search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமேசுவரம்"

    • மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
    • ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த வாரம் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ராமேசுவரத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் 60 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

    இந்த நிலையில் வங்க கடல், மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரினை பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்தது.

    இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல கடந்த 17-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட மீனவ நலத்துறையும் அனுமதி டோக்கன் வழங்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து கடல் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்றனர். இதனால் ராமேசுவரம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளங்கள் பரபரப்பாக காணப்பட்டது.

    • 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
    • மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்டத்தொடங்கிவிட்டது.

    ராமேசுவரம்:

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ் கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், தடைக் காலம் நேற்று முன்தினம் இரவுடன் நிறைவடைந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 570-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    இன்று காலையில் கரை திரும்பிய மீனவர்களுக்கு சிறிய படகுகளுக்கு 250 கிலோ முதல் 300 கிலோ வரையிலும், பெரிய படகு களுக்கு 300 கிலோ முதல் 450 கிலோ வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன், நண்டு, கணவாய் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்கள் கிடைத்திருந்தன.

    61 நாட்கள் தடை காலம் நிறைவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு ரூ.8 கோடி வரையிலான இறால் மீன், நண்டு, கனவாய் போன்றவை கிடைத்துள்ள தால் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி

    மேலும் முதல் நாளான நேற்று ஒரே நாளில் 293 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் 4 படகுகள் பழுது காரணமாக பாதி வழியில் கரைக்கு திரும்பிவிட்டன. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மற்ற விசைப்படகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

    கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம், நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொழுவை, நெடுவா, முட்டி, கணவாய் சூறை, கிளாத்தி, சுறா, நவரை, அயிலை போன்ற உயர்ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக்கொண்டு வந்த உயர்ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

    இதனால் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களை கட்ட தொடங்கிவிட்டது. கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ.3 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது.
    • பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் தென்னிந்தியாவின் காசி என்று போற்றப்படும் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இது இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படுவதால் நாள்தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தை விட வட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலின் பெருமைகளை அறிந்து இங்குள்ள அக்னி தீர்த்தக்கடல் மற்றும் 21 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி, அம்பாளை தரிசித்து செல்கிறார்கள்.

    மேலும் அக்னி தீர்த்த கடற்கரையோரம் அமர்ந்து புரோகிதர்கள் மூலம் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு வழிபாடு நடத்துபவர்கள் விதிகளை மீறி தங்களுடைய ஆடைகளையும் கடலிலும், ஆங்காங்கேயும் விட்டு செல்வதால் கடற்கரையை சுற்றியுள்ள பகுதி சுகாதார சீர்கேடுகளுடன் முகம் சுழிக்க வைப்பதாக அமைகிறது.

    இதற்கிடையே நகராட்சி நிர்வாகம் சார்பில் அக்னி தீர்த்தக்கடலில் கழிவுநீரும் கலக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக பாவங்களை தொலைத்து புண்ணியங்களை தேட வரும் பக்தர்கள் படும் அவஸ்தை சொல்லிமாளாது. அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி எழுந்தால் மற்றவர்கள் விட்டுச்சென்ற ஆடைகளுடன் எழும் நிலை உருவாகுகிறது. பல இடங்களில் பக்தர்கள் திறந்த வெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்த தயங்குவதில்லை.

    தூய்மையற்று அதன் புனித தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறும் பக்தர்கள், மன வருத்தமும் அடைவதாக ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இன்னும் பலர் கடலில் புனித நீராடுவதை தவிர்த்து தலையில் தண்ணீரை தலையில் தெளித்துக் கொண்ட கையோடு அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர்.

    கோடிக்கனக்கான இந்துக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக்கடலின் புனித தன்மையை பாதுகாக்கவும், பக்தர்கள் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும் மாவட்ட நிர்வாகம் தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.
    • படகுகளும் தரைதட்டி நின்றது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசி என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராம நாத சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அமாவாசை நாளில் இங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.

