என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"
- பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
- சரியாக செயல்படாதவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அவ்வப்போது புது புது நடவடிக்கைகளை எடுத்துதான் பார்க்கிறார்கள்.
பதவிகள் கிடைத்தால் நன்றாக உழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். துணைத் தலைவராக 52 பேர், பொதுச்செயலாளர்களாக 52 பேர், செயலாளர்களாக 120 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
250-க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக பதவி கொடுக்கப்பட்டது. இவ்வளவு பதவிகள் கொடுத்தும் கட்சி குறிப்பிடத்தக்க அளவு பலம் பெறவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதற்கு காரணம் என்ன என்று மாநில தலைமை நடத்திய ஆய்வில் பலர் கவுரவத்துக்காக பதவியை வாங்கி வைத்திருப்பதாகவும், சிலர் வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
எனவே செயல்படாமல் இருப்பவர்களை கணக்கெடுக்கும்படி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாநில நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சரியாக செயல்படாத அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளார். பழைய நிர்வாகிகள் நீக்கப்படுவதற்கான காரணத்தையும் அவர்களுக்கு பதிலாக அந்த அந்த மாவட்ட நிர்வாகிகளின் கருத்து கேட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையும் மேலிடத்துக்கு தெரிவித்து ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறு நிர்வாகிகள் கணக்கெடுக்கப்படுவது பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
- நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. கடந்த ஜூன் 2024 அன்று சுங்கச்சாவடி கட்டணங்களை 5 முதல் 7 சதவிகிதம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. நீண்ட நெடுங்காலமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கிற வாகன ஓட்டுநர்களை சுங்கச்சாவடி கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கிற தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமான ஒரு போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் நடத்த விரும்புகிறது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் விரைவில் முற்றுகை போராட்டம் நடத்தி கண்டனத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை.
- அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் காமராஜர் அரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய செல்வப்பெருந்தகை தமிழகத்தில், காங்கிரசின் தற்போதைய நிலை பற்றிய தனது வேதனையை தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தில் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்கப்போகிறோம் என்பது தெரியவில்லை. எனவே வரும் காலங்களில் எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்பதை தொண்டர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கும் தொண்டர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார், அகில இந்திய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட சுமார் 1500 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காங்கிரஸ் கட்சிக்கென்று தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதை விரிவுபடுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை அனைத்து நிலையிலும் செயல்படுகிற அமைப்பாக முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும். செயல்படாத கட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
காங்கிரஸ் கட்சி 1989-ல் தனித்து போட்டியிட்ட போது பெற்ற 20 சதவிகித வாக்குகளை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத எந்த கட்சியும் பெற்றதி ல்லை, பெறவும் முடியாது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி உறுதிபடுத்த வேண்டும்.
ராகுல்காந்தியின் தமிழக கனவு மெய்ப்படுகிற வகையில் செயல்பட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து வலிமை படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கூட்டம் கேட்டுக் கொள்வது உட்பட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதற்கிடையே முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார். பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி தொகுதியை மீண்டும் கேட்டார்.
ஆனால் அந்த தொகுதி ம.தி.மு.க.வுக்கு கொடுக்கப்பட்ட நிலையில் வேறு தொகுதிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்ப டவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வரும் திருநாவுக்கரசர் இன்றைய கூட்டத்தை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்து.
- எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது.
- அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசியலில் வலிமை மிக்க சக்தியாக காங்கிரசை பலப்படுத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலோடு எதிர்கால செயல் திட்டங்களை வகுக்க ஜூன் 11-ந்தேதி தேனாம்பேட்டை பெருந்தலைவர் காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் பொதுக்குழு கூடுகிறது.
பொதுக்குழுவுக்கு அழைக்கப்பட்ட அனைவரும் தவறாமல் வருகை புரிந்து கட்சியை வலிமைப்படுத்துகிற முயற்சிக்கு உறுதுணையாக ஆக்கப்பூர்வமான கருத்துகளை கூறுவதற்கு அனைவரும் தவறாமல் வருகை புரியும்படி அன்புடன் அழைக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
- தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.
