என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளநீர்"

    • 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
    • பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.

    இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-

    தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.

    மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.
    • லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது.

    ரெயில் இன்ஜின் ஓட்டுனர்கள் பணிக்கு முன் அல்லது பணியின் போது இளநீர் மற்றும் ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதை ரெயில்வே தடை செய்துள்ளது.

    திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணிக்கு வரும் போதும், பணி முடிந்து போகும் போதும், லோகோ பைலட்டுகள், இளநீர், இருமல் மருந்துகள், குளிர் பானங்கள் மற்றும் வாய் புத்துணர்ச்சியூட்டிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    ரெயில் இன்ஜின் டிரைவர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை செய்யும் போது, அவர்களின் உடலில் ஆல்கஹாலின் அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளது

    ஆனால் இரத்தப் பரிசோதனைகளில் ஆல்கஹால் தடயங்கள் எதுவும் இல்லை.

    இதுபற்றி கேட்டால் தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து, குளிர் பானங்கள் சாப்பிட்டதாக ரெயில் இன்ஜின் டிரைவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறுகின்றனர். எனவே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் இவை அனைத்தையும் உட்கொள்ள தெற்கு ரெயில்வே தடை விதித்துள்ளது.

    ஒரு லோகோ பைலட் தடைசெய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், டிப்போவில் உள்ள க்ரூ கன்ட்ரோலருக்கு (CRC) எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரெயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    லோகோ பைலட் சங்கங்கள் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளது. "பழுதடைந்த ஆல்கஹால் பரிசோதனை உபகரணங்களை மாற்றுவதற்குப் பதிலாக, ஊழியர்களை தேவையற்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷனின் மத்திய குழு உறுப்பினர் பி.என். சோமன் வலியுறுத்தியுள்ளார்.

    • உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது.
    • இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் பிரதான சாகுபடியாக தென்னை உள்ளது. இதில் தேங்காய் உற்பத்திக்காக மட்டுமல்லாது இளநீருக்கென பிரத்யேகமாக ஒட்டு ரக தென்னை மரங்களை விவசாயிகள் பராமரிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை ஒட்டுரக தென்னை மரங்கள், வெள்ளை ஈ தாக்குதலால் படுமோசமாக பாதிக்கப்பட்டன. மரங்கள் பச்சையம் இழந்து கருப்பாக மாறி இளநீர் காய்கள் உற்பத்தி முற்றிலுமாக பாதித்தது.

    பெரும்பாலான விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த முடியாமல், இளநீர் உற்பத்திக்காக பராமரித்த தென்னை மரங்களை, வெட்டி அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.தொடர்ந்துஊரடங்கு காலத்தில், விற்பனை வாய்ப்புகள் குறைந்தது. இவ்வாறுகடந்த இரண்டு ஆண்டுகளாக இளநீருக்கான தென்னை மரங்களை பராமரித்த விவசாயிகள்தொடர் பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.

    தற்போது வெள்ளை ஈ தாக்குதல் சற்று குறைந்து, இளநீர் காய்கள் பிடிப்பது அதிகரித்துள்ளது. அதே போல் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் விலையும் நிலையாக மாறியுள்ளது.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில், நேரடியாக வந்து இளநீரை கொள்முதல் செய்கின்றனர். தரத்தின் அடிப்படையில் இளநீர் 22-24 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.ஆரஞ்ச் மற்றும் பச்சை என இரு வகை இளநீர் காய்களுக்கும், தேவை அதிகரித்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    இளநீர் உற்பத்திக்கான மரங்களை பராமரிப்பது மிக கடினமானதாக மாறியுள்ளது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, உரம் உட்பட பிற இடுபொருட்கள் செலவும் பல மடங்கு அதிகரித்துள்ளது.நிலையான விலை கிடைத்தால் மட்டுமே, இவ்வகை தென்னை மரங்களை தொடர்ந்து பராமரிக்க முடியும்.கட்டுப்படுத்த முடியாத நோய் தாக்குதல் பரவும் போது, வேளாண்துறை வாயிலாக தொழில்நுட்ப வழிகாட்டுதல் மற்றும் மானியத்தில் மருந்துகள் வாங்க அரசு உதவ வேண்டும் என்றனர். 

