என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கயத்தாறு"

    • அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் தெருவில் மின் மோட்டார் இணைப்புடன் கூடிய புதிய பம்ப் அறை கட்டி சின்டெக்ஸ் டேங்க் அமைக்கவும், அசனார் நகரில் பம்ப் அறை கட்டுவதற்கும், அரசங்குளம் வார்டில் சுடுகாடு பகுதியில் புதிய கொட்டகை அமைப்பதற்கும் பூமி பூஜை நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னப்பாண்டியன், வழக்கறிஞர் மாரியப்பன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் நயினார் பாண்டியன், வெயிலாட்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரமேஷ் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • எதிரே வந்த லாரி ரமேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள மேல இலந்தைகுளத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). இவர் கங்கைகொண்டானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    லாரி மோதி பலி

    சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ராஜாபுதுக்குடி நாற்கர சாலையில் வந்து கொண்டி ருந்தபோது எதிரே வந்த லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் விஜகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் ஆகியோர் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்தவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கைது

    தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான தச்சநல்லூர் அருகே உள்ள ராமையன்பட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் ( 26) என்ப வரை கைது செய்தனர்.

    • முருகன் நேற்று தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • முருகன் உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    செய்துங்கநல்லூர் அருகே உள்ள கோவிலூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(வயது 38). கட்டிட தொழிலாளி.

    விபத்து

    இவர் நேற்று விருதுநகர் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    கயத்தாறு அருகே நான்குவழிச்சாலையில் கரிசல்குளம் விலக்கு பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முருகனுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், முனீஸ்வரி(12), பேச்சியம்மாள்(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    • கயத்தாறில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அரசின் ஊட்டச்சத்து உணவு பெட்டகம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பெட்டகத்தை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், டாக்டர் திலகவதி ஆகியோர் வரவேற்று பேசினர்.

    கயத்தாறு கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னபாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, நகர செயலாளர் சுரேஷ்கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, அங்கன்வாடி வட்டார அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

    தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முதலில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

    இந்த ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க கர்ப்பிணி பெண்கள் எந்தவித சத்து குறைபாடுகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் 100 சதவீதம் ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் என்றும், ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு சார்பில் உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை சிறப்பாக வளர்ச்சி அடைய தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி பெண்களுக்கு கருவுற்ற நாள் முதல் குழந்தை வளர்ச்சி அடையும் வரை 'கோல்டன்' நாட்களாகும். ஆகவே மகிழ்ச்சியாக இருந்து ஆரோக்கியமான குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட பிரிவு அலுவலர்கள், கயத்தாறு வட்டார வளர்ச்சி துறை அலுவலர்கள்உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அட்மா மாநில உறுதுணை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்போருக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில், அட்மா மாநில உறுதுணை விரி வாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு வேளாண்மை துறை மூலம் தாது உப்புக்கள் இறை உணவுகள் வழங்குதல், அதனை பயன்படுத்தும் விதம் குறித்து கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ்குமார் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு. செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன், நவராஜ், பொற்செல்வன் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெய லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.
    • டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    கொரோனா மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மற்றும் மருத்துவ அதிகாரிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு கட்டபொம்மன் தெருவில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கயத்தாறு பேரூராட்சி மன்றம் ஏற்பாட்டில், மருத்துவ அலுவலர்கள் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். மேலும் கொசு புழு ஒழிப்புக்காக எந்திரம் மூலம் புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கயத்தாறு பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னப்பாண்டியன் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முன்னாள் பேரூர் செயலாளர் இஸ்மாயில், வழக்கறிஞர் மாரியப்பன், சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி சுகாதார, துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நாராயணசாமி கோவில் கொடைவிழா கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறில் தர்மபதி நாராயணசாமி கோவில் கொடைவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடி யேற்றத்துடன் நடைபெற்றது.அன்றுமுதல் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏடு வாசிப்பு, சொற்பொழிவு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து தினமும் அன்னதானம் வழங்கினர். கோவிலில் 101 விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அய்யா வைகுண்டர் பூம்பல்லக்கில் பவனி வந்தார். வழிநெடுக பக்தர்கள் மாலை அணிவித்து வணங்கி சென்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் கிருஷ்ணசாமி என்ற விவசாயி முதல் இடத்தை பிடித்தார்.
    • 50 சதவிகித மானியத்தில் பண்ணை கருவிகளை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கயத்தாறு:

    கயத்தாறு வட்டார பகுதியில் வேளாண்மை துறை மூலம் நடைபெற்ற மாவட்ட விவசாயிகளுக்கான மக்காச்சோள பயிர்விளைச்சல் போட்டியில் சவலாப்பேரியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற விவசாயி கலந்து கொண்டு முதல் இடத்தை பிடித்தார். இவருக்கு பாராட்டு மற்றும் பரிசு வழங்கப்பட்டது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்காச்சோளப் பயிர்கள் அறுவடையை தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஜென்கின்பிரபாகர் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார்அம்மாள், கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் நாகராஜ் மற்றும் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது கயத்தார் வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் கடப்பாரை, மண்சட்டி, கலை கொத்தி, பண்ணருவாள், மண்வெட்டி ஆகிய பண்ணை கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வேளாண்மை விரிவாக்க மையங்களில் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி பயனடைய வேண்டி வேளாண்மை உதவி இயக்குனர்சுரேஷ் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளை கேட்டுக்கொண்டார். 

    • வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக காசிராஜன் இருந்து வருகிறார்.
    • காசிராஜனுக்கு,வெங்கடாசலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது 49). விவசாயி. அதே பகுதியில் வசித்து வருபவர் காசிராஜன். இவர் வில்லிசேரி பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று காசிராஜன் வீட்டுக்கு அரிவாள்மனையுடன் சென்ற வெங்கடாசலம் அவரை அவதூறாக பேசி தாக்க முயன்றதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காசிராஜன் அளித்த புகாரின்பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொம்பையா கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
    • அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 42). இவர் கேரளாவில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    கொம்பையாவிற்கு பால்மணி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். கொம்பை யாவிற்கு இவருக்கு குடி பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கொம்பையா கேரளாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    தினமும் மது குடித்து விட்டு சுற்றி வந்த கொம்பையா நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச்சென்றுள்ளார். இன்று அதிகாலையில் அவரது மனைவி பால்மணி எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மற்றொரு அறையில் கொம்பையா தூக்கு போட்ட வாறு பிணமாக தொங்கினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பால்மணி கதறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கயத்தார் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் கொம்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொம்பையாவின் தற்கொலை காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துக்கொண்ட கொம்பையாவிற்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • ரஞ்சித் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறு தெற்கு சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாட்டு இறைச்சிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித்(வயது 40).

    இவர் நேற்று மாலை 4 மணி அளவில் அவரது கடையில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் வந்து ரஞ்சித்தை அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் லலிதா ஓடி வந்து கூச்சலிட்டார்.

    உடனே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    3 பேர் கைது

    அதில் ரஞ்சித்தை முன்விரோதம் காரணமாக தூத்துக்குடி ராஜபாண்டிநகர் 7-வது தெருவை சேர்ந்த முருகன்(29), இசக்கி(37), கயத்தாறு அருகே உள்ள தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கணேசன்(32) ஆகியோர் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் கட்சிக்கொடி ஏற்றப்பட்டது.
    • மாவட்ட துணை தலைவர் மைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு பவள விழாவினை முன்னிட்டு கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் மாநில பொது செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் கட்சிக்கொடியினை ஏற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை தலைவர் மைதீன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் மீராசா மரைக்காயர், செயலாளர் மஹ்முதுல் ஹசன், பொருளாளர் மீராசா, துணை தலைவர்கள் நவுரங் சஹாப்தீன், இப்ராஹிம், துணை செயலாளர் முகம்மது உவைஸ், மாவட்ட பிரதிநிதி அரபி, ஒன்றிய தலைவர் கபூர், நகர தலைவர் செய்யது அலி, செயலாளர் தாஜ்தீன், பொருளாளர் கோஸ் முகமது, ஒன்றிய செயலாளர் காசிம், பொருளாளர் பக்ருதீன், ஒன்றிய துணை தலைவர் ஜாகீர் உசேன், நகர துணை தலைவர் மைதீன் பிச்சை, முகமது நாஜிப், முகமது நாசர், கமால்பீர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் ராஜதுரை, கயத்தாறு தி.மு.க. நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், பேரூராட்சி கவுன்சிலர் நயினார் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கயத்தாறு பேரூராட்சி உறுப்பினர் செய்யது அலி பாத்திமா செய்திருந்தார்.

    ×