கோவை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.
தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.
தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.
திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.
நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?
தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது.
- வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து நேற்று மாலை தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டை பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளி குழந்தைகள் பசியுடன் இருக்கக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னுடைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். உலக நாடுகளும் நம் மாநிலத்தை எடுத்துக்காட்டாக சொல்கிற அளவுக்கு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.
இதேபோல, பெண்களுக்கான இலவச பஸ் பயண திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார். மேலும், 2.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் கண்ணீரை துடைத்துள்ளார். ஜனநாயகமா, சர்வாதி காரமா, பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க்களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்கிற ஆணவத்தில் இருக்கின்றனர்.
நம் நாட்டில் எத்தனையோ பிரதமர்கள் ஆட்சி செய்தனர். ஆனால், சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய திராவிட இயக்கத்தை அழித்து, ஒழித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன் என பிரதமர் மோடி ஊருக்கு ஊர் பேசி வருகிறார். இது அவரது ஆணவத்தை காட்டுகிறது. இது பற்றி அவரை நேரில் சந்திக்கும்போது கேட்பேன்.
இத்தேர்தல் இந்தியாவின் ஜனநாயகம், எதிர்காலத்தை சார்ந்ததாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வணிகர்கள் ஜி.எஸ்.டி. கொடுமையிலிருந்து மீட்கவும் இத்தேர்தல் அவசியமாக இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தியது. இதில், அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்திவிட்டு, மனு நீதியை சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லீம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர்.
இவ்வளவு பேரபாயம் இருப்பதை அனைவரும் உணர்ந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.இத்தேர்தல் என்பது 2-வது சுதந்திர போரை போன்றது.
எனவே, ஒவ்வொருவரும் 10 வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க செய்யுமாறு கேட்டு கொள்ள வேண்டும். தஞ்சை தொகுதி வெற்றி வேட்பாளர் முரசொலியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
- ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சர்மிளா தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் சொந்த தொகுதியான கடப்பா மாவட்டத்தில் பஸ் யாத்திரை மூலம் பிரசாரத்தை தொடங்கினார். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
இதுகுறித்து சர்மிளா எனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
எனது தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் கடப்பா தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் அவிநாஷ் ரெட்டி ஆகியோர் இலக்காக இருப்பார்கள்.
கடவுளின் ஆசியோடும் தந்தையின் ஆசியோடும் தாயின் அன்போடும் மகனின் கடைசி ஆசைப்படி பிரசாரத்திற்கு செல்கிறேன். நீதிக்காக போராடும் எனக்கு ஆந்திர மக்களின் ஆசி கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துங்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சர்மிளா ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது முதல் தனது சகோதரரான முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தற்போது அவரது பாணியிலேயே பஸ் யாத்திரையாக செல்லும் சர்மிளா, ஜெகன் மோகன் அரசையும் அவரது செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்வார் என கூறப்படுகிறது.
- இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார்.
- விஷ்ணு பிரசாத் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில் வந்தார். அப்போது பறக்கும் படை குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். வாகன சோதனயில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை குழு அதிகாரி தாசில்தார் சிவா.கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் வாக்கு சேகரிக்க வந்த டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். தொடர்ந்து, அவருடன் வந்த 4 கார்களையும் முழுமையாக சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் பணம் உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று பண்ருட்டிபகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது.
- மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில், ஏற்கனவே தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
அதன்படி, திருவள்ளூர் (தனி)- சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரி- கே. கோபிநாத், கரூர்- ஜோதிமணி, கடலூர்- எம்.கே. விஷ்னு பிரசாத், சிவகங்கை- கார்த்தி சிதம்பரம், விருதுநகர்- மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரி- விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால், திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது.
அதேபோல் புதுச்சேரிக்கும் இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார்.
