என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒற்றை தலைமை விவகாரம்"
- சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார்.
- அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து விட்டார்.
ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க கோர்ட்டை நாடலாம் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன. இந்த தீர்ப்பை அடுத்து தான் கூட்டுத்தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அவர் மேலும் கூறும் போது, 'ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டவர்கள். நாங்கள் கோவிலாக கருதும் ஜெயலலிதாவின் அறையையே உடைத்து சூறையாடியவருடன் இனி எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.
அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல கோர்ட்டு விதித்து இருந்த தடையும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. எனவே தலைமை கழகத்துக்கு செல்ல அனுமதி கேட்டு அடுத்த வாரம் மனு செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து வைத்திலிங்கம் அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
அப்போது நமக்குள் பிரச்சினை வேண்டாம். எல்லோரும் இணைந்து செயல்படுவோம். கட்சி நிர்வாகிகளாக இரு தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும். பிரச்சினையை வளர்க்க வேண்டாம். வாங்க பேசலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வைத்திலிங்கத்தின் இந்த சமரச உடன்பாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்கவில்லை. கூட்டுத் தலைமை, பாதி பாதி நிர்வாகிகள் என்ற நிபந்தனையை கைவிட்டு விட்டு வாருங்கள். அப்புறம் யோசிக்கலாம் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர்.
வைத்திலிங்கத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அப்பாவுக்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் களம் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் நாம் பேசி சரி கட்டலாம் என்ற முடிவோடு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். 3 முறை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி பேசாமல் தவிர்த்து விட்டார்.
அப்பா செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்யும். இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் நிர்வாகிகள் எடுத்த முடிவு. இந்த முடிவை எப்படி மாற்ற முடியும். அந்த பிள்ளைகளிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டுள்ளார்.
கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலர் தன் பக்கம் வருவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் எதிர்பார்த்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சமரச முயற்சிகளும் பலன் அளிக்காததால் கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கோபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார்.
சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார். அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பட்டியல் தயாரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 800 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி இருக்கிறார்கள். திங்கள்கிழமை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிறது.
அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். பொதுக்குழுவை கூட்ட கோர்ட்டு அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமி வந்த போது சாலையின் இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
- எடப்பாடி பழனிசாமி அங்கு வந்ததும் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:
மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு தொடர்பாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்தும், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாராயணப்பா தெருவில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (மேற்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (வடக்கு), வடசென்னை வடக்கு (கிழக்கு), தென்சென்னை தெற்கு (கிழக்கு) சென்னை புறநகர் ஆகிய 9 மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக பாரிமுனையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்றனர். எடப்பாடி பழனிசாமி வந்த போது சாலையின் இரு புறமும் திரண்டு நின்றிருந்த தொண்டர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
எடப்பாடி பழனிசாமி வந்தபோது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நாராயணப்பா தெரு தொண்டர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது. அதில் நிற்க இடம் கிடைக்காத தொண்டர்கள் அருகில் உள்ள கடற்கரை சாலையின் இருபுறமும் குவிந்திருந்தனர்.
எடப்பாடி பழனிசாமி அங்கு வந்ததும் அவரது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின் கட்டண உயர்வு, சட்டம்-ஒழுங்கு தொடர்பாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க.வை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை என்ற அளவுக்கு இங்கு கூட்டம் கூடியுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் ஆகிறது. இந்த 14 மாதத்தில் தமிழக மக்கள் ஏராளமான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் ஆளாகி இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்கட்டண உயர்வால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் எங்களுக்கு செல்வாக்கு பெருகி வருவதால் வழக்கு போட்டு எங்கள் செல்வாக்கை மறைக்க பார்க்கிறார்கள். வேண்டும் என்றே நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்கு போடுகிறார்கள். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது ஏராளமான துன்பங்களை சந்தித்தார்.
அதை தவிடுபொடியாக்கி 10½ ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் மறைந்த பிறகு அ.தி.மு.க. உடைந்தது. மீண்டும் அ.தி.மு.க. இணையாது என்று தி.மு.க. நினைத்தது. ஆனால் அம்மா அ.தி.மு.க.வை ஒன்றாக இணைத்து 15½ ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.
