என் மலர்
நீங்கள் தேடியது "பாம்பன் புதிய பாலம்"
- பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் வருகிறார்.
- அதன்பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
ராமேஸ்வரம்:
ராமநவமியான வருகிற 6-ம் தேதி அன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தைத் தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் ரெயில்வே பாலம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தமிழக எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே செய்து வருகிறது.
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின், பிரதமர் மோடி ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் தரிசனம் செய்கிறார்.
இந்நிலையில் , பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏப்ரல் 4 முதல் 6 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை குந்துகால் துறைமுகத்திற்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகுகளை பாம்பனை விட்டு அப்புறப்படுத்தி தங்கச்சிமடம் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 6-ந்தேதி பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையிலும் கப்பல் மற்றும் ரெயில்கள் வந்து செல்லும் வகையிலும் கடந்த 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 111 ஆண்டுகள் கடந்த நிலையில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில்களை இயக்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன.
பலமிழந்த பழைய பாலத்தின் உறுதித்தன்மையில் ஏற்பட்ட கேள்விக்குறியால் அதன் அருகிலேயே புதிய ரெயில் பாலம் அமைக்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையே பழைய ரெயில்வே பாலம் தனது ரெயில் சேவைகளை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறுத்திக்கொண்டது.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் மண்டபம் வரை ரெயிலில் பயணித்து பின்னர் அங்கிருந்து பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களில் பாம்பன் ரோடு பாலம் வழியாக ராமேசுவரம் சென்று வருகிறார்கள்.
இதற்கிடையே ரூ.550 கோடி மதிப்பிட்டில் புதிய ரெயில் பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்து உள்ளது. மேலும் புதிய பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் சென்று வரும் வகையில், செங்குத்து வடிவிலான தூக்கு பாலமும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தின் வழியாக ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான பல்வேறு கட்ட ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதன் தொடர்ச்சியாக வருகிற 6-ந்தேதி ராமநவமியன்று பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. ராமாயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய ராமேசுவரத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாம்பன் புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைக்கிறார்.
பின்னர் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அக்னி தீர்த்தம் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள 21 புண்ணிய தீர்த்தங்களும் சேகரிக்கப்பட்டு அது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.
தொடர்ந்து அவர் கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை மன முருகி வேண்டுகிறார். சுமார் 20 நிமிடங்கள் வரை அவர் கோவில் பிரகாரம் உள்ளிட்டவற்றை சுற்றி வருகிறார்.
பின்னர் அங்கிருந்து ராமேசுவரம் புதிய பஸ் நிலையம் அருகே சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம் பகுதிக்கு வருகை தருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு ராமேசுவரம்-தாம்பரம் இடையே இயக்கப்படும் பாம்பன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் சேவையை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றுகிறார். இந்த விழாவில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
இதனைத்தொர்ந்து, அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் தீவிர மடைந்துள்ளது. விழா நடை பெறும் ஆலயம் தங்கும் விடுதி வளாகத்தில் 120 மீட்டர் நீளத்தில் வெயிலை தாங்கி நிற்கும் அளவிற்கு 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், வருகிற 6-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வரை தனி விமானத்தில் வருகை தந்து அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்படர் மூலம் மண்டபம் கேம்ப் பகுதியில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை தருகிறார்.
இதன் பின்னர் சாலை மார்க்கமாக பாம்பன் ரோடு பாலத்தில் அமைக்கப்படும் தற்காலிக மேடையில் நின்றவாறு பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், பாலத்தின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலத்தையும் திறக்கிறார். அப்போது அந்த வழியாக இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து செல்வதை சுமார் 12 நிமிடங்கள் மேடையில் இருந்தவாறு பார்த்து ரசிக்க உள்ளார்.

பிரதமர் வருகை தரு வதையொட்டி, கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் மண்டபம் கேம்ப் ஹெலி காப்டர் இறக்கு தளத்தில் நேற்று மாலை இறக்கி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
இதன் பின்னர் உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் சென்றது. இதே போன்று தொடர்ந்து சோதனை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்ததனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து பிர தமரின் பாதுகாப்பு அதிகாரிகள் வருகை தந்து ராமேசுவரம், பாம்பன் பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
- பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும்.
