search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண நிதி"

    • ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.
    • முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர்.

    திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் முஜிப். இவர் ரவுண்டு ரோடு பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட்டு மாதம் 7ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தனது ஓட்டலில் மொய் விருந்து நடத்தினார்.

    ஓட்டலுக்கு வந்தவர்களுக்கு அசைவ உணவு வழங்கியதுடன் விருந்தில் பங்கேற்பவர்கள் தங்களால் இயன்ற நிவாரண தொகையை இலைக்கு அடியில் வைத்து செல்லுமாறு கூறினார். இதனை ஏற்று மொய் விருந்தில் ஏராளமானோர் பங்கேற்று உதவிகள் அளித்துச் சென்றனர். இதில் ஒரு சிறுமி தான் உண்டியலில் சேர்த்த ரூ.3000 பணத்தையும் வயநாடு நிலச்சரிவுக்கு வழங்கினார்.

    இதன் மூலம் கிடைத்த சுமார் ரூ.3.30 லட்சம் நிதியை முஜிப் மற்றும் ஓட்டல் அசோசியேசன் நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர் கேரள மாநில முதல்வர் பிணராயி விஜயனை நேரில் சந்தித்து ஆகஸ்ட்டு 14-ந் தேதி வழங்கினர்.

    அவரது இந்த சேவையை பாராட்டும் வகையில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், திருச்சூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த முஜிப் என்ற பெயர் கொண்ட 79 பேர் அங்கிருந்து 2 வாகனங்கள் மூலம் திண்டுக்கல் வந்தனர். அவர்களை ஓட்டல் உரிமையாளர் முஜிப் வரவேற்றார்.

    மாநிலம் கடந்தும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய முஜிப்பை அவர்கள் பாராட்டி நினைவு பரிசு மற்றும் கேரள பாரம்பரியம் கொண்ட கேடயத்தை வழங்கினர். அவர்கள் அனைவருக்கும் தனது ஓட்டலில் முஜிப் தலைவாழை இலை விரித்து பிரியாணி மற்றும் பல்வகை அசைவ விருந்து வழங்கினார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அறிவிப்பு.

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் சுமார் 35 பேருடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதில் 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் உள்ள மார்ச்சுலாவின் சால்ட் பகுதியில் இன்று காலை பேருந்து சென்றபோது திடீரென பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உயிரிழந்த 36 பேர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், உத்தரகாண்ட் பேருந்து விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • விக்கிரவாண்டி அருகே கார் மோதிய விபத்தில் காவலர் சத்தியமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    • சாலை விபத்தில் இறந்த சத்தியமூர்த்தியின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

    விக்கிரவாண்டி அருகே த.வெ.க. மாநாடு பாதுகாப்புக்கு சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் சத்தியமூர்த்தி குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்துவந்த சத்தியமூர்த்தி (வயது 27) (PC 1347) என்பவர் கடந்த 26.10.2024 அன்று இரவு சுமார் 8.00 மணியளவில் அரசியல் கட்சி ஒன்று நடத்திய மாநாட்டின் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யூர், அகரம் மேம்பாலம் அருகில் எதிர்பாராதவிதமாக கார் ஒன்று மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (29.10.2024) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    காவலர் சத்தியமூர்த்தி அவர்களின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். காவலர் சத்தியமூர்த்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு 25 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர்.
    • நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும் குறிப்பாக விஜயவாடா கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.1 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸ் தெலங்கானா- ஆந்திரா பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.

    முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பொது நிவாரண நிதிக்கு நடிகர்கள் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

    ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேசம் வெற்றி பெட்ரா நிலையில் சாநிரபாபு நாயுடு முதலமைச்சர் ஆனார். அதே கூட்டணியில் இடம்பெற்ற ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பணியேற்றது குறிப்பிடத்தக்கது.

    • சிறுவர்-சிறுமிகள் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.
    • நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி.

    திருவனந்தபுரம்:

    வயநாடு நிலச்சரிவு 400-க்கும் மேற்பட்ட வர்களை பலி வாங்கியிருப்பது மட்டுமின்றி, அங்கு பெருத்த சேதத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்துபோகின. அங்கிருந்த வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்து விட்டன.

