search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்துணவு அமைப்பாளர்"

    • சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.
    • 4 பேரை பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருச்சி:

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூரில் ஒரு ஓட்டலில் அரசின் இலவச முட்டைகள் விற்கப்பட்டது. இத தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர், சத்துணவு அமைப்பாளர் கைது செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு ஓட்டலில் இலவச முட்டை விற்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சத்துணவு முட்டை பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கிருந்த 5 முட்டைகளில் தமிழக அரசால் மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் இலவச முட்டைக்கான முத்திரை இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஓட்டல் நடத்தி வந்த பெண் உரிமையாளர் ஜீனத்குபுராவிடம் (வயது 61) விசாரித்தபோது, அவர் தனது அக்காள் சல்மாதான் (66), பக்கத்து தெருவில் வசிக்கும் சத்துணவு அமைப்பாளரான சத்யா (43) என்ற பெண்ணிடம் இருந்து ஒரு அட்டை (30 முட்டை) ரூ.110 வீதம் 2 அட்டை முட்டைகளை வாங்கி கொடுத்ததாக கூறியுள்ளார்.

    உடனே, அதிகாரிகள் குழுவினர் சத்யா வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, முட்டை வியாபாரியான அவருடைய கணவர் ரகுராமன் சப்-கான்டிராக்ட் எடுத்து சத்துணவுக்கு முட்டைகளை வினியோகம் செய்வதும், அதில் சில முட்டைகளை ஓட்டலுக்கு கொடுத்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து முட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், சத்யா, அவருடைய கணவர் ரகுராமன், ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவருடைய அக்காள் சல்மா ஆகிய 4 பேரையும் பிடித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபிஉமா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேரும் நீததி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இதை தொடர்ந்து சத்துணவு அமைப்பாளர் சத்யா, ஓட்டல் உரிமையாளர் ஜீனத்குபுரா, அவரது அக்காள் சல்மாதான் ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், சத்யாவின் கணவர் ரகுராமன் திருச்சி மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    ×