    எனவே மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடந்த ஒரு மாதமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ராமேசுவரத்தில் வழக்கத்தைவிட பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. தற்போது பள்ளி விடுமுறை நீட்டிக்கப்பட்டு இருப்பால் ராமேசுவரத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று முதலே பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவ ரத்தில் குவிந்தனர். அவர்கள் இன்று அதிகாலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வழக்கமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் நிலையில் அக்னி தீர்த்தக் கடலில் நீர் மட்டம் உள்வாங்கி காணப்பட்டது.

    அதன்படி இன்று காலை அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியது. இந்த நிகழ்வு அங்கு வந்த பக்தர்களுக்கு புதியதாக இருந்தது. சுமார் 150 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் பவளப்பாறைகள் வெளியில் தெரிந்ததோடு சேறும், சகதியுமாக காணப்பட்டன. இதனால் பக்தர்கள் நீராட முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகளும் தரைதட்டி நின்றது.

    சில மணி நேரத்திற்கு பின் மீண்டும் கடல் இயல்பு நிலைக்கு மாறியது. கடல் உள்வாங்குவது உள்ளூர் மக்களுக்கு வழக்கமானதாக இருந்தாலும், வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் உள்வாங்கிய கடலை செல்போன்களில் படம் பிடித்துக்கொண்டனர்.

    இதற்கிடையே அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடிக்கொண்டு இருக்கும் போது திடீரென நகராட்சி சுத்திகரிப்பு நிலை யத்தில் இருந்து கழிவு நீரை திடீரென திறந்து விட்டதால் நுர்நாற்றம் வீசியது. அந்த பகுதியில் நீராடிக்கொண் டிருந்த பக்தர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    அக்னி தீர்த்தம் என இறை நம்பிக்கையுடன் நீரா டும் இடத்தில் கழிவு நீர் திறந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். அந்த பகுதியில் நீராடும் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டால் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினர். 

    • ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    பிரதமர் மோடி 2 நாள் ஆன்மீக பயணமாக இன்று பிற்பகல் ராமேசுவரம் வருகை தருகிறார். இதையொட்டி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமேசுவரத்தில் அனைத்து விதமான போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் ராமேசுவரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. 3,400 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கடந்த 2 நாட்களில் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்களில் ராஜஸ்தானை சேர்ந்த 1,200 பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேற்று முன்தினம் சிறப்பு ரெயில் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து பேருந்துகளில் ராமேசுவரம் வந்தனர்.

    இன்று அவர்கள் மீண்டும் மதுரைக்கு திரும்பவேண்டிய நிலையில், பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் தவித்து வருகிறார்கள். 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலி செய்த நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் ஒரே இடத்தில் குவிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி பிற்பகலில் ராமேசுவரம் வந்தபிறகு மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநில பக்தர்கள் பத்திரமாக மதுரைக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சுற்றுலா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது.
    • பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம்.

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. 108 திருப்பதிகளில் தானாய் தோன்றிய (சுயம்பு) திருப்பதிகள் 8 தான். அதிலும் முதல் திருப்பதி ஸ்ரீரங்கம் தான். வைகுண்டத்தின் தத்துவத்தை பூலோகத்தில் உள்ள மக்கள் கண்டு அனுபவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது பூலோக வைகுண்டம் எனப்படுகிறது.

    ஸ்ரீரங்கத்திற்கும், ஸ்ரீராமருக்கும், அயோத்திக்கும் இடையிலான தொடர்பு தொன்மையானது, தெய்வீகமானது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்ரீராமரின் குலதெய்வம் ஆவார். மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே குலதெய்வம் என்று உள்ளது. அதேபோல மகாவிஷ்ணு மனிதராக ஸ்ரீராமராக அவதாரம் எடுத்தவர்.

    அயோத்தியில் அவர் வணங்கிய குல தெய்வம்தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் போது ராமரின் குலதெய்வ கோவிலான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் அனுப்பி வைக்கப்பட்டது.

    பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் ஸ்ரீரங்கம் கோவில் விமானம். ரங்க விமானத்தில் அர்ச்சா ரூபமாக அவதரித்தவர் ஸ்ரீரங்கநாதர். ரெங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய பிரம்மா சூரியனை நியமித்தார்.

    பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு கொண்டு சென்று வழிபட்டார். "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்" ராமரின் வம்சமாகிய ரகுவம்சத்தின் குல தேய்வம். காலம்காலமாக அவர்கள் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர். சூரிய வம்சத்தில் தசரதருக்கு மகனாக அவதரித்த ராமபிரான் தன் முன்னோர்கள் வழியில் ரெங்கநாதரை வணங்கி வந்தார். 67 தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே அஜன், திலீபன், தசரதன் என ராமபிரானின் முன்னோர்களால் வழிபட்டு வந்தவர் ரெங்கநாதர். அயோத்தியில் ராமர் தனது கரங்களால் ரங்கநாதருக்கு பூஜை செய்து வந்தார்.

    இந்த சூழலில் ராமர் வனவாசம் முடிந்து அயோத்தியில் மீண்டும் அரசாட்சி புரிந்தார். அவர் முடி சூட்டிக்கொண்ட பிறகு விபீஷணனுக்கு அவன் செய்த உதவிக்காக `ரங்க விமானம்' தருகிறார் ராமர். அதை விபீஷணன் இலங்கை போகும் வழியில் சந்திரபுஷ்கரினி என்னும் தடாகம் பகுதியில் வந்தபோது சிலையை கீழே இறக்கி வைக்க வேண்டாம் என்று கருதி, அங்கு வந்த சிறுவனிடம் கொடுத்துள்ளான்.

    ஆனால் காவிரியில் நீராடி விட்டு திரும்பி வருவதற்கு அந்த சிலையை சிறுவன் கீழே வைத்துவிட்டான். அதன்பிறகு சிலையை எடுக்க முடியவில்லை. கோபத்தில் விபீசணன் அந்த சிறுவனை தேடியபோது அவன் திருச்சி மலைக்கோட்டை உச்சியில் சென்று அமர்ந்து கொண்டான். சிறுவன் வடிவில் வந்தது உச்சிப்பிள்ளையார் என்றும், ரங்கநாதரை காவிரியில் அமர வைக்கவே அவர் இந்த திருவிளையாடலில் ஈடுபட்டுள்ளார். தர்மவர்மா என்ற அந்தப் பகுதி மன்னனின் பக்தியால் உருகி பெருமாள் அந்தத் தீவிலேயே தங்கி விடுகிறார். தர்மவர்மா ஆலயம் எழுப்பினான்.

    பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் இங்கு அருள்கிறார். இதனை `சயனக் கோலம்' என்பார்கள். திருச்சியில் காவிரியும் கொள்ளிடமும் உருவாக்கிய மணல் தீவு முக்கொம்பு தொடங்கி கல்லணை வரை உள்ளது. `அரங்கம்' என்றால் ஆற்றிடைக்குறை என்று பொருள்படும். ஸ்ரீரங்கம் பெரியகோவில் 6,13,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. அதாவது 156 ஏக்கர். கோயில் சுவர்களின் மொத்த நீளம் 32,592 அடி. பெரியகோவில் 7 திருச்சுற்றுக்களோடு அமைந்துள்ளது. இந்தியாவிலேயே 7 சுற்றுக்களைக் கொண்ட கோவில் இதுமட்டுமே. பெருமாள் தென்திசை நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். விபீஷணனுக்காக "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளி கொண்டுள்ளார் பெருமாள்.

