என் மலர்
நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள்"
- பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர்.
- இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார்.
பெங்களுரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சர்ஜாப்புரா பகுதியில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் பீகாரை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ஹோலி பண்டிகையையொட்டி அவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஹோலி பண்டிகையையொட்டி நேற்று மதியம் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் மது விருந்து நடத்தினர். இதில் ராஜேஸ்ஷாம் (வயது 20), அன்சூ (19), தீபு (23) ஆகியோர் உள்பட 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது மதுபோதை தகராறில் திடீரென ஒரு தொழிலாளி ஷாம், அன்சூ, தீபு ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பி மற்றும் மது பாட்டில்களால் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் 3 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சர்ஜாப்புரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கொலையான நபர்களில் ஒருவர், கொலையை அரங்கேற்றிய நபரின் தங்கையுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவர், தனது தங்கையுடன் பேசி வந்த நபரை தாக்கி உள்ளார். அப்போது அவரை மற்ற 2 பேர் தடுத்துள்ளனர். இதனால் 3 பேரையும் அந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பீகார் வாலிபர்கள் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரு புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
- தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர் :
திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என திருப்பூர் நகரத்தில் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோர், பனியன் துணிகளை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் என திருப்பூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்தபடியே இருக்கும்.
குறிப்பாக அவிநாசி சாலை, பி.என் சாலை, ஊத்துக்குளி சாலை மூன்றும் இணையும் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலோடும் காணப்படும். முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் கூட்டமும் இருக்கும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் சாலையாக குமரன் சாலை இருப்பதால் இரவு நேரம் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்படும்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர் நகரில் தற்போது சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாம வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஜார்களில் ஹாயாக உலா வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது மாலை நேரங்களில் பஜார்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி பூங்கா மற்றும் பொழுது போக்கு மையங்களில் குவிந்து வருகின்றனர்.
வருகிற திங்கட்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்பதால் அதன்பிறகு திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்பாகும்.
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
அதேபோல், தீபாவளி, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவுக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் விசைத்தறிகள், தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஓய்வெடுத்து வருகின்றன.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
தீபாவளி பண்டிகையின் போது தீக்காய விபத்துகளை தடுக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்டத்தில் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஊழியர் அடங்கிய பிரத்யேக குழு பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை தயார் நிலையில் இருந்தது.
தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான தீ விபத்து எதுவும் நடக்கவில்லை.சிறிய அளவிலான தொடர் சிகிச்சை அளிக்க அவசியமில்லாத வகையிலான தீ விபத்துகளே நடந்துள்ளது. இதனால் மருத்துவம், தீயணைப்பு அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர், பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
இது குறித்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் கூறுகையில், தீபாவளி நாளில் நான்கு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 6 பேர், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் வகையிலோ, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவில் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.
திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கூறுகையில், தக்க ஏற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.மாவட்டத்தில் பல்லடத்தில் 2,திருப்பூர் வடக்கு பகுதியில் 2 என மொத்தம் 4 சிறிய விபத்துக்கள் நடந்தது. உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. காயம், சேதம் எதுவுமில்லை என்றார்.
கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, கொச்சி, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.
இதனால் பல்லடத்தில் எப்போதும், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது. அண்ணா நகர் முதல் தாராபுரம் ரோடு பிரிவு வரை வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்றன.
ஆனால் தீபாவளி நாளன்றும், தற்போதும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை குறைந்த அளவு வாகனங்களால் வெறிச்சோடி காணப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற பெரும்பாலானவர்கள் இன்னும் 3 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் மீண்டும் பழையபடி போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
- வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர்.
- குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் உயர் தொழில் நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்துகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு குடிபோதையில்,வடமாநில வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்துஅங்கு சென்ற பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர்.
- சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள், தமிழக வாலிபர் ஒருவரை பெல்ட், கட்டை, உள்ளிட்டவைகளை கொண்டு துரத்தி துரத்தி தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் , தமிழக வாலிபரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தமிழக வாலிபரை, வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக தகவல்கள் பகிரப்பட்டு வருவதாகவும், வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாகவும் திருப்பூர் மாநகர போலீசார் விளக்கம் அளித்தனர். மேலும் வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்ட நபர் யாரென்று சைபர் க்ரைம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்தது.
- ஜார்க்கண்ட் தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.
சேலம்:
தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளை உறிய டிக்கெட் இன்றி தொழிலாளர்கள் ஆக்கிரமித்து பயணிக்கின்றனர்.
