search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓவியங்கள்"

    • இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.
    • இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாரூர் கோவில்-நின்ற கோலத்தில் நந்தி

    சிவாலயங்களில், பொதுவாக நந்தி சிலைகளை படுத்த கோலத்திலேயே காண முடியும்.

    ஆனால், திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சப்த விடங்கத்தலங்களில் மட்டும் நந்தியை நின்ற கோலத்தில் காணலாம்.

    மேலும், இவையனைத்தும் உலோகச் சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு பார்த்து அமைந்த கோவில்களில், சுவாமி வீதி உலாவிற்கு கிழக்கு கோபுரம் வழியாகத்தான் வெளியே செல்வார்.

    ஆனால், இங்கு ஈசான்ய திசையிலுள்ள விட்டவாசல் வழியாக வெளியே செல்கிறார்.

    இந்திரனிடம் பெற்ற இலிங்கத்தை முசுகுந்த சக்கரவர்த்தி இங்கு பிரதிஷ்டை செய்தார்.

    அதை முசுகுந்தனுக்கு கொடுத்த இந்திரன், மீண்டும் அதை தேவலோகம் கொண்டு சொல்ல விரும்பினான்.

    எனவே, தியாகராஜர் கிழக்கு வாசல் வழியாக உலா வரும் போது, அவரை மீண்டும் கொண்டு சென்று விடலாம் என நினைத்து, அங்கேயே அவன் காத்திருப்பதாக ஐதீகம்.

    இந்திரனிடமிருந்து தப்புவதற்காக, தியாகராஜரை பக்தர்கள் ஈசான்யத்தில் உள்ள விட்டவாசல் வழியாக உலா கொண்டு செல்கின்றனர்.

    பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்குள் நுழையக் கூட கிழக்கு வாசலை தவிர்த்து விட்டு, வடக்கு மற்றும் மேற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்கு வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் இத்தலம் தான் மிக அதிகமாக 353 பாடல்களைப் பெற்றுள்ளது.

    சம்பந்தர் 55 பாடல், அப்பர் 208 பாடல், சுந்தரர் 87 பாடல், மாணிக்கவாசகர் 3 பாடல்கள் பாடியுள்ளனர்.

    • நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.
    • அந்த வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனை தேரில் ஏற்றி கொன்றான் சோழன்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில்- பசுவிற்கு நீதி வழங்க மகனை இழந்த மனுநீதி சோழன் ஓவியம்

    தேவலோகத்தில் யார் நேர்மையானவர் என்ற போட்டி ஏற்பட்டது.

    எமதர்மராஜன் "நானே நேர்மையாளன்" என்றார்.

    நாரதரோ, பூமியில் மனுநீதிச்சோழனே நேர்மையானவன் என்றார்.

    இதனால் எமன் பசுவாக வடிவெடுத்து, ஒரு கன்றுடன் திருவாரூர் ராஜவீதிக்கு வந்தார்.

    அப்போது மனுநீதி சோழனின் மகன் வீதிவிடங்கன் தேரில் வந்தான்.

    வேகமாக வந்த தேரில் சிக்கி, கன்று இறந்தது.

    இதையறிந்த பசு மன்னனின் அரண்மனைக்கு சென்று நீதி கேட்டது.

    கன்றை இழந்த பசு எவ்வளவு வேதனைப்படுமோ, அதே வேதனையை தானும் படவேண்டும் என்பதற்காக தன் மகனைத் தேர்ச்சக்கரத்தில் ஏற்றி கொன்றான் சோழன்.

    பசு வடிவில் இருந்த எமதர்மராஜா மனுநீதிச்சோழனுக்கு காட்சி கொடுத்து "நீயே நேர்மையானவன்" எனக் கூறி மறைந்தார்.

    இந்த காட்சியை விளக்கும் கல்தேர் கோவிலின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

    • புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
    • வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை வழங்கி உள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    பெங்களூரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் சாஸ்தா ரமேஷ். இவர் தான் வரைந்த இந்திய பாரம்பரிய ஓவியங்களை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜிடம் வழங்கினார். இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

    மாணவர் சாஸ்தா ரமேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்க்க வந்தபோது இங்குள்ள சிற்பங்களைப் பார்த்து இதே போன்று பாரம்பரியம் மிக்க ஓவியங்களை வரைய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன்படி, இந்திய பாரம்பரிய ஓவியங்களான 13 வகையான மயில்களை வாட்டர் கலரில் வரைந்து, புத்தக வடிவில் நியூயார்க் நகரில் உள்ள ப்ரோக்ளின் ஓவிய நூலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

