என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டி தாவரவியல் பூங்கா"
- தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது.
- தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி:
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
ஊட்டியில் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்ட அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்தனர்.
அங்கு இத்தாலியன் பூங்கா பகுதியில் பூத்து குலுங்கிய மலர்களை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த தேன்கூடு களைக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தேனீக்கள் கூட்டம் படையெடுத்து, அங்கு நின்ற சுற்றுலா பயணிகளை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. கேரளாவில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்களை தேனீக்கள் கொட்டியது. இதனால் அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டனர்.
அப்போது சிலர் என்ன செய்வது என்று தெரியாமல் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க இத்தாலியன் பூங்கா பகுதியில் இருந்த குட்டையில் குதித்தனர். அங்கு தண்ணீரின் குளிர் தாங்க முடியாமல் சுற்றுலா பயணிகள் சத்தம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேனீக்கள் கூட்டம் அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேனீக்கள் கொட்டியதில் படுகாயம் அடைந்த 11 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து 11 பேரும் சொந்த ஊருக்கு திரும்பினர். இதற்கிடையே தேனீக்கள் இருந்த கூட்டை கலைத்தது யார் என்று தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
- கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள், வனம் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பார்கள்.
அவர்கள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த நிலையில் 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாகவும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில் ஒமைக்ரான் தொற்று பரவியது. இருந்தபோதும், பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.
இதனால் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன்பின் ஆண்டு முழுவதும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.
கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
- ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், அங்குள்ள சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிப்பதற்காக நாள்தோறும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.
குறிப்பாக கோடை விடுமுறை, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
கடந்த 13-ந்தேதி முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். நேற்று காணும் பொங்கலையொட்டி அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களை கண்டு ரசித்தனர்.
புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பேசியும், விளையாடியும் மகிழ்ந்தனர். அழகான மலர் செடிகள் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்திலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கொடநாடு காட்சி முனை, கேத்ரின் நீர்வீழ்ச்சி, லேம்ஸ்ராக் காட்சி முனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்பட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு கடந்த 5 தினங்களில் மட்டும் 60 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊட்டி படகு இல்லத்தில் 48 ஆயிரம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.
தொடர் விடுமுறை நேற்றுடன் முடிந்ததால் மதியத்திற்கு பிறகு சுற்றுலா தலங்களில் கூட்டமானது குறைய தொடங்கியது. சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல தொடங்கியதால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பஸ் நிலையங்களிலும் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும்.
- இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன.
ஊட்டி:
சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.
சுற்றுலா பயணிகள், இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட முக்கியமான சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.
இந்நிலையில் வார இறுதி நாளான நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 12,855 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனா்.
பெரும்பாலானவா்கள் கேரளம், கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனா். வெளிநாட்டினரும் அதிக அளவு வருகை தந்திருந்தனா். இவா்கள் மலை ரெயிலில் பயணிக்க அதிக ஆா்வம் காட்டினா்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலா் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு மலா் கண்காட்சிக்காக ஹாலந்து மற்றும் காஷ்மீரில் மட்டுமே மலரும் துலிப் மலா்கள் முதன்முறையாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் மூலம் வளா்க்கப்பட்டன.
பூங்காவிலுள்ள கண்ணாடி மாளிகையில் துலிப் மலா்கள் வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ரோஸ் மற்றும் ஊதா உள்ளிட்ட 5 வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனா்.
- ஏப்ரல் 2-வது வாரத்தில் பூங்காவில் பூக்கள் பூத்து குலுங்கும்.
- கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி
ஊட்டியில் பனி குறைந்துள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் செடிகளை பனியில் இருந்து பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணி தொடங்கி உள்ளது.
ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சி உலக புகழ் பெற்றதாகும். இந்த கண்காட்சி நடத்துவதற்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஊட்டியில் பனி பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், மலர் நாற்றுக்கள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த மலர் நாற்றுகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு அரண் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
தற்போது ஊட்டியில் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளதால் தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டிருந்த கோத்தகிரி மிலார் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் இந்த தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்திற்கு மேல் இந்த தொட்டிகளில் மக்களின் மனங்களை கவரும் வகையில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் என அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.
- கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
- தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெயிலில் இருந்து தப்பிக்கவும், இதமான கால நிலையை அனுபவிக்கவும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
கோடை சீசன் தொடங்கிய நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றி பார்த்தனர்.
தாவரவியல் பூங்காவில் பூத்தும் குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து, அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நகரின் முக்கிய சாலையான கமர்சியல் சாலை, பூங்கா செல்லும் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
- நீலகிரியில் இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் கோடை சீசன் நடைபெறுகிறது.
- 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரியில் இந்த மாதம் (ஏப்ரல்) மற்றும் அடுத்த மாதம் (மே) கோடை சீசன் நடைபெறுகிறது.
இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரளுவார்கள். அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க இன்று (சனிக்கிழமை) முதல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கோடை சீசனின் போதும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
மே மாதம் பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன.
