என் மலர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர்கள்"
- ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
- மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
சென்னை:
சென்னை மற்றும் புறநகரில் ஆட்டோக்களில் இப்போது யாருமே மீட்டர் போடுவது கிடையாது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால், தோராயமாக ஒரு தொகை கேட்பார்கள். பயணிகள் அப்போது பேரம் பேசுவார்கள். இதில் உத்தேசமாக ஒரு தொகையை கேட்டு அதன் பிறகுதான் பயணம் செய்ய முடியும்.
இதுதான் இன்றைய யதார்த்தம். ஓலா, ஊபர், ராபிட்டோ, ஆட்டோ, கார்களில் அந்த அளவுக்கு பேரம் பேசுவதில்லை. ஒரு சிலர் தான் கூடுதலாக 20 ரூபாய் 50 ரூபாய் கேட்பது இப்போது தொடர் கதையாகி வருகிறது.
இது பற்றி ஆட்டோ சங்க நிர்வாகிகளிடம் கேட்டால் 2013-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்கவில்லை என்கிறார்கள். தவறு எங்கள் மீது கிடையாது. அரசு மீதுதான் என்று கூறுகின்றனர். இப்போது ஆட்டோ சங்கங்கள் ஒன்று சேர்ந்து நாளை 'ஸ்டிரைக்' அறிவித்து உள்ளனர். அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவித்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் ஆட்டோ ஓட்டுவது பெரும் சிரமமாக உள்ளது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதற்கேற்ப அரசு கட்டணத்தை முறைப்படுத்தவில்லை.
2013-ம் ஆண்டுதான் ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது குறைந்தபட்ச தூரத்துக்கு ரூ.25-ம், கி.மீ.க்கு ரூ.12 என்றும் உயர்த்தி நிர்ணயித்தது அன்றைய அரசாங்கம். இப்போது விலைவாசி பல மடங்கு ஏறி விட்டது. அன்றைக்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.55-க்கு கிடைத்தது. இன்று 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விட்டது.
எனவே ஆட்டோ கட்டணத்தை ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 என்று நிர்ணயிக்குமாறு கேட்டு உள்ளோம். குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாய் தாருங்கள் என்கிறோம். அரசு இதில் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.
எனவே ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனே உயர்த்தி நிர்ணயிக்குமாறு கோரி நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது. மருத்துவமனை போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் ஆட்டோ இயங்கும்.
எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கலெக்டர் அலுவலகம், ராஜரத்தினம் ஸ்டேடியம், அண்ணாசாலை, தாராபூர் டவர் சாலை, தாராபூர் டவர் ஆகிய இடங்களில் நாளை காலை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறோம். இதில் அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களும் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
- அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்க வேண்டும்.
சென்னை:
மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை (ஸ்டிரைக்) அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
- ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 20-ந் தேதி தனியார் பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ புஸ்சி வீதியில் தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த 8 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பஸ், ஆட்டோ டிரைவர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றி செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி புதுவை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புஸ்சி வீதி-தூய்மா வீதி சந்திப்பில் பள்ளி மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோக்களை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சோனாம்பாளையம் சந்திப்பிலும் சோதனை நடத்தினர்.
அப்போது ஆட்டோவில் 5 மாணவர்கள் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. ஆனால் அதை தாண்டி பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ. 200 வீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆட்டோவின் இரு பக்கத்திலும் கோழி தடுப்பு கதவுகள் போல் இரும்பு கம்பியால் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கதவுகளை போலீசார் அகற்றினர்.
ஆட்டோ முன் கண்ணாடியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர்களையும் கிழித்து எரிந்து எச்சரித்தனர். இதுபோல் நடந்த சோதனையில் 25 ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோ டிரைவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். 5 மாணவர்களை மட்டும் ஆட்டோவில் ஏற்றிச்சென்றால் தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் கூறுகின்றனர்.
- பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும்.
- ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கு மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்களை முறையாக பள்ளிக்கு அழைத்து சென்று வருவது குறித்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஸ்ரீநிவாஸ் மற்றும் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் டி.மாதவன் ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:-
பள்ளி மாணவ, மாணவிகளை ஆட்டோவில் இருந்து இறக்கும் போது ஓட்டுநர் இறங்கி அவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும். அதேபோல் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லும்போது பெற்றோர்களிடத்தில் குழந்தைகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும்.
சாலையை கடந்து செல்பவர்களை தாங்களே கொண்டு சென்று விட வேண்டும். 12 வயதிற்குள் மேல் இருக்கும் மாணவர்கள் 5 பேரும், 12 வயதிற்கு 3 பேரை மட்டுமே ஆட்டோவில் ஏற்ற வேண்டும்.
ஏற்றப்படும் அனைத்து குழந்தைகளும் ஆட்டோவிற்குள் இருக்க வேண்டும். கம்பியில் அமர வைத்துக் கொண்டோ. புத்தகப் பைகளை ஆட்டோவுக்கு வெளியில் தொங்கவிட்டுக் கொண்டோ, செல்லக் கூடாது. கட்டாயமாக ஓட்டுனர் அருகில் யாரையும் உட்கார வைக்க கூடாது. பள்ளிக்கு அழைத்துச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. அதற்கு ஓட்டுநர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி வாகனத்தை செலுத்த வேண்டும். எப்.சி. செய்யாதவர்கள் உடனடியாக செய்ய வேண்டும். கட்டாயம் ஆர்.சி. புத்தகம், இன்சூரன்ஸ், மாசு கட்டுப்பாட்டு துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு வட்டார போக்குவரத்து அதிகாரி மாதவன் பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனநர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினர்கள் என 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த கரைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் அழகு (வயது 51). இவர் வீரபாண்டி அடுத்த நொச்சிப்பாளையம் பிரிவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் தனது ஆட்டோவை நிறுத்தி ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு புறப்பட தயாராக இருந்தார். அப்போது அருள்புரம் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜென்ட் இளங்கோ (23) மோட்டார் சைக்கிளில் திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக ஆட்டோ மீது மோதுவது போல வந்து நின்றதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து அழகு பார்த்து போக வேண்டியதுதானே என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோ அழகுவை தாக்கி உள்ளார். இதில் அழகு வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் இளங்கோவிடம் பேசி உள்ளனர். அப்போது இளங்கோ அவர்களையும் தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை சரமாரியாக தாக்கினர். இது தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோ டிரைவர்கள் இளங்கோவை தாக்கிய சிசிடிவி., காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஆட்டோ டிரைவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
கோவை:
கோவையில் ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தற்போது அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி அளித்து உள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் எங்கும் பைக் டாக்ஸி இல்லை. எனவே, பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
டாக்ஸிகளுக்கு அனுமதி என்றால் ஆட்டோக்களுக்கு வெள்ளை போர்டு அனுமதி வழங்க வேண்டும். எங்களது அடுத்தகட்ட போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். மேலும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
- இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது.
சென்னை:
அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தொ.மு.ச. தலைவர் துரை, ஏ.ஐ. டி.யு.சி. பொதுச்செயலாளர் சம்பத் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் மீட்டர் கட்டண உயர்வு, அரசு ஆட்டோ ஆப் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.
சென்னை ஐகோர்ட்டு ஆட்டோ கட்டணத்தை மறு நிர்ணயம் செய்யக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு ஆட்டோ மீட்டர் கட்டணம் மறு நிர்ணயக்குழு அமைத்து ஆட்டோ சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அந்த கூட்டத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50, கிலோ மீட்டருக்கு ரூ.25 நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த குழு பயணிகள் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட கூட்டமும் நடத்தி கருத்தை கேட்டது. பின்னர் ஆட்டோ கட்டண மறு நிர்ணயக்குழு கூடி ஆலோசித்து ஆட்டோ மீட்டர் கட்டணம் தொடர்பான தனது ஆலோசனையை வழங்கியது.
ஆனால் இதுவரை புதிய மீட்டர் கட்டணம் குறித்து அரசு தரப்பில் அரசாணை வெளியாகவில்லை.
