என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீகாளஹஸ்தி"

    • சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
    • 29-ந்தேதி கிரிவலம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 28-ந்தேதி மாத சுத்த சப்தமியையொட்டி ரதசப்தமி விழா நடக்கிறது.

    இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி கே.வி.சாகர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ரதசப்தமியையொட்டி ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் ருத்ர பாதங்கள் அருகில் உள்ள சாயா உஷா தேவி சமேத சூரிய நாராயண சுவாமி சன்னதி அருகில் காலை 6 மணிக்கு கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மேலும் மூலவர் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கு இரண்டாவது கால அபிஷேகம் நடக்கிறது.

    அதன் பின்னர் காலை 7.30 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா நடக்கிறது. இதே போல் 29-ந் தேதி ஆன்மிக சொற்பொழிவாளர் சாகன்ட்டி கோட்டீஸ்வர ராவ் தலைமையில் கிரிவலம் நடக்கிறது.

    ஸ்ரீ காளஹஸ்தி எல்லை பகுதியில் கைலாச கிரி மலைகள் வழியாக இந்த கிரிவலம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 13-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது.
    • தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதற்காக கோவில் வளாகத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் மின் விளக்கு அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜல விநாயகர் கோவில் அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் கலை அரங்கம் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மகா சிவராத்திரி அன்று பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் வரிசைகளில் சலசலப்பு ஏற்பட்டது. அதனால் தற்போது கோவிலுக்குள் பக்தர்கள் வரிசையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் புதிதாக மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.

    கோவில் நுழைவு வாயிலில் இருந்து தட்சிணாமூர்த்தி சன்னதி வரை உள்ள வரிசை, மற்றொரு வரிசையுடன் இணைவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த முறை அது போன்று நடக்காமல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சொர்ணமுகி ஆற்றில் நடக்க உள்ள திரிசூல ஸ்நானம் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    மகா சிவராத்திரி உற்சவத்திற்கு முன்பு வருகிற 5-ந் தேதி மாசி மாத பவுர்ணமி அன்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் இருந்து திரிசூலத்தை வேத பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, திரிசூல ஸ்நானம் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு வரை சொர்ணமுகி ஆற்றின் கரையோரத்தில் சிறு பகுதியில் பக்தர்கள் புனித நீராடுதலுக்காக தண்ணீர் குட்டையை அமைத்தர். இந்த ஆண்டும் பக்தர்கள் புனித நீராடுவதற்கு தண்ணீர் குட்டை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

    இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். இந்த கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி அறிவுரை வழங்க உள்ளார்.

    விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு பேசியதாவது:-

    இந்த ஆண்டு நடக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை பிரமாண்டமாக நடத்த வேண்டும். பிரம்மோற்சவ விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த வேண்டும்.

    சிவன் கோவில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு விழாவாக கருதி செயல்பட வேண்டும். விழாவின்போது பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மகா சிவராத்திரி அன்று சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வி.ஐ.பி.பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம், தோரண வாயில் அமைக்கப்பட வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்கப்படும். வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை முன்கூட்டியே சீரமைத்துக் கொள்ள வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பிரம்மோற்சவ விழாவை வெற்றிகரமாக நடத்த அதிகாரிகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் துணை நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பொறியியல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
    • தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 13-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    அதையொட்டி திரிநேத்ரா விருந்தினர் மாளிகையில் கோவில் அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது முக்கிய நிகழ்ச்சிகளாக ஆதி தம்பதிகளான சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவம், கிரிவலம், தேர்த்திருவிழா ஆகியவை நடக்கின்றன. அந்த நாட்களில் அதிக பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். சாதாரண பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி, பஞ்சாயத்து ராஜ் துறையினர் ஒருங்கிணைந்து நகரம் முழுவதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வாகன நிறுத்துமிடத்தில் அடிக்கடி கொசு மருந்து தெளிக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்

