என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பந்தலூர்"
- ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அடுத்த கோரஞ்சல் பகுதி உள்ளது. கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது.
அவ்வப்போது ஊருக்குள் சுற்றித்திரியும் யானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவத்தன்று மாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை கோரஞ்சல் பகுதிக்குள் புகுந்தது.
யானை வந்ததை அறிந்ததும் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வன ஊழியர்கள், வன காப்பாளர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் அங்கு முகாமிட்டிருந்த யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நாய் ஒன்றும் யானையை பார்த்து குரைத்து கொண்டே இருந்தது. பதிலுக்கு யானையும் நாயை நோக்கி துரத்தி வந்தது.
இதையடுத்து வனத்துறையினர் யானையை ஊருக்குள் வரவிடமால் வனத்தை நோக்கி விரட்டினர். அப்போது ஆக்ரோஷமான காட்டு யானை, வன ஊழியர்களை நோக்கி வேகமாக வந்தது.
யானை ஆக்ரோஷத்துடன் வருவதை பார்த்ததும் வன ஊழியர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் யானை விடாமல் அவர்களை விரட்டியபடி ஓடி வந்தது.
மற்றவர்கள் வேகமாக ஓடிய நிலையில், ஒரு வன ஊழியரின் அருகில் காட்டு யானை வந்தது. அவர் சுதாரித்து அங்கிருந்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்தார்.
ஆக்ரோஷம் குறைந்ததும் யானை அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டது. யானை எங்கு சென்றது. எங்கு நிற்கிறது என்பதை வனத்துறையினர் கண்காணித்தனர். தொடர்ந்து இரவு முழுவதும் அந்த பகுதிக்குள் யானை நுழைந்து விடாமல் விடிய, விடிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
வன ஊழியர்களை ஆக்ரோஷத்துடன் காட்டு யானை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
- பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக இரவு, பகல் என இரு வேளைகளிலும் கனமழை கொட்டி வருகிறது.
நேற்றும், பந்தலூர், நெலாக்கோட்டை, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, பாட்டவயல், நெலாக்கோட்டை, கரியசோலை, சேரம்பாடி, எருமாடு மற்றும் கூடலூர், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
பந்தலூர் பஜாரில் சாலையிலும், கால்வாயிலும் வெள்ளம் ஆறுபோல் ஓடுகிறது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே தண்ணீர் நிரம்பி குளம் போல காட்சியளித்து கொண்டிருக்கிறது.
மழை வெள்ளம் செல்வதற்கு வழி இல்லாததால், பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் செல்லும் சாலை, தாலுகாஅலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா செல்லும் சாலைகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பந்தலூர் பகுதியே வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் பொன்னானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் 6 வீடுகள் சேதம் அடைந்தன. அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டு, அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இதேபோல் அம்பலமூலா சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வட்டகொல்லி, மணல்வயல் ஆதிவாசிகாலனியில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் அம்பலமூலா அரசு தொடக்கபள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளது.
நெலாக்கோட்டை அருகே கூவச்சோலையில் பெய்த மழைக்கு அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் இடிந்து விழுந்தன. அங்கிருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 31 பேர் நெலாக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
சேரம்பாடி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1, 2 பகுதிகளில் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்பட்டதுடன் வீடுகளுக்குள் வெள்ளமும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை நீடித்தது. இருவயல், குற்றிமுச்சு, கம்மாத்தி, புத்தூர் வயல் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.
இருவயல், புத்தூர் வயல் பகுதிகளில் 14 குடும்பத்தை சேர்ந்த 49 பேர் மீட்கப்பட்டு தொரப்பள்ளி அரசு பள்ளியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
பந்தலூரில் உள்ள அத்திமாநகர், தொண்டியாளம் பகுதிகளில் சாலையில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை யினர் உடனடியாக அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர்.
தொடர் மழையால் முதுமலை பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆற்றுப்பாலத்திற்கு மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வனத்துறையினர், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் பாலத்திற்கு அடியில் தேங்கிய மரக்கட்டைகளை அகற்றினர். அதன்பின்னர் வாகனங்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன.
கூடலூர் பகுதியில் பெய்து வரும் மழைக்கு பாடந்தொரையில் உள்ள பால் சொசைட்டியை சுற்றி மழைவெள்ளம் சூழ்ந்தது. அங்கு வந்தவர்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று பால் கேனை வைத்து சென்றனர்.
கூடலூர், பந்தலூர் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
- பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளக் காடாக மாறிய கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிக முகாமில் அரசு தங்க வைத்துள்ளது.
பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் பல இடங்களில் நீர் தேக்கம் அப்படியே இருப்பதனால். நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்த நிலையில் இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
- காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பந்தலூர்,
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நெல்லியாளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயலாளர் அனஸ் ஏடாலாத் பேரணியை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அனுமதியின்றி கண்டன பேரணி நடத்தியதாக சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
- கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப்படுத்தியிருக்கிறது.
- மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்துக்கு உட்பட்ட பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வரும் யானைகள், குடியிருப்புகளை சேதப்படுத்தி தானியங்களை உட்கொள்வதை உட்பட வழக்கமாக கொண்டிருக்கிறது. பந்தலூர் மக்னா (எம்.பி.-2) என அந்த யானைக்கு பெயரிட்டு, வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
கடந்த 10 மாதங்களில் 45 குடியிருப்புகளை இடித்து சேதப் படுத்தியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவாலா வாழைவயல் பகுதிக்குள் நுழைந்து பாப்பாத்தி என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை இடித்து அவரையும் தாக்கி கொன்றது.இதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், மக்னா யானையை பிடித்து முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறும்போது, தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப்பாது காவலர், 4 வனச்சரகர்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் அப்பகுதியில் முகாமிட்டு, யானையை கண்காணித்து வருகின்றனர். முதுமலையில் இருந்து கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. யானைகளை பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இருவர், கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். யானையை பிடித்து உடல் பரிசோதனை செய்து, மீண்டும் முது மலையில் விடுவிக்கப்படும்" என்றார்.
வனத்துறையினர் கூறும்போது, நான்கு கண்காணிப்பு குழுவினர்கள் காட்டிமட்டம், நீர்மட்டம், இல்டாப், புளியம் பாறை உள்ளிட்ட பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்டி மட்டம், பராமரிப்பு இல்லாத அக்கார்டு தேயிலை தோட்டப் பகுதியில் மக்னா யானையின் நடமாட்டம் தென்பட்டது. அதனை கண்காணிக்க ஆங்காங்கே தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. தற்போது வரை தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் தான் யானை இருக்கிறது என்றனர்.
- சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா்.
- அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியில் உள்ள தனியாா் காபி தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தையை மீட்க முயன்றனா். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனா்.
பின்னா், காயமடைந்த சிறுத்தையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளா் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினா் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
- ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது.
பந்தலூர் தாலுகா பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொன்னானி, சோலாடி, வெள்ளேரி, விலக்கலாடி, ஆறுகளிலும் நீரோடைகளிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவாலா, கூடலூர், அய்யன்கொல்லி, கொளப்பள்ளி சேரம்பாடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
சாலைஓரங்களில் மண்சரிவும் ஏற்பட்டு உள்ளது. கடும் குளிர்மற்றும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
- முகாமில் ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூடலூர்:
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கையுன்னி அருகே போத்துகொல்லி, மங்கரை உள்பட பல ஆதிவாசி காலனிகள் உள்ளன.
இங்கு கூடலூர் கோட்ட வன அலுவலர் ஓம்கார் உத்தரவுபடி சேரம்பாடி வனத்துறையினரும், சுகாதாரத்துறையினரும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தினர். இதற்கு உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி தலைமை தாங்கினார். வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கலந்துகொண்ட ஆதிவாசி மக்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் வேட்டை தடுப்பு காவலர்களும் கலந்துகொண்டனர்.
- பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது
ஊட்டி:
பந்தலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, நெலாக்கோட்டை, தேவாலா, சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.
இதனால் பொன்னானி, சேரம்பாடி, சோலாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலை, பந்தலூர்-கூடலூர் சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பொன்னானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, அருகே உள்ள ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வேளாண்மை பொறியியல் துறை சார்பில், பொக்லைன் எந்திரம் மூலம் பொன்னானி ஆற்றை தூர்வாரும் பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் நேற்று முன்தினம் பலத்த மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பொக்லைன் எந்திரம் வெள்ளத்திலும், சேற்றிலும் சிக்கியது. இதையடுத்து மற்றொரு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, கரையோர மண் அகற்றப்பட்டது. பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு எந்திரம் மீட்கப்பட்டது.
இடி மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் கிராமங்கள் இருளில் மூழ்கியது. இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளிலும், பி.எஸ்.என்.எல். சேவை கிடைக்காமலும் அவதியடைந்தனர். பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
- ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.
ஊட்டி;
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ்நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து 4 பேர் காரில் வந்தனர். போலீசார் காரில் நடத்திய சோதனையில் அவர்கள் ஏர் ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் தேவாலா டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் வைத்திரி பகுதியில் சுற்றுலா விடுதி நடத்தி வரும் ஒருவர் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் ஏர்ரைபிளை ரூ.32 ஆயிரம் கொடுத்து வாங்கி உள்ளார்.
அதனை கடந்த வாரம் கோழிக்கோடு பகுதிக்கு எடுத்துச் சென்றபோது நண்பர்கள் 4 பேரிடம் கொடுத்துள்ளார். மீண்டும் அவரிடம் வழங்க கோழிக்கோட்டில் இருந்து தமிழக எல்லையான சுல்தான்பத்தேரி, எருமாடு வழியாக இவர்கள் வைத்திரி செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எச்சரித்த போலீசார் பின்னர் கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினர்.
- ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன.
- சூறாவளி காற்று வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன.
ஊட்டி;
பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு அய்யன்கொல்லி மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள அத்திசால், பாதிரிமூலா, காரக்கொல்லி, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, கருத்தாடு, செம்பக்கொல்லி, கொளப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டி உள்ள சாலையோரத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. அதில் பட்டுப்போன மரங்களும் அடங்கும். சூறாவளி காற்று வீசும்போது, அந்த மரங்கள் சாய்ந்து விழும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கிறது. அவற்றின் கிளைகள் மின்கம்பியில் உரசுவதால் மின் விபத்து ஏற்படுகிறது. மேலும் சூறாவளி காற்று வீசினால், சாய்ந்து விழும் நிலையில்தான் அந்த மரங்கள் காணப்படுகின்றன. இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அங்கு சென்று வரவே அச்சமாக உள்ளது. எனவே முன்எச்சரிக்கையாக அந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்