search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காட்டில் 3 மணிநேரம் கொட்டிய கனமழை- சேலம் அருகே வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்தது
    X

    ஏற்காட்டில் 3 மணிநேரம் கொட்டிய கனமழை- சேலம் அருகே வெள்ளப்பெருக்கால் பாலம் உடைந்தது

    • கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கனமழையாக கொட்டியது. இதனால் ஏற்காடு மலை வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் பெய்த கனமழையால் ஏற்காட்டில் இருந்து கொட்டச்சேடு மலைப்பாதை வழியே வாழவந்தியை அடுத்த ஆத்துப்பாலத்தை முழ்கடித்து வெள்ளம் சீறிப்பாய்ந்தது. காடுகளில் உள்ள மரம், செடி, கொடி பாறை, கற்கள் உள்பட அனைத்தையும் தள்ளி கொண்டு காட்டாற்று வெள்ளமாக மழை நீர் ஓடியது.

    இதையடுத்து அந்த வழியாக உள்ள 26 கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்துப்பாலத்தை மூழ்கடித்த படி வெள்ளம் சீறிப்பாய்ந்ததால் 2-வது நாளாக போக்குவரத்து தடைபட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று தவித்தனர்.

    அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த குப்பனூரில் சேலம்-அரூர் பிரதான சாலையில் குப்பனூர் ஊருக்குள் செல்லும் சாலை நடுவே திருமணிமுத்தாறு மேம்பாலம் உள்ளது. நேற்று பெய்த மழையால் மழை நீர் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த மேம்பாலம் உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

    அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். வேலைக்கு சென்ற மக்களும் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிபட்டனர். வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    2-வது நாளாக இன்றும் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் மாற்று பாலத்தை அமைக்க வேண்டும் என்றும், மாற்று பாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வாழப்பாடி அண்ணாநகரில் பேளூர் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் சாலையில் சரிந்தது. இதனால் நேற்று வாழப்பாடி-பேளூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அங்குள்ள தடுப்பு சேதம் அடைந்தது. இதையடுத்து மறு உத்தரவு வரும் வரை ஆனை வாரி நீர்வீழ்ச்சி, முட்டல் ஏரி படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்து சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது.

    கல்வராயன் மலையில் பெய்த மழையால் கல்லாறு, புலி ஊற்று, நீரோடை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் வருகிறது. 2 தரைப்பாலங்கள் மூழ்கியது. பெரிய பாலத்தை தொட்ட படி தண்ணீர் செல்கிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன கல்வராயன் மலை, கிடார், பட்டி வளவு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முட்டல் ஏரியில் இருந்து ஆனைவாரி நீர் வீழ்ச்சி வழியாக சென்று வருவார்கள். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதே போல பெத்தாநயக்கன்பாளையம், தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, ஓமலூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 65.2 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பெத்தநாயக்கன் பாளையம் 49.5, தம்மம்பட்டி 40, ஆனைமடுவு 37, சங்ககிரி 31, ஓமலூர் 27, மேட்டூர் 19, சேலம் 11, கரியகோவில் 10, எடப்பாடி 10, காடையாம்பட்டி 5, ஆத்தூர் 4, வீரகனூர் 4 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 312.70 மி.மீ. மழை பெய்துள்ளது.

    சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி கிராமத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக அதிகப்படியான நீர்வரத்து ஏற்பட்டது. அங்குள்ள தரை பாலத்தை மூழ்கடித்து அந்த வெள்ள நீரில் சில கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டன. சாலையும் கடுமையாக சேதம் அடைந்தன.

    Next Story
    ×