search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கள் பாதிப்பு"

    • விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன.
    • படைப்புழுக்களின் தாக்குதலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம், புதூர், அரியநாயகிபுரம், மேலக்கரந்தை, உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடப்பாண்டு ராபி பருவத்தில் மானாவாரி நிலங்களில் புரட்டாசி முதல் வாரத்திலேயே பருவமழை முன்கூட்டி தொடங்கிவிடும் எனக் கருதிய விவசாயிகள் ஆவணி மாதக்கடைசியில் இருந்து புரட்டாசி 10-ந்தேதி வரை உளுந்து, பாசி, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, எள், வெள்ளைச் சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை என அடுத்தடுத்து வரிசையாக பட்டத் தேதிக்கேற்றவாறு விதைப்பு செய்தனர்.

    விதைத்த நாள் முதல் சரிவர மழை பெய்யாததால் பயிர்கள் இருவேறு விதமாக முளைத்தன. சிலரது நிலங்களில் விதைகள் மண்ணில் மக்கி கெட்டுப் போய்விட்டது. இதனால் ஒருமுறைக்கு பலமுறை விதைப்பு செய்ய நேரிட்டது.

    இருப்பினும் பல்வேறு பருவமாற்றங்களுக்கு இடையே தற்போது மக்காச்சோளம் முளைத்து ஒரு மாத பயிராக உள்ளது. கூலி ஆட்களை வைத்தும், ரசாயான மருந்து தெளித்தும் களையை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல், இந்தாண்டும் படைப்புழுக்களின் தாக்கு தலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி மாரீஸ்குமார் கூறிகையில்:-

    கடந்த 2018-ம் ஆண்டு படைப்புழுக்களின் தாக்குதலால் தமிழகத்தில் மக்காச்சோள பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

    படைப்புழுவை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவிடவும் தமிழக அரசுக்கு அதிகாரிகள் படைப்புழுவில் இருந்து மக்காச்சோளம் பயிரை காப்பாற்றவும் சக்திவாய்ந்த டெலிகேட், கோரஜென் எனப்படும் மருந்துகளை மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க பரிந்துரை செய்தது.

    அதனடிப்படையில் ஏக்கருக்கு 80 மிலி மருந்துடன் 100 லிட்டர் தண்ணீர் கலந்து தண்டுப்பகுதியில் தெளிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர். 2019-ம் ஆண்டு விவசாயிகளுக்கு குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த மருந்து மானியம் தமிழக அரசு வழங்கியது.

    2021-ல் புதிதாக பொறுப்பேற்ற அரசு மக்காச்சோளம் பயிருக்கு மருந்து மானியம் வழங்கவில்லை. அதேவேளையில் படைப்புழுவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை கூறிவருகிறது. அதிகாரிகள் கூறியபடி செயல் விளக்கம் செய்தால் வரவை மிஞ்சிய செலவாகிறது.

    இந்தாண்டும் மக்காச்சோளம் பயிரில் தண்டுப்பகுதியில் படைப்புழு அதிகம் தென்படுகிறது. இதனால் அதிக விலை கொடுத்து குருத்துப்பூச்சி மருந்து வாங்கி தெளிக்கின்றனர். அது மட்டுமல்லாது உளுந்து, பாசி, வெள்ளைச் சோளம், பருத்தி போன்ற பயிர்களில் தாக்கக் கூடிய நோய்களை கட்டுப்படுத்தவும் விலை உயர்ந்த மருந்துகளை தெளிக்க வேண்டி உள்ளது.

    கடந்த ஆட்சியில் உதவியது போல் படைப்புழு கட்டுப்படுத்த மருந்து மானியம் அல்லது இலவச மருந்துகள் வழங்க வேண்டும், என்று கூறினார்.

    • ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.
    • அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனை தொடர்ந்து முக்கொம்பில் இருந்தும், கல்லணையில் இருந்தும் பெருமளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படுகிறது.

    பயிர்கள் மூழ்கியது இதன் காரணமாக தஞ்சை அடுத்த அய்யம்பேட்டை அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்க தொடங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

    இந்த வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவன்குடி, பட்டுக்குடி, கூடலுர், புத்தூர், குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் பழைய மன்னியாற்று பகுதியில் ஏராளமான வயல்கள் இந்த தண்ணீரில் மூழ்கி உள்ளது.

    மேலும் தற்போது நடவு செய்யப்பட்ட குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கியது.

    சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்களும் மூழ்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், வெள்ள பெருக்கு காரணமாகவும் மூழ்கிய பயிர்கள் அழுகும் சூழ்நிை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதேப்போல் பட்டுக்குடி கிராமத்தில் ஈமகிரியை மண்டபமும் கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கால் மூழ்கியது.

    நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் வெள்ள பெருக்கு காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் சில இடங்களில் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் தொடர் மழையால் நெற்பயிர்கள் மட்டுமின்றி மற்ற பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து நெற்பயிர்கள் பாதிப்படைந்து வருவதால் அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×