என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனிதன்"
- ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர்.
- காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.
ஒருநாள் காளிதாசர் வயல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். சிறிதுதூரம் சென்ற பிறகு காளிதாசருக்கு தாகம் எடுத்தது. அப்போது சிறிது தூரத்தில் கிணற்றில் இருந்து ஒரு பெண் தண்ணீர் எடுப்பதை கவனித்தார் காளிதாசர். நேராக அந்த பெண் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார் காளிதாசர். அந்த பெண்ணை பார்த்து காளிதாசர் தாயே எனக்கு தாகமாக இருக்கிறது.
கொஞ்சம் பருகுவதற்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்டார். அந்த பெண்ணும் நான் உங்களுக்கு தண்ணீர் தருகிறேன். ஆனால் அதற்குமுன்னால் நீங்கள் யார் என்று சொல்லுங்கள் என்றாள்.
உடனே காளிதாசர் அந்த பெண்ணிடம் நான் ஒரு பயணி என்று சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு பயணிகள் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் சந்திரன் மற்றொருவர் சூரியன். இவர்கள் தான் இரவு-பகல் என்று பயணிப்பவர்கள் என்று அந்த பெண் கூறினார்.
உடனே காளிதாசர் சரி... நான் ஒரு விருந்தாளி என்று வைத்துக்கொள்ளுங்கள் என்றார். இந்த உலகத்தில் இரண்டு விருந்தினர்கள் தான் இருக்கிறார்கள். ஒன்று செல்வம், இன்னொன்று இளமை. இவர்கள் இரண்டுபேரும் தான் விருந்தினர்களாக வந்துவிட்டு உடனே சென்றுவிடுவார்கள்.
இந்த பதிலை கேட்டதும் காளிதாசருக்கு எரிச்சல் வந்தது. உடனே காளிதாசர் உனக்கு தெரியுமா பெண்ணே நான் மிகவும் பொறுமைசாளி என்று கூறினார். அந்த பெண் அந்த பொறுமைசாளியிலும் இரண்டு பேர்கள் மட்டும் தான் உள்ளனர். ஒன்று பூமி, இன்னொன்று மரம். எவர் மிதித்தாலும் தாங்குவது பூமி. யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு காய்-கனிகளை கொடுப்பது மரம். இந்த இரண்டே பேர் தான் உலகத்தில் பொறுமைசாளிகள் என்று கூறினாள்.
இதைக்கேட்டதும் கோபம் அடைந்த காளிதாசர், நான் ஒரு பிடிவாதக்காரன் என்று அந்த பெண்ணிடம் கூறினார். அதற்கும் அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு பிடிவாதக்காரர்கள் தான் உள்ளனர். ஒன்று முடி, மற்றொன்று நகம். இந்த இரண்டும் எத்தனைமுறை வேண்டாம், வேண்டாம் என்று வெட்டினாலும் பிடிவாதமாக வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினாள்.
இதை கேட்டுக்கொண்டெ இருந்த காளிதாசருக்கு தாகம் ரொம்ப அதிகரித்தது. உடனே கோபமுடனும், எரிச்சலுடனும் அந்த பெண்ணை பார்த்து உனக்கு தெரியுமா நான் ஒரு முட்டாள் என்று கூறினார் காளிதாசர். உடனே அந்த பெண் இந்த உலகத்திலேயே இரண்டு முட்டாள்கள் தான் உள்ளனர். ஒருவர் இந்த நாட்டை ஆளும் அரசன். மற்றொருவர் அந்த அரசனுக்கு துதிபாடும் அமைச்சர் என்று கூறினாள்.
இதைக்கேட்டதும் காளிதாசருக்கு என்னசெய்வது என்று தெரியாமல் கையை கூப்பி வணங்கியதும். காளிதாசரை பார்த்து அந்த பெண் மகனே என்று சொன்னாள். அந்த குரல் கேட்டதும் காளிதாசர் எதுவும் புரியாமல் அவரை நிமிர்ந்து பார்த்தார். பார்த்ததும் மலைத்துபோய் நின்றார்.
சரஸ்வதி தேவி தான் அங்கு நின்றுகொண்டிருந்தார். சரஸ்வதிதேவியை பார்த்து காளிதாசர் கையைகூப்பு வணங்கினார். அதற்கு சரஸ்வதி தேவி காளிதாசா... எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கிறானோ, அவனே மனிதப்பிறப்பின் உச்சத்தை அடைகிறான். நீ மனிதனாகவே இரு என்று கூறிவிட்டு தண்ணீர் குடத்தை காளிதார் கையில் கொடுத்துவிட்டு சரஸ்வதி தேவி மறைந்து சென்றாள்.