    சேத மதிப்பு பல ஆயிரம் கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உதவும் வகையில் பொது மக்கள் நிவாரண நிதி வழங்குமாறு முதல்-மந்திரி பினராய் விஜயன் கேட்டுக்கொண்டார்.

    அதனடிப்படையில் பல முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், அரசியல்கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் பள்ளி படிக்கும் சிறுவர்-சிறுமிகள் பலர் தாங்கள் சேமித்துவரும் உண்டியல் பணத்தைக்கூட நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்கள்.

    குழந்தைகளின் இந்த செயல் அனைவரும் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி, நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டு வதற்காக 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். சென்னையை சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணிஸ்ரீ. பள்ளி மாணவியான அவர் பரதநாட்டியம் படித்து வருகிறார்.

    அந்த சிறுமி தான், வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியிருக்கிறார். அந்த நிகழச்சியின் மூலம் கிடைத்த பணம் மற்றும் தனது சேமிப்பு பணம் ரூ.15 ஆயிரத்தை கேரள முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். அந்த பணத்தை சிறுமி ஹரிணிஸ்ரீ, கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் நேரில் வழங்கினார்.

    நிவாரண நிதி திரட்டுவதற்காக பரதநாட்டியம் ஆடிய சிறுமி ஹரிணிஸ்ரீயை முதல்-மந்திரி பினராய் விஜயன் பாராட்டினார். இதேபோன்று ஏராளமான சிறுவர்-சிறுமிகள் தங்களின் சேமிப்பு பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.

    அவ்வாறு நிதியுதவி வழங்க திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்துக்கு வந்த கேரளாவை சேர்ந்த வைதேகி என்ற பள்ளி மாணவியை, நடிகர் சிரஞ்சீவி அங்கு வைத்தே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • 24 தமிழர்களும் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக 18 எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து உடைமைகளை இழந்து பரிதாப நிலையில் உள்ளனர். இதில் 24 தமிழர்களும் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

    இவர்களது துயர் துடைக்க சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பாக 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இளமை பருவத்தில் பொறியாளர் படிப்பு படித்து சென்னையில் பயிற்சி பெற்று ராணுவ பொறியாளராக பணியில் சேர்ந்த சீதா ஷெல்கே என்பவர் வயநாடு பகுதியில் சூரல்மலை பகுதியில் 144 ராணுவ வீரர்களுடன் 36 மணி நேரத்தில் இரும்பு பாலம் அமைத்து நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற மகத்தான சாதனை புரிந்தது மிகுந்த வரவேற்புக்குரியது.

    ராணுவ பொறியாளர் சீதா ஷெல்கே வயநாட்டில் பேரிடருக்கு எதிராக ஒரு ராணுவ வீரராக பணியாற்றியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதேபோல, கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆற்று வெள்ளத்தின் நடுவே ஜிப்லைன் கம்பி மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் செவிலியர் சபீனா என்பவர் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியார் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையில் பணியாற்றி வரும் இவர் ஜிப் லைன் மூலம் ஆற்றை கடந்து சென்று சிகிச்சை அளிக்க ஆண் செவிலியர்கள் இல்லாத நிலையில் துணிச்சலாக செயல்பட்டு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வழங்கியும், நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சையும் அளித்துள்ளார். இவரது சேவை மனப்பான்மை மிக்க துணிச்சலான பணியை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்."

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறப்புக்கு ஈடாக ரூ.34 கோடி பெற்றுக்கொள்ள சிறுவன் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.
    • இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலி நிறுவப்பட்டு, நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள வாலிபரான அப்துல் ரஹீம் மாற்றுத்திறனாளி சிறுவனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக்கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதனால் 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.


    இந்நிலையில், சவுதியில் சிக்கிய கேரள வாலிபரை மீட்க முக்கிய பங்காற்றியவர் பாபி செம்மனூர் என்பதும், இவர் தனது பங்காக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததுடன், குறைந்த கால அவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சவுதி அரசிடம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

    பிரபல தொழிலதிபரான பாபி செம்மனூர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நிதி திரட்டும் பிரசாரத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார். அதன்பின், பல்வேறு தரப்பு மக்களும் உதவ முன்வந்தனர். திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ரெயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரங்கள் போன்ற பொது இடங்களிலும் மக்கள் உதவி கோரப்பட்டது. இதனால் மொத்தம் ரூ.34 கோடியே 45 லட்சம் நிதி கிடைத்துள்ளது.