இதனால், முறையாக முன்பதிவு டிக்கெட் எடுத்துச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் சென்னையில் வட மாநிலம் சென்ற ரெயிலில் டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநில தொழிலாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோரை ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் நடுவழியில் இறக்கி விட்டனர். அப்படியொரு சம்பவம் நேற்று சேலம் அருகே தின்னப்பட்டி ரெயில்வே நிலையத்தில் நடந்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்தது.
இந்த ரெயில், சேலம் ரெயில்வே நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு வந்தடைந்தது. 5 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அந்த நேரத்தில் ரெயிலின் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளான எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் டிக்கெட் இன்றி ஏராளமான ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் பயணித்தனர்.
அதனால் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தவர்கள் போதிய இடவசதி இன்றி பெரும் அவதி அடைந்தனர். இது பற்றி சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ரதீஷ்பாபு தலைமையில் சேலம் ரெயில்வே நிலைய ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் ஸ்மித், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த ரெயிலை தின்னப்பட்டியில் நிறுத்தி, ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றியும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்துக் கொண்டும் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜார்க்கண்ட் தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர். இதில், 25 பெண்கள், 90 ஆண்கள் என 112 பேர் ஆவார்கள்.
இவர்களை அடுத்து வரும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி, மாலை 6.40 மணிக்கு தின்னப்பட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரசில் 112 பேரையும் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால், அந்த ரெயில் 4.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
- பாலமுருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் பீகார் குழு இன்று காலை சென்னை வந்தது.
- பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
சென்னை:
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் சமீப ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து விதமான பணிகளையும் செய்து வருகிறார்கள்.
அதிக நேர உழைப்பு, குறைந்த கூலி என்பதால் தமிழகத்தில் பல்வேறு தொழில் நடத்துபவர்களும் வடமாநில தொழிலாளர்களை அதிகளவில் பணியில் வைத்துள்ளனர். இதற்கு எதிராக சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தமிழகத்தில் பணியாற்றும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவது போல இரு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. ஆனால் இந்த இரு வீடியோக்களும் போலியானது என்று தமிழக அரசு மறுத்துள்ளது.
தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு இது தொடர்பாக விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார். போலியாக வீடியோ தயாரித்து வதந்தி பரப்புவதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் பீகார் மாநிலத்தில் எதிரொலித்தது. அந்த மாநில பா.ஜ.க. நேற்று சட்டசபையில் இந்த பிரச்சினையை கிளப்பியது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் கடும் அமளியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.
அதற்கு பதில் அளித்து சட்டசபையில் பேசிய துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், தமிழகத்தில் உள்ளூர் மக்களால் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்களில் உண்மையில்லை என்று தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
மேலும் வதந்தி பரப்புவது பா.ஜனதாவின் வழக்கம். தங்களது அரசியல் லாபங்களுக்காக மாநிலங்கள் இடையே பகையை தூண்ட அக்கட்சி முயற்சிக்கிறது. தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா? என்பதை கேட்டறிந்துதான் தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு பீகார் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் உத்தரவிட்டார். இணையதளத்தில் பரவும் 2 வீடியோக்களும் மிக பழையவை.
ஒரு வீடியோ பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பானது. மற்றொன்று உள்ளூர் மக்களுக்குள் நிகழ்ந்த மோதல் தொடர்பானது என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு குறிப்பிட்டு உள்ளார்.
பா.ஜனதாவுக்கு எப்போதுமே உண்மைகளில் விருப்பம் கிடையாது. வதந்திகளைப் பரப்புவதே அவர்களின் வாடிக்கை. தமிழகம் தொடர்புடைய விவகாரத்தில் நாங்கள் கூறுவதை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நம்பாவிட்டால், மத்திய உள்துறை மந்திரியிடம் சென்று விசாரணைக்குழு அமைக்க முறையிடுங்கள்.
இவ்வாறு துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறினார்.
இதற்கிடையே தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா? என்பதை உறுதி செய்ய பீகார் எம்.எல்.ஏ.க்கள் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து தமிழகத்துக்கு பீகார் போலீஸ் அதிகாரிகள் குழு சென்று உண்மை நிலையை கண்டறியும், நிலைமையை தலைமை செயலாளர், டி.ஜி.பி. தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு வரும் குழுவை பீகார் மாநில அரசு அமைத்தது.
பாலமுருகன் ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் அந்த பீகார் குழு இன்று (சனிக்கிழமை) காலை சென்னை வந்தது. அந்த குழுவில் உள்ள அதிகாரிகள் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தமிழக தொழிலாளர் நலத்துறை கமிஷனரை சந்தித்து பேசினார்கள்.