மேலும் கோடை சீசனுக்காக டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, பிரமிளா, சால்வியா, பிரஞ்மேரி கோல்டு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
தற்போது கோடை சீசன் தொடங்கி விட்டதாலும் மலர்கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, பெரணி இல்ல பகுதி, இலை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டும், நடைபாதையோரங்களிலும் மலர் நாற்றுகள் நடப்பட்டது.
மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, அதனை சுற்றி கயிறு கட்டப்பட்டு உள்ளது. அதனுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சால்வியா, மேரி கோல்டு, டேலியா, பெட்டுன்னி ஆகிய மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கி பூத்து குலுங்குகின்றன. இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இதுதவிர ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டுனியா உள்பட மொத்தம் 230 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து, அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.
பூந்தொட்டிகள் மலர் மாடங்கள் மற்றும் புல்வெளிகளில் பல்வேறு அலங்காரங்களுடன் அடுக்கி வைக்கப்பட உள்ளது.
தற்போது ஊட்டியில் வெயில் அடித்து வருவதால் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் பூத்து உள்ளதால் கோடை சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போதே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற இருப்பதால் பூங்காவில் பூச்செடிகளை பராமரித்தல், தடுப்பு வேலிகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்சமயம் மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல கோத்தகிரி சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது.
இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி நேரு பூங்காவையும் சுற்றி பார்த்து செல்கின்றனர்.
அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். காய்கறி கண்காட்சிக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டும் இருப்பதால் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜூகளும் நிரம்பி வழிந்தன. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி சில காட்டேஜூகள் கட்டணத்தை உயர்த்தியும் வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி தொழில் நடத்தி வந்த அனைத்து வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.
- 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.
குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது.
தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அரவேணு:
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துகொண்டே செல்கிறது.
தற்போது நீலகிரியில் கோடை விழாவை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் நடைபெற்றது வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இன்று 2-வது நாளாக காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மயில், யானை, கழுகு உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சி முனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.
மேலும் வனப்பகுதிக்கு நடுவே வசிக்கும் பழங்குடியினரின் தெங்குமரஹடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட் உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்தனர்.
- மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலையில் வெயிலும், பிற்பகலுக்கு பிறகு மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையும் நிலவி வந்தது. சில நேரங்களில் மிதமான மழையும் பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது.
பிற்பகலுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை, மத்திய பஸ் நிலையம், முள்ளிக்கொரை, பொ்ன்ஹில், காந்தல், பிங்கா் போஸ்ட் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சாலை, ரோஜா பூங்கா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
சமவெளிப் பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் மழை காரணமாக உருவான இதமான காலநிலையை வெகுவாக அனுபவித்தனா். மேலும் சில சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடி சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர்.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலையில் கடும் வெயில் சுட்டெரித்தது. மதியத்திற்கு பிறகு வானில் மேக கூட்டங்கள் திரண்டு காலநிலை முற்றிலும் மாறி காணப்பட்டது. மாலையில் காந்திபுரம், ரெயில் நிலையம், பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இந்த மழை காரணமாக அவினாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.
கோடை மழையால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான கால நிலை நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
- ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அமைக்கும் பணிகள் 1848-ம் ஆண்டு தொடங்கி 1867-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்யவே இந்த பூங்கா அமைக்கப்பட்டது.ஆனால், மெக் ஐவர் என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்தில் உள்ள கியூ பூங்காவை போன்று ஊட்டி பூங்காவை அமைக்க விரும்பி, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மரக்கன்று, செடிகளை நடவு செய்தார். பின்னர் ஜப்பான், ஆஸ்திரேலியா, கேனரி ஜலேண்ட் போன்ற நாடுகளிலிருந்து பிரபலமான மரக்கன்றுகளை கொண்டுவந்து நடவு செய்தார்.
தற்போது, இந்த நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் அறிவியல் மாணவர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும், சுற்றுலா பயணிகளுக்கு காட்சி விருந்தாகவும் இருந்து வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவை ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுகின்றனர். பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள் வானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்த்து வியப்படைகின்றனர். ஆனால், அவற்றின் வரலாறு குறித்து அறியும் வசதி இல்லாததால் ஏமாற்றமடைந்து வந்தனர்.
இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள பழமைவாய்ந்த மற்றும் அரியவகை மரங்கள், தாவரங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில், கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதை தங்கள் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து விவரங்களை தெரிந்துகொள்ள முடியும்.
இதில், அந்த மரம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எப்போது நடவு செய்யப்பட்டது. எந்த நாட்டைச் சேர்ந்தது. அவற்றின் மூலிகைத் தன்மை என்ன என்ற விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
இதுகுறித்து தாவரவியல் பூங்கா உதவி இயக்குநர் பாலசங்கர் கூறியதாவது-
தாவரவியல் பூங்காவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதால், அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தாவரங்களின் விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ரோஸ் என்று அழைக்கப்படும் கமாலியா, டிராகன் மரம், குரங்கு ஏறாமரம், ருத்ராட்சை மரங்களில் கியூஆர் கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 100 மரங்களுக்கு கியூஆர் கோடு பெயர் பலகை வைக்கப்படும், பின்னர் அனைத்து மரங்களுக்கும் கியூஆர் கோடு உடன் பெயர் பலகை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.