search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரத்தட்டுப்பாடு"

    • தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
    • சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில் உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை.

    சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் அதிகபட்ச சில்லறை விலைக்கு தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கடலாடி ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
    • கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தில் கடலாடி சாயல்குடி நரைப்பையூர், எஸ்.தரைக்குடி, டி.எம்.கோட்டை, பிள்ளையார் குளம், மேலக்கிடாரம், சிக்கல், ஏ. புனவாசல், பூக்குளம், ஆப்பனூர், உச்சிநத்தம், உள்ளிட்ட கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இச்சங்கங்கள் பயிர் கடன் வழங்கி வருகின்றன. ஆனால் தற்போது குறிப்பிட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தர வேண்டிய உரங்களை வழங்கவில்லை எனவும் இந்தப்பகுதி விவசாயிகள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் விதைத்து பயிர்கள் நன்றாக முளைத்து வந்துள்ளன. இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லை என்றாலும் வயல்களில் தண்ணீர் அதிகமாக உள்ளது. தற்போது வயல்களில் உள்ள நெல் பயிருக்கு யூரியா மற்றும் அடி உரமாக டி.ஏ.பி. போட்டால் பயிர்கள் நன்றாக வளர்ந்து மகசூல் தரும்.

    தனியார்கள் உரங்களை அதிகமாக விற்பனை செய்வதால் விவசாயிகள் இந்தப்பகுதியில் அதிகமா னோர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் மற்றும் டி.ஏ.பி. வழங்கியும் மீதமுள்ள கடன் தொகை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது வழக்கம்.

    கடந்தாண்டு எந்தவித தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கியும் விவசாயிகளுக்கு முழு கடன் தொகையும் வழங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டன.

    ஆனால் இந்த ஆண்டு இப்பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கள அலுவலர்களால் முறையாக மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இப்பகுதி விவசாயிகளுக்கு முறையாக உரங்கள் வழங்காமல் கடன் தொகை முழுவதும் விவசாயிகளுக்கு வழங்கா மலும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் விவசாயம் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.

    நல்ல மழை பெய்து கொண்டிருக்கும் போது வயல்களில் தண்ணீர் இருக்கும்போது உரிய நேரத்தில் உரங்கள் இடவில்லை என்றால் பயிர்கள் வளர்ச்சி குன்றி மகசூல் தராது. பயிர்க்கடன் மேளாவை நடத்தினால் மட்டும் போதாது. உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதையும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் வழங்கினால் மட்டுமே விவசாயிகள் பயன்பெறுவர். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கினால் அவர்கள் உரிய நேரத்தில் கடன்களை கூட்டுறவு கடன் சங்கங்களில் திருப்பி செலுத்துவதற்கு ஏதுவாக இருக்கும். விவசாயிகள் பணம் செலுத்தினால் மட்டுமே கூட்டுறவு கடன் சங்கங்கள் வளர்ச்சி அடையும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உரத்தட்டுப்பாட்டை போக்கி விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத்தொகையை பெற்றுத் தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கலந்து கொள்ள விவசாய சங்க கூட்டு இயக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் மற்றும் விவசாயிகள் உர சாக்குகளை சட்டைக்கு மேல் அணிந்து கொண்டும், கையில் கரும்புகளோடும் வந்தனர்.

    பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர்.இதையடுத்து அவர்கள் தங்களது மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது ;-

    குறுவை சாகுபடி பணிகள் டெல்டா மாவட்டங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால் தற்போது உரத்தட்டுப்பாடு கடுமையாக நிலவி வருகிறது. மேலும் அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே உரத்தட்டுப்பாட்டை போக்கி விலையை கட்டுப்படுத்த வேண்டும். தஞ்சை குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.21 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும். மேலும் பருத்தி கொள்முதலை அரசே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. விவசாய சங்க நிர்வாகிகளின் நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×