என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இர்பான் பதான்"

    • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது.
    • அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம்.

    16-வது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோலாலமாக நடைபெற உள்ளது. இம்முறை 10 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் ஒரு போட்டியையும், வெளியில் சென்று ஒரு போட்டியையும் விளையாட இருப்பதினால் மிகச் சிறந்த தொடராக இத்தொடர் அமைய வாய்ப்புள்ளது. அதோடு இம்முறை குறிப்பிட்ட சில புதிய விதிமுறைகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தொடரானது சுவாரசியமாக நடைபெறும் என்று தெரிகிறது.

    இவ்வேளையில் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து கழட்டி விட்ட வீரர்களையும், தக்கவைத்த வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து எதிர்வரும் 16-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது வரும் 23-ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் இம்முறை அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே சன்ரைசர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனை இந்த ஏலத்தில் தேர்வு செய்து வாங்க இருக்கிறது.

    அந்த வகையில் சன்ரைசர்ஸ் அணி எந்த ஒரு வீரரை கேப்டனாக தேர்வு செய்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக மாற்றினால் அந்த அணிக்கு மிகவும் நல்லது. ஏனெனில் அவரைப் போன்ற ஒரு அதிரடியான துவக்க வீரர் அந்த அணிக்கு அவசியம். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு அவர் பஞ்சாப் அணியை வழிநடத்திய விதமும், அவர் எடுத்த சில அதிரடியான முடிவுகளும் அவர் ஒரு பயமற்ற, சுயநலமற்ற வீரர் என்பதை வெளிக்காட்டுகிறது.

    எனவே நிச்சயம் அவரால் சன் ரைசர்ஸ் அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக செயல்பட முடியும். அதோடு வில்லியம்சனை ஏலத்தில் எடுக்க பெரியளவு யாரும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். அந்த வகையில் தங்களது மிடில் ஆர்டரை பலப்படுத்த அவரை நீங்கள் குறைந்த தொகைக்கு கூட ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

    என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.

    அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில அணிகளுக்கு இடையேயான டி20 தொடரிலும் அவரது தலைமையிலான அணி மிகச் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன்.
    • அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பேட்ஸ்மேன் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், 3-வது போட்டியில் சதமும் அடித்தார்.

    அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரன்களை குவித்து வரும் சுப்மன்கில்லை பலர் பாராட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்தார்.

    சுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன். அவர் அனைத்து வடிவ வீரராக உருவாக முடியும் என்று அடிக்கடி கூறி வருகிறேன்.

    விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். அது போன்ற அதிக திறமை சுப்மன் கில்லிடம் இருக்கிறது. விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார்.

    அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சதத்தை அடித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் ஆறு சதங்களை அடித்து உள்ளார். சுப்மன் கில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் யாஷ் தயாள் 2-வது இடம் பிடித்துள்ளார்.
    • இன்றைய ஆட்டத்தை மறந்து விடுங்கள் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 13-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் 204 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்த பரப்பரப்பான போட்டியில் ரிங்கு சிங் கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் 21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 6 சிக்சர்கள் உள்பட 48 (நாட் அவுட்) ரன்கள் குவித்தார்.

    கடைச் ஓவரை வீசிய யாஷ் தயாள் அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதற்கு முன்னதாக அவர் 3 ஓவர் வீசி 38 ரன்கள் கொடுத்திருந்தார். இதன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த வீரர்களின் பட்டியலில் யாஷ் தயாள் 2-வது இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் பசில் தம்பி இடம் பெற்றுள்ளார்.

    விக்கெட் இழப்பின்றி அதிக ரன்கள் கொடுத்த பவுலர்கள்:

    பசில் தம்பி - 70 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - ஆர்சிபி

    யாஷ் தயாள் - 69 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்) - கேகேஆர்

    இஷாந்த் சர்மா - 66 ரன்கள் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) - சென்னை சூப்பர் கிங்ஸ்

    முஜூப் உர் ரஹ்மான் - 66 ரன்கள் (கிங்ஸ் 11 பஞ்சாப்) - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

    உமேஷ் யாதவ் - 65 ரன்கள் டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி

    இந்நிலையில் யாஷ் தயாளிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    ஏய் யாஷ் தயாள் நண்பா, அடுத்த ஆட்டத்திற்கு செல்ல களத்தில் இருந்த நல்ல நாட்களை மறந்தது போல் இன்றைய ஆட்டத்தை மறந்து விடுங்கள். நீங்கள் வலுவாக இருந்தால், எல்லா விஷயங்களையும் மாற்ற முடியும் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • விராட் கோலியின் முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது.
    • விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.

