என் மலர்
நீங்கள் தேடியது "மேயர் பிரியா"
- நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
- ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
சென்னை:
சென்னை பெருநகர மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநகராட்சி வரி விதிப்பு, நிலைக்குழு தலைவர் சர்பா ஜெயாதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வெளியாகி உள்ள அறிவிப்புகளில் சில...
* சென்னை மாநகராட்சியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மின்னணு பலகைகள் பொருத்த திட்டம். இதற்காக மின்னணு பலகைகள் வாங்க ரூ.64.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கென தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை (Display) வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூபாய் 40,000/- வீதம் வழங்கப்படும்.
* சென்னையில் தெருநாய்களுக்கு வெறிநாய்கடி நோய் தடுப்பூசி மற்றும் ஓட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு.
* மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில் இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, (Standard Operating Procedure) திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினிப் பயிற்சிகள் (Tally) இலவசமாக வழங்கப்படும்.
* சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் அவர்தம் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும்.
* சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தினை ஊக்குவித்து வினாடி வினாப் போட்டிகள் நடத்திட பள்ளிகளில் குழு அமைத்து வினாத்தாள்கள் தயாரித்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கிட பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 15,000 முதல் ரூபாய் 75,000 வரை, 211 பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
* 81 சென்னை பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 11மற்றும் 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஆலோசனைகள் வழங்கவும் போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவ மாணவியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 15,000-முதல் ரூபாய் 1,50,000 வரை வழங்குதல்.
* சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் பள்ளிகளைக் கண்டறிந்து, அப்பள்ளிகளில் விருப்பத்துடன் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைக் கொண்டு மண்டலம் வாரியாக வளமிகு ஆசிரியர் குழு (Pooling of Resource Teachers) அமைக்கப்படும். அக்குழுவின் ஆசிரியர்களைக் கொண்டு அம்மண்டலத்திற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
* பெருநகர சென்னை மாநகராட்சியின் 69 நடுநிலைப் பள்ளிகள், 72 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும், கோப்பைகளை வெல்லவும் அவர்களுக்குப் பயிற்சி அளித்து தயார்படுத்தும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர்கள் நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 15,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூபாய் 18,000/ என்ற வகையில், மொத்தம் 141 உடற்கல்வி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்டையில் பணியமர்த்தப்படுவார்கள்.
* 29 சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் விளையாட்டு மைதானங்களில் கூடைப்பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ, கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்களை ஈடுபடுத்தி அவ்விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள எதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 26 சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப் பந்து, எறி பந்து, கால் பந்து, இறகுப் பந்து, கோ-கோ,கபடி, நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 50 சென்னை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவமாணவியர்கள் பயனடையும் வகையில் கூடைப்பந்து மற்றும் எறி பந்து விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்தி பயிற்சிகள் மேற்கொள்ள ஏதுவாக அப்பள்ளிகளின் தேவைகளுக்கேற்ப விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* மண்டலம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும் போது மாணவ மாணவியருக்கு பயணம் மற்றும் உணவுப்படியாக நாள் ஒன்றுக்கு தலா ரூபாய் 500/- வீதம் வழங்கப்படும்.
* முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன் மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூபாய் 30.00 இலட்சம் வீதம் 3 மையத்திற்கு முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
- கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
- பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், ‘போதும்... நிறுத்துங்கள்...’ என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடந்த மாதம் 25-ந்தேதி பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. விழிப்புணர்வு பிரசார திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இதன் ஒருகட்டமாக மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டு இருக்கிறது. இதேபோல நேப்பியர் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆரஞ்சு நிறத்தில் ஜொலித்து வருகின்றன.
இதுதவிர மாநகராட்சி சார்பில் பெண்கள் அதிகம் பணிபுரியும் இடங்கள் மற்றும் பொதுவான பகுதிகளிலும் பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் இந்த பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மேயர் பிரியா சமூக வலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். பாலியல் ரீதியான அத்துமீறல்களை கண்டிக்கும் வகையில், 'போதும்... நிறுத்துங்கள்...' என்று குறிப்பிடுவது போல தனது கையை நீட்டி பிரியா இந்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
அவரது இந்த நூதன விழிப்புணர்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
- முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார்.
மாமல்லபுரம்:
மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், மெய்யூர் குப்பம், புதுப்பட்டினம், உய்யாலி குப்பம், கடலூர் சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆலிக்குப்பம் போன்ற பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மீன்பிடி சாதனங்கள், படகுகள் சேதம் அடைந்தன.
இந்த நிலையில் பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். உய்யாலிகுப்பம் கிராமத்தில் சேதத்தை பார்வையிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் ரூ.18 கோடி முதலீட்டில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது.
அம்மாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தினால் இந்தப் பகுதி கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டது என்று மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதலமைச்சர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார். மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது எம்.எல்.ஏ தனபால், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், எஸ்.வந்த்ராவ், ராகவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
- அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம்.
சேலம்:
ஆத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,
சென்னையில் புயல் காற்றினால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட்டபோது முதல்-அமைச்சர் பாதுகாப்பு காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக்கொண்டு போனார். அது அவர் கட்சிக்காரர்.
ஆனால் உயர்ந்த பதவியான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், திறமையான அதிகாரி. அவர் அந்த காரை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு போகிறார். தி.மு.க. மாவட்ட செயலாளர் போல் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்படுகிறார். இது வேதனையாக இருக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி என்றால் அது ஒரு கவுரவம்.
உயர்ந்த பதவி இருக்கிறவர்கள் இப்படி தாழ்வான நிலைக்கு போகாதீங்க. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
பிற மாநிலத்தில் இருக்கிற மக்கள் எல்லாம் நம்முடைய மாநிலத்தை பார்க்கின்றபோது தரத்தை குறைத்து மதிப்பிடுவாங்க.
அரசு அதிகாரிகள் அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தயவு செய்து இப்படி இருக்க வேண்டாம். அரசு அதிகாரி காரில் தொங்கிக்கொண்டு போனால் மக்கள் எப்படி பார்ப்பார்கள்?
அ.தி.மு.க. தான் எப்போதும் மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம். மீண்டும் அம்மாவுடைய அரசு உங்களுடைய பேராதரவோடு மலரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
- சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.
சென்னை:
2023-24-ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா வருகிற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்கிறார்.
இதற்காக மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.
கடந்த 2 நாட்களாக நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் பட்ஜெட் தயாரிப்பு குறித்து தனித்தனி குழுக்களாக ஆலோசித்து உள்ளனர். வருகிற 25-ந்தேதி அனைத்து குழுக்களுடனான ஆலோசனை கூட்டமும் நடைபெற உள்ளது.
மேலும் மண்டல குழு தலைவர்களிடம், வார்டு வாரியாக வரவு-செலவு கணக்குகள் தாக்கல் செய்யவும், புதிய திட்டங்கள், தேவைகள் குறித்து விரிவான விவரங்கள் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிலைக்குழு உறுப்பினர்கள் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஆலோசனையின் கீழ் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர், மேம்பாலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதன் மூலம் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
2022-23-ம் நிதியாண்டில் சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால் பொதுமக்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை தவிர்க்கும் வகையிலும், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டும் வரும் நிதியாண்டில் சொத்து வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
சென்னை :
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை திருக்குறள் வாசித்து மேயர் பிரியா தொடங்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. பின்னர் கேள்வி நேரமும், நேரமில்லா நேரமும் அடுத்தடுத்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது மக்கள் பிரச்சினைகள் சார்ந்து கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு மேயர் பிரியா அளித்த பதில்களும் வருமாறு:-
கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.) :- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னையில் 348 நவீன கழிவறைகள்(இ-டாய்லெட்கள்) கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றன. ஆனால் நிர்வாக சீர்கேடு, முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டப்பட்ட சில கழிவறைகளும் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
மேயர் பிரியா:- தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள நவீன கழிவறைகளை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து, அதனை சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 358 இடங்களில் புதிதாக நவீன கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் கிடைக்கப்பெறும் இடங்களில் கழிவறை அமைக்கப்பட உள்ளது.