அப்போது தமிழகத்தில் இருக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் அமைதியான முறையில் பணிபுரிந்து வரும் தகவலை தமிழக அதிகாரிகள் பீகார் குழுவிடம் விளக்கமாக எடுத்து கூறினார்கள்.
இதையடுத்து பீகார் மாநில குழுவினர் மிகுந்த திருப்தி தெரிவித்தனர். மேலும் பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை தமிழக அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து உள்துறை செயலாளர் மற்றும் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆகியோரையும் பீகார் குழுவினர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். மேலும் பீகார் மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்யவும் திட்டமிட்டு உள்ளனர்.
- வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
பனியன் நகரமான திருப்பூரில் மிக அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் பணியாற்றுகிறார்கள். இதுதவிர சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள், சாலை பணிகளை வடமாநிலத்தவரே ஆக்கிரமித்து உள்ளனர்.
அதிக அளவில் குவிந்து வரும் வடமாநிலத்தவரை கண்காணிக்க வேண்டும் என்று ஒருசில அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி, அதை நம்பவேண்டாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது.
இதற்கிடையே தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
- வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்.
- வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவும் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
* வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வேறு மாநிலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் வீடியோக்களை தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமுமும் அடைய வேண்டாம். காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர்.
- வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்வேந்தன் என்ற போலீஸ் ஐ.ஜி. வந்துள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் பணிபுரியும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் யூடியூப் உள்ளிட்ட வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோக்களின் அடிப்படையில் இந்தி பத்திரிகைகள் சிலவற்றிலும் செய்திகள் வெளியானது. அதில் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், இதனால் வடமாநிலத்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டன.
இதையடுத்து பீகார் மாநிலத்தில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை பீகார் அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுபெற்றன.
இதைத்தொடர்ந்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தமிழகத்தில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக களம் இறங்கி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசினார். அப்போது வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்று வெளியாகி இருக்கும் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 4 வீடியோக்கள் இதுபோன்று போலியாக தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது உறுதியானது. திருப்பூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை மையமாக வைத்து போலி வீடியோக்கள் தயாரித்து வெளியிடப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து இந்த வீடியோக்களை வெளியிட்ட நபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த யூடியூப் சேனல் ஒன்றில் இந்த வீடியோக்கள் திரும்ப திரும்ப வெளியாகி பீதியை ஏற்படுத்தியது அம்பலமானது.
இது தொடர்பாக தமிழக போலீசார் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். திருப்பூரில் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி, தூத்துக்குடியில் தலா ஒரு வழக்கு பதிவாகி இருக்கிறது.
யூடியூப் சேனல், இந்தி ஆன்லைன் பத்திரிகை, வக்கீல் ஒருவர் மற்றும் இன்னொரு நபர் என 4 பேர் தற்போது போலி வீடியோ விவகாரத்தில் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாக வெளியான வீடியோக்களை பரப்பியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளோம். இந்த வீடியோக்கள் வட மாநிலங்களில் இருந்துதான் பரப்பி விடப்பட்டுள்ளது. எனவே இதில் தொடர்புடைய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு வருகிறார்கள். வீடியோவை பரப்பியவர்கள் வட மாநிலத்தில் இருந்தே செயல்பட்டது தெரிய வந்ததால் அங்கு சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் தமிழக காவல் துறை தயாராகி வருகிறது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்புடனேயே உள்ளனர். எனவே தேவையில்லாத வகையில் வீடியோக்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்வேந்தன் என்ற போலீஸ் ஐ.ஜி. வந்துள்ளார். பீகாரில் இருந்து கண்ணன் என்கிற போலீஸ் அதிகாரி இன்று மாலை வர உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த இந்த 2 அதிகாரிகளும் திருப்பூர் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளனர். பின்னர் இவர்கள் தங்கள் மாநிலங்களுக்கு சென்று தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு பற்றி அறிக்கை அளிக்க உள்ளனர்.
- தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
- வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.
சென்னை:
வட மாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.
* வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
* வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை.
* வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
* வட மாநிலத்தவர்களின் இடங்களுக்கே சென்று நம்பிக்கை ஊட்டுகிறோம்.
* வதந்தி தொடர்பாக வட மாநில டி.ஜி.பி.க்களுடனும் பேசியுள்ளேன். பீகார் குழு ஆய்வு செய்யும்போது மேலும் நம்பிக்கை அதிகரிக்கும்.
* வட மாநிலத்தவர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளிமாநிலத்தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.
- வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் பேசிய வடமாநிலத்துப் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது.
