search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி பெருந்திருவிழா"

    • இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு. அதிலும் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட பெருந்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு 418-வது ஆனி பெருந்தோ் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

    இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திர தேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றி வர, ஆனிப்பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட ஆனிப்பெருந்திருவிழாவில் எழுந்தருளும் பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது.

    கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆகியோர் கோவிலின் பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப் பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30-க்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடிமரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்ச புராணம் பாட, கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுப்பதும், ரத வீதிகளில் உலா நடைபெறுவதும் வழக்கம்.

    இதனையொட்டி கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமயச்சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மிகக் கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று ஆகும்.

    விநாயகர் திருவிழா

    48 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முதல் உற்சவமான விநாயகர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமர்சையாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்காக அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிப் பட்டம் கோவில் உட்பிரகா ரத்தில் பல்லக்கில் வீதி உலா கொண்டு வரப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் விநாயகருக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் வீதிஉலாவும் நடைபெறும். இதனைத்தொடர்ந்து 11-ந் தேதி முதல் மூவர் உற்சவமும், அதனைத் தொடர்ந்து 16-ந் தேதி முதல் சந்திரசேகரர் பவானி அம்பாள் உற்சவமும் நடைபெறுகிறது.

    தேரோட்டம்

    பின்னர் 24-ந்தேதி ஆனிப்பெரும் திருவிழா கொடியேற்றம் சுவாமி சன்னதி முன்புள்ள பெரிய கொடிமரத்தில் நடை பெறுகிறது. ஜூலை 2-ந்தேதி ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட சுவாமி நெல்லையப்பர் தேரோட்டத் திருவிழா நடைபெறுகிறது.

    இன்று காலை விநாயகர் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பெரியகுளத்தில் கவுமாரியம்மன்கோவிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
    • வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

    பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவினை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

    பெரியகுளம் வடகரையில் உள்ள பூசாரியின் வீட்டிலிருந்து கம்பம் முளைப்பாரிகள் ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கவுமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கம்பத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்த பின் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து திருவிழா சாட்டுதழ் நிகழ்வும் நடைபெற்றது. இந்த சாட்டுதலுக்கு பின்னர் வருகின்ற 11-ம் தேதி கோவிலில் கொடியேற்றம், அதனை தொடர்ந்து அன்றிலிருந்து சாமி சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வானங்கள் மூலம் திருவீதி உலா வரும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19-ம் தேதி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

    வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும். கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நரசிம்மன் சிறப்பாக செய்திருந்தார்.

    ×