search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரேஷ் கோபி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார்.
    • பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    பிரதமர் நரேந்திரமோடி கடந்த 3-ந்தேதி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்த நிலையில், தற்போது 2-வது முறையாக கேரளா வந்துள்ளார். அவர் நேற்று மாலை தனி விமானத்தில் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சிக்கு வந்தார்.

    பின்பு பிரதமர் மோடி கொச்சியில் நடந்த பிரமாண்ட ரோடு-ஷோவில் பங்கேற்றார். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற பிரதமர் மோடியை சாலையில் இருபுறமும் நின்ற பாரதிய ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். பின்னர் கொச்சியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார்.

    பிரதமர் மோடி இன்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்தினார். இதற்காக அவர் கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக குருவாயூருக்கு வந்தார். அவர் இன்று காலை 7.35 மணியளவில் ஸ்ரீகிருஷ்ண கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்பு அங்கிருந்து காரில் குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

    பிரதமர் மோடி பாரம்பரிய உடை அணிந்து கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். அவர் கோவிலின் அனைத்து பகுதிகளுக்கும் நடந்து சென்று வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

    அதன் பிறகு காலை 8.45 மணியளவில் குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான நடிகர் சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு நடிகர் சுரேஷ்கோபி தங்க தகடு ஒன்றை பரிசாக வழங்கினார்.

    திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு குருவாயூர் கோவிலில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மற்றும் திருப்பாறையாறு ஸ்ரீராமசுவாமி கோவிலில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கொச்சிக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு கடற்படைக்கு சொந்தமான சர்வதேச கப்பல் பழுது நீக்கும் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கப்பல் மராமத்து உலர் பணியகத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பிறகு எர்ணாகுளம் அருகே மரைன் டிரைவ் பகுதியில் பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு குருவாயூர் மற்றும் கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆக்‌ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
    • பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது

    மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.

    ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.

    65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

    2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.

    சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.

    இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.

    இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

    முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

    அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.

    • மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி.
    • இவர் தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் பல படங்கள் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சுரேஷ் கோபி. தமிழில் தீனா, ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க. கட்சியை சேர்ந்த சுரேஷ்கோபி, கொச்சியில் ஒரு விழாவில் பங்கேற்றார்.


    அப்போது அவர், மறு பிறவியில் நம்பிக்கை கொண்டவன் நான். எனது மறு பிறவியில் தந்திரி குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன். பூணூல் அணியும் சமூகத்தில் பிறந்து சபரிமலை தந்திரியாக வேண்டும். சபரிமலையில் வெளியில் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்தால் மட்டும் போதாது. கோவிலுக்குள் சென்று அமர்ந்து பூஜை செய்து தரிசிக்க வேண்டும். அய்யப்பனை கட்டிப்பிடித்து முத்தமிட விரும்புகிறேன் என்றார்.

    சுரேஷ் கோபி இதற்கு முன்பு ஒரு முறை இதுபோல பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி
    • மத நம்பிக்கை இல்லாதவர்களை குறித்து இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாகவும் இருந்தார். இவர் கேரளாவில் மகா சிவராத்திரியை யொட்டி நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, மத நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போக வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவேன் என்று பேசினார். சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக ஆலப்புழாவை சேர்ந்த சுபாஷ் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதில் கேரளாவில் மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு எதிராக பிரச்சினையை ஏற்படுத்த முயல்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். புகாரை பெற்று கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.
    • சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி.

    சுரேஷ் கோபி, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மாநிலம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் இருந்தாலும் இவர் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

    இதையடுத்து அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டது. பாரதிய ஜனதாவில் சேர்ந்த பின்னர் அக்கட்சி சார்பில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    அதன்பின்பு, கேரளா சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.

    இந்நிலையில் 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.

    அதன் ஒரு கட்டமாக கேரளாவில் பாரதிய ஜனதாவுக்கு வலுவான வாக்கு வங்கியை உருவாக்க நடிகர் சுரேஷ் கோபியை பயன்படுத்தி கொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரி சபையில் நடிகர் சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.

    எனவே அடுத்து வர இருக்கும் மத்திய மந்திரி சபை மாற்றத்தின்போது நடிகர் சுரேஷ் கோபி மத்திய மந்திரியாகலாம் எனக்கூறப்படுகிறது.

    மேலும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் சுரேஷ் கோபியை திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் களம் இறக்கவும் பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

    இந்த தொகுதியில் இப்போது காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் எம்.பி.யாக உள்ளார். அடுத்த முறையும் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டால் அங்கு சுரேஷ் கோபியை களம் இறக்கி வெற்றியை ருசிக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. அதற்கு முன்னேற்பாடாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    • சுரேஷ் கோபியின் மேல்சபை எம்.பி. பதவி கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது.
    • பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்று சுரேஷ் கோபி கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபி. சினிமாவில் உச்சம் தொட்ட சுரேஷ் கோபியை பாரதிய ஜனதா கட்சி டெல்லி மேல்சபை எம்.பி. ஆக்கியது.

    இதன் மூலம் அரசியலுக்கு வந்த சுரேஷ் கோபி, கேரள சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக போட்டியிட்டார். இதில் அவர் தோல்வி அடைந்தாலும் கட்சியினர் இடையே அவருக்கு பெரும் செல்வாக்கு இருந்தது.

    சுரேஷ் கோபியை கேரள மாநில பாரதிய ஜனதா தலைவராக ஆக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    ஆனால் மாநில கட்சி தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் சுரேஷ் கோபியின் மேல்சபை எம்.பி. பதவி கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்தது. எனவே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. சமீபத்தில் நடந்த மேல்சபை எம்.பி. தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா சார்பில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    மாநில தலைவர் பதவி மற்றும் மேல்சபை எம்.பி. பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக போவதாக தகவல்கள் பரவியது. இதுபற்றி நடிகர் சுரேஷ் கோபியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதுபோல உள்துறை மந்திரி அமித்ஷா, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரை பெரிதும் மதிக்கிறேன்.

    எந்த சூழ்நிலையிலும் இவர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன். பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் சுரேஷ் கோபி மேல்சபை எம்.பி.யாக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் டெல்லியில் வீடு வழங்கப்பட்டு இருந்தது.

    தற்போது மேல்சபை எம்.பி. பதவி காலம் முடிந்ததால் அவர் டெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ×