என் மலர்
நீங்கள் தேடியது "கரூர்"
- கரூர் மாவட்டத்தில் ஆதரவின்றி சுற்றி திரிந்த 19 பேர் மீட்பு
- கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.
கரூர்,
கரூர், குளித்தலை பகுதிகளில் வசிப்பிடம், ஆதரவின்றி கோவில், பஸ் நிலையத்தில் , சாலையோரம் தங்கி யாசகம் பெற்று சுற்றிக்கொண்டிருந்த, 19 பேரை போலீசார் மீட்டு விசாரணை செய்தனர். அவரில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு, தனியார் காப்பகங்களில் சேர்க்க ப்பட்டனர்.
இது போன்று ஆதரவின்றி உள்ள நபர்களை பிச்சை எடுக்க வைத்து, பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில், யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும்.
திருப்பூர் :
பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாலக்காடு-திருச்சி ரெயில் (எண்.16844) கரூர்-திருச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இதுபோல் திருச்சி-பாலக்காடு ரெயில் (எண்.16843) நாளை தேவையான இடத்தில் 1 மணி நேரம் முறைப்படுத்தி இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
- தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார். தொழிலதிபரான இவருக்கு சொந்தமான மாந்தோப்பு வாங்கல் ஓடையூரில் உள்ளது.
இந்த தோப்பினை திருச்சி மாவட்டம் காட்டுப் புத்தூர் பெருமாள் காட்டுப் புத்தூரைச் சேர்ந்த தங்கவேல் (வயது 64)என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனது மனைவி மயிலியுடன் தோட்டத்திலேயே தங்கி இருந்தார்.
இந்த வயதான தம்பதி தங்குவதற்கு தோட்டத்தில் ஒரு சிறிய குடிசை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல் நேற்று இரவு சமையல் செய்து சாப்பிட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் படுத்து உறங்கினர்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் குடிசை வீட்டின் கதவை தட்டினர். உடனே தங்கவேல் திடுக்கிட்டு எழுந்து கதவை திறந்தார். அடுத்த நொடி கொள்ளையர்கள் தாங்கள் எடுத்து வந்த மிளகாய் பொடியை கணவன்-மனைவி இருவர் மீதும் தூவி சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த தங்கவேல், அவரது மனைவி மயிலி ஆகிய இருவரும் மயங்கி விழுந்து இறந்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் அந்த மூதாட்டி அணிந்திருந்த செயின் மற்றும் கம்மல்களை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை அந்த மாந்தோப்பு தோட்டத்தில் வயதான தம்பதியினரின் நடமாட்டம் இல்லாததால் கிராம மக்கள் குடிசை வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். கொள்ளையர்கள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.
தோட்டத்தில் தங்கியிருந்த வயதான தம்பதியினரை கொன்று நகை கொள்ளை அடிக்கபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தம்.
தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை துவங்கிய சில மணி நேரங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்த திமுக-வினர் முற்றுகையிட முயன்றதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. முற்றுகையை தொடர்ந்து, அங்கு சோதனையிட வந்திருந்த அதிகாரிகள் மற்றும் திமுக-வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது வருமான வரித்துறை அதிகாரி திமுக பிரமுகரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகளை திமுக-வினர் தாக்கினர். மேலும் அவர்களது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். அதிகாரிகளின் பாதுகாப்புக்காக அவர்கள் கரூர் காவல் நிலையம் விரைந்தனர். இதே போல் கரூரில் மற்ற இடங்களிலும் வருமான வரி சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கரூரில் நடைபெற்ற அனைத்து வருமான வரி சோதனையும் நிறுத்தப்பட்டது. அதிகாரிகள் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இது குறித்து கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனன் கூறியதாவது.,
"கரூரில் வருமான வரித்துறை சோதனைக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது பாதுகாப்புக்காக மத்திய ரிசர்வ் காவல் படையினரையும் அழைத்து வரவில்லை. சோதனைக்கு வந்த அதிகாரிகள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்."
"சோதனை நடக்கும் இடங்களில் 150-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்யப்படும். ," என்று தெரிவித்தார்.
- தவிட்டுப்பாளையம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம்
- சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் தட்டுப்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் பொது மக்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, மற்றும் உடல் பரிசோதனை,தலைவலி, காய்ச்சல், உடல் வலி, சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் , நல்லிக்கோவில், முத்தனூர், கவுண்டன்புதூர், பேச்சிப்பாறை , நடையனூர் ,கொங்கு நகர், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் ,நன்செய் புகளூர், தளவாபாளையம், கடம்பங்குறிச்சி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச்செல்வதற்காக விவசாயிகள் புகளூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.ஆலைகளில் தயாரிக்கப்பட்ட வெல்லம் ஏலச் சந்தை மூலமாக விற்பனைக்கு வரும். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும்.
- இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன.
பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்குவது மலைகள். நிலத்தினின்றும் உயர்ந்து மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும் சில மலைகளை மேகங்கள் உச்சி முகர்ந்து செல்லும். இது ஒரு வகையென்றால் சில மலைகள் பாறை அடுக்குகளாக காட்சியளிக்கும்.
இவை போன்று எத்தகையதாயினும் பல மலைகள் இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன என்றால் அது மிகையாகாது. அத்தகைய மலைகளுள் ஒன்றாக விளங்குவதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலை. ஊரின் பெயரும் அதுவே.
தாந்தோன்றிமலை என்பதற்கு நேராக பொருள் கொண்டால் தானாக தோன்றிய மலை என்றாகிறது. மேலும் தாமான் தோன்றிக்கோள் எனும் குறுநில மன்னன் இந்த மலையை தனது இருப்பிடமாக கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தான் என்பது புறநானூற்று பாடல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.
இதனால் இந்த மன்னனின் நினைவாக இவ்வூர் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அடியார்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகளும் உள்ளன.
இதேபோல் இந்த மலையை சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உள்ளது. அதாவது ஒரு சமயத்தில், திருப்பாற்கடலில் திருமால் தனது அந்தப்புரத்தில் திருமகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வாயிலின் வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்தார். அப்போது இறைவனை தரிசிப்பதற்காக அங்கு வந்த வாயுபகவான் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆதிசேஷனோ, வாயுபகவானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், யார் பலசாலி என்பது பற்றிய சச்சரவும் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் வெளியே வந்த திருமால், 2 பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். அப்போது இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் அழுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். வாயுபகவான் அதை தனது பலத்தால் அசைத்து தன்வசப்படுத்த வேண்டும் என்பது அந்த போட்டியாகும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள போட்டி தொடங்கியது.
போட்டியின் விதிப்படி ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான் தனது முழு பலமும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது அம்மலையின் சிறுசிறு பாகங்கள் சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன.
அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தாந்தோன்றிமலை ஆகும், என்பதே அந்த கதையாகும். அதனால் திருவேங்கட மலைக்கு தெய்வீக சக்தி இருப்பது போன்று, அதனில் இருந்து சிதறிய குன்றுகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.
குடைவரை கோவில்
தென் திருப்பதி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு இறைவன் கல்யாண வெங்கடரமண சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுவாக கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலோ மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். அதற்கேற்ப கருவறை விளங்குகிறது.
இங்கு பாறையோடு ஒட்டிய நிலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி தன் மார்பில் லட்சுமியைத் தாங்கி நின்ற வண்ணம் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவர் நான்கு கைகளை கொண்டுள்ளார். கோவிலின் அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.
- வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது.
கரூர்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயில் சதம் அடித்து வருவதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று முன்தினம் 113 டிகிரி பதிவானது. நேற்று 112 டிகிரி வெப்ப நிலை பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெயில் பதிவாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, கரூர் பரமத்தியில் ஒவ்வொரு ஆண்டும் வெப்பம் அதிகரிப்பதற்கு நிலப்பரப்பின் தன்மையே காரணம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்த பகுதியில் சூரிய கதிர்கள் செங்குத்தாக விழுகின்றன.
வரலாறு காணாத வெயில் பதிவினால் கரூர் மாவட்ட மக்கள் கடும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். க.பரமத்தி பகுதிக்குட்பட்ட தென்னிலை, பவித்ரம், சின்ன தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமப் பகுதியில் விவசாயம் சார்ந்த ஆடு, மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர். வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகள், ஆடு மாடு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பொதுமக்களின் நடமாட்டம் வெளியே குறைந்து உள்ளது. மேலும், கிராமப்புற சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
கொளுத்தும் வெயிலால் சாலைகளில் கானல் நீர் மற்றும் வெப்ப அலை வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள பொதுமக்கள் சாலைகளில் குடைபிடித்தப்படி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.
பொதுவாக கோடை காலங்களில் வேலூர் மாவட்டத்தில்தான் அதிகம் வெப்பம் பதிவாகும். ஆனால், கடந்த சில வருடங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதிதான் அதிகம் வெயில் அடிக்கும் பகுதியாக மாறியுள்ளது. அதற்கு காரணம், இங்கு மரங்கள் குறைவாக உள்ளதும், மழையை அதிகம் ஈர்க்காத சுண்ணாம்பு மண் நிறைந்த பகுதி என்பதும் தான். பொதுவாக நல்ல இயற்கை சூழல் இருக்க வேண்டும் என்றால், ஒரு மாவட்டத்தில் 32 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்.