மதுரை:
ராமேசுவரம்-மண்டபம் இடையேயான பாம்பன் ரெயில் பாலம் கடந்த 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. 105 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 1988-ம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை, இதுதான் ராமேசுவரம்-மண்டபம் இடையேயான தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்து வந்தது. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. எனவே ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் துரித ரெயில் போக்குவரத்துக்கு வசதியாக பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி பாம்பன் கடலுக்கு நடுவே ரூ.535 கோடி செலவில் 2.05 கி.மீ தொலைவுக்கு புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகளில் ரெயில்வே கட்டுமான துறையின் துணை அமைப்பான ரெயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் மும்முரமாக இயங்கி வருகிறது. அங்கு இதுவரை 84 சதவீத பணிகள் முடிந்து விட்டன. பாம்பன் கடலில் புதிய பாலம் அமைப்பதற்காக பல்வேறு சீதோஷ்ண சூழ்நிலை-சிரமங்களுக்கு நடுவே 101 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 99 இணைப்பு கர்டர்கள் அமைக்க வேண்டும். பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இதுவரை 76 இணைப்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அடுத்தபடியாக கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கர்டர் தயாரிக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு கர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் கப்பல் செல்வதற்காக, இருபுறமும் உயரும் கிரேன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பாம்பன் பாலப்பணிகள் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் ரெயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
+2
- ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
- நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மண்டபம்:
ராமேசுவரம் தீவினை இந்தியாவுடன் இணைக்கும் பாம்பன் ரெயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள், தூக்குப் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக புதிய ரெயில் பாலம் கட்டுவதற்கு பிரதமர் மோடி 1.03.2019 அன்று அடிக்கல் நாட்டினார். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.
2,078 மீட்டர் நீள புதிய பாலம், கடல் மட்டத்திலிருந்து 7 மீட்டர் உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. 101 தூண்களைக் கொண்ட இந்த பாலத்தில் 60 அடி நீளம் கொண்ட 99 இணைப்பு கர்டர்கள் பொறுத்தப்பட்டு பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக 77 மீட்டர் நீளம், 27 மீட்டர் உயரத்திற்கு ஹைட்ராலிக் லிப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்தின் கட்டுமான பணிகள், தண்டவாளங்கள், கர்டர்கள் மற்றும் பாலத்தின் நடுவே கப்பல்கள், படகுகள் கடந்து செல்வதற்கு செங்குத் தூக்குப் பாலத்தை பொறுத்தும் பணிகள் முடிந்து, அதனை தூக்கி இறக்கும் சோதனை, ரெயில்கள் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இறுதிகட்டமாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் சார்பாக இரண்டு நாள் ஆய்வு பாம்பனில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் தொடங்கியது. இதில் ரெயில்வே அதிகாரிகள், பாம்பன் அக்காள் மடத்தில் உள்ள ரெயில்வே கேட்டில் இருந்து டிராலி மூலம் சென்று பாம்பன் ரெயில் நிலையம், பாம்பன் தெற்குவாடி ரெயில்வே கேட், புதிய பாம்பன் பாலம், புதிய பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப்பாலம், இதற்காக நடுக்கடலில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறை, பாலத்தில் உள்ள சிக்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும், சின்னப்பாலம் ரெயில்வே கேட்டில் இறங்கி, புதிய வழித்தடத்தின் செயல் பாடுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வழிகாட்டு முறைகள் குறித்தும் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். காற்றின் வேகம், நிலையை கண்காணிப்பதற்கான அனிமோ மீட்டர் அமைப்பு மற்றும் பாலத்தின் சிக்னல் அமைப்புகளையும் அவர் ஆய்வு செய்தார்.
தூக்குப் பாலத்தை இயக்கும் ஆபரேட்டர் அறைக்குள் சென்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். பின்னர் தூக்குப்பாலத்தில் இருந்து மண்டபம் நோக்கி உள்ள ரெயில் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து மாலை 6 மணிக்கு முதல்கட்ட ஆய்வை நிறைவு செய்தார். சுமார் 10 மணிநேரம் நடந்த ஆய்வில் புதிய பாலத்தில் ரெயிலை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து உறுதி செய்யப்பட் டது. மேலும் தூக்கு பாலத்தை திறந்து அதன் வழியாக கப்பல்களை இயக்கியும் சோதனை செய்யப்பட்டது.