    ஐபிஎல் 16-வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்றைய போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டுப்ளெசிஸ் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி பேட்டிங் மட்டும் ஆடியதால் விராட் கோலி தான் இந்த போட்டியில் கேப்டன்சி செய்தார். இதில் 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் படுதோல்வி அடைந்தது.

    இந்நிலையில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மிக அருமையாக இருந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி வேற லெவல் எனர்ஜியை அணிக்குள் கொண்டுவந்தார். எனர்ஜி மட்டுமல்லாது அவரது முடிவுகளும், பவுலிங் சுழற்சியும் மிகச்சிறப்பாக இருந்தது. 3-வது ஓவரிலேயே ஹசரங்காவை பந்துவீச வைத்தது மாஸ்டர்ஸ்ட்ரோக்.

    மேத்யூ ஷார்ட் ஸ்பின்னை எதிர்கொள்ள திணறுவார் என்பதை தெரிந்தே ஹசரங்காவை அழைத்துவந்தார். அதன்படி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். அப்போதே ஆர்சிபி அணி வலுவாகிவிட்டது. விராட் கோலியின் எனர்ஜி அணி முழுவதும் பரவியதற்கு கிடைத்த பரிசு தான் 2 ரன் அவுட்டுகள்.

    இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது.
    • அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும்.

    ஐபிஎல் 16-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளன.

    கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்சை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம், கேமரூன் க்ரீனின் அதிரடி சதம். அவர் 47 பந்தில் 100 ரன்களை குவித்தார்.

    கேமரூன் கிரீன், சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகிய வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்பட்டனர். இவர்களில் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கேவிற்கு சொல்லும்படியான பங்களிப்பை செய்யவில்லை. சாம் கரன் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பஞ்சாப் அணிக்கு பங்களிப்பு செய்திருந்தாலும் ஒரு அணியாக அந்த அணி சிறப்பாக செயல்படாததால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.

    ஆனால் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில் சில இன்னிங்ஸ்களை ஆடினார். பவுலிங்கும் நன்றாக வீசினார். அதிலும் வாழ்வா சாவா என்ற கடைசி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி வெற்றியை தேடிக்கொடுத்தார்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கொடுத்த தொகைக்கு கிரீன் சரியான ஆளுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிரீன் மீது பெரிய தொகையை முதலீடு செய்தது. பவர் ஹிட்டரான கிரீன் ஏமாற்றமளிக்கவில்லை. மும்பை இந்தியன்சின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். அடுத்த போட்டிகள் சென்னை மற்றும் அகமதாபாத்தில் நடப்பதால் கேமரூன் கிரீன் 3-ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும். சூர்யகுமார் யாதவ் 4-ம் வரிசையில் பேட்டிங் ஆடலாம்.

    என்று இர்பான் பதான் கூறினார்.

    • மோகித் சர்மா, ரஷித் கான் 16, 17-வது ஓவர்களில் முறையே 4 மற்றும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
    • மும்பை அணிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில் 12 ரன்களே அடிக்க முடிந்தது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கட்டத்தில் 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. டெவால்டு பிரேவிஸ் 37 பந்தில் 46 ரன்களும், திலக் வர்மா 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில், அதாவது கடைசி 30 பந்தில் 43 ரன்கள் தேவைப்பட்டது. இது எளிதான இலக்குதான். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குஜராத் பந்து வீச்சாளரக்ள் துல்லியமாக பந்து வீச இயலாது என கருதப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றி பெற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 16-வது ஓவரில் மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து பிரேவிஸ்-ஐ அவுட்டாக்கினார். அடுத்து டிம் டேவிட் களம் இறங்கினார். அந்த நேரத்தில் 25 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அதிரடியாக களம் இறங்கி ஹர்திக் பாண்ட்யா சிக்ஸ், பவுண்டரி பறக்க விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், டிம் டேவிட் களம் இறக்கப்பட்டார். 17-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவரில் அவர் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததன் காரணமாகவே மும்பை அணிக்கு நெருக்கடி அதிகமானது.