இந்த கதையில் இருந்து நாம் என்ன தெரிந்துகொண்டோம் என்றாள் மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மனிதனாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் இந்த கதை நமக்கு உணர்த்தி உள்ளது.
- மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
- மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும்.
திருவள்ளுவர் ஓரிடத்தில் மனிதனை மரத்துக்கு ஒப்பிடுகிறார். பண்பில்லாதவனை மரத்துக்குச் சமமானவன் என்கிறார்.
"அரம்போலும் கூர்மையரேனும், மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்"
அரம் இரும்பையும் அராவி அழிக்கும் கருவி. அதைப் போன்ற கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், பண்பில்லாததவர்களாக இருந்தாலும், அவர்கள் மரத்துக்குச் சமமானவர்கள் என்கிறார்.
அறிவில்லாதது என்பதற்காக மரத்தைக் கூறுகிறாரே ஒழிய, மற்ற எல்லாவகையிலும் மரம் மனிதனிலும் சிறந்தே விளங்குகிறது.
மரம் உயிரோடு இருக்கும்போது இலை, பூ, காய், கனி என்று பல வகைகளில் உதவுகிறது. நிழல் தருகிறது, தூய காற்று வழங்குகிறது, மழை தருகிறது.
மரம் இறந்த பிறகும் நாற்காலி, மேசை, பீரோவாகி உதவுகிறது. குறைந்த அளவில் எரிக்க விறகாகவாவது பயன்படுகிறது.
ஆனால், மனிதனால் உயிரோடு இருக்கும்போது மட்டுமே பிறர்க்கு உதவ இயலும். அதனால்தான் வள்ளுவர்,
"அன்றறிவாம் என்னாது அறம்செய்க"
என்கிறார். எதையும் அன்றைக்குப் பார்த்துக் கொள்வோம் என்று ஒத்திவைக்காதே என்று அறிவுறுத்துகிறார்.
இறந்தபின் கண்தானம், உடல்தானம், அறக்கட்டளை அமைத்து உதவுதல் போன்று உதவமுடியுமே என நினைக்கலாம்.
நம் பின்னோர் அதனை நிறைவேற்றுவதைப் பொறுத்து அது நிகழலாம், நிகழாமலும் போகலாம். வீட்டில் உள்ளோர் அதனை வழங்க மறுத்தால் நிகழமுடியாது.
மரம் இருந்தும் கொடுக்கும், இறந்தும் கொடுக்கும்.
எனக்குத் தெரிந்த ஒருவர், எப்போதும் யாருக்காவது கெடுதல் செய்தல் கொண்டே இருப்பார்.
ஒருவர் வசதியாக வாழ்வதைப் பார்த்துவிட்டால் அவருக்குத் தாங்காது. காவல்துறைக்கு மொட்டைக் கடிதம் போடுவார். அவர் கள்ளநோட்டு வீட்டில் அடிக்கிறார் என்று, வீடு முழுவதையும் காவலர்கள் இடித்துப் போட்டுத் தேடிவிட்டு பொய்ப்புகார் என்று முடிவுகட்டுவார்கள். ஆனாலும் இடித்ததைக் கட்டுவது வீட்டுக்காரர் பொறுப்புதானே!
திருடுபோன சாமி சிலைகள் ஒருவர் வீட்டில் ஒளித்துவைத்திருப்பதாக எழுதி அவருக்குத் தொல்லை தருவார்.
'மொட்டை பெட்டிஷன் மேதாவி' என்றே ஊரில் அவருக்குப் பெயர். அந்த மேதாவியின் இறுதிக்காலம் உடல் நலம் குன்றிப் படுக்கையில் கிடந்தார். ஊர்ப் பெரியவர்கள் வந்து சுற்றிலும் அமர்ந்து உடல் நலம் விசாரிக்கிறார்கள்.
அந்த மேதாவி, எல்லோரிடமும் தான் செய்த தவறுகளைக்கூறிவிட்டு "என்னைப் போன்று இனி ஒருவன் இப்படிப்பட்ட குற்றத்தைச் செய்யாமல் இருக்க வேண்டுமானால், நாளை நான் இறந்ததும் என் உடலை காலில் கயிறுகட்டித் தெருவில் போட்டுச் சுடுகாட்டுக்கு இழுத்துப் போகவேண்டும். இழுத்துப் போகும்போதே எல்லோரும் இறந்த உடம்பைச் செருப்பால் அடித்தபடியே போகவேண்டும்.