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.
    • பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடியே அதிகளவில் உள்ளது.

    இங்கு உற்பத்தியாகும் பச்சை நிற இளநீர், செவ்விளநீருக்கு வெளி மார்க்கெட்டில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.

    ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் மட்டுமின்றி மழைக்காலங்களிலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு இளநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் வரை தினமும் 2.50 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பப்பட்டு வந்தது. ஏப்ரல் இறுதி முதல் மே மாதம் 3-வது வாரம் வரை கோடை மழை பெய்ததாலும், ஜூன் இறுதியில் தென்மேற்கு மழை ஆரம்பமானதாலும் 1½ மாதம் இளநீர் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது.

    விற்பனையில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் இந்த மழை காரணமாக தென்னையில் உற்பத்தியாகும் இளநீரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    இப்போதைய சூழ்நிலையில் தேங்காய் விலை சரிவின் காரணமாக விவசாயிகள் இளநீராக அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்க தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இளநீர் பண்ணை விலை அதிகபட்சமாக ரூ.32 வரை இருந்தது.

    ஆனால் இளநீர் உற்பத்தி நாளுக்கு நாள்அதிகரித்ததால், சற்று குறைய தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு இளநீர் பண்ணை விலையாக ரூ.27 ஆக சரிந்துள்ளது.

    தற்போது மழை குறைவால் அறுவடை மேலும் அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெளிமாநிலங்களுக்கு கனரக வாகனங்களில் அனுப்பப்படும் இளநீரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.

    பொள்ளாச்சி இளநீருக்கு கிராக்கியால் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் வரையிலான இளநீர் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நேரடியாக பொள்ளாச்சிக்கு வந்து தோட்டங்களில் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இளநீர் கொள்முதல் செய்கின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, மகராஷ்டிரா, அரியானா, உத்தரபிரதேசம், சண்டிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இளநீர் அனுப்பும் பணி அதிகரித்துள்ளது.

    பண்ணை விலை குறைந்தாலும், உற்பத்தி அதிகரித்து விற்பனை விறுவிறுப்பாக நடப்பதால் விவசாயிகள் வியாபாரிகள் ஓரளவு லாபத்தை பெற்று வருகின்றனர்.

    பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் உற்பத்தியாகும் குட்டை, நெட்டை, வீரிய ஒட்டு இளநீரின் வலை தற்போது பண்ணை விலையாக ரூ.27 எனவும், ஒரு டன் இளநீரின் விலை ரூ.9500 எனவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லாததால் இளநீர் அறுவடை அதிகரித்துள்ளதுடன், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

    சண்டிகார், ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    எப்போதும் இல்லாத அளவில் நாள் ஒன்றுக்கு ரூ.4 லட்சத்துக்கு மேல் இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. வரும் நாட்களில் இளநீரின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்போது, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரையிலான இளநீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
    • மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் இளநீர் தேவைக்காக வீரிய ஒட்டு ரக தென்னைமரங்களை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். இதில் உற்பத்தியாகும் இளநீர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இந்நிலையில் மழை காரணமாக இளநீர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து இளநீர் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறுகையில், நாடு முழுவதிலும் பல இடங்களில் மழை பெய்கிறது. அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களில் மட்டுமே இளநீருக்கான தேவை குறைந்துள்ளது. மழையின் காரணமாக இந்த வாரம் இளநீர் விலை ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.ஒரு வீரிய ஒட்டுரக இளநீர் பண்ணை விற்பனை விலை, 28 ரூபாயாகவும்,எடைக்கு ஒரு டன் இளநீர் 10,250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • இளநீர் கடன் கேட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளநீர் கடனாக கேட்டுள்ளார் அப்போது பாபு தர மறுத்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் பாபு (வயது 38). இவர் அதே பகுதியில் சைக்கிளில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவர் இளநீர் கடனாக கேட்டுள்ளார். அப்போது பாபு தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோத காரணமாக விமல் தனது நண்பர் பிரேம் உடன் கண்ணாரப் பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த பாபுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விமல் (வயது 35) , பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விமலை கைது செய்தனர்.

    ×