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட் போட்டியிடுகிறார். மயிலாடுதுறை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
- முக்கியமாக ‘சீட்’ கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் 90-க்கும் மேற்பட்ட தலைவர்கள் மோதுவதால் யாருக்கு எந்த தொகுதியை கொடுப்பது என்று முடிவு செய்ய முடியாமல் டெல்லியில் அகில இந்திய தலைவர்களும் தலையை பிய்த்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த 3 நாட்களாக தொடரும் ஆலோசனையில் 4 தொகுதிகளின் வேட்பாளர்களை மட்டும் முடிவு செய்துள்ளார்கள். இதனால் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.
திருநெல்வேலி தொகுதியை திருநாவுக்கரசர், ராம சுப்பு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டுகிறார்கள். இதற்கிடையில் பக்கத்து தொகுதியான கன்னியாகுமரியில் தற்போது விஜய் வசந்த் எம்.பி.யாக இருக்கிறார். அவர் இந்து நாடார் சமூகத்தை சேர்ந்தவர்.
ஆனால் இந்த முறை கிறிஸ்தவ நாடாருக்கு வழங்க வேண்டும் என்று கடுமையாக போராடுகிறார்கள். அதை சமாளிக்க விஜய் வசந்தை நெல்லைக்கு போகும்படி கேட்டுள்ளார்கள். அதை அவர் ஏற்கவில்லை.
எனவே நெல்லையில் கிறிஸ்தவ நாடாரை வேட்பாளராக போடலாமா? என்று ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு ஆகியோரும் அழுத்தம் கொடுக்கிறார்களே என்ன செய்வது என்றும் யோசிக்கிறார்கள்.
புதிதாக வழங்கப்பட்ட தொகுதி மயிலாடுதுறை. இந்த தொகுதியில் போட்டியிட டெல்லியில் நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி கேட்கிறார். அதேநேரம் ஆரணி தொகுதி பறிபோனதால் மயிலாடுதுறையில் வாய்ப்பு தாருங்கள் என்று விஷ்ணுபிரசாத் மல்லு கட்டுகிறார்.
கடலூர் தொகுதியை முன்னாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மாநில துணை தலைவர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் விடாப்பிடியாக கேட்கிறார்கள்.
கிருஷ்ணகிரி தொகுதியை முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு, தற்போதைய எம்.பி. டாக்டர் செல்லக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத் ஆகியோர் கேட்டு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு தனித்தொகுதி திருவள்ளூர். எனவே ஒட்டு மொத்த தலித் தலைவர்களும் அந்த தொகுதியை கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யும், அகில இந்திய செயலாளருமான பி.விசுவநாதன், சசிகாந்த் செந்தில், தற்போதைய எம்.பி. ஜெயக்குமார், எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் ஆகியோர் தீவிரமாக இருக்கிறார்கள்.
இதற்கிடையில் திருநாவுக்கரசர் எம்.பி. தனக்கு ஏதாவது ஒரு தொகுதியில் வாய்ப்பு கொடுங்கள் என்று தீவிரமாக போராடி கொண்டிருக்கிறார்.
முக்கியமாக 'சீட்' கேட்கும் எல்லோருமே டெல்லியிலேயே முகாமிட்டு அவரவர்களுக்கு நெருக்கமான தலைவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். எனவேதான் பட்டியல் உறுதியாவது தாமதமாகி வருகிறது. இன்று மாலைக்குள் வெளியாகிவிடும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.
- பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
- இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமராக நரேந்திர மோடி பதவி யேற்றது முதல் அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் சுயேட்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
தேர்தல் தேதி ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளன.
இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.
சர்வாதிகார அரசியலை செய்து வருகிற மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல் காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை.
- பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
அரசியலைமப்பை திருத்துவது பா.ஜனதாவின் நோக்கம் ரகசியமாக இருந்ததில்லை. பா.ஜனதா தலைவர்களின் தனிப்பட்ட உரையாடல்களில் இந்தியா ஒரு இந்து நாடாக இருக்க வேண்டும், இந்தியாவின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டப்படி அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டால் அது பாராளுமன்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்