என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மழை"

    • நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.
    • அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன.

    பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் க ன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. இதனால் அங்கு இன்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கறது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 26.2, சேலம் மாநகர் 10.6, ஏற்காடு 7.6, சங்ககிரி 4, எடப்பாடி 2.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியது.
    • டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையும் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நிரம்பியது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையின் காரணமாக மீண்டும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 619 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 11 ஆயிரத்து 631 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் அணையின் நீர்மட்டம் 112.39 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 23 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், அதை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது அணையில் 81.85 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது
    • தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10.30 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. சேலம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை விடிய, விடிய அகற்றினர்.

    சேலம் மாநகராட்சி 26-வது வார்டு குப்தா நகர் 6 முதல் 9 குறுக்கு தெரு முழுவதும், சினிமா நகர், சின்னேரிவயக்காடு ஓடைஓரம் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதே போல் சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கபிலர் தெரு, பாரதிதாசன் தெரு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு நகரவை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.

    செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கொண்டு வந்தனர்.

    தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது. இதையடுத்து அல்லிக்குட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், மன்னார்பாளையம் போயர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை வேறு வழியில் திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தி அல்லிக்குட்டை பகுதியில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து உடனடியாக வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    • ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
    • திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    * ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.

    * திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    * முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    * சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    * தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு.

    * தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
    • சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குளங்கள், ஏரிகள் நிரம்பியது. மேலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில தினங்களாக மழை பெய்யாமல் வெயில் வாட்டியது.

    தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு நேரம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இன்று அதிகாலை சேலம் மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. இந்த மழை 3 மணி நேரம் நீடித்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஓடியது. இதையடுத்து சேலம் மாநகர் முழுவதும் குளிர்ந்த நிலையில் காணப்பட்டது.

    • கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இதனால் ஏற்காடு மலை வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் பெய்த கனமழையால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு மலைப்பாதை வழியே வாழவந்தியை அடுத்த ஆத்துப்பாலத்தை முழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்ந்தது. காடுகளில் உள்ள மரம், செடி, கொடி பாறை, கற்கள் உள்பட அனைத்தையும் தள்ளி கொண்டு காட்டாற்று வெள்ளமாக மழை நீர் ஓடியது.

    இதையடுத்து அந்த வழியாக உள்ள 26 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்துப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் 2-வது நாளாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று தவித்தனர்.

    அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூரில் சேலம்-அரூர் பிரதான சாலையில் குப்பனூர் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே திருமணிமுத்தாறு மேம்பாலம் உள்ளது. நேற்று பெய்த மழையால் மழை நீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த மேம்பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வேலைக்கு சென்ற மக்களும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    2-வது நாளாக இன்றும் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் மாற்று பாலத்தை அமைக்க வேண்டும் என்றும், மாற்று பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாழப்பாடி அண்ணாநகரில் பேளூர் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் சரிந்தது. இதனால் நேற்று வாழப்பாடி-பேளூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்குள்ள தடுப்பு சேதம் அடைந்தது. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஆனை வாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன கல்வராயன் மலை, கிடார், பட்டி வளவு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முட்டல் ஏரியில் இருந்து ஆனைவாரி நீர் வீழ்ச்சி வழியாக சென்று வருவார்கள். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல பெத்தாநயக்கன்பாளையம், தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, ஓமலூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 65.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பெத்தநாயக்கன் பாளையம் 49.5, தம்மம்பட்டி 40, ஆனைமடுவு 37, சங்ககிரி 31, ஓமலூர் 27, மேட்டூர் 19, சேலம் 11, கரியகோவில் 10, எடப்பாடி 10, காடையாம்பட்டி 5, ஆத்தூர் 4, வீரகனூர் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 312.70 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டது. அங்குள்ள தரை பாலத்தை மூழ்கடித்து அந்த வெள்ள நீரில் சில கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையும் கடுமையாக சேதம் அடைந்தன.

    ×