search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கேட்பு"

    • தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.
    • அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனி மொழி எம்.பி. தலைமையிலான11 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்று வருகின்றனர்.

    இந்த குழுவில் கனிமொழியுடன் தி.மு.க. செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே. எஸ்.இளங்கோவன், தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தி.மு.க. வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தி.மு.க. மாணவரணிச் செய லாளர் சி.வி.எம்.பி.எழிலர சன் எம்.எல்.ஏ., தி.மு.க. அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., தி.மு.க. மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைப்படி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கடந்த 5-ந் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வந்தனர்.

    நேரயடியாக மனுக்களை பெற்றதுடன் தொலைபேசி வாயிலாக 18,000-க்கும் மேற்பட்ட அழைப்புகளும், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4,000-க்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500-க்கும் மேற்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் மக்கள் பரிந்துரைகளை அனுப்பி உள்ளனர்.

    இன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட பொது மக்களையும் கட்சி நிர்வாகிகளையும் கனிமொழி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மக்களை சந்தித்தனர்.

    அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் பரிந்துரைகளை அளித்தனர்.

    வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வி யாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை வழங்கினார்கள். இவைகளை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்.பி. உங்களது கோரிக்கைகளை தீர்த்து வைக்க தேர்தல் அறிக்கையில் இவற்றை தொகுத்து இடம் பெற செய்வோம் என்று கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.
    • நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 9 மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று தரவுகளை பெறுவார்கள்.

    5-ந்தேதி (திங்கள்) சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் வேலப்பன்சாவடியில் உள்ள கஜலட்சுமி திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் கருத்து கேட்பார்கள்.

    மாலை 5 மணிக்கு வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள கிருஷ்ணா மகாலில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    6-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணி முதல் மாடூர் ஏ.என்.பி. மஹாலில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு சேலம் மண்டலத்துக்குட்பட்ட சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் சூரமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    7-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டை ரோடு பி.எல்.ஏ. மஹாலில் தஞ்சாவூர், நாகப் பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலகத்துக்குட்பட்ட திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர் களிடம் கருமண்டபத்தில் உள்ள எஸ்.பி.எஸ். மஹாலில் வைத்து கருத்து கேட்கப்படும்.

    8-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு திருநெல்வேலி மண்டலம், திருவனந்தபுரம் ரோட்டில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    9-ந்தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 4 மணிக்கு மதுரை மண்டலம், காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    10-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவை மண்டலம், காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்படும்.

    தேர்தல் அறிக்கை குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழக செயலாளர் களும்,. நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் விசைத்தறித் தொழிலாளர்கள், மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள், ரெயில்வே தொழிற் சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர், சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அரசிடம் இருந்து அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • குறைந்தபட்ச ஊதியம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    1948-ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டப்பிரிவு 5ன்படி, தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க உரிய விசாரணைகள் மேற்கொண்டு மாநில அரசுக்கு தெரிவிப்பதற்காக தமிழக அரசு ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்து ஆணை பிறப்பித்தது.

    அதில் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செயலாளராகவும், சிவகாசி பொருளாதாரம் மற்றும் புள்ளியில் துறை உதவி இயக்குநர் ஸ்ரீதர், எல்.பி.எப். தொழிற்சங்கத்தை சேர்ந்த மாடசாமி, சி.ஐ.டியு. சார்ந்த மகாலட்சுமி, ஏ.ஐ.டியு.சி. ஜீவானந்தம், கோவில்பட்டி விஜய்ஆனந்த், அகில இந்திய சேம்பர் ஆப் மேட்ச் இன்டஸ்ட்ரீஸ் செயலாளர் நூர்முகமது, செங்கன் மேட்ச் இன்டஸ்டிரீஸ் உரிமையாளர் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்த குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் மற்றும் களப்பணி சாத்தூரில் அமைந்துள்ள ஜோதி மேட்ச் ஒர்க்ஸ், மலைமகுடம் மேட்ச் ஒர்க்ஸ், சிவகாசி தாலுகா சித்துராஜபுரத்தில் உள்ள சாந்தி கலர் மேட்ச் ஒர்க்ஸ், விருதுநகர் தாலுகா சந்திரகிரி புரத்தில் அமைந்துள்ள தி பிரசிடெண்ட் மேட்ச் கம்பெனியிலும் நடந்தது.

    இந்த களப்பணியின் போது தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் தொழி லாளர்கள் மற்றும் வேலை யளிப்பவர்களிடம் ஊதியம் நிர்ணயம் செய்வது தொடர்பாக கருத்துக் கேட்கப்பட்டது.

    இந்த களப்பணியில் தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவர், மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், செயலாளர்-விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ், மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

    • போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
    • தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தற்பொழுது கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. போராட்டங்கள் நடத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததால் போராட்டங்கள் நடத்தினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் போராட்டங்களை நடத்த அனுமதி வழங்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

    இதுதொடர்பாக அனைத்து கட்சியுடன் கருத்து கேட்பு கூட்டம் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தாசில்தார் சேகர், நாகர்கோவில் டவுண் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் தி.மு.க. கட்சி சார்பில் மாநகர செயலாளர் ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீலன், குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    அப்போது அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பதிலாக வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. உள்பட வேறு சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் பிரச்சினைகளை அரசுக்கு கொண்டு செல்லும் வகையில் தான் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. எனவே கலெக்டர் அலுவலகம் முன்பே தொடர்ந்து போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். தி.மு.க. உள்பட ஒரு சில கட்சிகள் கலெக்டர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் பட்சத்தில் வேறு இடங்களை தேர்வு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

    இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள் இந்த பிரச்சனையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பு தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "நாகர்கோவில் கலெக்டர் அலுவலக முன் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு கலெக்டர் அலுவலகம் முன் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம். அண்ணா பஸ் நிலையம், மணிமேடை பகுதிகளில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது. அண்ணா கலையரங்கம் முன் பகுதியில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்கலாம்" என்றார்.

    • கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
    • வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் காங்கயம் தாலுகா பரஞ்சேர் வழி ஊராட்சி நால்ரோடு கிராமத்தில் அமைய உள்ள 2 கல்குவாரி அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் முன்னிலை வகித்தார்.

    கல்குவாரியால் தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஊராட்சிக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும். எங்கள் பகுதியில் பாதிப்பு இல்லை என பெரும்பாலானவர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேசும்போது, 'கல்குவாரியை முறைப்படி நடத்த வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள். வருங்காலத்தில் கருத்து கேட்பு கூட்டங்களை அந்தந்த கிராமத்தில் நடத்த வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். கனிமத்துறை உதவி இயக்குனர் அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். நால்ரோடு கல்குவாரியில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் குடியிருப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கு வீடுகள் உள்ளன. தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல் குவாரிகளை கலெக்டர் ஆய்வு செய்ய வேண்டும். கல்குவாரியில் வேலை செய்பவர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்' என்றார்.

    ×