search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீருடைப் பணியாளர்"

    • தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும்.
    • தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு ஆணையத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய சூழலில், ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பணியில் இருக்கும் அதிகாரியாக இருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்வது, அவர் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிக்கு எந்தவித பொறுப்புடைமையும் கிடையாது. பொறுப்புடைமையை நிர்ணயிக்க முடியாத அதிகாரி ஒருவரை இந்த பதவியில் எப்படி நியமிக்க முடியும்?

    சீருடைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் அளவுக்கு தமிழக காவல்துறையில் பொறுப்பான அதிகாரிகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை. தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மத்திய அரசுப் பதவிகளில் உள்ளவர்கள் தவிர, தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி நிலையில் உள்ள பல அதிகாரிகளுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் பலர் காவல் ஆய்வாளர் அல்லது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் வகிக்கக் கூடிய கண்காணிப்பு அதிகாரி என்ற பணியில் மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பணியை வழங்குவதை விடுத்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டிய தேவை என்ன?

    அதைவிட குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செய்தி, சுனில்குமார் அவர்களை இந்தப் பதவியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே அந்த பதவியில் இருந்த சீமா அமர்வால் என்ற டி.ஜி.பி. நிலையிலிருந்த பெண் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்தது தான். சீமா அகர்வால் டி.ஜி.பி. நிலையிலான அதிகாரி. காவல்துறையில் அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர். அவரை இடமாற்றம் செய்வதற்கு எந்த தேவையும் இல்லை. ஆனால், அவரை இடமாற்றம் செய்தது மட்டுமின்றி, டி.ஜி.பி நிலையிலான பதவியில் அமர்த்துவதற்கு மாறாக சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி. என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இ.கா.ப. அதிகாரி ஒருவருக்கு பதவி வழங்குவதற்காக இத்தனை சமரசங்களையும், வளைப்புகளையும் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.

    சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுனில்குமார், காவல்துறை பணியில் இருக்கும் போது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெளிநாடுகளில் அவருக்காக முதலீடு செய்ததாக கூறப்படும் தொழிலதிபர் ஒருவருக்கும் பாலமாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு சுனில்குமார் மீது உண்டு. அந்த அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, சுனில்குமாருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. அதற்கு நன்றிக்கடனாகவே சுனில்குமாருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றிக்கடனுக்காக பதவிகளை வழங்க அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல. இது தவறான முன்னுதாரமான அமைந்துவிடும். இதை உணர்ந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ படிக்கும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தமிழ்நாடு காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவ லர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் போன்ற பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு தயா ராகும் போட்டி தேர்வா ளர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடத்தப்பட வுள்ளது. மேலும் விவரங்களுக்கு 94990 55908 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது 2 பாஸ்போட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்துக்கொள்ளலாம். மேலும் இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க முதல் நாளான இன்று பலர் திரண்டனர்.
    • தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 2 -ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைத்துறையில் உள்ள 2-ம் நிலை சிறை காவலர், தீயணைப்புத்துறையில் உள்ள தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு -2022 அறிவிப்பு கடந்த 30-ந்தேதி வெளியிட்டுள்ளது.

    விண்ணப்பப்பதிவு தொடங்கியது

    இதில் 2-ம் நிலை ஆயுதப்படை போலீசார் 2,180 , சிறப்பு காவல் படை போலீசார் 1091 , 2-ம் நிலை சிறை காவலர் 161, தீயணைப்பாளர்கள் 120 என மொத்தம் 3552 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த தேர்வுக்கு இன்று முதல் இணையதள வழியாக விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதால், எஸ்.எஸ்.எல்.சி. முதல் முதுநிலை பட்டம் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.

    உதவி மையம் ஏற்பாடு

    இதில் சேலம் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், இளம்பெண்களுக்கு உதவ இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை சேலம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் உதவி மையம் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    அதன்படி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நாளில் பலர் கல்வி, மதிப்பெண் சான்றிதழ்களுடன் நேரில் வந்தனர். இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து போலீசார் செயல் விளக்கம் அளித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியம் அறிவித்துள்ள 3552 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. விண்ணப்பிக்க உதவி வேண்டுவோர் இந்த மையத்தை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக அணுகலாம். மேலும் விபரம் பெற 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம் என கூறினர்.

    சம்பளம் ரூ. 67 ஆயிரம்

    எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகளில் தேர்வாகி பணியில் சேரும் நபர்களுக்கு ஊதியம் ரூ. 67 ஆயிரத்து 100 வழங்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    ×