என் மலர்
நீங்கள் தேடியது "புராதன சின்னங்கள்"
- சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
- ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சார்பில், 75-வது சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, புராதன சின்னங்களை பாதுகாக்கும் வகையில் புதிய லோகோ வடிவமைக்கப்பட்டு அதை இந்தியா முழுவதும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள 75 புராதன சின்னங்களில் டிஜிட்டல் முறையில் புரொஜக்டர் மூலம் சிற்பங்களில் ஒளி அமைக்கப்பட்டு வருகிறது.
மாமல்லபுரத்தில் நேற்று இரவு வெண்ணெய் உருண்டைக்கல் பாறை, கடற்கரை கோவில் பகுதியில் பகுதியில் இரவு 9 மணி வரை, ஓளி அலங்காரத்துடன் டிஜிட்டல் லோகோ ஒளி அமைக்கப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும், வரும் நாட்களில் கடற்கரை கோவில், ஐந்துரதம் மற்றும் அர்ஜூனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் பகுதியில் ஒளி அலங்காரம் அமைக்கப்படுகிறது
- 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
- நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம்:
கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் படுகு குழாம் உள்ளது. இங்கு ரூ.50லட்சம் செலவில் புதிய சுகாதார மையம், குழந்தைகள் விளையாட்டு மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்றில் இருந்து குடிநீர் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்று லாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாமல்லபுரத்தில் உள்ள புரான சின்னமான அர்ச்சுனன் தபசு அருகில் ரூ.5 கோடி மதிப்பில், 7 டி.எக்ஸ் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் விரைவில் கட்டப்பட உள்ளது.
இதில் மாமல்லபுரம் புராதன சின்னங்களின் வரலாறு குறித்து "3டி லேசர்" ஒளி, ஒலி காட்சி ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.
- உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
- மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர்.
மாமல்லபுரம்:
உலகின் பாரம்பரிய நினைவு சின்னங்களை பாதுகாத்து அதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, யுனெஸ்கோ அமைப்பினர் ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ந் தேதியை உலக பாரம்பரிய தினமான கடைபிடித்து வருகிறார்கள். மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி தமிழ்நாட்டில் மத்திய தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கோட்டை மியூசியம், மாமல்லபுரம் புராதன சின்னங்கள், செஞ்சிகோட்டை, தஞ்சாவூர், தாராசுரம் கோயில், வேலூர் கோட்டை, கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளை, இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு அனைத்து சுற்றுலா பயணிகளும் இலவசமாக பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்தது.
அதன்படி இன்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டை பாறை, புலிக்குகை, மற்றும் குடவரை கோயில் பகுதிகளை இலவசமாக பார்த்து ரசித்து சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
- நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
- மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 வசூலிக்கப்படுகிறது.
மாமல்லபுரம்:
மத்திய தொல்லியல் துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய சின்னங்கள் உள்ள இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) உலக பாரம்பரிய தினமாக கடை பிடிக்கப்படுகிறது.
உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் முழுவதும் பார்வையாளர் நேரமான காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எந்தவித நுழைவு கட்டமணமும் இன்றி சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்குள்ள புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.
குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600-ம் உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது.
- தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்கள் வைத்துள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்துரதம், வெண்ணெய் உருண்டைக்கல் பாறை பகுதிகளில் சரியான சமநிலை கல்பாதை இல்லாததால் மாற்று திறனாளிகள், முதியவர்கள் வீல் சேரில் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில் அண்மையில் ஜி-20 மாநாட்டு விருந்தினர், மாமல்லபுரம் வருகையின்போது புராதன சின்னங்கள் பகுதி பாதைகள் சீரமைக்கப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வசதிக்கு ஏற்பவும் பாதை சம நிலையாக அமைக்கப்பட்டது. தற்போது பாதை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் அவர்கள் மகிழ்ச்சியுடன் அருகில் சென்று மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்த்து ரசித்து வருகின்றனர். தொல்லியல்துறை டிக்கெட் கவுண்டர்களில் கூடுதல் வீல் சேர்களும் வைத்துள்ளனர்.
- கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர்.
- மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.
மாமல்லபுரம்:
சென்னையில் நடந்த ஜி20 மாநாடு கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் என 120 பேர் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தனர். ஐந்துரதம் பகுதியில் அவர்களை தமிழக சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, தொல்லியல் துறையின் சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் தமிழக பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து, நாதஸ்வர இசையுடன் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர்.
