என் மலர்
நீங்கள் தேடியது "வெங்கடேஷ் பிரசாத்"
- சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது.
- அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.
டாக்கா:
இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பதிலேயே மிகவும் பழைய ஃபார்முலாவை பயன்படுத்தி வருவதாக முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வங்கதேச அணியுடனான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் 2 - 0 என தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 271 ரன்களை குவித்தது.
இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 266 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இந்தியாவின் ஃபார்ம் மிக மோசமாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரை தோற்ற இந்தியா, சீனியர்களுடன் விளையாடியும் வங்கதேசத்திடம் வீழ்ந்தது.
குறிப்பாக விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் ஏமாற்றியதால் ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் தோல்வி குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார்.
சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் புதிய ஃபீல்டிங் செட்டப்களை கொண்டு வருவதில் இந்தியா பிரபலமாக உள்ளது. ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட் என்று வரும்போது இந்தியாவின் அணுகுமுறை மிக மிக பழமையானது. அனைவரும் முன்னேறி வரும் சூழலில் இந்தியா மட்டும் பழைய முறையிலேயே உள்ளது.
இங்கிலாந்தின் நடவடிக்கை 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதன்பின்னர் அவர்களின் அணியில் பல கடினமான முடிவுகளை எடுத்தனர். இதனால் சில ஆண்டுகளிலேயே இங்கிலாந்து அணி நல்ல மாற்றங்களை கண்டது. எனவே இந்தியாவும் அது போன்ற கடின முடிவுகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் வந்ததில் இருந்து இந்தியா ஒரு முறை கூட டி20 உலகக்கோப்பையை வெல்லவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக 50 ஓவர் கிரிக்கெட்டிலும் பெரிய வெற்றிகளை பெறவில்லை. நமது தவறுகளில் இருந்து எதையுமே அவர்கள் கற்றுக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக அணுகுமுறைகளில் மாற்றத்தை கொண்டு வந்தே தீர வேண்டும் என வெங்கடேஷ் கூறியுள்ளார்.
இந்த கருத்துக்கு முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக் ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " இந்தியா தூக்கத்தில் இருந்து கண்விழிக்க வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- வங்கதேசம் இடையே அடுத்ததாக 3வது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 10ம் தேதியன்று சட்டோகிராம் நகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
- 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் கேஎல் ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் 20 ரன்களும் இரண்டாவது டெஸ்ட்டில் 18 ரன்களும் மட்டுமே எடுத்திருந்தார். இந்த தொடருக்கு முந்தைய ஆட்டங்களிலும் கேஎல் ராகுல் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கேஎல் ராகுலின் மோசமான பேட்டிங் தொடர்பான தரவுகள் அடங்கிய டுவிட்டை ரிடுவிட் செய்த வெங்கடேஷ் பிரசாத், "நாட்டில் மிகத்திறமையான பேட்டிஸ்மேன்கள் இருந்தபோதும் 2-வது டெஸ்ட் தொடக்க வீரராக அவர் அணி நிர்வாகத்தால் பரீசிலிக்கப்படுகிறார். கே.எல் ராகுலின் திறனை நான் மதிக்கிறேன்.
ஆனால், அவரின் ஆட்டம் சராசரியை விட குறைவாக உள்ளது. 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம்.
இதுபோன்று நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேறொரு நபரை நான் நினைத்து பார்த்ததில்லை. இவ்வாறான குறைந்த சராசரியுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மேல்வரிசை வீரர்கள் யாரும் விளையாடியதில்லை.
இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு இடம் கொடுத்திருப்பது நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது. கேஎல் ராகுலின் தேர்வு அவரது ஆட்டத்தை அடிப்படையாக கொண்டதல்ல... அவருக்கு ஆதரவாக கொண்டது' என்றார்.
- சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள்.
- ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும்.
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 2014-இல் டெஸ்ட்டில் அறிமுகமாகி இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 3 வடிவ கிரிக்கெட்டிலும் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவரை அணியில் இருந்து விடுவிக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் அதற்கு மாறாக அவரைத் துணை கேப்டனாக அறிவித்த பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது சமீப காலங்களாகவே ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அப்படி ஆரம்பத்தில் ரசிகர்கள் மட்டும் விமர்சித்து வந்த ராகுலை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சமீபத்தில் தனது டுவிட்டரில் வெளிப்படையாகவே ஆதாரங்களுடன் விமர்சித்தார். குறிப்பாக 8 வருடங்களாக விளையாடி 40-க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டிருந்தும் தொடர்ந்து வாய்ப்பு பெறும் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்த அவர் உங்களால் சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக வெளிப்படையாக தாக்கினார்.