தி.மு.க. ஆட்சியின் போது அம்மா மீது பொய் வழக்கு போட்டு தொல்லை கொடுத்தனர். ஆனால் அதை முறியடித்தார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பாடுபட்டனர்.
ஆனால் இன்று அ.தி.மு.க.வை அழிக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அவரது தந்தை கருணாநிதியாலேயே அ.தி.மு.க.வை அழிக்க முடிய வில்லை. உங்களால் எப்படி முடியும். அ.தி.மு.க. என்றால் அசாதாரணமாக நினைக்கிறீர்களா? இங்குள்ள தொண்டர்களின் உழைப்பால் உருவான கட்சி அ.தி.மு.க.
தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்த கட்சி அ.தி.மு.க. யாராலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. தி.மு.க. ஒவ்வொரு சூழலிலும் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் போதெல்லாம் அ.தி.மு.க. வீறு கொண்டு எழுந்து ஆட்சியை பிடித்த வரலாறு உண்டு.
அந்த வரலாறை அ.தி.மு.க. மீண்டும் உருவாக்கும். அதற்கு ஏற்ப மக்களும், தொண்டர்களும் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வலிமையுடன் அ.தி.மு.க. உள்ளது. நாங்கள் ஏமாந்து தி.மு.க.வுக்கு வாக்களித்து விட்டோம் என்று இன்று மக்கள் சொல்கிறார்கள்.
விபத்தில் வந்த ஆட்சி தான் தி.மு.க. இப்போது மக்கள் சிந்தித்து பார்க்கிறார்கள். தி.மு.க. அரசு எப்போது அகற்றப்படும் என்று கேட்கிறார்கள். மக்களுக்கு நன்மை செய்யத்தான் உங்களுக்கு ஆட்சி அதிகாரத்தை அளித்தார்கள். எங்களை அழிப்பதற்காக அல்ல. அதற்கு மாறாக செயல்பட்டால் விரைவில் அதற்கான பலன் கிடைக்கும் என்று எச்சரிக்கிறேன்.
காட்சிகள் மாறினால் ஆட்சி மாறும். அப்படி மாறினால் நீங்கள் தாக்கு பிடிப்பீர்களா? சக்கரம் சுழன்று மேலே வரும். அப்போது உங்கள் நிலைமை மாறும். காற்றை தடைபோட முடியாது. அதுபோல அ.தி.மு.க.வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது.
நீங்கள் ஆட்சிக்கு வந்து 14 மாதத்தில் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். துன்பத்தில் இருந்து தங்களை மீட்டெடுக்குமாறு மக்கள் எங்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதனால் தான் தமிழ்நாடே அலறுகின்ற வகையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. அதன்மூலம் மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கிறோம்.
கருணாநிதி காலத்திலும், மு.க.ஸ்டாலின் காலத்திலும் வீட்டு மக்களை பற்றி நினைக்கும் கட்சி தி.மு.க. ஆனால் நாட்டு மக்களை பற்றி நினைக்கும் கட்சி அ.தி.மு.க. நம் தலைவர்கள் நாட்டு மக்களை பற்றி சிந்தித்தனர். அவர்களுக்கு நன்மை செய்தனர். அம்மா என்றதும் தனது அம்மாவை விட புரட்சி தலைவி அம்மா பெயர் தான் ஞாபகம் வரும்.
அம்மா ஆட்சியின் போது 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணத்தை 12 சதவீதத்தில் இருந்து வரை உயர்த்தி உள்ளனர். இதை ஏழைகளால் தாக்குபிடிக்க முடியுமா? மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்று வாக்குறுதி அளித்தா ஆட்சிக்கு வந்தீர்கள். அப்படி வாக்குறுதி கொடுத் திருந்தால் நிலைமை தலை கீழாக மாறி இருக்கும்.
ஆட்சிக்கு முன்பு ஒரு பேச்சு. ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இதுதான் திராவிட மாடல். தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த பிறகு அதை காற்றில் பறக்க விட்டு விட்டனர். நகரங்களில் சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி உள்ளனர். கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தி உள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீளாத நேரத்தில் அவர்கள் தலையில் இடிவிழுந்தது போல் சொத்துவரி உயர்த்தப்பட்டு இருப்பது நியாயமா? வாக்குறுதிகளை மறந்த கட்சி தி.மு.க.தான்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு டன் கம்பி ரூ.32 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது ஒரு டன் கம்பி ரூ.74 ஆயிரத்துக்கு விற்கிறது. செங்கல், ஜல்லி, எம்.சாண்ட் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வீடு கட்டுமான வேலைகள் பாதியில் நிற்கிறது.
