search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை மாத்திரைகள்"

    • போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
    • 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 20 முதல் 30 வயது வரையிலான 3 வாலிபர்கள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் உடல் நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் சிகிச்சை பெற்று வரும் 3 வாலிபர்களிடமும் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் உதவி கமிஷனர் அணில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் திருப்பூர் மாநகரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காலேஜ் ரோடு, மாஸ்கோ நகர், பாறைக்குழி ஆகிய பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை சிலர் மருந்து கடைகளில் இருந்து வாங்கி அதனை போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த மயில்சாமி (வயது 55), அவரது மகன் சதீஷ் குமார்(30) மற்றும் முகமது இக்பால் (25), சூர்ய நாராயணன் (23), சூர்ய பிரகாஷ்(25) மற்றும் சிவக்குமார் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 120 வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.
    • போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நெகமம் பகுதிகளில் இளைஞர்களிடம் போதை ஊசி பழக்கம் அதிகரித்து வருவதாக நெகமம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நெகமம் போலீசார் நடத்திய விசாரணையில், நெகமம் அடுத்த கம்பளங்கரையில் வசித்து வரும் தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த முரளிகுமார்(51), ஆனைமலை அடுத்த சேத்துமடையை சேர்ந்த சுரேஷ்(29), பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த ஜலீல்(46) ஆகியோர் போதை ஊசிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

    இதையடுத்து கம்பளாக்கரையில் உள்ள முரளிகுமார் வீட்டில் இருந்து போதை தரக்கூடிய மருந்துகளை போலீசார் கைப்பற்றி 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், முரளிகுமார், கோவையில் உள்ள மருந்துகடைகளில் வலி நிவாரணி மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதாக கூறி வாங்கி உள்ளார்.

    பின்னர் அதனை சுரேஷ் மற்றும் ஜலீல் ஆகியோரிடம் கொடுத்து, நெகமம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    முரளி குமாரின் வீட்டில் நடத்திய சோதனையில் போதை மருந்து மாத்திரைகள், டையாஜீபம் ஊசி 10, தூக்க மாத்திரை 180, சிரிங்ச் 50, என மொத்தம் ரூ.25000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    மேலும் இவர்கள் போலியாக நடத்தி வந்த கிளினிக்கும் மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

    அதேபோல் மர்ம கும்பலை சேர்ந்த சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்று வருவதாகவும் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 26), ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வீரமனோகர் (37) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 1,890 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

    மருத்துவர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் இவ்வகை மாத்திரை மருந்து கடைகளில் வழங்கப்படுவதில்லை என்பதால் 'இந்தியா மார்ட்' எனும் ஆன்லைன் வர்த்தக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பெற்றுள்ளனர்.

    இதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட டீலருக்கு கூகுள்பே மூலம் அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து வாங்கிய மாத்திரைகளை 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருபவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலால் போலீசார் முத்துக்கடையில் இருந்து மாந்தாங்கல் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    அவர்களிடம் சோதனை நடத்திய போது போதையை ஏற்படுத்தக்கூடிய 300 மாத்திரைகள் வைத்தி ருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் வைத்திருந்த ராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்த பால் சுனில் (23), ராணிப்பேட்டை முகமது சுனில் (19), தனுஷ் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 5 பேரிடம் போலீசார் விசாரணை.
    • மருந்தகங்களுக்கு சப்ளை செய்யும் மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி விற்பனை.

    வேளச்சேரி:

    சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி கமிஷனர் சிவா மற்றும் வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் கொண்ட தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் 4,400 போதை மாத்திரைகள் மற்றும் 90 போதை டானிக்குகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் சுல்தான் அலாவுதீனும், நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

    • ஆன்லைன் மூலம் வாங்கினார்
    • 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கோவை:

    கோவை ரேஸ்கோர்சில் உள்ள தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைனபா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 170 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தெலுங்குபாளையம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த ரோகித் (வயது 24) என்பது தெரிய வந்தது.

    மேலும் போதை மாத்திரை பழக்கத்துக்கு அடிமையான இவர் ஆன்லைன் மூலம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து குறைந்த விலைக்கு வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி அதனை போதைக்காக பயன்படுத்தியதும், மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைமைவாக உள்ள விஜயகுமார் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-கோவையில் தற்போது இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை ஊசி செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. யாரும் இதனை கண்டுபிடிக்க முடியாது போதை கிடைக்கும் என்பதால் இதனை மாணவர்கள், இளைஞர்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை ஊசி செலுத்திய மாணவர் இறந்தார். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மருந்து கடடைகளில் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் மருந்துகள் வாங்க முடியாது. ஆனால் தற்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஆன்லைனில் டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்ய கூடாது என அரசு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    ×