அத்துடன் உங்களை விட அஷ்வின் துணை கேப்டனாக இருப்பதற்கு தகுதியானவர் என்று தெரிவித்த அவர் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் ராகுலை மீண்டும் டுவிட்டரில் விமர்சித்தார். அதனால் ராகுல் மீதிருக்கும் பகைமை காரணமாகவே வெங்கடேஷ் பிரசாத் இவ்வாறு பேசுவதாக அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் ராகுல் மீது எந்த பகைமையும் இல்லை என்றும் அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற அக்கறையில் தான் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளிப்படுத்தியதாக வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிலர் கேஎல் ராகுலுக்கு எதிராக நான் தன்னிச்சையாக வெறுப்பைக் கொண்டுள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியே நேர்மாறானது. ஏனெனில் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இருப்பினும் இந்த பார்மில் தொடர்ந்து விளையாடுவது நிச்சயமாக அவருடைய தன்னம்பிக்கையை அதிகரிக்காது.
எனவே அவர் டெஸ்ட் அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். ஆனால் உள்ளூர் (ரஞ்சி) சீசன் முடிவுக்கு வந்து விட்டது. எனவே புஜாரா நீக்கப்பட்ட போது இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி ரன்களை அடித்து மீண்டும் தனது இடத்தை பிடித்தது போல் ராகுலும் விளையாட வேண்டும். ஃபார்முக்கு திரும்பி நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே இந்த விமர்சனத்திற்கு உங்களது பதிலாக இருக்க முடியும். ஆனால் இதற்காக உங்களால் ஐபிஎல் தொடரை புறக்கணிக்க முடியுமா.
இவ்வாறு பிரசாத் கூறியுள்ளார்.
- ராஞ்சியிலுள்ள டோனி வீட்டிற்கு சென்ற வெங்கடேஷ் பிரசாத், பைக்குகளை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
- அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக எம்.எஸ்.டோனி, டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை பெற்று கொடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதேபோன்று ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5-வது முறையாக கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்ட டோனி அதே அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் மீது ஆர்வம் கொண்டவர். இது குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசியுள்ள டோனி, உலகின் முன்னணி பைக்கள் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார்.
இந்த நிலையில் டோனியின் வீட்டுக்கு சென்றுள்ள பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், டோனியின் வீட்டில் உள்ள பைக்குகளை பார்த்து வியந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ராஞ்சியிலுள்ள டோனியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, டோனி வைத்திருக்கும் பைக்குகளை ஒட்டுமொத்தாம வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கிட்டத்தட்ட 50-க்கும் அதிகமான பைக்குகள், 10-க்கும் மேற்பட்ட கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதைப் பார்த்த வெங்கடேஷ் பிரசாத் மட்டுமின்றி அவரது நண்பர்களும் வியந்து பார்த்துள்ளனர். அந்த வீடியோவில், பைக்குகளை நிறுத்துவதற்கான ஷெட் அமைப்பதற்கு வீட்டில் குடும்பத்தினர் யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. ஆதலால், தான் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் பைக் மற்றும் கார்களை நிறுத்துவதற்கு ஷெட் அமைத்தோம். இந்த ஷெட் அருகில் தான் பேட்மிண்டன் கோர்ட்டும் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
- மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
இதில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
இந்நிலையில், சனாதன தர்மத்தை அவதூறாக பேசினால் இதுதான் நிலை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெங்கடேஷ் பிரசாத் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் அது அதன் விளைவுகளை ஏற்படுத்தும். மகத்தான வெற்றியைப் பெற்ற பாஜகவுக்கு வாழ்த்துகள். இத பிரதமர் நரேந்திர மோடியின் அற்புதமான தலைமையும், அமித் ஷா மற்றும் அடி மட்டத்தில் கட்சி கேடரின் சிறப்பான பணிக்கும் கிடைத்த மற்றொரு சாட்சி.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
- ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
- ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்
கோவை:
ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:
ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.
ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.
எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:
மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.
விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.
பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.
அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது
மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.
16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.
அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.
இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.
- எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும் என கவாஸ்கர் கூறினார்.
- ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது முற்றிலும் தேவையற்றது.
மும்பை:
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷமா முகமது தெரிவித்தார்.
ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்று ஷமா முகமது கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கவாஸ்கர் கூறும்போது, எடை குறைந்த வீரர்கள் மட்டும் வேண்டுமென்றால், நீங்கள் ஒரு மாடலிங் போட்டிக்குச் சென்று அனைத்து மாடல்களையும்தான் தேர்வு செய்ய வேண்டும்.
இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். இது உடல் எடையை பொறுத்தது அல்ல. நீங்கள் எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பது பற்றியது. சர்பிராஸ்கான் உடல் எடை அதிகமாக இருப்பதால் விமர்சிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 150 ரன்கள் எடுத்தார். அதன்பின் அரைசதங்களும் அடித்தார்.