அப்போது வெண்ணை உருண்டைக்கல் வளாகத்தில் தப்பாட்டம் குழுவினர் இசைத்து கொண்டிருந்தபோது, தப்பாட்ட கலைஞர்களிடம் மேளங்களை வாங்கி வெளிநாட்டு விருந்தினர்கள் தப்பாட்டம் இசைத்து மகிழ்ந்தனர். ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்த பிறகு, மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் அங்கு நுழைவு வாயில் பகுதியில் தரையில் வரையப்பட்ட வண்ண கோலங்களை ரசித்து பார்த்து புகைப்படம் எடுத்தனர்.
பிறகு கடற்கரை கோவிலுக்குள் வந்த வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாமல்லபுரம் மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் பாரம்பரிய வேட்டி அணிந்து மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களின் வரலாற்று தகவல்களை முழு விவரங்களுடன் எடுத்து கூறினர்.
அவர்களின் வரலாற்று தகவல்களை உற்று நோக்கி கேட்டறிந்த வெளிநாட்டினர் ஒவ்வொரு சிற்பங்களின் வடிவமைப்பு, அதன் தொன்மைகள், அது உருவாக்கப்பட்ட ஆண்டு குறித்த முழு விவரங்களை கேட்டு வியப்படைந்தனர். பகல் நேரம் முடிந்து இரவு நேரம் தொடங்கும்போது ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் கடற்கரை கோவிலின் அழகை வெளிநாட்டினர் பலர் ரசித்து குழு, குழுவாக நின்று அங்கு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட உலோக, மரச்சிற்ப கண்காட்சி திடல்களையும், கைத்தறி மூலம் பட்டு சேலை உருவாக்கும் அரங்கையும் செய்முறை விளக்கத்துடன் பார்த்து ரசித்தனர்.
பின்னர் கண்காட்சி திடலில் விற்பனைக்கு வைக்கப்பட்ட உலோக, கற்சிற்பங்களை வெளிநாட்டினர் பலர் பணம் கொடுத்து வாங்கி சென்றனர். அப்போது சிற்பங்கள் எப்படி வடிவமைக்கப்படுகிறது என்று கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி, மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் வெளிநாட்டினருக்கு விளக்கினர்.
வெளிநாட்டு விருந்தினர்கள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. பகலவன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஐந்துரதம் பகுதியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. சஜ்ஜீவனா, மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலர் இஸ்மாயில், திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாமல்லபுரம் சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம்.
- புராதன சின்னங்கள் மீது வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்துரதம் சிறப்பு பெற்றது.
இதில் உள்ள சிற்பங்களில் கடல் காற்று உப்பு, மழையால் ஏற்படும் பாசி, காற்றில் உருவாகும் மண் தூசி, வாகனப்புகை, பறவைகள் எச்சம் உள்ளிட்ட மாசு படிந்து காணப்படுகிறது.
சிற்பங்களில் உள்ள மாசுக்களை படிமங்களை தொல்லியல் துறை இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ரசாயனம் பூசி சுத்தம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா கட்டுப்பாடு, ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக சிற்பங்கள் தூய்மை பராமரிப்பு பணிகள் செய்யாமல் பொலிவிழந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடு தளர்வுக்கு பிறகு தற்போது மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். இதனால் புராதன சின்னங்களின் தூய்மை பராமரிப்பு பணிகளை விரைவாக செய்து முடிக்க தொல்லியல் துறை நிதி ஒதுக்கி 3 ஆண்டுக்கு பிறகு தற்போது பணிகளை தொடங்கி உள்ளது.
முதற்கட்டமாக புராதன சின்னங்களில் சாரம் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து வேதியியல் பிரிவு என்ஜினியர்கள் முன்னிலையில் காகிதம், மரத்தூள், ரசாயனம் கலந்த கூழ்மம் சிற்பங்களில் தடவப்படும்.
ஒரு வாரத்துக்கு பின்னர் அவை அகற்றப்படும் என்று தெரிகிறது. இதனால் புராதன சின்னங்கள் எப்போதும் போல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இலவசம்.
- உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை :
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி மத்திய அரசு கடந்த 5-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 11 நாட்களுக்கு இந்தியா முழுவதும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்துக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் வெண்ணெய் உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் இலவசமாக பார்த்து ரசித்தனர்.
குறிப்பாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் பார்வையாளர் கட்டணமாக நுழைவு கட்டண மையங்களில் வசூலிக்கப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி சீரமைத்தனர்.
நேற்றும் இலவச அனுமதியால் புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவுக்கு காணப்பட்டது.