    கருவறை விமானத்தில் 4 கலசங்கள் உள்ளன. இவை 4 வேதங்களைக் குறிக்கின்றன. சுந்தரபாண்டியன் விமானத்துக்குத் தங்கம் பதித்தான். அதனால் பொன்மேய்ந்த பெருமாள் என அழைத்தனர். பொன்னால் வேயப்பட்ட இந்த விமானம் ஓம் என்ற பிரணவ வடிவில் எழுந்தருளி உள்ளது. ரெங்கநா தனின் திருக்கண்கள் விபீஷணனால் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மூவேந்தர்கள் தொடங்கி விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், ஆங்கிலேயர்கள் எல்லோருமே ரெங்கநாதரை வணங்கி கோவிலை வளர்த்தனர்.

    கம்பர் தனது ராமகாதையை கி.பி.885-ல் இங்குதான் அரங்கேற்றம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத `இரண்ய வதைப்படலம்' எனும்பகுதியை கம்பர் தனது காவியத்தில் எழுதியதை சிலர் ஏற்க மறுத்தனர். ஆனால் மேட்டழகிய சிங்கர் என்ற நரசிம்மர் கர்ஜித்து ஏற்றதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

    தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ள நான்குகால் மண்டபத்தில்தான் கம்பராமாயணம் அரங்கேறியதாம். இதன் சாட்சியாக திருவந்திக்காப்பு மண்டபத் தூணில் கம்பர் கைகூப்பி வணங்கும் சிற்பம் உள்ளது.

    பழைமையான தமிழ் வழிபாட்டு முறைகளில் ஒன்றான பெருமாள் வழிபாட்டில் மிக உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீரங்கம். ஒரு நாட்டின் மன்னனுக்கு நடப்பதுபோன்று பெருமாளுக்கு விழாக்கள் நடக்கின்றன. இதனால்தான், "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே" என்று கூறுகிறார்கள்.

    ஆசியா - பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளிலிருந்து கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017-ம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த கோவிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் காணப்படும் இந்த சூழலில் ராமபிரானின் குல தெய்வமான ஸ்ரீரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ள ஸ்ரீரங்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. ராமரின் குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு அயோத்தியில் ராமரின் கோவிலை திறந்து வைப்பதே சரி என கருதி பிரதமர் மோடியின் ஸ்ரீரங்கம் வருகை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை மாத பூபதி திருநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19-ந்தேதி 4-ம் திருநாள் கருடசேவை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் வருவது மேலும் சிறப்பாகும்.

    • ஒரு வாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்று அதிக அளவிலான மீன்களுடன் ராமேசுவரம் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் கரை திரும்பினர்.
    • 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்

    வங்கக்கடல் மற்றும் மன் னார் வளைகுடா கடல் பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாக மீன்பி டிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் தடை விதித்தி ருந்தனர்.

    இதனால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வா தாரம் இழந்து பாதிப்படைந்த னர். மீன்பிடி தொழிலை நம்பியுள்ளவர்களும் வேலை வாய்ப்பை இழந்த னர்.

    இந்தநிலையில் கடலில் சகஜ நிலை திரும்பியது. எனவே தடை அகற்றப்பட்ட தையடுத்து நேற்று காலை மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென் றனர். குறிப்பாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்று இன்று காலையில் கரை திரும்பினர்.

    இதில், அதிகளவில் மீன் கள், இறால் வகைகள் பிடிபட்டதாக தெரிவித்த னர். ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்க சென்ற நிலை யில் மீன்கள் அதிகளவில் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் கூறினர்.

    • 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
    • பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றாகவும், 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில் அறியப்படுகிறது.

    பரிகாரம் செய்வதற்காகவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காகவும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ராமநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதனால் ராமேசுவரத்திற்கு பக்தர்களின் வருகை எப்போதும் இருக்கும்.

    இந்த நிலையில் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் ராமேசுவரத்தில் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் இன்று அதிகாலையிலேயே பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் நீராடி ராமநாதசுவாமி கோவிலில் உள்ள தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் சன்னதிகளில் நீண்ட வரிசைகளில் நின்று தரிசனம் செய்தனர்.