நான் விளையாடிய காலத்தில் என்னால் மைதானத்தை 2 முறை சுற்றி ஓட முடியாது. ஆனால் நான் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தேன். உடல் எடைக்கும், மனவலிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரிக்கெட் உடற்பயிற்சி மற்றும் உடல் தகுதி இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் ஆகும். நீங்கள் நீண்ட தூரம் நீடிக்க முடியுமா என்பதுதான் மிக முக்கியமான விஷயம் என்றார்.
வெங்கடேஷ் பிரசாத் கூறும்போது, ஒரு கேப்டனாக ரோகித் சர்மா மிகுந்த கண்ணியத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றார்.
வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஒரு ஐசிசி போட்டியில் விளையாடி கொண்டிருக்கும், அவரை உடல் ரீதியாக அவமானப் படுத்துவது முற்றிலும் தேவையற்றது. பல ஆண்டுகளாக தனது திறமைகள் மற்றும் தலைமைத்துவத்தின் மூலம் சாதித்த ஒரு நபருக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்றார்.
- ஈஷாவின் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் சிறப்புரை
- மனிதர்களை வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை வெளிக்கொணர முடியாது என்றார் சத்குரு
கோவை:
ஈஷா லீடர்ஷீப் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 'Human Is Not a Resource' என்ற பெயரிலான 3 நாள் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சி கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று தொடங்கியது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வர்த்தக தலைவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இன்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், "ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு வெற்றி பெற வேண்டுமானால், அதற்கென்று நன்கு கட்டமைக்கப்பட்ட வழிமுறைகள் இருக்க வேண்டும். இதற்கு மேற்கு இந்திய கிரிக்கெட் அணியையும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியையும் உதாரணமாக சொல்லலாம். ஆஸ்திரிலேயாவில் கிரிக்கெட்டிற்கென்று அகாடமி உள்ளது. அவர்கள் வீரர்களின் திறமைகளை நன்கு ஊக்குவிக்கிறார்கள். இன்றும் கூட அந்நாட்டில் ஒருவருக்கு 38 வயது ஆகியிருந்தாலும் அவரிடம் திறமை இருந்தால், அவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஆட முடியும். அவர்கள் வயதை ஒரு தடையாக பார்க்கவில்லை. அதனால் தான் அவர்கள் தொடர்ந்து நிலையான வெற்றியை தக்க வைத்து கொண்டுள்ளார்கள்.
இதேபோல், உங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஒருவர் தற்போது சவாலான கட்டத்தில் தவிக்கிறார் என்றால் நீங்கள் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு கோலியை கூறலாம். உங்கள் நிறுவனத்தில் இருக்கும் அவரை போன்றவர்கள் மீண்டும் வெற்றியின் உச்சத்தை தொடுவதற்கு நீண்ட கயிறை(வாய்ப்பினை) வழங்க வேண்டும். நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஒரு அளவுகோலை பின்பற்ற கூடாது" என்றார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சத்குருவின் அறிமுக வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது. அதில் சத்குரு கூறுகையில், "மனிதர்களை ஒரு வளமாக பார்க்க கூடாது. மனிதர்களை ஒரு சாத்தியமாக பார்க்க வேண்டும். சாத்தியத்திற்கும் எதார்த்ததிற்கும் இடையே ஒரு இடைவெளி எப்போதும் இருக்கும். நாம் அந்த சாத்தியத்தை வெளிகொணர்கிறோமா இல்லையா என்பதை பொறுத்தே மனிதர்களின் வளர்ச்சி இருக்கும்.
மனிதர்கள் ஒரு விதையை போன்றவர்கள். வளமான மண்ணை கண்டறியும் போது தான் அந்த விதை அதன் சாத்தியத்தை உணரும். சரியான வளமான மண்ணில் விதைக்கப்படும் ஒரு விதையால் இந்தப் பூமி முழுவதையும் பசுமை ஆக்க முடியும். எனவே, மனிதர்களை நீங்கள் சாத்தியமாக பார்க்காமல் வெறும் வளமாக பார்த்தால் அவர்களின் புத்திசாலித்தனத்தை உங்களால் வெளிகொணர முடியாது" என்றார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் ஓரியண்டல் ஹோட்டலின் இயக்குநர் நினா சட்ரத், டிரெண்ட் லிமிட்டெட் (Trent Limite) நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் ரஸ்தோகி, 'ட்ரூநார்த் கன்சல்டிங்' நிறுவனர் ருச்சிரா சவுத்ரி உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் எச்.எல்.இ. க்லாஸ்கோட் நிறுவனத்தின் அதிகாரி அமித் கல்ரா, ஆல் கார்கோ நிறுவனத்தின் துணை தலைவர் வி.எஸ். பார்த்தசாரதி உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.