''வாய் பேச முடியாத தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு தமிழ்நாட்டுக்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாகச் செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழ்நாடு தான் காரணம்" என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது. தாய்த் தமிழ்நாடு என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
வர்த்தகத்திற்காக-தொழிலுக்காக-மருத்துவத்துக்காக-கல்விக்காக-வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழ்நாட்டுக்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழ்நாட்டையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலைவாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்கு வருவது அதிகரித்து வருகிறது.
சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்வது தான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலையின்போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல விரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்களில் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டன.
சென்னைப் பெருநகர மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன். அதேபோல், குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 லட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.
அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கு, பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக 1.4.2021 முதல் இதுவரை ரூபாய் 6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலில் அவர்கள் பணிபுரியும்போது, பாதுகாப்பாகப் பணிபுரியவும், விபத்துக்களைத் தவிர்க்கவும் அவர்களுக்கு உரிய விழிப்புணர்வு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இதுவரை 456 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், 43 ஆயிரம் தொழிலாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படி வெளிமாநிலத்தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கின்றது.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு, தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பீகாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை தமிழ்நாட்டில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் தொடக்கமாக அமைந்துள்ளது. எனவே, ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூகவலைதளங்களைப் பயன்படுத்துவோர் தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்தும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்றும், செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
பீகார் மாநில முதலமைச்சர், எனது பெருமதிப்பிற்குரிய சகோதரர் நிதிஷ்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இதுதொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன்.
வளமான-அமைதியான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
- வடமாநிலத்தவரை தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
- போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டது.
சென்னை :
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது போல் வடமாநிலங்களான டெல்லி, பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கொரோனா பரவலுக்கு பின்னர் கடந்த ஆண்டுதான் ஹோலி பண்டிகையை வடமாநில மக்கள் கொண்டாடினர். இந்தநிலையில், வருகிற 8-ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக பல முன்னேற்பாடுகளை தயார்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, வருகிற 7-ந்தேதி சோட்டி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். அன்றைய தினம் பூஜை பொருட்கள், மரக்கட்டைகளை கொண்டு தீ மூட்டும் நிகழ்வு நடத்தப்படும். இதில் மக்கள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்வார்கள். இதேபோல, மேளதாளம் முழங்க மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது போன்ற வீடியோ வெளியானது. இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கடந்த 3-ந்தேதி திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து போலீசார் ஆய்வு செய்ததில் அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து வதந்தி பரப்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அமைதியை சீர்குலைக்கும் வகையில் இதுபோன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வடமாநில மக்கள் ரெயில்கள் மூலம் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று காலை முதல் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் வடமாநில மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தங்களின் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் மூட்டைமுடிச்சுகளுடன் ரெயில் நிலையங்களில் காத்திருந்து ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.
இதுகுறித்து, பீகார் மாநிலம் பக்சாராவை சேர்ந்த அக்கீம் குமார் என்ற பயணி கூறுகையில், 'நான் சென்னை பூந்தமல்லி காய்கறி மார்க்கெட்டில் 9 வருடமாக வேலை செய்து வருகிறேன். பீகாரை சேர்ந்த ஒருவரை அடிப்பது போன்ற வீடியோ எனக்கும் வந்தது. அந்த வீடியோ பற்றி எனக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்த என்னுடைய அப்பா, அம்மா பயந்துபோய் என்னை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்கள். நான் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் அவர்கள் பயப்படுகிறார்கள். ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னைக்கு தான் வருவேன்' என்றார்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்சத் அலி, 'ஹோலி பண்டிகையை கொண்டாடவே சொந்த ஊருக்கு செல்கிறேன். நான் தூத்துக்குடியில் கடந்த 3 வருடமாக வேலை செய்து வருகிறேன். எனக்கு இதுவரையில் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. எல்லோரும் என்னுடைய அண்ணன், தம்பி போலவே பழகுகிறார்கள். ஒரு மாதம் ஊரில் இருந்துவிட்டு மீண்டும் இங்கு வருவேன். ஹோலி பண்டிகைக்கு முன்பாக இது எப்போதும் இருக்கும் கூட்டம் தான்' என்றார்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரெயில் நிலையத்தில் நேற்று ஒரே நேரத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் அதிவீரபாண்டியன், உதவி கமிஷனர் சீனிவாசன், தாம்பரம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்று அங்கு திரண்டிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், " வருகிற 8-ந் ஹோலி பண்டிக்கையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம். பண்டிகை முடிந்த பின்னர் மீண்டும் பணிக்கு வருவோம்" என்றனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஜார்கண்ட் நோக்கி சென்ற ரெயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.