இந்த காலதாமதம் ஆட்டோ தொழிலாளர்களை கவலை அடைய செய்துள்ளது. அரசு மேலும் காலதாமதப்படுத்தாமல் எங்கள் கோரிக்கையை ஏற்று ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.
- சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.25ஆக தமிழக அரசு நிர்ணயித்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 கட்டணம் என்று வசூலிக்கப்பட்டது.
மேலும் காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பிறகு விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ டிரைவர்கள் கைவிட்டனர். மேலும் தனியார் செயலி நிறுவனங்களும் கட்டணங்களை நிர்ணயித்து ஆட்டோக்களை இயக்கின. இதை பயன்படுத்தி அந்த நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலிக்க தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து டிஜிட்டல் மீட்டர்களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் மூலம் டிரைவர்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து கமிஷனரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே ஆட்டோவுக்கு மறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டது.
இதையடுத்து ஆட்டோ கட்டணத்தை மறுவரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆட்டோ தொழிற் சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலில் அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி 1.5 கி.மீ. தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.40, கூடுதலாக ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.18 ஆக உயர்த்தலாம் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில் குழு பரிந்துரைத்த கட்டண உயர்வை ஏற்க ஆட்டோ டிரைவர்கள் மறுத்து விட்டனர். சென்னையில் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்கள் தற்போது குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 வசூலித்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறைந்தபட்சம் ரூ.40 என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.
இதுகுறித்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் கூறியதாவது:-
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் நேரத்துக்கும், தூரத்துக்குமான வேறுபாடுகளை ஒப்பிட்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.45 ஆகவும், கூடுதலாக 1 கி.மீட்டருக்கு ரூ.20 ஆகவும் நிர்ணயிக்க வேண்டும். இதற்கான செயலியை உருவாக்கி அரசே இதை கண்காணித்தால் நிரந்தர தீர்வு ஏற்படும். ஜி.பி.எஸ். கருவிகளை பயன்படுத்தி தூரத்தை பதிவு செய்யலாம். இதனால் கட்டணம் தொடர்பாக பயணிகளுக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை தடுக்க முடியும். 9 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் கட்டணங்களை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று பயணிகளிடம் பேரம் பேசி தங்களது வாகனத்தில் பயணம் செய்யுமாறு அழைப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் சில நாட்களாக புகார்கள் வருகின்றன. சமீபத்தில் இது தொடர்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கும், ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பிரேந்திரகுமார் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தில் பணியாற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரெயில் நிலையங்களின் உள்ளே பயணிகள் அமரும், நடமாடும் இடங்களுக்கு சென்று ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளை தங்கள் ஆட்டோவில் பயணம் செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதாகவும், இதனால் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் ஏராளமான புகார்கள் வருகிறது. ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் நடமாடும் இடத்துக்கு சென்று, தங்கள் வாகனங்களில் பயணம் செய்யுமாறு அழைக்க அனுமதி இல்லை.
அதாவது டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தான் நிற்க வேண்டும். அதனையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் பயணிகளுக்கான இடத்துக்கு சென்று அவர்களை அழைத்தால் ரெயில்வே சட்டத்தில் உள்ள பிரிவுகளின்படி டாக்சி மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே இதுபோன்ற நடைமுறையை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு இந்த ஆட்டோ நிறுத்தும் இடத்திற்கு அருகில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தின் பெயரை சங்கத்திற்கு தொடர்பில்லாத ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்தியதுடன், மற்றொரு ஆட்டோ நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தினர். இதுபற்றி சி.ஐ.டி.யூ. ஆட்டோ டிரைவர்கள் கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை தொடர்ந்து நேற்று கொரடாச்சேரி போலீசாரின் செயல்பாட்டை கண்டித்து திருவாரூரில் சி.ஐ.டி.யூ. ஆட்டோ தொழிற் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று ரெயில் நிலையத்தில் இருந்து பேரணியாக புறப் பட்டு பஸ் நிலையம் ரவுண்டானாவை அடைந்தனர். அங்கு ஆட்டோ தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் சாலையில் படுத்து கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிவேல், ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் குணசீலி, துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.