search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ கேம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.
    • குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார்

    நவீனமயமான உலகத்தில் பெற்றோரின் கவனமின்மையால் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தாய் மற்றும் தந்தை ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் மீது கொண்ட மோகத்தால் குழந்தைகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான கவனம் கிடைக்காமல் வளர்கின்றன.

    இதற்கு ஒரு படி மேலாக தந்தையின் வீடியோ கேம் அடிமைத்தனத்தால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.

    குழந்தைக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின்படி , குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

     

    அதன்பின்னரே விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை  விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார் என்றும் வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டார்.  

    • இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன.
    • அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது ஸ்மார்ட்போன்.

    இன்றைய இணைய உலகில் மொபைல் போன்கள் அவசியமாகிவிட்டன. மொபைல்போன் இல்லாத வாழ்க்கை பலருக்கு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் எல்லா நேரங்களிலும் தம்முடன் எடுத்துச்செல்லும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது.

    நம்மில் பலர் தூங்கும்போது கூட மொபைல் போன்களை பக்கத்திலேயே வைத்திருப்போம். இந்த ஸ்மார்ட்போன் மோகம் குழந்தைகளையும் விட்டுவைக்க வில்லை. சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்களில் சிக்கிக்கொள்ளும் அவலநிலையே இன்றளவும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    வாட்ஸ் அப்பில் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வது, பேஸ்புக்கில் இடுகைகளை இடுவது, யூடியூப்பில் வீடியோக்கள் பார்ப்பது, ரீல்ஸ் எடுப்பது மற்றும் கேம்கள் விளையாடுவது போன்று குழந்தைகள் மணிக்கணக்கில் செல்போனில் தான் அவர்களைது நேரத்தை செலவிடுகின்றனர்.

    ஸ்மார்ட் போன் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும் அது அதிகம் தீங்கு விளைவிக்கும் விளைவுகளையே கொண்டுள்ளது.

    மொபைல் போன்கள் குழந்தைகளின் மூளையை பாதிக்கிறது. மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது. செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு அவர்களது மூளையை பெரிதும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மொபைல் போன்களை அதிகநேரம் பயன்படுத்துவது, தூங்கும் போது அருகில் வைத்திருப்பது ஆகியவற்றால் அவர்களின் மூளை பாதிக்கப்படும்.

    மேலும் குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அவர்களின் கண்களும் பாதிக்கப்படுகின்றன. மொபைல் போன் திரைகளை நீண்டநேரம் வெளிப்படுத்துவது நம் கண்களில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை கொடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடுமையான கண்பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். வீடியோ கேம்களை நீண்டநேரம் விளையாடும் போது விழித்திரை பாதிக்கப்பட்டு தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது மற்றும் கண்களில் விரும்பத்தகாத தாக்கங்களை உண்டுபண்ணுகிறது.

    உட்கார்ந்த நிலையிலேயே இருந்து செல்போன் கேம் விளையாடுவதால் அவர்களின் முதுகெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் உடல் பருமன், சோம்பல், மனச்சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விடுவதால், படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது குறைவு. இது அவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

    மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் டிஜிட்டல் அடையாள மோசடி, சைபர்புல்லிங், ஃபிஷிங், மால்வேர் போன்ற பல்வேறு சைபர் கிரைம்களுக்கு ஆளாகின்றனர். இந்த சைபர் குற்றங்கள் குழந்தைகளின் நுட்பமான மனதில் ஆழ்ந்த மன, உடல் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இணைய உலகம் பெரும்பாலும் கட்டுப்பாடற்றது. உலகளவில் பொருளாதாரங்கள் கட்டுப்பாடுகளுடன் வரும் அதே வேளையில், இணையத்தில் உள்ள உள்ளடக்கம் இன்னும் பெரும்பாலும் கட்டுப்பாடற்றதாகவே உள்ளது. இது குழந்தைகளுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்துகிறது.

    அதிகப்படியான வன்முறை, போலிச் செய்திகள், ஆபாசப் படங்கள் மற்றும் பிற பொருத்தமற்ற காட்சிகள் அல்லது செய்தி அனுப்புதல் ஆகியவற்றைக் கொண்ட உள்ளடக்கம் குழந்தைகளின் நுட்பமான ஆன்மாவில் ஆழமான மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பதிவுகள் அவர்களின் சிந்தனை மற்றும் மனநிலையில் அழியாத வடுக்களை ஏற்படுத்தலாம். பெற்றோர்கள் யோசித்து செயல்படுங்கள்.

    • பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
    • கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.

    பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.

    இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.

    பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

    கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

    மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:

    "மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.

    கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:

    "ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.

    • சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும்.
    • குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும்.

    தெருக்களில் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளை பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் உலகம் வீடியோக்கள் வடிவில் விளையாட்டுகளை வேடிக்கை பார்க்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் ஓரிடத்தில் முடங்கியபடியே குழந்தைகள் வீடியோ கேம்களை பார்த்து ரசிக்கிறார்கள். அதில் இருந்து மீள வைப்பதற்கு உடல் ரீதியான விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடவைப்பதுதான் ஒரே வழி. குழந்தை பருவத்திலேயே விளையாட்டு ஆர்வத்தை விதைப்பதன் மூலம் அவர்களின் தனித்திறன்களையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கலாம். அதற்கு விளையாட்டு எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம்.