    செம்மனூர் நகைக்கடையின் நிறுவனரான பாபி செம்மனூர் விமானத்தில் பயணிக்க ஆசைப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயண ஏற்பாடு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சவுதி அரேபியாவில் கேரள வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
    • கேரளத்தைச் சேர்ந்த இந்தியரை மீட்க நிவாரண நிதி அளிப்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ல் சவுதி அரேபியா சென்று, அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்தார். அந்தக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனையில் அப்துல் ரஹீம் முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவியை துண்டித்தார்.

    இதில் அந்த சிறுவன் உயிரிழந்தான். இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

    இதற்கிடையே, சிறுவனின் இறப்புக்கு ஈடாக 34 கோடி ரூபாயைப் பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து, 'சேவ் அப்துல் ரஹீம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதி திரட்டும் பணியில் அவரது நண்பர்கள் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர்.

    இந்நிலையில், கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட ரூ.34 கோடியையும் தாண்டி அதிகமாகவே நிதி வந்தடைந்தது.

    இதுதொடர்பாக அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

    இதுகுறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், கேரளாவை குறிவைத்து இடைவிடாத வெறுப்பு பிரசாரங்களை எதிர்கொள்வதில் மலையாளிகளின் அடங்காத ஆவி பிரகாசிக்கிறது. கேரளாவின் பின்னடைவு மற்றும் இரக்கத்தை ஒன்றாக நிலைநிறுத்துகிறது.

    சவுதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ரஹீமின் கதை இந்த எதிர்ப்பைக் குறிக்கிறது. அவரது விடுதலைக்காக 34 கோடி ரூபாய் திரட்டப்பட்ட நிலையில் கேரளாவின் மக்கள் மற்றும் மதிப்புகள் மீதான அர்ப்பணிப்பு தெளிவாக உள்ளது, பிளவுபடுத்தும் பொய்களை உடைக்கிறது. இந்த மனிதாபிமானத்திற்காக கைகோர்த்த அனைவருக்கும் நன்றி. ஐக்கியம், இரக்கம் மற்றும் உண்மையின் உண்மையான கேரளக் கதையை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம் என பதிவிட்டுள்ளார்.

    • மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும்.
    • பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று கேள்வி நேரத்தின் போது திமுக எம்.பி ஆ.ராசா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டுக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்குவதில் ஒன்றியஅரசு பாரபட்சம் காட்டுகிறது. நிதி வழங்குவது தொடர்பாக இதுவரை ஒன்றிய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    மாநில பேரிடர் நிதிக்கும், தேசிய பேரிடர் நிதிக்கும் எந்த தொடர்பும் இல்லை, மாநில பேரிடர் நிதி என்பது பேரிடரின் போது மாநில அரசு ஒதுக்கும் நிவாரண நிதியாகும். இது அனைத்து மாநிலத்துக்கும் பொதுவானது.

    நிவாரணநிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நிதி வழங்க வேண்டும்.

    தேசியபேரிடர் நிவாரண நிதியில், அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சமமான நிவாரணநிதி வழங்கும் நிலையை உறுதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வகுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை.
    • 2021ல் இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    மனித - வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    மனித- வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கிட 3.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    2021 அரசாணைப்படி, மோதல்களில் மனித உயிர் இழப்பு, நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.

    இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    மேலும், மனித, வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்குமாறு அரசுக்கு முறையீடுகள் வந்தன.

    இந்நிலையில், நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 4-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் ரூ.6000 நிவாரண நிதிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்படுவதை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நியாய விலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளலாம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 17.12.2023 மற்றும் 18.12.2023 ஆகிய இரண்டு நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் முதலமைச்சர் வெள்ள நிவாராணத் தொகையாக தலா ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, உதவித்தொகை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 5,77,803 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வெள்ள நிவாரண உதவித்தொகை கடந்த 29.12.2023 அன்று முதல் அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுநாள் வரை நிவாரணத்தொகை வாங்காத விடுப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு நாளை (03.01.2024) வழங்கப்படும். எனவே விடுபட்ட குடும்ப அட்டைத்தாரர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நியாயவிலைக்கடைகளுக்கு சென்று தங்களது நிவாரண உதவித்தொகையினை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×