என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி சமரசத்தை ஏற்காததால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பொதுக்குழுவை கூட்ட முடிவு
- சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார்.
- அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வில் கூட்டுத் தலைமையாக செயல்படலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எடுத்த முடிவு. அதன் அடிப்படையில் தான் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து விட்டார்.
ஆனால் கடந்த மாதம் 11-ந்தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.
இதில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணையரை நியமிக்க கோர்ட்டை நாடலாம் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டது.
கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன. இந்த தீர்ப்பை அடுத்து தான் கூட்டுத்தலைமையோடு மீண்டும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அவர் மேலும் கூறும் போது, 'ஒற்றை தலைமை என்பது கட்சி தொண்டர்கள் விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு. தி.மு.க.வுடன் தொடர்பு கொண்டவர்கள். நாங்கள் கோவிலாக கருதும் ஜெயலலிதாவின் அறையையே உடைத்து சூறையாடியவருடன் இனி எந்த காலத்திலும் இணைந்து பணியாற்ற வாய்ப்பே இல்லை' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எதிர்பார்த்து எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.
அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு செல்ல கோர்ட்டு விதித்து இருந்த தடையும் இன்றுடன் முடிவடைந்துவிட்டது. எனவே தலைமை கழகத்துக்கு செல்ல அனுமதி கேட்டு அடுத்த வாரம் மனு செய்யவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து பணியாற்றுவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் இருந்து வைத்திலிங்கம் அ.தி.மு.க. வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்.
அப்போது நமக்குள் பிரச்சினை வேண்டாம். எல்லோரும் இணைந்து செயல்படுவோம். கட்சி நிர்வாகிகளாக இரு தரப்பிலும் பாதி பேரை நியமித்தால் போதும். பிரச்சினையை வளர்க்க வேண்டாம். வாங்க பேசலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வைத்திலிங்கத்தின் இந்த சமரச உடன்பாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஏற்கவில்லை. கூட்டுத் தலைமை, பாதி பாதி நிர்வாகிகள் என்ற நிபந்தனையை கைவிட்டு விட்டு வாருங்கள். அப்புறம் யோசிக்கலாம் என்று கண்டிப்புடன் கூறி விட்டனர்.
வைத்திலிங்கத்தின் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் அப்பாவுக்காக ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் களம் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் நாம் பேசி சரி கட்டலாம் என்ற முடிவோடு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டுள்ளார். 3 முறை தொடர்பு கொண்டும் எடப்பாடி பழனிசாமி பேசாமல் தவிர்த்து விட்டார்.
அப்பா செய்யும் தவறுக்கு பிள்ளைகள் என்ன செய்யும். இப்போது நாம் எடுத்திருக்கும் முடிவுகள் நிர்வாகிகள் எடுத்த முடிவு. இந்த முடிவை எப்படி மாற்ற முடியும். அந்த பிள்ளைகளிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என்று எடப்பாடி பழனிசாமி ஆதங்கப்பட்டுள்ளார்.
கோர்ட்டு தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பலர் தன் பக்கம் வருவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் எதிர்பார்த்துள்ளார். ஆனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. சமரச முயற்சிகளும் பலன் அளிக்காததால் கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் கோபத்தில் சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்றுவிட்டார்.
சொந்த ஊரில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் எதையும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. அடுத்தக்கட்ட தாக்குதலுக்கான அஸ்திரத்தை தயார்படுத்தி வருகிறார். அதன்படி முதற்கட்டமாக மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் பட்டியல் தயாரித்து வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மட்டும் 800 பேரின் பெயர் பட்டியலை அனுப்பி இருக்கிறார்கள். திங்கள்கிழமை புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகிறது.
அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டவும் முடிவு செய்துள்ளார். அந்த பொதுக்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு அனுப்ப திட்டமிட்டுள்ளார்கள். பொதுக்குழுவை கூட்ட கோர்ட்டு அறிவுரைப்படி ஆணையரை கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்