    1. மன - உடல் ஆரோக்கியம்:

    உடல் மற்றும் மன ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டு உதவும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் சரியான பாதையில் செல்வதற்கு வழி நடத்தும். குழந்தை பருவத்தில் இருந்தே பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்துவது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். உடல் பருமன் பிரச்சினையில் இருந்தும் விலக்கி வைக்கும். உடல் சம நிலையை பேணவும் உதவும். மன ரீதியாக தோல்விகளை எவ்வாறு கையாள்வது என் பதையும் கற்றுக்கொடுக்கும். மன அழுத்தத்தின் போது அமைதியாக இருப்பது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கும்.

    2. குழு செயல்பாடு:

    கூடைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டுகளை விளையாடுவது குழுவாக ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அறிய உதவும். ஒவ்வொரு வீரரையும் மதிக்கவும், மரியாதை யுடன் நடத்தவும், அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் கற்றுக்கொடுக்கும். பள்ளி, கல்லூரி வாழ்க்கைக்கு பின்பு அலுவலக பணியில் சக ஊழியர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வளர்க்கவும் உதவும்.

    3. ஒழுக்கத்தை கற்றுத்தரும்:

    குழந்தைகள் ஒழுக்கத்துடன் செயல்படுவதற்கு விளையாட்டு கற்றுக்கொடுக்கும். அதிகாலையில் பயிற்சி செய்வதற்கு சீக்கிரமாக எழும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்கும். உணவு விஷயத்தில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வைக்கும். துரித உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சாப்பிடும் வழக்கம் இயல்பாகவே ஏற்படும். மனரீதியாக வலிமையாக செயல்படுவதற்கும் விளையாட்டு வழிகாட்டும்.

    4. சமூக செயல்பாடு:

    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் செல்போன்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். அது வீட்டை விட்டு வெளியேறி விளையாடும் ஆர்வத்தை குறைத்துவிடுகிறது. நண்பர்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை மறக்கடித்துவிடுகிறது. நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து விளையாடும்போது தகவல் தொடர்பு திறன் வலுப்படும். சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் திறனும் மேம்படும். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துவதற்கும் வித்திடும்.

    5. சுயமரியாதை:

    குழந்தைகளிடத்தில் சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்க்க விளையாட்டு உதவும். போட்டியில் வெற்றி பெறுவது அல்லது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடிப்பது அவர்களின் தனித்திறன்கள் மீது அதிக நம்பிக்கை கொள்ளச் செய்யும். பயிற்சியாளரின் ஊக்கமும், சக வீரர்களின் பாராட்டும் சுயமரியாதையை வளர்க்க உதவும். எனவே, குழந்தைகளை அவர்களின் விருப்பப்படி விளையாட விடுங்கள். அவர்கள் வளரட்டும்!

    • விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.
    • வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.

    வெளிவிளையாட்டுகளைவிட இணையதள விளையாட்டுகள், மொபைல்போன் விளையாட்டுகள் போன்றவை குழந்தைகள், வளர்இளம் பருவத்தினரை அதிகமாக ஈர்க்கின்றன. தனிநபர் ஆதிக்கம் செலுத்துவதற்கு உள்ள சாத்தியம், தனிமை மற்றும் மனச்சோர்வின்போது அதைத் தணியச்செய்வது போன்ற காரணங்களால், அதற்கு அடிமையாகும் அளவுக்குப் பலரும் மாறிவிடுகின்றனர்.

    அது மட்டுமல்லாமல் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் விளையாட்டுகள் நிஜ வாழ்க்கையிலும் அவர்களுடைய நடவடிக்கைகளில் மூர்க்கக் குணத்தை உண்டாக்கும். பெரும்பாலான நேரம் இத்தகைய விளையாட்டுகளிலேயே மூழ்கிவிடுவதால் மனச் சோர்வும் தூக்கமின்மையும் ஏற்படுகின்றன.

    மேலும் தனக்கு பிடிக்காதவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, ஆபாச படங்களை வெளியிடுவது, பிறரை புண்படுத்தும் வகையில் கேலியான அல்லது மிரட்டும் வகையில் பதிவுகளை அனுப்புவது போன்ற பல விஷயங்கள் சமூக வலைதளங்களில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதைத்தான் 'சைபர் புல்லியிங்' என்கிறார்கள்.