ஆனால், கரூர் மாவட்டத்தில் வெறும் 4 சதவிகிதம் தான் காடுகளின் அளவு உள்ளது. இதனால், வெப்பம் கடுமையாக இருக்கிறது. அதேபோல், க.பரமத்தி பகுதியில் அதிக வெயில் அடிக்க காரணம் இங்கு இயங்கி வரும் 300-க்கும் மேற்வட்ட கல்குவாரிகள் தான். இங்கு அதிகம் மரங்கள் வளர்க்க வேண்டும். கல்குவாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். அப்போதுதான் வருங் காலங்களில் இங்கு வெயில் தணியும். இல்லையென்றால், க.பரமத்தி பகுதியே மனிதர்களே வசிக்க முடியாத அளவுக்கு பாலை வனமாக மாறிவிடும் அபாயம் இருக்கிறது.

காவிர் பாயும் மாவட்டத்தில் உள்ள க.பரமத்திக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் மக்கள். இந்தப் பகுதி மக்கள் அதிகம் வெயிலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள வீட்டில் இருப்பது நல்லது. அல்லது குடை போன்ற தற்காப்பு பொருள்களை பயன் படுத்துவது சிறந்தது. முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தேவையான தண்ணீரை அனைத்து மக்களும் அருந்த வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட அறிவியல் இயக்க தலைவர் ஜான் பாஷா கூறியதாவது:-கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை மட்டுமே பதிவானது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னரே 100 டிகிரி தாண்டியது. மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள வானிலை ஆராய்ச்சி மையம் கரூரில் பரமத்தி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பூமியின் அட்சரேகையில் நேரடியாக பரமத்தி பகுதி வருவதால் அங்கு வானிலை ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. பொதுவாக பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
குறிப்பாக இங்கு பவர் கிரேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. கல் குவாரிகள் இந்த பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குவாரி இருக்கும் பகுதிகளிலும் மரங்கள் இல்லை.
இது போன்ற காரணங்களால் பரமத்தி பகுதியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது 120 டிகிரியை தாண்டிவிடுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த அளவுக்கு உயர வாய்ப்பில்லை. 120 டிகிரியை தாண்டிவிட்டால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாது. அதையும் மீறி வெளியே சென்றால் பக்கவாதம், மாரடைப்பு மயக்கம் போன்றவை ஏற்படும்.
குழந்தைகளுக்கு அம்மை மற்றும் காசநோய் வர வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழல் இப்போதைக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை. சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறினால் 2040 காலகட்டத்தில் 120 டிகிரியை தாண்டிய வெப்பநிலையை சந்திக்க நேரிடும் என்றார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கரூர் பரமத்தி பகுதிக்கு பிரத்யேக திட்டம் தயாரித்து அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். திரும்பும் திசையெல்லாம் மரங்கள் நடப்பட்டால் நிச்சயமாக வரும் காலங்களில் வெயில் அதிகரிப்பை கட்டுப் படுத்தலாம் என்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.
- வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை.
கரூர்:
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
இவர் மீது கரூர் மாவட்டம் மண்மங்கலம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் நிலமோசடி புகார் அளித்தார்.
நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் எலக்ட்ரிகல் கடை வைத்து நடத்தி வரும் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தன்னை ஏமாற்றி, மிரட்டி ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துக் விட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார்.
பின்னர் இதுகுறித்து கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்று காலை 8 மணி முதல் சோதனை நடத்தினர்.
கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள எம் ஆர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் செல்வராஜ், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ரகு ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 மணி நேரத்துக்கு மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் தாளப்பட்டி மணல்மேடு பகுதியில் உள்ல யுவராஜ் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதில் நிலமோசடி தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? என சல்லடை போட்டு தேடினர். வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் திருச்சி நாமக்கல் சேலம் மாவட்டங்களை சேர்ந்த சி பி சி ஐ டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்த சோதனை கரூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை
கரூர்:
கரூர் தோரணக்கல்பட்டியில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ரகு, சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ், யுவராஜ் பிரவீன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தன்னையும் சேர்க்கலாம் என கருதிய முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் தள்ளுபடி ஆனது.
இதற்கிடையே பிரச்சனைக்குரிய அந்த 22 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் உட்பட 13 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
பின்னர் வழக்கு தொடர்புடைய யுவராஜ், செல்வராஜ், நிலம் மாற்றியதில் சாட்சியாக செயல்பட்ட முனிய நாதபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்து 8-ந் தேதி திடீர் சோதனை நடத்தினர்.