சேட்டு (அ.தி.மு.க.):- புழல் 24-வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் மட்டுமே நடந்து வருகிறது. குறைவான ஊழியர்களே இருப்பதால் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவது கிடையாது?
மேயர் பிரியா:- உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ பணியாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் தேவையான ஊழியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
ஜீவன் (ம.தி.மு.க.) :- திருக்குறள், தீண்டாமை உறுதிமொழிக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து தொடங்கி மாமன்ற கூட்டம் தொடங்கப்பட்டால் அது தமிழுக்கான சிறப்பாக அமையுமே...
மேயர் பிரியா:- அடுத்த மாமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடனே தொடங்கும். இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.
சிவராஜசேகரன் (காங்கிரஸ்) :- செல்லப்பிள்ளை கோவில் தெருவில் சிதிலமடைந்து இருக்கும் சமுதாய நலக்கூடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்படுமா?
மேயர் பிரியா:- உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சரஸ்வதி (இந்திய கம்யூனிஸ்டு) :- எனது 123-வது வார்டில் பள்ளி அமைந்திருக்கும் நடைபாதைகளில் கடைகள் என்ற பெயரில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?. எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை மீன்மார்க்கெட் வளாகத்தில் கழிவறை அமைக்கப்படுமா?
மேயர் பிரியா:- ஆக்கிரமிப்புகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலையில் குறிப்பிடும் மீன்மார்க்கெட் வளாகங்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், மாநகராட்சி பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்று விரைவில் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
குமாரசாமி (விடுதலை சிறுத்தைகள்):- 73-வது வார்டு குக்ஸ் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா?
மேயர் பிரியா:- நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.
கூட்டத்தில் ஏரியா சபை உறுப்பினர்களின் பட்டியலுக்கு அனுமதி அளித்து, வார்டு வாரியாக உதவிப் பொறியாளர்களை செயலாளராக நியமித்து ஏரியா சபைகளை நடத்துவதற்கான அனுமதி கோருவது என்பது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக காந்தி நினைவுதினத்தையொட்டி மன்றக்கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயம் காலை 11 மணிக்கு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு நினைவுகூறும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பேசிய பல கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் போல தங்களுக்கும் மாத ஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள். அப்போது துணை மேயர் மகேஷ்குமார் குறுக்கிட்டு, 'கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது' என பேசினார்.
இதையடுத்து மேயர் பிரியா, 'இதுதொடர்பாக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவில் நல்ல செய்தி வரும்' என்று தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.
இதேபோல கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு தனி கார்கள் வழங்கவேண்டும். இல்லாவிடில் மண்டலக்குழு தலைவர்களுக்காவது வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மயங்கி விழுந்த பெண் கவுன்சிலரால் பரபரப்பு
மாநகராட்சி மன்ற கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் பேசிக்கொண்டே இருந்ததால் வழக்கமான நேரத்தை தாண்டி மன்ற கூட்டம் நடந்தது. இந்தநிலையில் பிற்பகல் 2 மணி தாண்டிய நிலையில் 14-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் பானுமதி உட்கார்ந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார். அவரை சக்கர நாற்காலி மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பசியால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது. சிகிச்சைக்கு பின்னர் பானுமதி வீடு திரும்பினார்.
- சென்னையில் 18 சாலைகள் குப்பையில்லா சாலையாக பராமரிக்கப்படும்.
- மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சியின் சார்பில் தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலமாக நாள்தோறும் வீடுகளுக்கே சென்று குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகளாக பெறப்படுகிறது. முக்கிய பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு சேகரமாகும் குப்பைகள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும், தனியார் கடைகள், அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக சேகரிக்கும் வகையில் பச்சை மற்றும் நீல நிறத்திலான இரண்டு குப்பை தொட்டிகளை வைக்க மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதிவண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகளாக அறிவிப்பதன் மூலம் 74.3 கி.மீ. நீள சாலைகள், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட உள்ளன. இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க ஏதுவாக 442 சிறிய வகையிலான குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
- சென்னையில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 142 பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- அ.தி.மு.க. ஆட்சியில் பூங்காக்கள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு இருக்கிறது என தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்றக்கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த 28-ந்தேதி நடந்தது. அப்போது, மறைந்த தி.மு.க. கவுன்சிலர் ஷீபா வாசுவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மீண்டும் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் மாநகராட்சி மன்றக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மேயர் பிரியா பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
துரை ராஜ் வார்டு குழு தலைவர்:-
என்னுடைய வார்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில், கொரோனா காலத்தின்போது கொரோனா தடுப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் முடிந்துவிட்டதால் இதை அகற்றித்தரவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதை அகற்றி மீண்டும் அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
மேயர் ஆர்.பிரியா:-
கொரோனா காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் பல கட்டிடங்களில் அப்படியே இருப்பதாக பல புகார்கள் வந்துள்ளது. இந்த உபகரணங்களில் எது தேவை என்று பார்த்து பள்ளிகளுக்கும், ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பி பயன்படுத்த உள்ளோம். இதுபோக மீதம் உள்ள பயன்படுத்தப்படாத மருத்துவ உபகரணங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.
42-வது வார்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் ரேணுகா:-
மழைநீர் வடிகாலில் தேங்கியுள்ள தண்ணீரால் கொசு பரவல் அதிகமாக உள்ளது. கடந்த 3 மாதங்களாக 104 வார்டுகளில் சுகாதார ஆய்வாளர்கள் இல்லை. 5 வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதமாக டாக்டர்கள் இல்லை. எனவே, தனிக்கவனம் செலுத்தி பணியிடங்களை நிரப்பவேண்டும்.
மேயர் ஆர்.பிரியா:-
ஒவ்வொரு பகுதியிலும் தீவிர கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. 'லேப் டெக்னீசியன்', டாக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். கூடுதலாக 140 டாக்டர்கள் மாநகராட்சி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
142-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி (வார்டு குழு தலைவர்) :-
கொரோனா காலத்தில் பணிபுரிந்த சுகாதாரத்துறை பணியாளர்களை மாநகராட்சி கவுரவிக்கவேண்டும். இதேபோல், உறுப்பினர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவேண்டும்.
மேயர் ஆர்.பிரியா:-
உறுப்பினர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் குடும்பநல நிதியாக வழங்கவேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசிடம் கேட்டுள்ளோம். இதுகுறித்து அரசிடம் மீண்டும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு மேயர் ஆர்.பிரியா பதில் அளித்தார்.
நேரமில்லா நேரத்தில் கணக்கு குழு தலைவர் தனசேகரன் (தி.மு.க.) பேசியதாவது:-
சென்னையில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 142 பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 57 பூங்காக்கள் தனியாருக்கு தத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள பூங்காக்கள் டெண்டர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் பெரும்பாலானவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேயராக இருந்தபோது உருவாக்கப்பட்ட பூங்காக்கள். இதனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்த பூங்காக்கள் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு இருக்கிறது என தணிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த மாத இறுதியில் பூங்காக்களின் பராமரிப்பு ஒப்பந்தமும் முடிவடைகிறது. எனவே, கடந்த காலங்களில் பூங்காக்களை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களை புதிய டெண்டரில் பங்கேற்க தடைவிதிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்து கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, "ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. 2023-24 ஆண்டுக்கான பூங்கா பராமரிப்பு பணியை எப்படி மேற்கொள்வது? என்பது குறித்து மேயர், துணை மேயர் மற்றும் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மண்டலம் 7 மண்டலங்களில் 233 உட்புற சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.
