என் மலர்
நீங்கள் தேடியது "கூடுதல் மகசூல்"
- நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- ஏக்கருக்கு 160 கிலோ வீதம் செடியின் வேர் அருகில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற மானிய விலையில் ஜிப்சம் பெற்று இடுவீர் என கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நிலக்கடலை நடப்பு ஆண்டில் சுமார் 2700 ஏக்கர் வரை பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மழை பரவலாக பெறப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நிலக்கடலை விதைப்பு மேற்கொள்ள விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெற சில எளிய தொழில்நுட்பங்களான, நிலக்கடலை விதைப்பதற்கு முன்னர் அடியுரமாக ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 35 கிலோ டி.ஏ.பி. 40 கிலோ பொட்டாஷ், என்ற வீதத்தில் கடைசி உழவிற்கு முன்னதாக இட வேண்டும். உடன் ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சம் அடியுரமாக கடைசி உழவின் பின் விதைப்பதற்கு முன் இட வேண்டும்.
அவ்வாறு விதைப்பின் போது ஜிப்சம் இட இயலவில்லை எனில், மண்ணில் ஈருப்பதம் இருக்கும் போது, மானாவரி நிலக்கடலை சாகுபடியில் பயிர் விதைப்பு செய்த நாளில் இருந்து 40 முதல் 75 நாட்களுக்குள்ளும், இறவை நிலக்கடலைக்கு 40 முதல் 45 நாட்களுக்குள்ளும், ஏக்கருக்கு 160 கிலோ வீதம் செடியின் வேர் அருகில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். இத்துடன் ஏக்கருக்கு 4 கிலோ போராக்ஸ் கலநது இட பயிரில் சீரான வளர்ச்சி காணப்படும்.
மேலும், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக்கவையை 3 வாணில மணலுடன் கலந்து மேலுரமாக தெளிப்பதால் பயிருக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களும் குறைபாடின்றி கிடைப்பதால் பயிர் செழித்து வளரும். கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஜிப்சம், நுண்ணூட்ட கலவை ஜி.எஸ்.டி நீங்கலாக 50 சதவீத மானியத்தில் கிடைக்கும். அனைவரும் வாங்கி நிலக்கடலைக்கு இட்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நிலக்கடலைக்கு ஜிப்சம் இட வேண்டியதின் அவசியம் குறித்து வேளாண்மை அலுவலர் பிரியா, விவசாயிகளுக்கு தெரிவித்ததாவது: நிலக்கடலை பயிரின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் "வெளியில் பூ பூத்து மண்ணுக்குள் காய்க்கும்" பயிர் ஆகும். நிலக்கடலையின் பூ கருவுற்ற பின்னர், அதன் ஊசியானது நிலத்தில் இறங்கி காயாக மாறும். இந்த சமயத்தில் ஜிப்சம் இடுவதால் மண்ணின் கடினத்தன்மை நீங்கி, இலகு தன்மை அடைவதுடன் எளிதி கருவுற்ற பூவின் ஊசி அரும்பு முனை உடையாமல் மண்ணுக்குள் இறங்கி அனைத்து பூக்களும் காய்களாக மாறி அதிக மகசூல் பெற வழி செய்கின்றது. ஒற்றை காய்கள் இல்லாமல் இரு விதை காய்களாக உருவாகுவதற்கு ஜிப்சம் உறுதுணை செய்வதால் ஏக்கருக்கு 20 சதவீதம் வரை அதிக மகசூல் பெற இயலும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் சத்து நல்ல முதிர்ச்சியுடன் கூடிய காய்கள் உருவாகவும், பொட்டு திடமாக உருவாகவும் வழி செய்வதால் நல்ல தரமான மணிகள் உருவாகவும் உதவுகின்றது. சல்பர் சத்து அதிக எண்ணெய்ச் சத்துடன் கூடிய நிலக்கடலை உருவாகவும் வழி செய்வதால் நல்ல தரமான மணிகள் உருவாவதுடன் பூச்சி நோயிலிருந்து பயிரைக் காப்பாற்றுகின்றது. ஜிப்சம் மண்ணை இலகுவாக்கி பொலபொலப்பு தன்மையுடன் வைத்து இருப்பதால், மழை நீரை சேமித்து வைக்கின்றது. மேலும், அறுவடை சமயத்தில் காய்கள் அறுபடாமல் முழுமையாக கிடைக்க வழி ஏற்படுகின்றது. எனவே, விவசாயிகள் சிறப்பான மகசூல் பெற உதவி செய்கின்றது. எனவே, இந்த பருவத்தையும், ஈரப்பதத்தையும் உபயோகித்து தொழில்நுட்பங்களை தவறாது பயன்படுத்தி நிலக்கடலையில் கூடுதல் மகசூல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
ஈரோடு:
வேளாண்மையில் தரமான விதைகளை தேர்வு செய்து விதைப்பது அவசியம். இதற்கு விதை பரிசோதனை செய்யப்பட்ட சான்றளிக்கப்பட்ட விதைகளை தேர்வு செய்ய வேண்டும். விதைக்காக சேமிக்கப்பட்ட விதைகள் தரமானதா? என்பதை பரிசோதனை செய்து சேமித்து வைத்தல் அவசியமாகும்.
இதன்படி ஆடிப்பட்டத்துக்கு தானிய பயிர்களை விதைக்கும் விவசாயிகள், நெல் பயிரில் ஐ.ஆர்.20, கோ–43, கோ–51, ஏ.டீ.டி.36, ஏ.டீ.டி.53, மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, சி.ஆர்.1009 (சாவித்ரி), வி.ஜி.டி.1 ரகங்கள், மக்காசோளத்தில், கோ–6, கோ (எச்.எம்.,) 7, கோ (எச்.எம்.)8 ரகங்கள், சோளத்தில் கோ(எஸ்)8, கோ–30, பி.எஸ்.ஆர்.1, பையூர் 2 ரகங்கள், கம்பில் கோ– 7, கோ (சி.யூ.)9 போன்ற ரகங்களை இருப்பு வைத்துள்ள விவசாயிகள், விற்பனையாளர்கள், விதைக்கும் முன் முளைப்பு திறன் பரிசோதனை செய்து தேர்ச்சி பெற்ற விதைகளை விதைத்தால் அதிக மகசூல் பெறலாம்.
விதை பரிசோதனைக்கு நெல்–50 கிராம், மக்காசோளம்– 500 கிராம், சோளம் –100 கிராம், கம்பு– 25 கிராம், ராகி– 25 கிராம், பாகல் மற்றும் புடலை 250 கிராம், பூசணி, சுரைக்காய், வெண்டை, தர்பூசணி– 100 கிராம், தக்காளி, காலிபிளவர், கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ், நுால்கோல், முள்ளங்கி, மிளகாய் – தலா, 10 கிராம் என வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஆனுார் கம்மன் காம்ப்ளெக்ஸ், 2-ம் தளம், 68 வீரபத்திர வீதி, சத்தி சாலை, ஈரோடு–-3 என்ற முகவரிக்கு விதைகளை அனுப்ப வேண்டும் என விதை பரிசோதனை அலுவலர் கேட்டு கொண்டார்.