அதன் பின்னர் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்பட அவருக்கு தொடர்புடைய அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 7-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அ.தி.மு.க. ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் விஜயபாஸ்கரின் ஆதரவாளருமான கவின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அவர் வீட்டில் இல்லாத நிலையில் அவரது தந்தை குழந்தைவேலிடம் விசாரணை செய்தனர். அதன் பின்னர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த கரூர் பசுபதி செந்தில் உட்பட 7 பேரை திடீரென கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
- அ.தி.மு.க.வி.னரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:
கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, கரூர் அருகே உள்ள வாங்கல் காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்துவிட்டதாக புகார் தெரிவித்தார்.
இதில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உள்ளிட்ட 13 பேர் மிரட்டி, போலியான ஆவணம் கொடுத்து அபகரித்துக் கொண்டதாக, கரூர் நகர காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த இன்னொரு புகாரில் தொழிலதிபர் பிரகாஷ் தனது மகள் சோபனாவுக்கு தான செட்டில்மெண்டாக எழுதிக் கொடுத்த ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை, அசல் ஆவணம் தொலைந்து விட்டதாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் போலி சான்றிதழ் பெற்று பத்திரப் பதிவு மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து கரூர் நகர காவல் நிலைய போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு தள்ளுபடி ஆன நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
அதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மற்றும் ஆந்திரா கேரளா போன்ற மாநிலங்களில் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களை தேடினர்.
இந்த நிலையில் 35 நாட்களுக்கு பின்னர் நேற்று அதிகாலை கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரையும் கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று பிற்பகல் அழைத்து வந்தனர்.
பின்னர் சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய ஜெயிலிலும், பிரவீன் குளித்தலை கிளை ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக போலி சான்றிதழ் கொடுத்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் நேற்று நள்ளிரவு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு அவரிடம் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எம்.ஆர். விஜயபாஸ்கரை தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அ.தி.மு.க.வி.னரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கரூர்
கரூர் தெற்கு காந்திகிராமம் அருகே உள்ள கம்பன் தெருவில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவரது மகன் ஜீவா (வயது 20). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த வாரம் சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்த அவர் கடந்த 22-ந் தேதி திடீரென மாயமானார்.
இது குறித்து அவரது தாய் சுந்தரவல்லி, தான்தோன்றி மலை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காந்திகிராமம் அருகே உள்ள இ.பி. காலனி பகுதியை சேர்ந்த சசிக்குமாருக்கும் மாயமான வாலிபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.
பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் சசிகுமார் உள்ளிட்ட 10 பேர் சேர்ந்து ஜீவாவுக்கு மது வாங்கி கொடுத்து, கரூர் அருகில் உள்ள தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அவரை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
பின்னர், கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் மற்றும் தாசில்தார் முன்னிலையில் ஜீவாவின் உடலை தோண்டி எடுத்தனர். அப்போது அவரது உடல் 7 துண்டுகளாக வெட்டி புதைக்கப்பட்டிருந்தது என்று அதிர்ச்சி தகவல் வெளியானது.
பின்னர், போலீசார் முக்கிய குற்றவாளியான சசிகுமார் மற்றும் அவரது நண்பர் சுதாகர் உள்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை வலை வீசி தேடுகின்றனர்.
கைதான சசிகுமார் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
கரூர், பசுபதிபாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் நெருங்கிய நண்பன் நான். அவருடன் ஜீவாவுக்கும் பழக்கம் இருந்தது. பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன் ராஜை கடந்த 2021-ம் ஆண்டு கொலை செய்துவிட்டனர்.
அதன் பிறகு நண்பர்களிடம் விசாரித்த போது ஜீவா அவருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததுவிட்டதாக கூறப்படுகிறது. என் நெருங்கிய நண்பரை கொன்று விட்டதால் அவர் மீது கோபம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜீவா எனது தலையை சிதைத்து விடுவேன் என இன்ஸ்டா கிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்ததும் எனக்கு அவன் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் அவ்வப்போது கனவில் வந்து, என்னை கொலை செய்த ஜீவாவை இதுவரைக்கும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்றும், அவரைப் பழி தீர்க்க வேண்டும் என்றும் கூறியதாக சொன்னார். இதனால் அவனை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து காத்திருந்தோம்.
கடந்த வாரம் விடுமுறையில் வந்த ஜீவாவை நண்பர்கள் மூலமாக மது அருந்த அழைத்து திட்டமிட்டபடி வெட்டி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்தோம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.