இரண்டாவது நாளான இன்று முக்கிய அம்சமாக மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து புதிய பாம்பன் ரெயில் பாலம் வழியாக பாம்பன் ரெயில் நிலையம் வரையிலும் ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 பெட்டிகளுடன் 80 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது. குறிப்பாக செங்குத்து தூக்கு பாலத்தின் அதிர்வுகள், உறுதித்தன்மை தொடர்பாக பாதுகாப்பு ஆணையர் ரெயில் பயணம் செய்தவாறு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி அமித்குமார் மனுவால், மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் ஷரத் ஸ்ரீவத்சவா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மத்திய ரெயில்வே அமைச்சகத்திடம் விரைவில் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த மாத இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலம் திறப்பு விழா தேதி முறைப்படி அறிவிக்கப்படும், என்றும் அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது.
- பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி பூபதி ராஜூ சீனிவாச சர்மா வந்தார். அவர் டிராலியில் சென்று, பாலத்தை பார்வையிட்டு மையப்பகுதிக்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூட கட்டப்பட்டுள்ள ஆபரேட்டர் அறை, அங்குள்ள தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார்.
பின்னர் தூக்குப்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட் மூலமாக உயரே சென்று தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்காக அமைக்கப்பட்ட சாதனங்களையும் பார்வையிட்டார். அப்போது ஆய்வுக்காக தூக்குப்பாலம், ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலத்தை ஆய்வு செய்தார்.
பாலத்தில் செய்துள்ள வசதிகள் குறித்து ரெயில்வே கட்டுமான நிறுவன பொறியாளர்கள், மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர். பின்னர் அங்கிருந்து டிராலி மூலம் புறப்பட்டு பாம்பன் வந்தார். தொடர்ந்து ராமேசுவரம் சென்றார். புதிய ரெயில் பாலத்தில் ஒரு சில குளறுபடிகள் உள்ளதாக ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை அளித்திருந்த நிலையில், மத்திய கனரக தொழில்துறை இணை மந்திரி, ஆய்வு செய்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
- ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
- அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.
இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.
ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-
ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
- பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் நூற்றாண்டு பழைய ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்து 2022-ம் ஆண்டு பயணிகளுடன் பழைய ரெயில் பாலத்தில் ரெயிலை இயக்க அதன் நிர்வாகம் தடை விதித்தது.
மேலும் ஷெர்ஜர் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக வழுவி ழந்ததால் கடந்த 2022-ம் ஆண்டு பழைய ரெயில் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி யில் பாம்பன் பழைய ரெயில் பாலத்தில் ரெயில் சேவை நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதன் காரணமாக ராமேசுரம் வரை செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபம் ரெயில் நிலையம் வரை மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாம்பன் கடலில் சுமார் ரூ.545 கோடி மதிப்பில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்டு செங்குத்து வடி வில் திறந்து மூடக்கூடிய வகையில் தூக்கு பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இரட்டை வழித்தட மின்சார ரெயில் பாலத்திற்கான பணிகள் தூரிதப்படுத்தப்பட்டு கடந்தாண்டு இறுதியில் நிறைவு பெற்றது. பல்வேறு ஆய்வுப் பணிகளுக்கு பிறகு புதிய ரெயில் பாலம் தற்போது திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைத்து பயணிகளுடன் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாம்பன் புதிய ரெயில் பாலம் அனைத்து சோதனை ஓட்டங்களையும் கடந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.
இந்த புதிய பாலத்தை பிப்ரவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வர மத்திய ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி பாம்பன் புதிய ரெயில் திறப்பு விழா தைப்பூச தினமான வருகிற 11-ந்தேதியோ அல்லது அதற்கு முந்தைய நாளாகவோ இருக்க வாய்ப்புள்ளது.
அன்றைய தினம் இந்த புதிய பாம்பன் ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க இருக்கிறார்.
இதையொட்டி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் இருந்து கப்பல் மூலம் பிரதமர் மோடி பாம்பன் வருகை தருகிறார். பின்னர் அங்கிருந்து கப்பலில் சென்றவாறு, பழைய பாலம் மற்றும் புதிய பாலத்தை பார்வையிடுகிறார்.
இதையடுத்து புதிய ரெயில் பாலத்தை கொடியசைத்து போக்குவரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அந்த ரெயிலில் பயணம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விழாவை ராமேசுவரம் அல்லது மண்டபத்தில் வைத்து நடத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றார்.
அந்த வகையில் இன்று காலை 11.30 மணிக்கு சோதனையின் ஒரு கட்டமாக இந்திய கடலோர காவல் படை கப்பல் ஒன்று பாம்பன் தூக்கு பாலத்தை திறந்து அந்த வழியாக கடந்து சென்றது.