    பஸ், கார், வேன் என ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் ராமேசுவரம் வாகன நிறுத்தங்களில் நெரிசல் காணப்பட்டது. மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பேய்க்கரும்பு, அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் பாலம், அரியமான் கடற்கரை, ராமர்பாதம், கோதண்டராமர் கோவில் ஆகிய பகுதிளிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    ராமேசுவரத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டமும், போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது.

    • ராமேசுவரத்தில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது.
    • மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் விவசாயம் பணி என்பது இல்லாத நிலையில் வீடுகளில் உள்ள காலி இடங்களில் முருங்கைக்காய் மரம் வளர்ப்பது வழக்கமான ஒன்று. அதில் விளையும் முருங்கைக்காய்களை வீட்டு தேவைக்கு பயன்படுத்தி விட்டு மற்ற காய்களை விற்பனை செய்கின்றனர்.

    இந்த நிலையில் தற்போது வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் முருங்கைக்காய் மரங்களில் விளைச்சல் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மரங்களிலும் 500-க்கும் மேற்பட்ட முருங்கைக்காய் காய்ந்துள்ள தால் மரம் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலும் ஒரு முருங்கைக்காய் ரூ.10 முதல் 15 வரை மார்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாக மரம் வளர்ப்பில் ஈடுபடு பவர்கள் தெரிவித்தனர்.

    • திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது.
    • கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று காலை பக்தர்கள் வழக்கமாக அக்னி தீர்த்த கடலுக்கு நீராட வந்தனர். அப்போது திடீரென கடல் 100 மீட்டர் முதல் 300 மீட்டர் வரை உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. பக்தர்கள் விட்டுச் சென்ற பொருட்கள் சேறும் சகதியுமாக காணப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. இதையடுத்து பக்தர்கள் புனித நீராடினர்.

    இதேபோல் ராமேசுவரத்தில் உள்ள ஓலைக்குடா, சங்குமால் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் உள்வாங்கியது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த படகுகள் தரை தட்டியது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கடந்த சில வருடங்களாக கடல் அடிக்கடி உள்வாங்கும் நிகழ்வு நடக்கிறது. அதிகாலையில் கடலில் நீரோட்டம் மாறுபடுவதால் இதுபோன்று நடக்கிறது. சில நிமிடங்களில் கடல் இயல்பு நிலைக்கு மாறிவிடும். இது வழக்கமான ஒன்றுதான் என்றனர்.

    கடல் உள்வாங்கியது உள்ளூர் மக்களுக்கு வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் வெளியூரில் வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்தனர். 

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரத்தில் விநாயகர் சிலை விற்பனை மும்முரம் நடந்தது.
    • பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    ராமேசுவரம்

    நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டா டப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று சிலையை வைத்து வழிபாடு நடத்தி நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.

    இந்த நிலையில், ராமேசுவரத்தில் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்திடும் வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டு வைக்கப் பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் செந்தில் மற்றும் ராமன் ஆகியோர் 800 விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கொண்டு வந்து பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை வைத்துள்ளனர்.

    கண்மாய் மணல் மூலம் தயாரிக்கப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கும் போது மீன்களுக்கும், நீரின் தன்மை மாசுபடாமல் இருக்கும் வகையில் வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். வீடுகளில் வழிபாடு செய்திடும் வகையில் பல வர்ணங்களில் சிறிய அளவி லான சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

    • கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.

    இந்த நிலையில், இன்று சர்வ அமாவாசையை முன்னிட்டு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்துக்கு கார், பஸ், வேன், ரெயில்கள் மூலம் குவிந்தனர்.

    அவர்கள் அதிகாலையில் இருந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்ததால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப்பணி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்குள் வரும் பக்தர்கள் இடையூறு இன்றி நீராடுவது, தரிசனம் செய்வது உள்ளிட்ட வசதிகளை செய்திருந்தனர். 

    ×