என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூா்"

    • போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர்.
    • வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு பயன்படுத்த கொரியர் மூலம் கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீசார் காலேஜ் ரோட்டில் உள்ள கொரியர் நிறுவனம் ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது திருப்பூர் நல்லாத்துப்பாளையத்தை சேர்ந்த மோகன் (வயது 27) என்பவருக்கு பெங்களூருவில் இருந்து வந்த கொரியரை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் 90 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அதனை கைப்பற்றி மோகன் மற்றும் மாத்திரை விற்பனையாளரான பிச்சம்பாளையத்தை சேர்ந்த சஞ்சீவிகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். 90 வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

    • படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 25). இவர் அதே பகுதியில் தங்கி குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.

    அப்போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ள சென்றதுடன், அங்கிருந்த அரவிந்தனை அரிவாளால் சரமாரி வெட்டினர். இதில் அவரது தலை, கை, கால் என பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முருகேசன் தடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவரையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்ததும் 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் ரத்த காயங்களுடன் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . அப்போது இருவரையும் அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த பாலாஜி , ஆகாஷ் , ஸ்டீபன் ராஜ், ஆதி, லலித்குமார் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    அரவிந்தன் இடுவம்பாளையம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அரவிந்தனை கொலை செய்யும் நோக்கில் இது போன்ற செயலில் 5 பேர் கும்பல் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

    • உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்.
    • பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் காங்கயம் சாலையில் பேக்கரி கடை உள்ளது. இந்தக்கடையில் வாடிக்கையாளா் ஒருவா் கடந்த செவ்வாய் கிழமை குழந்தைக்கு பன் வாங்கிக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, பன்னுக்குள் மனித பல் இருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, கடையின் பின்புறம் உள்ள தயாரிப்புக் கூடத்துக்கு சென்று வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு செல்போன் மூலமாக புகாா் தெரிவித்தார்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆறுச்சாமி கடையின் உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் தயாரிப்பு கூடம் சுகாதாரமாக இல்லாதது தெரியவந்தது.

    இதையடுத்து கடையின் உணவு தயாரிப்பு கூடத்துக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக சீல்வைத்து மூடினர். மேலும், பல் இருந்த பன்னின் மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    குறைபாடுகளை நிவா்த்தி செய்த பின்னா் ஆய்வு நடத்தப்பட்டு பேக்கரி தயாரிப்பு கூடத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் தெரிவித்தனா். 

    • இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது.
    • தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 14, நாளை மறுநாள் 15 -ந் தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 2023-24 ம் ஆண்டுக்கான இளநிலைப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்துள்ளது.இந்நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 14, 15 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இக்கலந்தாய்வின் முதல்நாளான ஜூன் 14 ந் தேதி காலை 9.30 மணிக்கு பி.காம், பி.காம்.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பி.காம்.ஐபி, பி.பி.ஏ., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 11 மணிக்கும், வரலாறு, பொருளியல், ஆடை வடிவமைப்பு நாகரிகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இரண்டாம் நாளான ஜூன் 15 ந் தேதி காலை 9.30 மணிக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல் பாடப் பிரிவுகளுக்கும், காலை 11 மணிக்கு கணிதம், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழக அரசின் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். விண்ணப்பித்தோரின் காத்திருப்போா் தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிட்டிங் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த மொதிர் ரகுமான் (வயது 37), அவரது மனைவி அஞ்சனா அக்தர் (37) ஆகியோர் வங்கதேசம் டாக்கா பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் அய்யம்பாளையம் திருமூர்த்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து நிட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக திருப்பூரில் தங்கி பணியாற்றியது தெரியவந்தது. மேலும் இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியிருப்பவர்கள் போல் ஆதார் கார்டுகள் இருந்தன.

    முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கணவன், மனைவி 2 பேரையும் நல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
    • காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கான 5-வது கட்ட கலந்தாய்வு நாளை 19-ந்தேதி நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏற்கனவே 4 கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்படி கல்லூரியில் கூடுதல் இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி வணிகவியல், சா்வதேச வணிகவியல் பாடப் பிரிவுகளில் 30 இடங்களுக்கும், கணினி பயன்பாட்டியல் (பிசிஏ) பிரிவில் 10 இடங்களுக்கும், தமிழ் இலக்கியம், பொருளியல் பாடப் பிரிவுகளில் தலா 6 இடங்களுக்கான கலந்தாய்வு நாளை காலை 10 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

    மேலும், இயற்பியல், கணிதம்,ஆங்கில இலக்கியம், வரலாறு, கணினிஅறிவியல் (இரண்டாம்ஷிப்ட்) ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில், தரவரிசை 2001க்குப் பிறகு உள்ளவா்களும், ஏற்கெனவே கலந்தாய்வில் பங்கேற்று இடம் கிடைக்காதவா்களும் பங்கேற்கலாம். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும்போது ஆன்லைனில் விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தையும், கல்லூரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவரிசைக் கடிதம், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களைக்கொண்டுவர வேண்டும். பாஸ்போா்ட் அளவிலான 6 புகைப்படங்கள், கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகையுடன் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
    • துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.

    இதில், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பள்ளி கல்வித் துறை, கனிமவளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.

    இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன், ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை.
    • பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான 2வது கட்ட கலந்தாய்வு நாளை 18-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலைப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 10ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பட்டப் படிப்புகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு கல்லூரி வளாகத்தில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.

    இதில் தரவரிசை எண் 1401 முதல் 2900 வரையில் உள்ள மாணவா்கள் பங்கேற்கலாம். தரவரிசைக்கான சோ்க்கை கடிதத்தை கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துவர வேண்டும். மேலும், இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பத்தையும், அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும். கல்லூரிக்கு செலுத்த வேண்டிய தொகையுடன், பெற்றோரையும் அழைத்துவர வேண்டும். தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவா்களும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
    • கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    திருப்பூர் :

    சுதந்திர தினத்தை ஒட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை ஒட்டி திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15ந் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதத்தில், சுகாதாரத்தை பேணுதல், நெகிழி உற்பத்திப் பொருள்களை தடை செய்தல், நீா் வழிப்பாதை மற்றும் நீா் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கிராம ஊராட்சிகளின் தணிக்கை உள்ளிட்டவைகள் தொடா்பாக விவாதிக்கப்படவுள்ளன.

    இந்த கிராம சபைக் கூட்டங்களை நடத்தும் வகையில் ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பற்றாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.ஆகவே, பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக நல்ல ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் சொரியங்கிணத்துப்பாளையத்தில் வட்டார அளவிலான இலவச மருத்துவ முகாமை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    வட்டார அளவிலான மருத்துவ முகாம்களில் மருத்துவா், மகப்பேறு மருத்துவா், குழந்தை நல மருத்துவா் உள்ளிட்ட 15 போ் கொண்ட குழு மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேலும் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம் சா்க்கரை வியாதி, உயா் ரத்த அழுத்த பாதிப்பு, தோ்ந்தெடுக்கப்பட்ட நோய்களுக்கு இல்லம் தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது.

    சாலை விபத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கு 48 மணிநேர உடனடி சிகிச்சை மேற்கொள்ளும் இன்னுயிா் காப்போம் திட்டத்தின் மூலம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

    திருப்பூா் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ் 11.55 லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து 1,55,000 பேருக்கு இலவச மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

    தொடா்ந்து, தமிழ்நாடு நகா்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் வெள்ளக்கோவில் நகராட்சிக்குட்பட்ட பூங்காக்கள், சாலையோரங்களில் ரூ.50.81 லட்சம் மதிப்பீட்டில் 18,489 மரக்கன்றுகள் நடும் பணியையும் அமைச்சா் துவக்கிவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டாக்டா் ஜெகதீஸ்குமாா், வெள்ளக்கோவில் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துக்குமாா், நகராட்சி ஆணையா் ஆா்.மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,127 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • 777 முழுநேர நியாய விலைக்கடைகளும், 350 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்ட வீரபாண்டி ஜெ.ஜெ.நகா் நியாய விலைக் கடையில் சுழற்சி முறையில் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,127 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 8.06 லட்சம் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 777 முழுநேர நியாய விலைக்கடைகளும், 350 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் 89 முழு நேர நியாய விலைக் கடைகள், 49 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 138 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் பொருட்களை விநியோகம் செய்வதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க முடியும். திருப்பூா் மாவட்டத்தில் 5 முழுநேர நியாய விலைக் கடைகளும், 11 பகுதிநேர கடைகள் என மொத்தம் 16 கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சீனிவாசன், துணைப் பதிவாளா் முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×