இதனால் பல லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடியா அரசு விடிந்து எழுந்து மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்.
பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும் தி.மு.க. அரசு குறைக்க வில்லை. அதற்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வால் மாணவி இறந்த போது எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு குறைத்தும் தி.மு.க. அரசு செவிசாய்க்க வில்லை. அதற்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வால் மாணவி இறந்த போது எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.இப்போது மாணவிகள் தற்கொலைக்க என்ன பதில் சொல்ல போகிறார். நீட் தேர்வு விலக்கு கேட்டு நீட்டிக்கொண்டே போகிறார்கள்.
பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்கப்படுகிறது. அதை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை முதல்-அமைச்சர். போட்டோ ஷூட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார். அவருக்கு மக்களை பற்றி கவலை இல்லை. தி.மு.க. வின் மூலதனமே பொய்தான்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் கோவிலாக கருதப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கதவுகளை காலால் மிதித்து உடைத்த துரோகிகளுக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். அவர்களுக்கு அந்த அதிகாரம் வழங்கிய தி.மு.க.வை வேரோடு அறுப்போம். அ.தி.மு.க. அலுவலகத்தை உடைத்த துரோகிகளை ஓடஓட விரட்டியடிப்போம்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
- அ.தி.மு.க. சார்பில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை.
மதுரை:
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையை தீர்த்த பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடும் தேனி மாவட்ட மக்கள் விசுவாசமானவர்கள். ஆனால் இங்கு ஓ.பி.எஸ். போன்ற துரோகிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அ.தி.மு.க.வுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ஓ.பி.எஸ்.சின் சிரிப்பு துரோக சிரிப்பு. அவர் சுயநலத்துக்காக போராடியவர். அவருக்கு எந்த கட்சியிலும் வேலை இல்லை. அவர் எங்கு செல்லப்போகிறார்? என தெரியவில்லை.
ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் அவர் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றால் நான் பொது வாழ்வில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சியை முடக்கும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளை கடுமையாக கண்டிக்கிறேன்.
இங்கு கூடியிருக்கிற கூட்டத்தை கட்டுப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாரா? அல்லது ஓ.பி.எஸ். தூண்டுதலா? என தெரியவில்லை. மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ்.சுக்கு இல்லாததால் அவர் தேனியை காலி செய்து மாலத்தீவுக்கு சென்று விடுவார்.
அ.தி.மு.க.வில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 99 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். ஆனால் ஓ.பி.எஸ். மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டார். அவருடன் கடைசியில் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.
அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொண்டர்களின் கண்ணில் ரத்தம் வரவழைக்கிறது. உங்கள் (ஓ.பி.எஸ்.) வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்? ரவுடிகளுடன் அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை திருடிச் சென்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தன. ஆனால் ஓ.பி.எஸ். 3 முறை முதலமைச்சராகவும், ஒருமுறை துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால் தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல்.
சென்னை:
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில் கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்த நிலையில், ஐகோர்ட்டும் அனுமதி அளித்ததால் திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் அன்று நடந்து முடிந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக அவரது 2 மகன்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரையும் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பதிலுக்கு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்ளை கட்சியில் இருந்து நீக்குவதாக கூறி வருகிறார். இதனால் இரு தரப்புக்கும் இடையே கட்சிக்குள் மோதல் நீடித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. நேற்று மாலை வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் நாளை மீண்டும் விசாரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், பொதுக்குழு கூட்டத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட வேண்டும் என்கிற விதி கடைபிடிக்கப்படவில்லை.
எனவே பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன், 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.
வருகிற திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இது தொடர்பாக வழக்கு விசாரணையின்போது கட்சியின் உள் விவகாரங்களில் கோர்ட்டு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் தலையிட முடியாது என்கிற கருத்தும் உள்ளது. இதன்படி பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்தின் புதிய மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.
இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு அ.தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை நீக்குகினே் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 44 பேரை நீக்குகினே் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்க்கண்ட நபர்களை நீக்குகிறேன்.