    திருக்கல்யாண உற்சவம் அன்று நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடக்காமல் சமூக நலத்துறையினர், குழந்தைகள் நலத்துறையினர், போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும். பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். தயார் நிலையில் 108 ஆம்புலன்சுகள் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக அரசு பஸ்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி பேசுகையில், வாகனச் சேவையின்போது நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும். பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி வி.சாகர்பாபு, திருப்பதி வருவாய் கோட்டாட்சியர் கனகநரசாரெட்டி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கோவிலின் 4 மாட வீதிகளில் ஊர்வலத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களுக்கும், கோவில் கோபுரங்களுக்கும் வா்ணம் பூசும் பணி நடக்கிறது. பக்தர்களை கவரும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்படுகிறது. தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்படுகிறது. அந்தப் பணிகளை கோவில் அதிகாரிகள் மேற்பார்வை செய்தனர்.

    • அலங்கார மண்டபத்தில் தோப்புற்சவம் நடைபெற்றது.
    • அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

    ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஞானப்பிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரரின் விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், பட்டுவஸ்திரங்களையும் திருடி சென்றதை, தொண்டமான் சக்கரவர்த்தி மாறு வேடத்தில் சென்று திருடர்களை பிடித்து மீண்டும் சுவாமி, அம்பாளின் ஆபரணங்களையும், பட்டு வஸ்திரங்களையும் ஒப்படைத்ததாக ஐதீகம்.

    இந்த சம்பவத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தோப்புற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் தோப்புற்சவம் நடைபெற்றது. உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 4 மாட வீதிகள் அருகில் கொண்டு வந்தனர்.

    கோவில் அர்ச்சகர்கள் சம்பிரதாய முறைப்படி திருடர்கள் வந்து நகைகளை திருடி செல்ல முயற்சிப்பது போன்றும், தொண்டமான் சக்கரவர்த்தி விரட்டி பிடிப்பது போல் கோவில் அர்ச்சகர்கள் நடத்திய உற்சவம் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

    நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் கோவில் அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இந்த விழா 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 13 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

    அதன்படி முதல் நாளான 13-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் சிவன் கோவிலில் மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞான பிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோருக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்படும்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார், பக்த கண்ணப்பர் ஆகியோரை பல்லக்கில் வைத்தும், உடுக்கை படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை மேள தாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஸ்ரீகாளஹஸ்தியில் இருந்து பக்த கண்ணப்பர் கோவிலான கைலாசகிரி மலைக்குப் பக்தர்கள், ஊர்வலமாக கொண்டு செல்கின்றனர்.

    அங்கு, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பக்த கண்ணப்பர் கோவில் கொடி மரத்தில் அர்ச்சகர்கள் கொடியேற்ற உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கோவில் கோபுரங்கள் வாகன சேவையில் ஈடு படுத்தப்படும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் 4 மாட வீதிகளில் தரையில் வண்ண ரங்கோலி கோலங்கள் வரையப்பட்டு வருகின்றன. 2-வது நாள் காளஹஸ்தி சிவன் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது இதையடுத்து 15-ந் தேதி காலை பூத வாகன சேவையும் மாலை சுக வாகன சேவையும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி காலை ராவண வாகன சேவையும், மாலை மயூர வாகன சேவையும் 17ஆம் தேதி சேஷ வாகன சேவையும் மாலை யாழி வாகனமும் 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று லிங்கோத்ஷவமும், மாலை இந்திர விமான வாகன சேவையும், 19-ந் தேதி முக்கிய நிகழ்வாக ரத உற்சவம் நடைபெறுகிறது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள திருக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

    20-ந்தேதி சிவ பார்வதி திருக்கல்யாணமும், 21-ந் தேதி சபாபதி திருக்கல்யாணமும், 22ந் தேதி கிரி பிரதக்ஷனா நடைபெறுகிறது.23-ந் தேதி யாத்ரிகர் துவாரஜனம் நடைபெற உள்ளது.

    26 ஆம் தேதி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நித்திய பூஜைகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சமூக விரோத கும்பலை கண்காணிக்க கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது.

