search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் வளர்ப்பு"

    • சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம்.
    • நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும்.

    நகர்ப்புற வீடுகளில் தொட்டிகளில் அலங்கார மீன்களை வளர்ப்பது பொழுது போக்காக இருக்கிறது. மன அழுத்தம், இதயம் தொடர்பான பாதிப்புகள் இருப்பவர்கள் அன்றாடம் சிறிது நேரம் தொட்டிகளில் நீந்தும் மீன்களை கவனித்துக் கொண்டிருந்தால் மனம் அமைதி அடைவதுடன், இதய பாதிப்பும் குறைவதாக கூறப்படுகிறது.

    வீடுகளில் மீன் வளர்க்கும்போது சரியான தொழில்நுட்பங்கள் தெரியாததால் சிறிது நாளில் மீன் வளர்ப்பதை விட்டு விடுகின்றனர். அலங்கார மீன்களை வளர்க்கும் தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் மீன் வளர்ப்பை எளிதாக செய்ய முடியும்.

     

    * மீன் தொட்டி

    சின்ன கண்ணாடி டம்ளரில் தொடங்கி, பெரிய தொட்டிகள் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பலவற்றில் மீன் வளர்க்கலாம். வீடுகளில் பெரிய மீன் தொட்டிகளும், அலுவலகங்களில் சிறிய மீன் தொட்டிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

    தொட்டிகள் சிறியதோ, பெரியதோ... மீன் வளர்ப்புக்கு வாங்கும் தொட்டி நீர்க்கசிவு இன்றி இருக்க வேண்டும். எத்தனை மீன்களை வளர்க்கப்போகிறோமோ அதற்கு தக்கபடி நீள, அகலத்தில் தொட்டி வாங்குவது நல்லது. பொதுவாக, மீன் வளர்ப்பு தொட்டியின் ஆழமும், அகலமும் ஒன்றாக இருத்தல் அவசியம்.

    தேவைக்கு அதிகமான பெரிய தொட்டிகளை தவிர்க்க வேண்டும். அதிகமான ஆழமுள்ள தொட்டிகளில் நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் தொட்டி உடைந்து விடும் அபாயம் உண்டு. மீன் தொட்டியை சமதளமான இடத்தில் வைக்க வேண்டும். பெரும்பாலும், கண்ணாடி தொட்டிக்கு கீழ், தெர்மாக்கோல் வைப்பது நல்லது. இது விரிசலை தவிர்க்கும்.

    * மண் இடுதல், நீர் நிரப்புதல்

    முன்பெல்லாம், மீன் தொட்டிக்குள் சரளை கற்களை நிரப்புவார்கள். ஆனால் இப்போது டிரெண்ட் மாறிவிட்டது. அக்வாஸ்கேப் என்ற கலை மூலமாக மீன் வளர்ப்பு தொட்டிகளை அலங்கரிக்கிறார்கள்.

    நன்றாக சுத்தம் செய்யப்பட்ட மணலை மீன் தொட்டிக்குள் நிரப்பி, மீன்களுக்கு சிறப்பான வாழ்விடத்தை உருவாக்குகிறார்கள். மேலும் நீர் பரப்பில் வாழும் நீர்வாழ் தாவரங்கள், பாசி வகைகள், பாசி படர்ந்த மரக்கட்டை... இவற்றை மீன் தொட்டிக்குள் அமைத்து, மீன்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவே மீன் தொட்டியை உருவாக்குகிறார்கள். இது கொஞ்சம் செலவு நிறைந்த வேலை. எளிமையாக மீன் வளர்க்க நினைப்பவர்கள், சிறிய கூழாங்கற்களை தொட்டிகளில் பரப்பி விடலாம். மேலும், இறந்து போன மெல்லுடலிகளின் ஓடுகள், சங்குகள், சிப்பிகள் போன்றவற்றை பரப்பி விடலாம்.

    இதற்குப் பின்னர், தொட்டிக்குள் எந்த அளவுக்கு நீரை நிரப்ப விரும்புகிறோமோ அந்த அளவுக்கு நீரை நேரடியாக விடலாம். பொதுவாக ஆழ்துளை கிணறு தண்ணீரை மீன் வளர்க்க பயன்படுத்தலாம்.

    * நீர்த்தாவரங்கள்

    நீரில் வாழும் மீன்கள் சுவாசிக்க தேவையான பிராணவாயுவை நீர் வாழ்தாவரங்கள் வெளியிடும். மேலும், மீன்கள் வெளியிடும் கரியமில வாயுவை இந்த தாவரங்கள் கிரகித்துக்கொள்ளும். முட்டையிடும் மீன்கள் இந்த நீர்த்தாவரங்களில் முட்டையிடும். மீன் வளர்ப்புத் தொட்டிகளில் வேலம்பாசி, செரட்டோபில்லம், நாஜாஸ் உள்ளிட்ட நீர்வாழ்த்தாவரங்களை வளர்க்கலாம். மீன்களை இனப்பெருக்கம் செய்யும் பண்ணைகளில் இந்த நீர்வாழ்த்தாவரங்கள் கிடைக்கும்.

    * வளர்ப்பு முறை

    மீன்களை விற்பனையாளரிடம் இருந்து வாங்கி வந்த உடனேயே ஏற்கனவே மீன்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டிகளில் விடக்கூடாது. புதிய மீன்களை ஒரு கண்ணாடி குடுவையில் நல்ல தண்ணீரில் ஒரு சில நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் ஐந்து சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் விட்டு உடனே எடுத்து விடவும்.

    பிறகு கண்ணாடிக்குடுவையில் வைத்து இந்த மீன்களை ஒரு வாரம் வரை கவனித்து வர வேண்டும. அந்த மீன்களுக்கு எந்தவித நோய்களும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே மற்ற மீன்கள் வளரும் தொட்டிகளில் விட வேண்டும்.

    * வியாபார வாய்ப்பு

    இதுபோல், மீன் வளர்ப்பில் ஈடுபடும்போது இதனை சிறிய தொழிலாகவும் செய்யலாம். சிறிய குடுவை மற்றும் தொட்டிகளில் அழகான மீன்களை வளர்த்து விற்பனை செய்து வருமானத்தையும் ஈட்டலாம்.

    • பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
    • முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 250 முதல் 1000 சதுர.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    இந்த மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    எனவே, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 10-ந்தேதிக்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×