    அதன்பின் 3 ஓவரில் மும்பைக்கு அணிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரில் மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். 27 ரன் தேவை என்ற நிலையில் 19-வது ஓவரில் ஜான்சன் 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    19 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 12 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணி 6 ரன்னில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது.

    இந்த நிலையில் மும்பை அணி தோல்விக்கு ஹர்திக் பாண்ட்யா எடுத்த முடிவுதான் காரணம் என இர்பான் பதவி விமர்சனம் செய்துள்ளார்.

    டிம் டேவிட்டிற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், ரஷித் கான் பந்தை எதிர்கொள்ள ஹர்திக் பாண்ட்யா விரும்பவில்லை. இதனால் டிம் டேவிட்டை களம் இறக்கினார். இது மும்பை அணியின் தோல்விக்கு வழி வகுத்தது. இது மோசமான கேப்டன்சி என விமர்சித்துள்ளார்.

    18-வது ஓவரின் கடைசி பந்தில் டிம் டேவிட் (10 பந்தில் 11 ரன்) ஆட்டமிழந்ததும் ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து ஆட்டமிழந்தார்.

    • கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை.
    • ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை.

    ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா கேப்டன்ஷிப் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் பந்துவீச்சை மேம்படுத்த முடியும். அவர்களின் கேப்டன் தனது பந்துவீச்சாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும். ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீசி ஒரு விக்கெட் எடுத்தார். ஆனால் அதன் பிறகு அவருக்கு இரண்டாவது ஓவர் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக அவர் ரச்சின் ரவீந்திராவை ஆட்டமிழக்க செய்தும், ஷிவம் தூபே பேட்டிங் செய்யும் போது ஏன் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி உள்ளது.

    அதன்பின் அவரது ஓவரை ஹர்திக் பாண்டியா வீச முன்வந்து, தனது முதல் ஓவரிலேயே15 ரன்கள் கொடுத்தார். பிறகு கடைசி ஓவரை வீசும் முறை வந்ததும் அவரே பந்து வீச வந்தார். அவர் ஆகாஷ் மத்வாலுக்கு பந்து வீச ஏன் வாய்ப்பு வழங்கவில்லை. கடந்த ஆண்டு டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய மத்வாலிற்கு இந்த முறை ஏன் வாய்ப்பு தரவில்லை. ஒருவேளை அவர் பந்துவீசி இருந்தால் கூடுதலாக 20 ரன்கள் வராமல் இருக்கலாம்.

    இவ்வாறு பதான் கூறினார்.

    • இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
    • அவர்கள் வெளியேறியது ராஜஸ்தான், ஆர்சிபி, பஞ்சாப் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஐபிஎல் 2024 சீசனின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் இடம் பிடித்திருந்தனர்.

    ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் பாகிஸ்தான் அணியுடன் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுகளில் இங்கிலாந்து வீரர்கள் யாரும் இடம் பெறமாட்டார்கள். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் சிறப்பாக விளையாடி வந்தார். இரண்டு சதங்கள் விளாசியுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜேக்ஸ் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் இடம் பிடித்திருந்தார்.

    தற்போது முக்கியமான கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறுவதால் அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் விமர்சகருமான இர்பான் பதான் "விளையாட முடிவு செய்துவிட்டால் தொடர் முழுவதும் விளையாட வேண்டும். இல்லையெனில் ஐபிஎல் போட்டியில் விளையாட வரக்கூடாது" இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • இந்திய அணி 17 ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தார் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா.

    இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பாய்ந்து பிடித்த கேட்சை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இர்பான் பதான் கூறுகையில், என் கடைசி மூச்சு உள்ள வரை சூர்யகுமார் யாதவின் கேட்சை மறக்கமாட்டேன்.

    இந்த கண்ணீர் நான் சோகமாக இருப்பதாலோ அல்லது என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களினாலோ அல்ல. இவை மகிழ்ச்சியான கண்ணீர் என தெரிவித்தார்.

    • மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.

    2024 ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

    இதற்கு அடுத்தபடியாக ஐபிஎல் ஏலத்தில் சக ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலம் போனார்.

    இந்நிலையில், வரும் ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட் மிக அதிக தொகைக்கு ஏலத்தில் போவார் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    "ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்கின் சாதனை ஆபத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் அதை முறியடிக்கத் தயாராக உள்ளார்" என்று இர்பான் பதான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    டெல்லி அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிக் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மும்பை மரைன்ஸ் ஆகிய அணிகள் மோதின.
    • இதில் இர்பான் தலைமையிலான மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.

    பிக் கிரிக்கெட் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் மும்பை மரைன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னாவும், மும்பை மரைன்ஸ் அணியின் கேப்டனாக இர்ஃபான் பதானும் செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த சதர்ன் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய மும்பை மரைன்ஸ் 19.1 ஓவரில் மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து 7 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பிக் கிரிக்கெட் லீக் தொடரை மும்பை மரைன்ஸ் அணி வென்றது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வென்ற போது ரோகித் சர்மா ஸ்டைலாக வந்து உலகக் கோப்பையை வாங்குவார். அதே போல பிக் கிரிக்கெட் லீக் கோப்பையை வாங்கிய இர்பான் பதான், ரோகித் ஸ்டைலில் கோப்பையை கொண்டு தனது அணி வீரர்களிடம் சேர்ப்பார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.
    • கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.

    முன்னதாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான சாம் கான்ஸ்டாஸ்- விராட் கோலி நேருக்கு நேராக இடித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக அருகில் இருந்த உஸ்மான் கவாஜா மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள்.

    இந்த சம்பவத்தில் விராட் கோலி மீதுதான் தவறு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர்களாக இர்பான் பதான், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியதாவது:-

    கிரிக்கெட் களத்தில் எந்த சூழலிலும் எதிரணி வீரர்களை தொடவே கூடாது. களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு, சக வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். சாம் கோன்ஸ்டாஸ்-க்கு 19 வயது மட்டுமே ஆகிறது.

    ஹெய்டன், கில்கிறிஸ்ட் உள்ளிட்டோர் எங்களுக்கு 19 வயதாகிய போது, பின்னால் இருந்து கொண்டு வார்த்தைகளால் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் ஒருநாளும் எங்களை தொட்டதில்லை. அதனால் விராட் கோலி சாம் கோன்ஸ்டாஸ்-ன் தோளில் உரசியதை தவிர்த்திருக்க வேண்டும்.

    எனக்கு ஒரு கேள்வியும் இருக்கிறது. ஒருவேளை விராட் கோலியின் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் இருந்து, சாம் கோன்ஸ்டான் இடத்தில் இந்திய அணியைச் சேர்ந்த 19 வயதான வீரரின் அறிமுகப் போட்டியில் இப்படியான சம்பவம் நிகழ்ந்திருந்தால் நாம் ஏற்போமா.. அப்படிதான் இதனை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில்:-

    விராட் கோலி நிச்சயம் இதை செய்திருக்கக் கூடாது. கூட்ட நெரிசல் உள்ள தெருவில் ஒருவர் நடந்து சென்றால் கூட ஒருவர் எதிரில் வரும்போது நாம் வழிவிடலாம். வழி விடுவதால் நாம் யாருக்கும் குறைந்தவர் கிடையாது. கிரிக்கெட் களத்தில் இது போன்ற சம்பவங்களை யாரும் பார்க்க விரும்ப மாட்டார்கள். என்னை பொறுத்தவரை கோலி இதை செய்திருக்கக் கூடாது.

    இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    தேவையில்லாத ஒரு விஷயத்தை விராட் கோலி செய்துவிட்டார். இப்படி நடந்திருக்க வேண்டியது இல்லை. இது போன்ற சம்பவங்களை பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஏன் இவ்வாறு செய்தேன் என்று ஒரு விளக்கத்தை அவர் வைத்திருப்பார். ஆனால் இது போன்ற விஷயங்களை யாருமே எதிர்பார்க்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    ×