பொள்ளாச்சி ஜெயராமன், சி விஜயபாஸ்கர், கீர்த்திகா முனியசாமி, ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி. வெங்கடேஷ் பாபு, பாலகங்கா, வி. சோமசுந்தரம், திருக்கழுகுன்றம் எஸ். ஆறுமுகம் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், பா. பென்ஜமின், வி.அலெக்சாண்டர், மாதவரம் வி.மூர்த்தி, பி.வி.ரமணா , எஸ்.ஆர்.கே.அப்பு, வேலழகன் கே.சி.வீரமணி, ரவி, தூசி கே.மோகன், அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி,
கே.ஏ.பாண்டியன், அருண்மொழிதேவன், இரா. குமரகுரு, கே. அசோக்குமார், கே.பி.அன்பழகன், ஜி. வெங்கடாஜலம், கே.பி. ராமலிங்கம்,கே.சி. கருப்பணன், சி.மகேந்திரன், அம்மன் கே.அர்ச்சுணன், கோவை மாநகர் மாவட்டக் கழகச் பி.ஆர்.ஜி.அருண்குமார், கப்பச்சி டி.வினோத், எம். பரஞ்ஜோதி, ப.குமார், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். பவுன்ராஜ், ஆர்.காமராஜ், பி.கே.வைரமுத்து, பி.ஆர். செந்தில்நாதன், எம்.ஏ.முனியசாமி, தச்சை என்.கணேசராஜா எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன்.
எஸ்.பி. சண்முகநாதன் டி.ஜாண்தங்கம், புதுச்ஏசேரி மாநில செயலாளர் .அன்பழகன் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை கழகம் அமைந்து உள்ளது.
- எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பெரும் கலவரம் உருவானது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழக அலுவலகம் முன் இன்று வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக தலைமை கழகம் அமைந்து உள்ளது.
கடந்த 11-ந் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை கைப்பற்ற திரண்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் பெரும் கலவரம் உருவானது.
இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் கல் வீச்சு சம்பவத்தில் அடித்து நொறுக்கப்பட்டன. அ.தி.மு.க. அலுவலகம் சாலை போர்க் களம் போல காட்சி அளித்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் ராயப்பேட்டை சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பெரும் பதட்டம் இன்று தணிந்தது.
அதிமுக தலைமை கழக அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையில் தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு இன்று பொதுமக்கள், வாகன போக்குவரத்து தொடங்கியது. அந்த சாலை வழியாக சகஜமாக பொதுமக்கள் சென்று வந்தனர். அ.தி.மு.க. அலுவலகம் முன் உதவி கமிஷனர் தலைமையில் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை இழந்துள்ளார்.
- தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த இரட்டை தலைமை பிரச்சினைக்கு நேற்று பொதுக்குழு கூட்டத்தில் முடிவு காணப்பட்டது.
சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு அதிரடி திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அது போல கட்சி சட்டவிதி 35-ன்படி ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை இழந்துள்ளார். அடுத்த கட்டமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறிப்பதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.
எடப்பாடி பழனிசாமி அணியினரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் போன்றவர்களும் அ.தி.மு.க.வில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி இன்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் மற்றும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை எதிர்த்தும் கோர்ட்டு மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்தை அணுக ஓ.பன்னீசெல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர். கோர்ட்டில் எத்தகைய ஆவணங்களை தாக்கல் செய்வது? என்பது பற்றி இன்று ஓ.பன்னீர் செல்வம் அணியின் வக்கீல்கள் தீவிர ஆலோசனை நடத்தினார்கள்.
கோர்ட்டு மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தடைபெற முடியுமா? என்றும் ஆலோசித்தனர். ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் அடுத்தடுத்து 2 தடவை அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தார்.
அந்த 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதோடு கட்சி பதவி தொடர்பாக கோர்ட்டுக்கு வரக்கூடாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது. எனவே கோர்ட்டை நம்பி பயன் இல்லை என்று ஓபன்னீர் செல்வம் தரப்பினர் கருதுகிறார்கள்.
தற்போது ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு உள்ள ஒரே அடைக்கலம் தலைமை தேர்தல் ஆணையம் தான். தேர்தல் ஆணையம் மூலம் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு முட்டுக்கட்டை போட முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'சென்னையில் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர்.