    இந்த ஓவியப் புத்தகம் நியூயார்க் நூலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 13 வகையான ஓவியங்களில், பல நூறு ஆண்டுகள் பழமையான வார்லி, மதுபானி, கலம்காரி மற்றும் கோண்டுவகை என 4 வகை ஓவியங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்கி உள்ளார். இதைத் தொடர்ந்து ஓவிய ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்திய பாரம்பரிய ஓவியங்களைப் பற்றியும், வகுப்புகள் எடுக்கவும், இது பற்றிய புத்தகம் எழுதவும் முயற்சி மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் பன்னீர்செல்வம், அருங்காட்சியக பணியாளர்கள் பெருமாள், செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் போது 13 வகையான ஓவியங்கள் குறித்து அருங்காட்சியகத்தில் கல்வெட்டு பயிற்சி பெற்று வரும் 3-ம் ஆண்டு வரலாற்று மாணவ, மாணவிகளுக்கு சாஸ்தா ரமேஷ் விளக்கம் அளித்தார்.

    • திருப்பூரின் சிறப்பு வேளாண்மை தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டன.
    • பள்ளிகளின் சுவர்களிலும் விடுதலை போராட்ட தியாகிகள் வரையப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடம், சுவர்களில் விளம்பரம் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்கள் சகஜமாக காணப்பட்டது. இதனால் சுவர்கள் அலங்கோலமாக காணப்பட்டன.

    இதையறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் மைய அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களின் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையும் பணியை மேற்கொண்டனர். மைய அலுவலக சுற்றுச் சுவரில் திருப்பூரின் சிறப்பு மற்றும் உழவர் சந்தை சுற்றுச்சுவரில் வேளாண்மை தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டன.

    மாநகராட்சி பள்ளிகளின் சுவர்களிலும் விடுதலை போராட்ட தியாகிகள், வரலாற்று கதாபாத்திரங்களின் உருவங்கள் வரையப்பட்டன. இதனால் பள்ளி சுவர்களில் விளம்பரங்கள், போஸ்டர்கள் போன்ற அலங்கோலம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

    • 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.
    • காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது.

    மானாமதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் பாண்டியன், ஓவிய ஆசிரியர். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டியுள்ளார்.

    64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண் கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார்.

    பல ஆண்டுகளுக்கு முன்பு மக்களின் தொலை தொடர்பு சாதனமாக அஞ்சல் அட்டைகள் பயன்படுத்தப்பட்டது. சாதாரண மக்களும் அஞ்சல் அட்டைகள் மூலம் தகவல்களை பரிமாறி கொண்டனர். மேலும் தங்களது படைப்புகளை அஞ்சல் அட்டைகளில் அனுப்பும் வழக்கமும் இருந்து வந்தது.

    தற்போது நவீன தொழில் நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகி விட்டது. காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முன்பு போல் மக்கள் அதனை பயன்படுத்துவதில்லை.

    எனவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் படங்களை வரைந்துள்ளேன்.

    தொடர்ந்து பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரைய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுவரில் ஓவியம் வரையும் பணியை ‘திருநங்கை தூரிகை குழு’ என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர்.
    • திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் மற்றும் எண்ணூர் மக்கள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து எண்ணூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வெளிப்புற சுவற்றை வர்ணம் தீட்டி அழகுபடுத்த முடிவு செய்தனர்.

    இதையடுத்து, சுவரில் ஓவியம் வரையும் பணியை 'திருநங்கை தூரிகை குழு' என்ற குழுவில் உள்ள திருநங்கைகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து திருநங்கைகள் ஸ்மித்தா அபிமுக்தா, வர்ஷா, காஞ்சனா, ஆகியோர் தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் சுவரில் கலை பண்பாட்டினை ஓவியமாக வரைந்து திருநங்கைகள் அசத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து திருநங்கை அபிமுக்தா கூறும்போது,

    எண்ணூர் மக்கள் நல சங்கத்தினர் மூலம் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. சமூகத்தில் திருநங்கைகள் என்றாலே பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது யாசகம் பெறுபவர்கள் என்ற எண்ணம் பரவி உள்ளது. அதனை மாற்றும் நோக்கத்துடனேயே இவ்வாறு தாங்கள் தொடங்கிய திருநங்கை தூரிகை அமைப்பு மூலம் ஓவியங்கள் வரைவதாக கூறினார். மேலும், பள்ளியின் வெளிப்புற சுவற்றில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு கலை, திருவள்ளுவர், அவ்வைபாட்டி, பாண்டியர், சேரர், சோழர், தஞ்சை பெரிய கோவில் சித்திரம், கோவில் யானை போன்ற தமிழர்களின் கலாசார இலக்கிய பண்பாடு குறித்த ஓவியங்களை சுவரில் வரைவதன் மூலம் வரும் தலைமுறையினருக்கும் நமது பாரம்பரியத்தை கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்தார். திருநங்கைகள் தீட்டிய இந்த சுவர் ஓவியங்களை அவ்வழியாக செல்லக்கூடிய பலரும் பாராட்டி ரசித்தும் செல்கின்றனர்.

    • நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது.
    • மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலை உள்ளது. கொல்லிமலைக்கு, அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். கொல்லிமலைக்கு வரலாற்று பெருமையும், அகத்தியர், திருமூலர், போகர், கோரக்கர், கொங்கணவர், பாம்பாட்டி உள்ளிட்ட, 18 சித்தர்கள் இங்கு தவம் செய்த பெருமையும் உள்ளது. இதற்கு சான்றாக, குகைகள் அமைந்துள்ளன. கடையேழு வள்ளல்களின் ஒருவரான வல்வில் ஓரி ஆண்ட நாடாகவும் கொல்லிமலை திகழ்கிறது.

    இங்கு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, சிற்றருவி என பல அருவிகள் உள்ளன. இதனால், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த கொல்லிமலையில், ஆண்டுதோறும் ஆடி, 18-ல், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்குள்ள ஆற்றில், பொதுமக்கள் புனித நீராடி, அறப்பளீஸ்வரரை வழிபடுவர்.

    மேலும், தமிழக அரசு சார்பில், கொண்டாடப்படும் வல்வில் ஓரி விழா, நேற்று தொடங்கியது. சிறந்த சுற்றுலாதலமாக விளங்கும் கொல்லிமலைக்கு, தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான சுற்றுலாப்பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கவரும் வகையில், நெடுஞ்சாலை, வனம், சுற்றுலா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், மலைப்பாதை தடுப்பு சுவர்களில், வல்வில் ஓரி மன்னனின் புகழைப் பரப்பும் வகையில், ஆங்காங்கே வண்ண ஓவியங்கள் வரைந்துள்ளனர். அவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் ஆர்வமாக, தங்களது மொபைல் போனில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.

    கொல்லிமலை வரும் சுற்றுலா பயணிகளை கவர மலைப்பாதை தடுப்பு சுவர்களில் வண்ண ஓவியம்.

    • சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
    • இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சேலம்:

    சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற நாளை(வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிகளில் 188 நாடுகளைச் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். சேலம் மாவட்டத்தில் அதனைப் பிரபலப்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. மலைப் பகுதியான ஏற்காட்டிற்கு நாள்தோறும் பல்வேறு சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இச்சாலையோர தடுப்புச் சுவர்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் பிரபலப்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் விழிப்புணர்வுக் கோலங்கள் வரைதல், பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ண பலூன்களை பறக்க விடுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

    • பஸ் நிலைய சுற்றுச்சுவரில் ஓவியங்களை வரைந்து ஓவியர் அழகுப்படுத்தி உள்ளார்.
    • பொருட்கள் வாங்க நிதி கொடுத்து நிர்வாகம் உதவியது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளியூர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் அரியலூர், துறையூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே சுற்றுச்சுவரில் பயணிகள் சிறுநீர் கழித்து வந்தனர். இதனால் அந்த சுற்றுச்சுவர் மோசமாக காணப்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசி வந்தது.

    இதனை கண்ட பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள எம்.எம்.நகரை சேர்ந்த செல்வராஜ்-கோகிலா தம்பதியின் மகனும், ஓவியருமான அஜீத் (வயது 23) என்பவர் அந்த சுற்றுச்சுவரை அழகுபடுத்த எண்ணினார்.இதையடுத்து அவர் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதியுடன் அந்த சுற்றுச்சுவரில் துர்நாற்றத்துக்கு இடையே நின்று தனது சொந்த செலவில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். பின்னர் அவருக்கு நகராட்சி நிர்வாகம் ஓவியங்கள் வரைவதற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்க நிதி கொடுத்து உதவியது.

    சுற்றுச்சுவரில் தமிழகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் கிடா சண்டை, சேவல் சண்டை மற்றும் கோவில் யாழி சிற்பம், பூம் பூம் மாடு, கோவில் திருவிழாவுக்கு பக்தர்கள் செல்வதும், பூ கட்டும் பெண்மணியும், பரத நாட்டியம் மற்றும் தண்ணீர் குடங்களை தலையில் சுமந்து செல்லும் சிறுமிகள், பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் ஆகியவற்றின் படங்கள் ஓவியங்களாக தத்ரூபமாக வரைந்தார். அஜீத் வரைந்த ஓவியங்களால் அந்த சுற்றுச்சுவர் தற்போது அழகாக காட்சியளிக்கிறது. 

    ×