மேலும் முன்னேற்பாடு பணிகளில் ஒன்றாக இன்று அதிகாலையில் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் வரை பயணிகள் இன்றி என்ஜினுடன் 18 ரெயில் பெட்டிகள் இணைக் கப்பட்டு புதிய ரெயில் பாலத்தில் இயக்கப்பட்டது.
முன்னதாக நேற்று இரவு கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் புறப்பட்ட விரைவு ரெயில் இன்று அதிகாலை 5 மணிக்கு மண்டபம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பயணிகள் அனைவரும் மண்டபம் ரெயில் நிலையத்தில் இறங்கிவிடப்பட்டு பெட்டிகள் பூட்டப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு பயணிகள் இன்றி 18 பெட்டகளுடன் அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
சுமார் 60 கி.மீ. வேகத்தில் புதிய ரெயில் பாலம் வழியாக சீறிப்பாய்ந்து 6.25 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரயில் பெட்டிகள் முழுமையாக சுத்தம் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 1 மணிக்கு மேல் மீண்டும் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம் ரெயில் நிலையம் சென்றடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 18 பெட்டிகளுடன் பாம்பன், தங்கச்சிமடம் ஊருக்குள் ரெயில் சத்தம் கேட்டதால் மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- பாம்பன் புதிய தூக்கு பாலம் 70 மீட்டர் நீளத்தில், 500 டன் எடையுடன் கூடியதாக இருக்கும்.
- பாம்பன் பழைய பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலம், இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் தன்மை உடையது.
தமிழகத்துடன் ராமேசுவரம் தீவை இணைக்கும் வகையில், பாம்பன் கடலுக்கு நடுவே 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரும்பு ரெயில் பாலம் உள்ளது. இதன் வழியாக ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் பாம்பன் கடலுக்கு நடுவே மேலும் ஒரு புதிய ரெயில் பாலம் கட்டுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. இதற்காக 269 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
பாம்பன் பழைய பாலத்தின் நடுவே உள்ள தூக்கு பாலம், இரண்டாகப் பிரிந்து மேலே எழும்பும் தன்மை உடையது. இதன் வாயிலாக அங்கு கப்பல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஆனால் தற்போது கட்டப்பட்டு வரும் பாம்பன் புதிய பாலத்தின் நடுவே, செங்குத்தாக மேலே எழும்பும் வகையில் லிப்ட் வடிவ தூக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கடலின் நடுவே பெரிய கப்பல் போக்குவரத்து நடத்த முடியும்.
பாம்பன் கடலுக்குள் மொத்தம் 101 தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 20 மீட்டர் நீளம், 30 டன் எடை உடைய 77 கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதுவரை 65 கர்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. இன்னும் பத்து நாட்களில் மீதமுள்ள 12 கர்டர்கள் பொருத்தப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் புதிய தூக்கு பாலம் 70 மீட்டர் நீளத்தில், 500 டன் எடையுடன் கூடியதாக இருக்கும். அவற்றை ஒருங்கிணைந்து இயக்க வசதியாக, பாம்பன் கடலுக்குள் 2 மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஆப்பரேட்டர் அறை, மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் மின் கேபிள்கள் வைப்பறைகள் ஆகியவை இடம் பெற்று இருக்கும். பாம்பன் புதிய தூக்கு பாலத்தின் கட்டுமான முன்னோட்ட பணிகள், சத்திரக்குடி இரும்பு கட்டுமான தொழிற்சாலையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாம்பன் கடலின் நடுப்பகுதியில் செங்குத்தான தூக்கு பாலம் வேலை முடிந்த பிறகு, அங்கு மீதம் உள்ள 22 கர்டர்கள் பொருத்தப்படும் என்று தெரிகிறது.
பாம்பன் புதிய பாலத்துக்கான ஆரம்ப கட்ட திட்ட மதிப்பீடு ரூ.269 கோடியாக இருந்தது. அதன் பிறகு கட்டுமான பொருட்கள் விலையேற்றம் காரணமாக, தென்னக ரெயில்வே மேலும் ரூ. 113 கோடி ஒதுக்கீடு செய்தது. இருந்த போதிலும் அங்கு பணிகளை இறுதி செய்ய, மேலும் 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான திட்டமதிப்பீடு, ஏற்கனவே ரெயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுவும் கூடிய விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், "பாம்பன் பாலத்தில் 70 சதவீதம் பணிகள் முடிந்து விட்டன. மீதம் உள்ள பணிகள், ஜனவரி மாதத்துக்குள் முடிவடையும். எனவே பாம்பன் புதிய பாலம், அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.