    பக்தர்களை கட்டுப்படுத்தி வரிசையில் தரிசனத்திற்கு அனுப்பு வதற்காக ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    • நாளை ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.
    • 19-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரின் தீவிர பக்தரான கண்ணப்பருக்கே முதல் பூஜை வழக்கப்படும் என்பதைக் குறிக்கும் வகையில் ஸ்ரீகாளஹஸ்தி அருகே கண்ணப்பர் மலை மீதுள்ள கண்ணப்பர் கோவிலில் கண்ணப்பர் கொடியேற்றம் இன்று மாலை 4 மணியளவில் நடக்கிறது. அத்துடன் அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.

    15-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 8 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் உலா.

    16-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் ராவணசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    17-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    18-ந்தேதி மகா சிவராத்திரி விழா, காலை 10.30 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9.30 மணியளவில் தங்க நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், தங்க சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    19-ந்தேதி காலை 11 மணியளவில் தேரோட்டம், இரவு 8 மணியளவில் நாரதர் புஷ்கரணியில் தெப்போற்சவம்.

    20-ந்தேதி காலை 9 மணியளவில அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரா், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு நகரி வீதியில் உள்ள கோவில் திருக்கல்யாண மண்டபத்தை அடைகின்றனர்.

    21-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக்கல்யாண உற்சவம். காலை 11 மணியளவில் புதுமண தம்பதியர் அலங்காரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் அம்பாரி வாகனங்களில் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 7 மணியளவில் நடராஜர் (சபாபதி) திருக்கல்யாண உற்சவம்.

    22-ந்தேதி காலை 8 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் ஊர்வலமாக புறப்பட்டு கைலாசகிரி மலைக்கு கிரிவலம் செல்கிறார்கள். கிரிவலம் நிறைவடைந்ததும் இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா.

    23-ந்தேதி காலை 9 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா. மதியம் 12 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் வசந்த உற்சவம். கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதி உலா.

    24-ந்தேதி இரவு 8 மணியளவில் பல்லக்கு சேவை (3 பல்லக்குகள்)

    25-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை மூலவர் சன்னதி எதிரில் உள்ள பள்ளியறையில் ஏகாந்த சேவை.

    26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவமூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம். இத்துடன் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா முடிகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் பஞ்சபூத தலங்களில் வாயு தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று காளஹஸ்தீஸ்வரருக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நுழைவுவாயில் அருகில் சுமார் 40 அடி உயரத்தில் கல்லால் ஆன கொடி மரமும், அதன் அருகில் குரு தட்சிணாமூர்த்திக்கு தங்கக்கொடி மரமும் உள்ளது. தங்கத் தகடு பொருத்தியுள்ள மற்றொரு காளஹஸ்தீஸ்வரர் கொடிமரமும் உள்ளது.

    மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் கொடியேற்றத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக வேத பண்டிதர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரின் மூலவர் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரம் அருகில் பஞ்சமூர்த்திகளை அமர்த்தி சிறப்பு கலசங்களை ஏற்பாடு செய்தனர்.

    அங்கு யாகம் வளர்த்து பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய புடவைகளை தர்ப்பை கயிறுடன் இணைத்து கொடியுடன் சேர்த்து வேத பண்டிதர்கள் ஏற்றினர். இதில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தம்பதியினர், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர், ஆர்.டி.ஓ. ராமாராவ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த விழா 26-ந்தேதி வரை நடக்கிறது.
    • ராகு, கேது பூஜைகள் வழக்கம்போல் நடக்கும்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவின் 2-வது நாளான நேற்று வெள்ளி பல்லக்குகளில் சாமி, அம்மையார் 4 மாட வீதிகளில் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 26-ந் தேதிவரை விழா நடக்கிறது. மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் 13 நாட்களும் தினந்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெறும்.

    மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு நகரை அழகுப்படுத்தியுள்ளனர். சாமி ஊர்வலத்திற்கு முன்னதாக சாலைகளை தூய்மைப் படுத்தி, தண்ணீரை தெளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது மூலவரின் சேவையை விட உற்சவமூர்த்திகள் சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் மகாசிவராத்திரி நடைபெறும் 26-ந்தேதி வரை கோவிலில் நடக்கும் ருத்ராபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், பச்சை கற்பூர அபிஷேகம் ரத்து செய்யப்படுவதோடு, கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.

    வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது இரண்டு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகளான சுவாமி, அம்பாள் 4 மாட வீதிகளில் வீதிஉலா வருகின்றனர். அப்போது பக்தர்களை அபிஷேகங்களில் அனுமதித்தால் கால நிர்வாகம் செய்ய இயலாது என்பதால் பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படுகிறது.

    ஆனால் பக்தர்கள் மிகவும் பக்தி பாவசத்துடன் ஈடுபடும் ராகு, கேது, சர்ப்பதோஷ நிவாரண பூஜைகள் வழக்கம் போல் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் நடக்கும் என்றும், இப்பூஜைகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
    • கோலாட்டங்கள் நடந்தன.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காபவனியோடு சூரியபிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பலித்தனர்.

    அவர்களுடன் மூஷிக வாகனத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர் சப்பரங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனங்களுக்கு முன்னால் மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டங்கள் நடந்தன. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர். நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம், நெய் தீபாராதனை காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    • உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை ஹம்ச, யாளி வாகன வீதிஉலா நடந்தது.

    முன்னதாக ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவர்களான சாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க உற்சவர்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டனர். ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காதேவியுடன் ஹம்ச வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் யாளி வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கோவிலின் நான்கு மாட வீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்போது பக்தர்கள் ஹர ஹர மகாதேவா சம்போ சங்கரா.. என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர்.

    வீதிஉலாவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு, நிர்வாக அதிகாரி சாகர்பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார், இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • லிங்கோத்பவ தரிசனத்தை எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனம் செய்யலாம்.

    திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி உற்சவம் நாளை (சனிக்கிழமை) கோலாகலமாக நடக்கிறது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி உற்சவம் நடக்கிறது. அன்று சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும். இந்த ஆண்டு மூலவர் சன்னதியில் பக்தர்களுக்கான தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அனைத்துப் பிரபலங்களுக்கும் சாதாரணப் பக்தர்களுக்கும் என அனைவருக்கும் 'மகா லகு' தரிசனம் (சற்று தூரத்தில் நின்று வழிபடுவது) அளிக்கப்படும். குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பக்தர்கள் கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வரிசையில் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

    குறிப்பாக, லிங்கோத்பவ தரிசனத்தைப் பக்தர்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி இலவச தரிசனத்தில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் மனதை கவரும் வகையில் தூர்ஜெட்டி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று மட்டும் கோவில் வளாகத்தில் உள்ள 3-வது கோபுரமான திருமஞ்சன கோபுர வழி அடைக்கப்பட உள்ளது. மற்ற 3 கோபுர வாயில்கள் வழியாக வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சாமி தரிசனம் செய்ததும் பக்தர்கள் முருத்யுஞ்சய சாமி சன்னதி அருகில் இருந்து வெளியே வரலாம்.

    இல்லையேல், கோவிலின் மேல் பகுதியில் இருந்தும் வரலாம் அல்லது நுழைவு வாயில் பகுதியிலேயே ஒரு பகுதியில் இருந்தும் வெளி வரலாம்.

    பக்தர்களுக்கு குளியல் அறைகள், கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரமாக 80 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி அன்று 180 நடமாடும் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகா சிவராத்திரி அன்று பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பிரசாதம் வழங்க 1½ லட்சம் லட்டுகள், வடைகள், புளியோதரை, ஜிலேபி ஆகியவை தயாரித்து வழங்கப்படும். சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    VLR0418022023: ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண

    ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாசிவராத்திரி இங்கு உருவானதாகவும், புரணாங்கள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா 7 நாட்கள் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகா சிவராத்திரி விழாவையொட்டி தினமும் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுவதால் கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் காளஹஸ்தியில் குவிந்துள்ளனர். இதனால் ஆங்காங்கே கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆந்திர மாநில அரசு சார்பில் அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பட்டு வஸ்திரங்களை ஊர்வலமாக கொண்டுவந்து காளகஸ்தி கோவில் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் 1200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

    ×