என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்"
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர்.
- மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை கலெக்டர் சங்கீதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து காரில் புறப்பட்டு பல்கலைக்கழகம் நோக்கி சென்றார். முன்னதாக இந்த பட்டமளிப்பு விழாவில் முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரரும், நூற்றாண்டை கடந்தவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவேண்டும் என்று கடந்த ஆகஸ்டு 18 மற்றும் செப்டம்பர் 20-ந்தேதிகளில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட், செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பப்பட்டது.
அதனை கவர்னர் நிராகரித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. கவர்னருக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல் இன்று மதுரை வரும் அவருக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.
முன்னதாக சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கவர்னர் மறுத்ததால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி அறிவித்துள்ளார். இதனால் மதுரையில் இன்று பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து கவர்னர் பயணம் செய்யும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வழியில் நாகமலை புதுக்கோட்டையை அடுத்த நான்கு வழிச்சாலையான கீழக்குயில்குடி பகுதியில் திரண்டு நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கவர்னரை கண்டித்து முதலில் கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் தாங்கள் எடுத்து வந்திருந்த கருப்புக்கொடிகளை உயர்த்திப்பிடித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அதனை கவர்னரின் வாகனத்திற்கு முன்னால் சென்ற போலீசார் தடுத்தனர். இதில் போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே மோதல் மற்றும் தள்ளுமுள்ளு உருவானது.
அப்போது இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தமிழக அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் கையெழுத்திட வேண்டும், மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதை கைவிட வேண்டும், மத்திய மோடி அரசு தமிழ்நாடு கவர்னரை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 130 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 3 பேருந்துகளில் ஏற்றி அழைத்து சென்று அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின்னர் கவர்னர் அந்த பகுதியை கடந்து பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
- மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:
தேனி மாவட்டம் குப்ப நாயக்கன்பட்டியை சேர்ந்த முருகன் மகள் மகேசுவரி (வயது 25). இவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கினார்.
விடுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள அறையில் இருந்த மகேசுவரி நேற்று இரவு நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் 2-வது தளத்தில் இருந்து கீழே விழுந்ததில் மகேசுவரி படுகாயமடைந்தார்.
விடுதியில் இருந்த சக மாணவிகள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிதுநேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்சு மூலம் மகேசுவரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மகேசுவரி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேசுவரி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார்.
- இளைஞர்கள் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். அப்போது உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மொழியின் சிறப்பை பிரதமர் மோடி உலகம் முழுவதும் பிரபலப்படுத்துகிறார். ஐநா சபையில் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற தமிழ் இலக்கியத்தை மேற்கோள் காட்டி பிரதமர் தமது உரையை தொடங்கினார். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் மகாகவி பாரதியார் இருக்கை தொடங்கப்படும் என பிரதமர் அறிவித்தார்.
உலகம் முழுவதும் இந்தியர்கள் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக இருக்கிறார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இருக்கிறார். அனைவரும் தாய்மொழியில் கற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் போன்ற மாநில மொழிகள் உட்பட தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் பிரகாசிக்கின்ற இளம் தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம். அவர்கள் இந்தியாவை உலக அளவில் முன்னேற்றுவார்கள். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் மற்றவர்களுக்கு வேலை அளிப்பவர்களாக மாற வேண்டும்.
கொரோனா நெருக்கடியிலிருந்து பல நாடுகள் மீளமுடியாத நிலையில், இந்தியா இதிலிருந்து மீண்டு வந்திருப்பதோடு இதுவரை நாட்டில் கட்டணமில்லாமல் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- விழாவில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி எல்.முருகன் கல்வி துறையை சார்ந்தவர் அல்ல.
- உயர் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி இன்று நடந்தது.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
இந்திய அறிவியல் நிறுவன முன்னாள் இயக்குனர் பலராம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். விழாவில் 1180 மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி மற்றும் கவுரவ பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கி பேசினார். இந்த பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக நேற்று அறிவித்த நிலையில் இன்று அவர் விழாவில் பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி அளித்துள்ள விளக்கத்தில் பொதுவாக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் காமராஜர் பல்கலைக்கழக இணைவேந்தர் என்ற முறையில் பட்டமளிப்பு விழா தொடர்பாக எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.
வேந்தராக உள்ள கவர்னர் அலுவலகமே இதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. விழாவில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி எல்.முருகன் கல்வி துறையை சார்ந்தவர் அல்ல. மேலும் அவர் இணை மந்திரி தான். எனவே பட்டமளிப்பு விழாவுக்கு இதுவரை மத்திய மந்திரி யாரும் அழைக்கப்படாத நிலையில் எனக்கு பிறகு உரையாற்றும்படி மத்திய இணை மந்திரி எல்.முருகனை அழைத்து இருப்பதில் கவர்னருக்கு இருக்கும் நோக்கம் என்ன?
இதனை பார்க்கும்போது மாணவர்களிடையே அரசியலை புகுத்தும் நடவடிக்கையில் கவர்னர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதன் காரணமாக நான் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
உயர் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்காத நிலையில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா திட்டமிட்டபடி இன்று நடந்தது. முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், பதிவாளர் சிவகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர்.
விழாவை தமிழக அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில், மத்திய மந்திரி எல்.முருகன் விழாவில் பங்கேற்றதால் எழுந்துள்ள சர்ச்சை காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரையில் கவர்னரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. மதுரை எம்.பி. வெங்கடேசன், மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக கவர்னரை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல.
- பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மத்திய இணை மந்திரி முருகன் பங்கற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிற நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக் கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.
அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.
துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் அலுவலகம். தற்பொழுது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் அழைப்பிதழ் தயாரிப்பதிலும் தலையிட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளது.
வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவர் முதலில் பேசுவதே மரபு ஆகும்.
ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளது. இணை வேந்தருக்கு பிறகு கௌரவ விருந்தினர் அதன் பிறகு இறுதியாக வேந்தர் என்று அமைந்துள்ளது.
இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கௌரவ அழைப்பாளர் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் அவர் மரபு படி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி Chancellor அடுத்து Pro-Chancellor ஆவார்.
அதன் அடிப்படையிலேயே நிமிடத்திற்கு நிமிட நிகழ்வு (Minutes tominutes ) தயாரிக்கப்பட வேண்டும். இது மரபு மீறும் செயல் மட்டும் அல்லாமல் ஆளுநர் அலுவலகம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் கூட தலையிடத் தொடங்கி உள்ளதை வெளிப்படுத்துகிறது.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உள்ளதால் மரபை பின்பற்றி இறுதியாக இணை வேந்தர் அதன் பின்னர் வேந்தர் என்று நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.
பட்டமளிப்பு விழா நிமிடத்திற்கு நிமிட நிகழ்வில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப் படாததால் இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
- விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடந்தது.
மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தொலைநிலைக் கல்வியின் கூடுதல் தேர்வாணையரின் அலுவலக கண்காணிப்பாளர் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது, விடைத்தாள் கட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனடியாக துணைவேந்தர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரணை நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்ப்பவர்கள் விடைத்தாள் கட்டுகளை திருடிச் சென்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் சார்பில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் ராஜம்பாடியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்களை சிலர் எடைக்கு போட்டு சென்றது தெரியவந்தது.
அந்த விடைத்தாள் கட்டுகள் ஆலம்பட்டியில் செயல்படும் ஒரு பழைய பேப்பர் கடைக்கு அனுப்பட்டு, அதன் பின்னர் மதுரை வீரகனூரில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது விடைத்தாள் கட்டுகளை ரோட்டோரம் கண்டெடுத்து அதனை கடையில் போட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகள் தூண்டுதல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்