திருத்தங்களின் அடிப்படையில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். இந்த முடிவை தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. அவர் இடைக்கால பொதுச் செயலாளர் என்பதற்கு அங்கீகாரமும் கொடுக்கக் கூடாது' என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நேற்றே பொதுக்குழு கூட்டம் முடிந்ததும், அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துவிட்டனர். அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறித்து விரிவாக அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களில் 97 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்திருக்கும் தகவலையும் தெரிவித்து உள்ளனர். மேலும் கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது என்றும் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரும் போட்டி போட்டு மனு செய்திருப்பதால், அடுத்த கட்டமாக தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை உடனடியாக முடிவை சொல்லுங்கள் என்று எந்தக் கட்சி தலைவரும் வலியுறுத்த முடியாது.
மேலும் கோர்ட்டுகளில் தேதி குறிப்பிட்டு விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குவது போல தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாது. கட்சி பிரச்சினைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டால் அது தொடர்பான சட்ட நிபுணர்களுடன் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்துவார்கள்.
சட்ட நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் இதற்கு முந்தைய உதாரணங்கள் ஏதேனும் இருப்பின் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முடிவை வெளியிடுவார்கள். ஆனால் இதற்கு எந்த காலக்கெடுவையும் தேர்தல் ஆணையம் தெரிவித்ததில்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் முடிவு எப்போது வெளியாகும் என்று யாருக்கும் தெரியாது.
தேர்தல் ஆணையம் இதே போன்ற சிக்கல்களில் இதற்கு முன்பு என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை முக்கியமாக ஆய்வு செய்வார்கள். எனவே கோர்ட்டை விட தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுதான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையிலான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான சர்ச்சை விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முன்பு 2 முன்னுதாரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையே அதிகார போட்டி எழுந்தபோது இருவரும் இதே போன்று தேர்தல் ஆணையத்தை அணுகினார்கள்.
திருநாவுக்கரசர் தனக்கு 7 எம்.பி.க்கள், 4 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதாக கூறினார். ஆனால் ஜெயலலிதா தனக்கு அ.தி.மு.க.வில் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களும், தொண்டர்களின் ஆதரவும் இருப்பதாக தெரிவித்தார்.
அது மட்டுமின்றி ஜெயலலிதா தேர்தல் மூலம் தலைமை பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆதாரங்களையும் வழங்கினார். இதையடுத்து 1994-ம் ஆண்டு இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு இரட்டை இலை சின்னத்தையும், கட்சி கொடியையும் வழங்கி உத்தரவிட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நீதி வழங்கியது.
இதேபோன்றுதான் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் அதிகார போட்டி எழுந்தபோது கட்சியில் 90 சதவீத எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதாக ஆதாரங்களை அகிலேஷ் யாதவ் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்டு அகிலேஷ் யாதவுக்குத்தான் சமாஜ்வாடி கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
இந்த முன்னுதாரண தீர்ப்புகளின் மூலம் எப்படியும் அ.தி.மு.க.வை தங்களது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு வந்துவிடலாம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நம்பிக்கையுடன் உள்ளனர். தேர்தல் ஆணையத்தில் இதுவரை அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை உள்ளதாக ஆவணங்கள் உள்ளன.
இதை ஏற்க வேண்டாம் என்றும், அந்த பதவிகள் காலாவதி ஆகிவிட்ட தாகவும், ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வமும் கடிதம் கொடுத்துள்ளார்.
இவர்களில் யாருக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க.வின் எதிர்காலமும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் எதிர்காலமும் அமையும்.
- அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.
- வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை பிரச்சினை எழுந்ததால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் தனித்தனி அணியாக பிரிந்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களில் 97 சதவீதம் பேர் ஆதரவு இருப்பதால் அவரது கை ஓங்கியது. ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். ஜூன் 23-ந்தேதி பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க கூறினார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மீண்டும் அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜூலை 11-ந்தேதி (இன்று) நடக்கும் பொதுக்குழுவை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார். இதையடுத்து சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் திட்டமிட்டபடி இன்று காலை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடந்தது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு எடப்பாடி பழனிசாமி காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தார்.
