என் மலர்
நீங்கள் தேடியது "சுங்க கட்டணம் உயர்வு"
- 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது.
- சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
மும்பை:
மும்பை - நாக்பூர் இடையே ரூ.55 ஆயிரம் கோடி செலவில் 701 கி.மீ. தூரத்துக்கு சம்ருத்தி விரைவு சாலை போடும் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தற்போது நாக்பூர் முதல் இகத்பூரி வரை பணிகள் முடிந்து சாலை திறக்கப்பட்டுள்ளது. இகத்பூரில் இருந்து அம்னே (தானே) வரை சாலைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த 6 வழிச்சாலை மூலம் மும்பை - நாக்பூர் பயண நேரம் 8 மணி நேரமாக குறைந்து உள்ளது. சாலைப்பணி முழுமையாக முடிந்த பிறகு பயண நேரம் மேலும் குறையும்.
இந்தநிலையில் வருகிற 1-ந் தேதி முதல் சம்ருத்தி சாலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மாநில சாலை மேம்பாட்டு கழகம் (எம்.எஸ்.ஆர்.டி.சி.) அறிவித்து உள்ளது.
தற்போது இலகுரக வாகனங்களுக்கு கி.மீ.க்கு ரூ.1.73, வணிக இலகுரக வாகனங்களுக்கு ரூ.2.79, கனரக வாகனங்களுக்கு ரூ.5.85, 3 ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.6.83, கட்டுமான கனரக எந்திரங்களுக்கு ரூ.9.18, 7-க்கு மேற்பட்ட ஆக்சில் வாகனங்களுக்கு ரூ.11.07 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முறையே ரூ.2.06, ரூ.3.32, ரூ.6.97, ரூ.7.60, ரூ.10.93, ரூ.13.30 ஆக உயர்த்தப்பட்டது.
அதாவது நாக்பூர் - இகத்பூரி இடையே ரூ.1,080 ஆக இருந்த இலகுரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.1,290 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மினிபஸ் போன்ற இலகுரக வணிக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.1,745-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 75 ஆகவும், பஸ், லாரி உள்ளிட்ட 2 ஆக்சில் கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 655-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 750 ஆகவும், கனரக கட்டுமான எந்திரங்களுக்கான கட்டணம் ரூ.5 ஆயிரத்து 740-ல் இருந்து ரூ.6 ஆயிரத்து 830 ஆகவும், 7 ஆக்சில் அல்லது அதற்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கான கட்டணம் ரூ.6 ஆயிரத்து 980-ல் இருந்து ரூ.8 ஆயிரத்து 315 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த சுங்க கட்டணம் வரும் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து 2028-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.
- இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன.
- பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.
சுங்க கட்டணம் மற்றும் டீசல் உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். இதைக்கண்டித்து, வரும் ஏப்ரல் 1-ந் தேதி 11 மணிக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து உறுப்பு சங்க நிர்வாகிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன், தங்களது பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் திரளாக கலந்துகொண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து, ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
- சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது சுங்கக்கட்டணம் உயர்வால் வாகன ஓட்டிகள் ரூ. 50 முதல் ரு. 150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதாரத்தில் கூடுதல் சுமை ஏற்படும்.
இக்கட்டண உயர்வால் சரக்குக்கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்துக்கான செலவும் அதிகமாகும்.
சுங்கக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயரும். இதனால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக சுங்கக்கட்டண உயர்வினால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்.
மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சுங்க கட்டண உயர்வால் லாரி கட்டண உயர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
- பார்சல் , கொரியர் நிறுவனங்கள் தங்களின் செலவுகளில் அடிப்படையில் கட்டண உயர்வை அமுல்படுத்தி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் முக்கிய நகரங்கள், வெளிமாநிலங்களுக்கு இடையே பார்சல் மற்றும் கொரியர் சேவையில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களுக்கான டீசல், உதிரி பாகங்கள், 2-ம் நபர் காப்பீட்டு தொகை அதிகரிப்பு , சுங்க கட்டணம், தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு ஆகியவற்றின் காரணமாக கட்டணங்களை படிப்படியாக உயர்த்தி வந்தன.
இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. இந்த கட்டண உயர்வால் ஏற்படும் கூடுதல் நிதி சுமையை சமாளிக்கும் வகையில் நேற்று முன்தினம் முதல் கொரியர் நிறுவனங்கள் பார்சல் கட்டணத்தை உயர்த்தி உள்ளன. இதில் 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம் 400 கி.மீ. தூரம் வரை 150 ரூபாயாக இருந்தது. தற்போது அது 170 ரூபாயாகவும், 600 கி.மீ. தூரம் வரை 170 ரூபாயாக இருந்தது தற்போது 200 ரூபாயகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த கட்டணம் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்த எடைக்கு மேல் 100 கிலோ வரையில் 50 ரூபாய் முதல் 150 வரையும், 100 கிலோவுக்கு மேல் ஒரு டன் வரையில் 300 ரூபாய் முதல் தூரத்தின் அடிப்படையில் 800 ரூபாய் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரியர் நிறுவனங்கள் உள்ளூர் கவருக்கு 10 ரூபாயும், வெளியூர் பார்சலுக்கு 15 ரூபாயும், வெளி மாநில பார்சலுக்கு 30 ரூபாய் வரையும் அதிகரித்துள்ளது. எடைக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரித்துள்ளன. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கிடையே சுங்க கட்டண உயர்வால் லாரி கட்டண உயர்வும் விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க பொருளாளர் தன்ராஜ் கூறுகையில்,
பார்சல் , கொரியர் நிறுவனங்கள் தங்களின் செலவுகளில் அடிப்படையில் கட்டண உயர்வை அமுல்படுத்தி உள்ளன. லாரிகளை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாக உள்ளதால் தற்போது பெய்து வரும் மழையால் லோடுகள் கிடைப்பதில்லை. இதனால் கட்டண உயர்த்த மேற்கொள்ள முடியவில்லை.
ஆனால் லாரிகளை இயக்குவதற்கான டீசல் உள்பட அனைத்தும் உயர்ந்து விட்டதால் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விரைவில் லாரி உரிமையாளர்கள் புக்கிங் ஏஜெண்டுகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி வாடகை உயர்வு அறிவிக்கப்படும் என்றார். லாரி வாடகை உயரும் போது அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயரும் என்பதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்னர்.