சென்னை:
சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மண்டலங்களிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை மேயர் பிரியா கூறியதாவது:-
கொரோனா தொற்று அதிகரிப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதன்படி சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை தினசரி பாதிப்பு 60 முதல் 80 ஆக இருந்தது.
நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கொரோனா நடைமுறைகளின் படி தொற்று பாதித்தவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை தொற்று பாதித்தவர்கள் யாரும் மோசமான நிலையை அடைந்து ஆஸ்பத்திரிக்கு செல்லும் அளவுக்கு இல்லை. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் அவர்களை கண்காணித்தும் வருகிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் ஒட்டப்படவில்லை. பொதுமக்களை விழிப்புடனும் தகுந்த பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
- தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.
பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.
- மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
- சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.
சென்னை:
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர் பேசினார்கள்.
92-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்கள் திலகர் பேசும்போது:- எனது வார்டில் குடிநீர் வாரிய இடம், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்த இடங்களை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கிறிஸ்தவ கல்லறை பிரச்சினை பெரிதாக உள்ளது. அங்கு தனிநபர் ஒருவர் உடலை அடக்கம் செய்ய ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கிறார். இந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. சுடுகாட்டில் பிணத்தை புதைக்க, எரிக்க ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கேட்பதாக புகார் வருகிறது.
விதிமுறை மீறி வீடுகள் கட்டப்பட்டு இல்லாத உரிமையாளர்களிடம் சிலர் பணம் கேட்கிறார்கள்.
இதேபோல் சாலையை வெட்டி கேபிள் போடுவதாக குடிநீர், மின்சார வாரிய அதிகாரிகள் எவ்வித தகவலும் இல்லாமல் ஈடுபடுகிறார்கள் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு மேயர் பிரியா பதிலளித்து கூறியதாவது:-
சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மண்டல அளவில் சரி செய்து முடிக்க வேண்டும். மன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது கவுன்சிலர்கள் கூறும் புகார்களை அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும்.
திரும்ப திரும்ப மன்றத்தில் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
ஆனால் ஒரு சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.
கூட்டத்தில் அடையார் காந்திநகர் கால்வாய்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவது, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 29 ஆயிரம் மாணவர்களுக்கு 4 வண்ண கலரில் டீ-சர்ட் வழங்குவது உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
- மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது.
பெரம்பூர்:
சென்னை மாநகராட்சிக குட்பட்ட பகுதிகளில் பொது மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை தீர்க்கும் வகையில் "மக்களைத் தேடி மேயர்" திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதில் மேயர் பிரியா நேரடியாக கலந்துகொண்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த திட்டத்தின் முதல் சிறப்பு முகாம் ராயபுரம் மண்டலத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் 2-வது சிறப்பு முகாம் திரு.வி.க.நகர் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து தங்கள் பகுதியில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து மனுவாக அளித்தனர். குறிப்பாக தெருவிளக்கு, குப்பை அகற்றுதல், குடிநீர்-கழிவுநீர் தொடர்பாக ஏராளமானோர் மனு அளித்து இருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். மேலும் அவர் கோரிக்கை மனு வழங்கிய பொது மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
சிறப்பு முகாமில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அவர் பேசும் பாோது, மக்களைத்தேடி மேயர் திட்டம் 15 மண்டலங்களிலும் நடந்து முடிந்தவுடன் மக்களைத்தேடி மேயர் செல்ல வேண்டும். தற்போது மண்டல அளவில் மேயர் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கிறார். வரும் காலங்களில் பகுதி வாரியாக அவர் மக்களை சந்திக்க வேண்டும். முதல் கட்டமாக குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்வாயையொட்டி வசிப்பவர்கள், சாலையோரம் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்து அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இதில் மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், தாயகம் கவி எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், மண்டல அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.