search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் கடந்த ஆண்டு தாவரவியல் பூங்காவுக்கு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
    X

    ஊட்டியில் கடந்த ஆண்டு தாவரவியல் பூங்காவுக்கு 24 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

    • கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.
    • கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இங்குள்ள பூங்காக்கள், வனம் சார்ந்த சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்த்து மகிழ்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பார்கள்.

    அவர்கள் நூற்றாண்டு புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவை பார்க்காமல் செல்வதில்லை. கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டில் தாவரவியல் பூங்காவிற்கு 28.11 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இந்த நிலையில் 2020, 2021-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாகவும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக சரிந்தது.

    கடந்த ஆண்டு ஜனவரியில் ஒமைக்ரான் தொற்று பரவியது. இருந்தபோதும், பெரும்பாலானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை.

    இதனால் கடந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. அதன்பின் ஆண்டு முழுவதும் கணிசமான அளவு சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    கோடை விழாக்கள் நடைபெற்ற மே மாதத்தில் மட்டும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர்.

    இதில் மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்தனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×