எடப்பாடி பழனிசாமி கடந்த முறை பொதுக்குழுவுக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். ஆனால் இந்த முறை காருக்கு பதில் பிரசார வேனை பயன்படுத்தினார். இன்று காலை சுமார் 7 மணி அளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். பிரசார வேனில் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அண்ணன் இ.பி.எஸ். வாழ்க, கழகத்தின் அம்மா வாழ்க என்று கோஷங்கள் எழுப்பினார்கள். வேன் அங்கிருந்து புறப்பட்டு கோயம்பேடு வழியாக வந்தது. சாலையின் இருபக்கமும் தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்றனர்.
மெயின் ரோட்டில் இருந்து மண்டபத்துக்கு செல்லும் பாதையில் அவரது வாகனம் தொண்டர்கள் கூட்டத்தில் மிதந்தபடி வந்தது. பொதுக்குழு கூட்ட அரங்குக்கு முன்பு மங்கள வாத்தியங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் அவருக்கு பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றார்கள். அதைத்தொடர்ந்து அவர் செயற்குழு கூட்டம் நடைபெறும் மேடைக்கு சென்றார். அங்கு செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். மேடையில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர்.
காலை 9.05 மணிக்கு முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனை தலைமை தாங்கும்படி எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.
அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய 16 தீர்மானங்கள் மற்றும் கட்சியின் தற்கால நிலை பற்றி விவாதிக்க பொன்னையன் செயற்குழுவின் ஒப்புதலுக்காக முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் விவாதிப்பதற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அத்துடன் காலை 9.30 மணிக்கு செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது.
பின்னர் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் அங்கிருந்த சிறப்பு வாசல் வழியாக பொதுக்குழு நடைபெற்ற அரங்கத்துக்கு சென்றனர். அதன்பிறகு காலை 9.40 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் மேடையில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஏற்கனவே கோர்ட்டு தீர்ப்பு பற்றிய தகவல் கட்சியினரிடையே பரவியது.
இதையடுத்து 'வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்' என்ற எம்.ஜி.ஆர். பாடல் ஒளிபரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
பொதுக்குழு கூட்டம் தொடங்குவதாக வைகை செல்வன் அறிவித்தார். அதன் பிறகு பொதுக்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குவதற்கு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். இதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார்.
பொதுக்குழுவில் வைக்கப்பட்டுள்ள 16 தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு நத்தம் விஸ்வநாதன் முன் மொழிந்தார். இதை டி.ஜெயக்குமார் வழி மொழிந்தார்.
அதன் பிறகு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் பா.வளர்மதி வரவேற்று பேசினார். அதன்பிறகு தீர்மானங்களை ஆர்.பி.உதயகுமார் வாசித்தார். அதில் 3-வது தீர்மானமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங் கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்வதாக ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
அதன்பிறகு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் பதவிக்கு 4 மாதத்தில் தேர்தல் நடத்துவது என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
- வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்து விட்டனர்.
- தீர்ப்புக்கு பின்னரே அடுத்தக் கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க உள்ளதாக தகவல்
அ.தி.மு.க. பொதுக்குழு மீண்டும் இன்று கூடும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடக்கிறது.
கடந்த முறை மண்டப அரங்கில் கூட்டம் நடந்தது. ஆனால், இந்த முறை மண்டபத்துக்கு முன்புறம் உள்ள காலியிடத்தில் பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்படுகிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. மேடையிலேயே 100 பேர் அமரும் வகையில் இருக்கை போடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
நேற்று வரை 2,455 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்றே சென்னை வந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் கோயம்பேடு, மதுரவாயல் பகுதியில் உள்ள ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது. அதன்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட இருக்கிறார். அதேபோல், பொதுச்செயலாளரை தேர்தல் மூலம் தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் இந்த கூட்டத்திலேயே வெளியாக இருக்கிறது.
ஒற்றை தலைமையை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்ற முறையில் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனிடையே, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. இந்த தீர்ப்பை பொறுத்தே அ.தி.மு.க. பொதுக்குழு நடைபெறுமா? இல்லையா? என்பது தெரிய வரும். அதன்பின்னரே அடுத்தக்கட்ட முடிவை ஓ.பன்னீர்செல்வம் எடுப்பார் எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
- அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
- இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நாளை காலை 9.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக உள்ளனர்.
பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ள வானகரம் மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டன.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இன்று இரவுக்குள் சென்னைக்கு வந்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களில் 70-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைத்து அழைத்து வருகிறார்கள். கார் மற்றும் வேன்களில் ஒன்றாக சென்னை நோக்கி வருகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு தீவிரமாக உள்ளனர்.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்கள் பகலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டல்களில் தங்குவதற்கும், உணவு சாப்பிடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி, நீலகிரி, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிற்பகலில் புறப்பட்டு இரவுக்குள் சென்னை வந்து சேருகிறார்கள். ஒரு சிலர் விமானத்திலும் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் இரவு புறப்பட்டு வருகின்றனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 2,650 பேர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என்பதால் அவர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ. விடுதியிலும், சென்னையில் உள்ள முக்கிய ஓட்டல்களிலும் அறைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.
இதேபோல ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் மதுரை, தேனி, தஞ்சாவூர் மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் குவியத் தொடங்கி உள்ளனர். நாளை அதிகாலை 7 மணிக்குள் சென்னையில் இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கேற்ப அதிகாலையிலேயே அவர்கள் வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் கடைசி நிமிடத்தில் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய இடையூறு எதுவும் ஏற்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். எனவே நாளை காலை ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை சற்று கலக்கத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அ.தி.மு.க. பொதுக்குழுவை நடத்த விடாதபடி ஏதோ ஒரு திட்டத்துடன் ஓ.பன்னீர் செல்வம் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும், ஆத்திரமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், 'ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு குறைந்து வருகிறது. மிச்சம் இருக்கும் ஆதரவாளர்களும் ஓடி விடக்கூடாது என்பதற்காகத்தான் அவர்களை அதிகாலையிலேயே தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் இன்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். நாளை ஐகோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியுமா? அதன் மூலம் அ.தி.மு.க. பொதுக்குழுவை தடுத்து நிறுத்த முடியுமா என்றெல்லாம் ஆலோசனை நடத்தினார்.
இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடக்குமா? என்பது தொடர்ந்து எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் நீடிக்கிறது.
- ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனியில் நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
- எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்குவோம் என்று தீர்மானித்தனர்.
தேனி:
அ.தி.மு.கவில் ஒற்றைதலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் பெரும்பாலான அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தமாவட்டமான தேனியில் நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், ஓ.பி.எஸ் ஆதரவாளமான சையதுகான் தலைமையில் ஆலோசனை நடத்திய நிர்வாகிகள் தங்கள் ஆதரவை ஓ.பன்னீர்செல்வத்திற்கு தெரிவித்தனர். முன்னாள் எம்.எல்.ஏவும், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளருமான ஜக்கையன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்குவோம் என்று தீர்மானித்தனர்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி பார்த்திபன், கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு பாலச்சந்தர், தனலட்சுமி சொக்கலிங்கம், பேரவை இணைச்செயலாளர் கரிகாலன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் நாராயணன், தேனி ஒன்றிய துணைச்செயலாளர் தயாளன் ஆகிய பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்திலேயே பொதுக்குழு உறுப்பினர்கள் அணி மாறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார்.
- ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன். மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார், கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், மருது பாண்டியன், ஜானகிராமன், கருப்பையா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த இந்த கூட்டத்தின்போது ராமநாதபுரம் நகர முன்னாள் தலைவர் கவிதா சசிகுமார் பேசிக் கொண்டிருந்தபோது, சிலர் கும்பலாக கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் "ஓ.பன்னீர்செல்வம் வாழ்க" என்று கோஷமிட்டபடி நாற்காலிகளை எடுத்து மேடையை நோக்கி வீசினர்.
இதில் இடையர்வலசையைச் சேர்ந்த கிளை செயலாளர் மணிபாரதி (வயது 65), புத்தேந்தல் கிளை செயலாளர் சந்திரன் (50) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் கூட்டம் நடைபெற்ற தனியார் மண்டபத்தின் முன்பு கிளைச் செயலாளர் சாதிக் பாட்சாவின் கார் கண்ணாடியை சிலர் அடித்து நொறுக்கினர்.
இதுபற்றி ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பால்பாண்டியன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்