    நமக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் 40 சதவீத இளைஞர்களை பாதிக்கும் முக்கியப் பிரச்சினையாக இது கருதப்படுகிறது. அதேபோல, வளர்இளம் பருவத்தில் ஏற்படும் பாலியல் நாட்டம் மற்றும் அந்தரங்க ஆசைகளை நிறைவேற்றும் ஒரு வடிகாலாக வலைதளம் பயன்படுத்தப்படுவது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    ஆபாச வலைதளங்கள் மற்றும் குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில் ஈடுபடும் வளர்இளம் பருவத்தினரை அவர்களுடைய நடவடிக்கை மாற்றங்கள் காட்டிக்கொடுத்துவிடும். இரவில் வெகுநேரம் அல்லது அதிகாலைவரை இணையத்தைப் பயன்படுத்துவது, கணினி, மடிகணினி பயன்படுத்தும்போது அதிகம் தனிமையை நாடுவது, யாராவது குறுக்கிட்டால் எரிச்சல்படுவது, மொபைல்போன் பயன்பாடுகளுக்குப் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்வது, குடும்ப நபர்களிடம் கலந்துரையாடும் நேரம் குறைவது, வலைதள வரலாற்றை முற்றிலும் அழித்துவிடுவது உள்பட பல மாற்றங்கள் ஒருவரிடம் காணப்படும்.

    'முள்ளை முள்ளால் எடுப்பது' போல வளர்இளம் பருவத்தினரின் வலைதளப் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்கு பல மென்பொருள்கள் உள்ளன. அவற்றைக் கணினியிலோ, ஸ்மார்ட் போனிலோ பதிவேற்றிவிட்டால் குறிப்பிட்ட ஆபாச, விளையாட்டு வலைதளங்களை பயன்படுத்தும்பட்சத்தில் வலைதளம் தானாகவே தடுத்துவிடும்.

    தடை செய்யப்பட்ட வலைதளத்தை ஒருவர் அணுகினால், அது குறித்த விவரம் பெற்றோரின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் மென்பொருள்கள் உள்ளன. தாங்கள் இந்த விஷயத்தில் கண்காணிக்கப்படுகிறோம் என்று ஆரம்பத்தில் தெரிந்துவிட்டாலே, சிறுவர், சிறுமிகள் இணையத்தை கவனமாக பயன்படுத்துவார்கள்.

    • வீடியோ கேம் விளையாடுவதை திடீரென மொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம்.
    • வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன.

    கடந்த சில வருடங்களில் சிறுவர்-சிறுமிகள் வீட்டுக்கு வெளியே வந்து விளையாடுவது பெருமளவில் குறைந்திருக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு, பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு பயப்பட ஆரம்பித்தனர். காலச்சூழல் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வீடியோ கேம்சுக்கு அடிமையாகி விட்டனர்.நேரத்தை போக்குவதற்கும், மனசை ரிலாக்ஸ் செய்வதற்குமான பொழுதுபோக்குதான் இது. ஆனாலும் இதன் மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அச்சப்பட வைக்கின்றன.

    வீடியோ கேம் விளையாடும்போது பெரும்பாலும் அதிக அசைவுகள் இன்றித்தான் உட்கார்ந்திருப்போம். கூடவே, நொறுக்குத் தீனிகள், துரித உணவு, கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் என தவறான உணவுப் பழக்கமும் ஒட்டிக்கொள்கிறது. பெரும்பாலான குழந்தைகள் வீடியோ கேம்ஸ், கணினி, செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் ஏதாவது ஒன்றைத் தினமும் சராசரியாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக உபயோகப்படுத்துகிறார்கள்.

    இதன் காரணமாக உடல் எடை அதிகமாக இருப்பது, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள், மூட்டு வலி, கருப்பை பாதிப்பு, புற்றுநோய், தூக்கமின்மை போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    வன்முறை செய்யத் தூண்டும் விதமாக சில வீடியோ கேம் விளையாட்டுகள் அமைந்துள்ளன. அடித்தல், குத்துதல், துப்பாக்கியால் சுடுதல், வெடிகுண்டு வீசுதல் போன்ற விளையாட்டுகளை நண்பர்களுடன் இணைந்து விளையாடுகின்றனர். இதன் தாக்கத்தால் சிலர் சரியாகத் தூங்குவதில்லை. அப்படியே தாமதமாக இரவில் தூங்கினாலும் வீடியோ கேம் விளையாடுவது போன்ற கனவு வருவதாக கூறுகின்றனர். இத்தகைய உளவியல் ரீதியான சிக்கல்கள் பின்னாளில் பல பாதிப்புகளை உருவாக்கும்.

    வீடியோ கேம் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்க நினைப்பவர்கள் படிப்படியாக அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். புத்தகம் வாசிக்கக் கொடுப்பது, தோட்ட வேலை, வீட்டு அலங்காரம் போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்தலாம். அவர்கள் வீடியோ கேம் விளையாடுவதை திடீரெனமொத்தமாக நிறுத்தினால், மனநலம் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

    நீங்கள்தான் உங்கள் குழந்தையின் ரோல்மாடல். ஆகவே, நீங்கள் முதலில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்.

    உங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்.

    சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளைக் கூடுமானவரை வீட்டிலேயே தயார்செய்து கொடுக்க வேண்டும்.

    சாப்பிடும்போது டி.வி., வீடியோ கேம், செல்போன் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

    டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

    வெளியே சென்று விளையாட ஊக்கப்படுத்த வேண்டும்.

    தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுவதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

    குழந்தைகளின் அதிகப்படியான உடல் எடை குறைவதற்கு மருத்துவரின் ஆலோசனையோடு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    ×