ஆனந்தமாக கொண்டாடி வருகிறார்கள்.

    வால்மீகி முனிவரே, தியாகராஜராக அவதரித்தார் என்று சொல்பவர்களும் உண்டு. வால்மீகி முனிவர் 2,400 சுலோகங்களில் ராமாயணத்தை இயற்றினார். அதே போல் தியாகராஜரும், 2,400 கீர்த்தனைகளில் ராமாயணத்தை பாடியிருப்பதாக கூறப்படுகிறது. தியாகராஜ சுவாமிகளின் சமாதி திருவையாற்றில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் அங்கு இசைக் கலைஞர்கள் கூடி, இவருக்கு பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்துகின்றனர்.

    • பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
    • திடீரென கனமழை பெய்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம்.

    அதாவது அப்பருக்கு சிவபெருமான் கயிலை காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று இரவு ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மதியம் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.

    தொடர்ந்து, இரவில் ஐயாறப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது.

    இதற்காக ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பருக்கு காட்சி கொடுத்தார். அப்போது திடீரென கனமழை பெய்தது.

    இருந்தாலும் கொட்டு மழையையும் பக்தர்கள் பொருட்படுத்தாமல் பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்து தேவார பாடல்களை பாடி உற்சாகமடைந்தனர். கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆலோசனைபடி கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி வழங்கியது.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மரூர் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் 3 ஏழைக் குடும்பத்தினருக்கு எய்டு இந்தியா தொண்டு நிறுவனம் இலவச வீடுகள் கட்டி நேற்று வழங்கியது. இந்நிகழ்ச்சிக்கு துரை.சந்திரசேகரன் எம்எல்.ஏ. தலைமை வகித்து புதிய வீடுகளை திறந்து வைத்தார்.

    எய்டு இந்தியாதொண்டு நிறுவனத்தின் இணைச்செயலாளர் முனைவர் தாமோ தரன் முன்னிலை வகித்தார்.

    இதில் திருவையாறு பேரூராட்சி துணைத்த லைவர் நாகராஜன்,ஒன்றியக் கவுன்சிலர்சிவஞானம், ஊராட்சி மன்றத்தலை வர்கள் மரூர் மணிகண்டன், சாத்தனூர் அகிலா சாமிநா தன், மகாராஜபுரம்சுஜாதா பாஸ்கர், எய்டு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • திருவையாறு ஆஞ்சநேயர் கோவிலில் சம்வத்சராபிஷேகம் நடந்தது.
    • மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    திருவையாறு:

    திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலின் 7 ஆம் ஆண்டு சம்வத்சராபிஷேகம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. கணபதி ஹோமம் நடந்தது. மதியம் காவிரி ஆற்றிலிருந்து கடங்களில் புனித நீர் கொண்டு வரப்பட்டு, கோயில் பிரகாரம் வலம் வந்து, மூலவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா ஆராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியின் வருசாபிஷேகம் தரிசனம் செய்து அருள் பெற்றார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மற்றும் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இரவு பல வண்ண மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு துளசி தல அர்ச்சனை செய்யப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமிகள் வீதிஉலா வந்தருளினார்கள். இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு பாவாசாமி அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் டிரஸ்டி குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தார்கள்.

    ×