இதனைச் செய்வதாக உறுதிமொழி கொடுத்தால்தான் நான் நிம்மதியாகச் சாவேன்" என்று பாவ மன்னிப்பு போலக் கேட்டார்.
எல்லோரும் சாவை ஆவலுடன் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தபடியே மறுநாள் மேதாவி இறந்துவிட்டார்.
சொன்னபடியே எல்லோரும் மேதாவியின் உடலைக் தெருவில் போட்டு இழுத்தனர். செருப்பால் அடித்தனர். ஆசை ஆசையாக அதனைச் செய்தார்கள்.
திடீரென்று போலீஸ் லாரி வந்து நின்றது, காவலர்கள் குதித்து ஓடிவந்தனர். இவர்களைப் பிடித்து உதைத்து லாரியில் ஏற்றிக் காவல் நிலையம் கொண்டுபோய் அங்கும் லத்திக் கம்பால் 'பூசை' போட்டனர்.
அப்போது அங்கிருந்த ஆய்வாளர், 'அந்த ஆளு சரியாத்தான் தந்தி குடுத்திருக்காரு' என் உடம்பை அவமானப்படுத்தனும்னு பேசிக்கிறாங்க, போலீஸ்காரங்கதான் உடம்புக்கு அவமானம் உண்டாகாமே காப்பத்தனும்னு, அவர் நினைத்தபடியேதான் இவனுங்களும் செய்றாங்க. நல்லா அடிங்கப்பா' என்று ஆவேசமாகக் கூறினார்.
அடிவாங்கியபடியே எல்லோரும் சொன்னார்கள். 'அவன் இருந்தும் கெடுத்தான்' செத்தும் கெடுத்தான்' என்று.
மரம் இருக்கும்போதும் கொடுக்கிறது!
உயிர்போன பிறகும் கொடுத்து உதவுகிறது.
சில மனிதர்கள், இருந்தும் கெடுக்கிறார்கள், இறந்தும் கெடுக்கிறார்கள்.
-புலவர் சண்முகவடிவேல்
- நன்றி இல்லாத மனிதன் காற்று, தண்ணீர் இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான்.
- அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன்.
பல்லடம் :
பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளையின் 53 -வதுவான்மழை மாதாந்திர கருத்தரங்கம் வனம் அறக்கட்டளை அலுவலகமான வனாலயத்தில் நடைபெற்றது. சக்தி மசாலா உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். வனம் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், சிறு துளி அமைப்பு வனிதா மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் அறக்கட்டளை செயலாளர் சுந்தரராஜன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் வைரமுத்து பங்கேற்று பேசியதாவது:- இந்த பூமியில் மனிதன் உயிர் வாழத் தேவையான முக்கியமான இரண்டு காற்று, தண்ணீர். நன்றி இல்லாத மனிதன் அந்த இரண்டையும் தான் முதலில் மாசு படுத்துகிறான். அவர்களை காப்பது மரங்கள். இதை அறியாமல் உலகில் மனிதன் ஆயுதங்களை அதிகம் பிரயோகித்தது மரங்களிடம்தான். ஆம் இதுவரை அவன் அளித்தது எண்ணிலடங்கா மரங்கள். ஏன் அமேசான் காட்டின் 22 சதவீதத்தை அழித்தவன் மனிதன். வனம், சிறுதுளி போன்ற ஆர்வலர்களால் அவன் செய்த தவறுகள் சிறிதேனும் சரி செய்யப்படுகிறது.
நமது முப்பாட்டன் வள்ளுவன் முதல் குறளில் சொல்வது கடவுள் நம்பிக்கை. அதற்கு அடுத்ததாக தண்ணீரைப் பற்றிச் சொல்லி உள்ளார். ஏன்? தண்ணீர் என்பது அவ்வளவு முக்கியம். அந்தத் தண்ணீரின் தேவை இல்லை என்றால் நீ கடவுளைக் கூட வழிபட முடியாது .இந்த உலகம் 70 விழுக்காடு தண்ணீரால் சூழப்பட்டது. மீதி உள்ள பகுதியில்தான் மனிதன் குடித்தனம் நடத்தி வருகிறான். அவனுடன் புழு, பூச்சி, விலங்குகள், போன்ற உயிரினங்களும் வாழ்கின்றன. இனியாவது மாற்றத்தைப் பற்றி யோசி, மரத்தை நேசி.
இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிஞர் வைரமுத்துவுக்கு மாலை அணிவித்து கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நாகராஜ்,சூழல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் வெள்ளிங்கிரி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கள் இயக்கத் தலைவர் நல்லசாமி மற்றும் வனம் அமைப்பு நிர்வாகிகள்,உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்